
மேலே நாம் எழுப்பிய எல்லாக் கேள்விகளுக்குமான விடை இந்தக் கதைக்குள் அடங்கியிருக்கிறது

மறைந்து 2,300 ஆண்டுகள் கழிந்த பிறகும், வரலாற்று வானில் இன்னமும் ஒரு நட்சத்திரமாக மின்னிக்கொண்டிருக்கிறார் அலெக்சாண்டர். ஐரோப்பிய, அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் இன்றைய தேதிவரை போட்டி போட்டுக்கொண்டு அவரை விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே பெருங்குவியலொன்று வளர்ந்துவிட்டது என்றாலும், அலெக்சாண்டர் குறித்து புதிய புதிய நூல்கள் இன்னமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவர் தொடர்புடைய புதிய தரவுகளில் இன்னமும் ஒரு பெருங்கூட்டம் ஆர்வம்கொண்டிருக்கிறது. அலெக்சாண்டரின் வீரத்தையும், தலைமைப் பண்புகளையும், ராணுவ உத்திகளையும் வியந்தும் அங்கலாய்த்தும் தீர்க்க முடியவில்லை உலகால்.
அலெக்சாண்டர் இறுதியாகப் படையெடுத்துச் சென்ற நாடு இந்தியா. பண்டைய வரலாறு நினைவில் தேக்கிவைத்திருக்கும் முதன்மையான பயணங்களில் ஒன்று இது. அலெக்சாண்டரின் வாழ்வும், வானளாவிய புகழும், இந்த இரண்டைவிடவும் செழிப்பான அவர் கனவுகளும் முடிவுக்கு வந்தது இங்கேதான். பகைவர்களும் நண்பர்களும் ஒருசேர அஞ்சிய ஒரு மாவீரனைத் தன்னை நோக்கி ஈர்த்த இந்தியா, அவரை இன்று எவ்வாறு நினைவில் வைத்திருக்கிறது... ஐரோப்பியர்களோடும் அமெரிக்கர்களோடும் நாமும் போட்டி போட்டுக்கொண்டு அவரை இன்று ஆராய்ந்துகொண்டிருக்கிறோமா... புத்தகங்கள் எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறோமா... ஆக்கிரமிக்க வந்த அவர் நமக்குக் கதாநாயகனா, வில்லனா... பண்டைய இந்திய வரலாற்றில் அவர் செலுத்திய தாக்கம் என்ன... அவர் வருகை இந்தியாவை எந்த அளவுக்கு பாதித்தது... எத்தகைய அரசியல் விளைவுகளை அவர் இங்கே உண்டாக்கினார்... அன்றைய இந்தியர்கள் அவரை எவ்வாறு கண்டனர்... அலெக்சாண்டர் பற்றிய நம் இன்றைய மதிப்பீடு என்ன?
இனி வருவது கிரேக்க வரலாற்றாசிரியர் ஒருவரின் பழங்கதை. அலெக்சாண்டர் தனது படை, பரிவாரங்களோடு தட்சசீலத்தை நெருங்கியதும், சாதுக்கள் சிலர் அவரைச் சூழ்ந்துகொண்டனராம். ‘மன்னா, ஏனோ உங்கள் இருப்பிடத்தைவிட்டு இவ்வளவு தொலைவிலுள்ள எங்கள் நிலத்துக்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் வெல்ல முடியாத பேரரசராக இருக்கலாம். உலகமே உங்கள் காலடியில் கிடப்பதாகவும் நீங்கள் நம்பிக்கொள்ளலாம். ஆனால், அடிப்படையில் மற்றவர்கள்போல் நீங்களும் ஒரு சாதாரண மனிதன்தான். உங்களுக்கும் மரணம் வரும். இதோ எங்கள் காலடியில் இருக்கும் இந்தத் துண்டு நிலம்தான் உங்களைப் புதைக்கவும் தேவைப்படும்.’
மேலே நாம் எழுப்பிய எல்லாக் கேள்விகளுக்குமான விடை இந்தக் கதைக்குள் அடங்கியிருக்கிறது. உலகை வென்று முடிப்பதற்காக இந்தியாவுக்குள் நுழைந்த அலெக்சாண்டர் அங்கும் இங்கும் அலை பாய்ந்துவிட்டு, சின்னச் சின்ன போர்கள் பல புரிந்துவிட்டு, சின்னச் சின்ன ஆக்கிரமிப்புகளைச் செய்துவிட்டு, களைப்போடும், சலிப்போடும், தீராத மன வலியோடும் வந்த வழியே திரும்பிப்போனார். உலகம் என்னுடையது என்று முழங்கியவர், சாதுக்கள் சொன்னது போல் ஒரு துண்டு நிலத்தில் சுருண்டு, அடங்கி, மறைந்துபோனார்.
அகண்டு விரிந்த இந்தியாவும் அவருக்கு இதே அளவு இடத்தைத்தான் தன் நினைவுகளில் ஒதுக்கியிருக் கிறது. பண்டைய வரலாற்று நூல்களில் சில பத்திகள் மட்டுமே அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. சிலவற்றில் அலெக்சாண்டர் என்பது நட்சத்திரம் இடப்பட்ட அடிக்குறிப்பு மட்டுமே. உலகுக்கு ஒரு வழி என்றால், இந்தி யாவுக்கு எப்போதுமே இன்னொரு வழிதான், இல்லையா?

அலெக்சாண்டரின் இந்திய வருகை நம் வரலாற்றை எந்த வகையிலும் கலைத்தோ புரட்டியோ போட்டுவிடவில்லை என்பதுதான் உண்மை. நிறைந்திருக்கும் குளத்தில் ஒரு கல் வீசினால் அதிர்வுகள் அடங்குவதற்கு எவ்வளவு காலம் பிடிக்குமோ, அவ்வளவு காலம் மட்டுமே அலெக்சாண்டரின் தாக்கம் இங்கே நீடித்திருக்கிறது. அவ்வளவு காலத்துக்கு மட்டுமே அன்றைய இந்திய மனம் அவரைச் சிந்தித்தி ருக்கிறது; அவரைக் கண்டு அஞ்சியிருக்கிறது, அல்லல்பட்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ பண்டைய இந்தியப் பதிவுகளில் எங்குமே அலெக்சாண்டரின் பெயரைக் காண முடியவில்லை. யாரும் அவரைப் பற்றி ஒரு சொல்கூட எழுதி வைக்கவில்லை. அவர் புகழும் பாடப்படவில்லை, அவர் நிந்திக்கப்படவும் இல்லை. அவர் தேவனும் அல்ல, அசுரனும் அல்ல. தேவையற்ற காகிதத்தைப்போல் கசக்கிச் சுருட்டி காலத்தின் குப்பைத்தொட்டிக்குள் கடாசிவிட்டது இந்தியா.
இருந்தும் அவரை நாம் இங்கே இழுத்து, நிறுத்திப் பேசிக்கொண்டிருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு முன்பு ஓர் அடிப்படையான கேள்வி. அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வர வேண்டிய அவசியம் ஏன் நேர வேண்டும்? இதற்கான விடை அலெக்சாண்டரிடமும் இந்தியாவிடமும் சம அளவில் பிரிந்திருக்கிறது.
தந்தை இரண்டாம் பிலிப் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மாசிடோனியாவின் மன்னராக அலெக்சாண்டர் பொறுப்பேற்றுக்கொண்ட போது அலெக்சாண்டரின் வயது 20. ‘மகனே, இந்தச் சின்னஞ்சிறு பிரதேசத்தை மட்டுமே என்னால் உனக்கு விட்டுச் செல்ல முடிந்திருக்கிறது. உனக்கான பேரரசை நீயே நிர்மாணித்துக்கொள்’ என்று தனது கனவுகளையும் சேர்த்து தன் மகனுக்குக் கையளித்துவிட்டு விடைபெற்றுக் கொண்டார் தந்தை. இது நடந்தது பொஆமு 336-ம் ஆண்டில்.
ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, தீப்ஸ் போன்ற பெருநகரங்களுக்கு மத்தியில் ஒரு சுண்டெலியாக இருந்தது மாசிடோனியா. காட்டுமிராண்டி ஊர் என்பதுதான் அதன் அப்போதைய பெயர். பதிமூன்று ஆண்டுகளில் அலெக்சாண்டர் மாசிடோனியாவை ஒரு போர்க் குதிரையாக உருமாற்றினார். ஒரு குழந்தையின் உள்ளங்கை போல் இருந்த அதன் எல்லைகளைத் தொடர்ச்சியான போர்கள் மூலம் விரித்து விரித்து வானளவு வளர்த்தெடுத்தார். அலெக்சாண்டரின் படை அவரைப்போலவே ஒரே நேரத்தில் மூர்க்கமாகவும் கட்டுக்கோப்பாகவும் இருந்தது. அவர் வகுத்த ராணுவ உத்திகள் மாபெரும் வெற்றிகளை மட்டும் அவருக்குப் பெற்றுத் தந்தன.
அலெக்சாண்டரின் இமாலயச் சாதனை என்று அவருடைய சமகாலத்தவர்கள் கருதியது பாரசீகத்தை அவர் வீழ்த்தியதுதான். செல்வத்திலும் செல்வாக்கிலும் உச்சத்திலிருந்த பாரசீகத்தின் நூற்றாண்டுகால பெருமிதங்களைத் தனியொருவனாக எதிர்த்து நின்று வீழ்த்திய அலெக்சாண்டரைக் கண்டு முதன்முறையாக அஞ்சி ஒதுங்கி நின்றன கிரேக்கப் பெருநகரங்கள். அனடோலியா (இன்றைய துருக்கி), ஃபோனீசியா (சிரியா, பாலஸ்தீனம்), எகிப்து, லிபியா என்று பாரசீகத்தின் பிடியிலிருந்த அத்தனை சிறிய, பெரிய பிரதேசங்களையும் மாசிடோனிய சூறாவளி கபளீகரம் செய்தது. அலெக்சாண்டர் இறக்கும்போது உலகம் (அதாவது உலகம் என்று அப்போது கருதப்பட்ட நிலப்பரப்பு) கிட்டத்தட்ட முழுமையாக அவருடையதாக மாறியிருந்தது.
போதும் என்று நிறைவடைந்திருக்கலாம். அலெக்சாண்டர் அல்லவா? என்னவெல்லாம் பெற்றிருக்கிறோம் என்றல்ல, இன்னும் என்ன பாக்கி என்றுதான் அவர் மனம் பரபரத்தது. கிழக்கு தனது ஆளுகைக்கு வெளியில் துருத்திக்கொண்டு நிற்பதை அலெக்சாண்டர் உணர்ந்தார். கிழக்கு என்றால் இந்தியா அல்லவா... இந்தியாவை எப்படி வெளியில் விட்டுவைக்க முடியும்... பாரசீகர்கள் சுவைத்த இந்தியாவை நான் தட்டிப் பறிக்க வேண்டாமா... இந்தியா இல்லாமல் ஒரு கனவு எப்படி முழுமை பெறும்? பொஆமு 326-ல் அலெக்சாண்டர் இந்தியாவை நோக்கி நகரத் தொடங்கியிருந்தார். சதுரங்க ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து செல்வதுபோல் அவருக்கு இது இருந்திருக்கும்.
அலெக்சாண்டர் இந்தியாவைப் பெருமளவில் அறிந்துவைத்திருந்தது புத்தகங்கள் மூலமாகத்தான். படுக்கும்போது அவர் தலை மாட்டில் வாளோடு புத்தகங்களும் இடம் பெற்றிருக்குமாம். போருக்குச் செல்லும்போதுகூட புத்தகங்களைக் கொண்டு செல்ல அவர் மறந்ததில்லை. இந்தியாவுக்கும்கூட அவர் ஒரு பொதி புத்தகங்களோடுதான் வந்து சேர்ந்தார். ஹெரோடோட்டஸ், தீஷியஸ் போன்ற புகழ்பெற்ற கிரேக்கர்களின் படைப்புகளை நிச்சயம் அலெக்சாண்டர் படித்திருந்தார் அல்லது நன்கு அறிந்துவைத்திருந்தார் என்று சொல்ல முடியும்.
அலெக்சாண்டர், அரிஸ்டாட்டிலின் மாணவர். இந்தியா குறித்து எழுதப்பட்ட பல்வேறு பதிவுகளை அரிஸ்டாட்டில்தான் அலெக்சாண்டருக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். யானையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அரிஸ்டாட்டில் இந்தியா குறித்து அதிகம் எழுதியிருக்கவில்லை. என்றாலும், தனக்கு முன்பும், தன் காலத்திலும் இந்தியா குறித்து எழுதியவர்களோடு அவர் எந்த முரண்பாடும் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் விவரித்த அத்தனை அதிசயக் கதைகளையும் அவர் அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும். தனது நம்பிக்கைகளைத்தான் அவர் அலெக்சாண்டருக்கும் போதித்தார் என்பதால், இந்தியா குறித்து அரிஸ்டாட்டில் கொண்டிருந்த பார்வைதான் அலெக்சாண்டரின் பார்வையும்கூட. அந்த வகையில், இந்தியா குறித்த ஏடுகளை மட்டுமல்ல, இந்தியா குறித்த மனச் சித்திரங்களையும் சேர்த்தேதான் அலெக்சாண்டர் சுமந்து சென்றார் என்று சொல்ல முடியும்.

ஓர் அதிசய நிலத்துக்குப் போகிறோம் என்னும் நம்பிக்கையோடுதான் தன் குதிரையைச் செலுத்திக்கொண்டு சென்றார் அலெக்சாண்டர். சித்திரக் குள்ளர்களையும், ஒற்றைக்கால் மனிதர்களையும், நாய் மனிதர்களையும், நரமாமிச பட்சிணிகளையும் எந்தக் கட்டத்திலும் சந்திக்க நேரலாம் என்றே அவர் எதிர்பார்த்தார். தங்கக் கட்டிகளை இழுத்துச் செல்லும் எறும்புகளையும், ஒற்றைக் கொம்பு குதிரைகளையும், மனித முகம் கொண்ட சிங்கங்களையும், இன்னபிற அதிசய, ஆபத்தான விலங்குகளையும் எப்போது வேண்டுமானால் போர்க்களங்களில் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவர் கணக்கிட்டிருந்தார். ஏடுகளில் மட்டும் படித்த இந்த அதிசயங்களையெல்லாம் நேரில் கண்டுவிட வேண்டும் என்னும் வேட்கையும் அவரிடம் இருந்தது.
தவிரவும், இந்தியா அலெக்சாண்டரை ஈர்த்ததற்கு இன்னொரு முக்கியமான காரணம் இருந்தது. கிரேக்கர்கள், பாரசீகர்கள் தொடங்கி அவர் காலத்தில் பலரும் நம்பியதுபோல் உலகம் இந்தியாவோடு முற்றுப்பெறுவதாக அலெக்சாண்டர் நம்பினார். உலகின் விளம்பு இந்தியா. இந்தியாவுக்கு அப்பால் ஒன்றுமில்லை. எப்படியாவது இந்தியாவைத் தாவிப் பிடித்துக்கொண்டுவிட்டால் அதன் பிறகு கைப்பற்றுவதற்கு வேறு நிலங்கள் இருக்காது. இறுதிப் பயணமாக, இறுதிப் படையெடுப்பாக, இறுதி இலக்காக இந்தியா இருக்கும். இந்தியா என்னுடையது என்றால் உலகமும் என்னுடையது!
(விரியும்)