மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 9 - புதிய நிலம், புதிய பார்வை

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கல்விக்கும் வணிகத்துக்கும் பெயர்போன இடங்கள் இவை. உண்மையில் இதுதான் நிஜமான, அதிசய இந்தியா.

வெறும் ஆக்கிரமிப்பாளராக மட்டும் இருந்திருந்தால் போனோமா, போரிட்டோமா, வளைத்துப் பிடித்தோமா என்று இருந்திருப்பார். அரிஸ்டாட்டில் முன்பு அமர்ந்து கற்றதாலோ, என்னவோ இறுதிவரை அலெக்சாண்டரிடம் அறிவுத்தேடல் மிகுந்திருந்தது. நிலம், கடல், மலை, நதி, பள்ளத்தாக்கு அனைத்தையும் அவர் கற்க விரும்பினார். ஆக்கிரமிக்க விரும்பிய இடங்களையெல்லாம் தெரிந்துகொள்ள விரும்பினார். தெரிந்துகொள்வதற்காகவே ஆக்கிரமிப்பை முன்னெடுத்த தருணங்களும் உண்டு. இந்தியா அதிலொன்று.

எகிப்து, பாரசீகம் என்று எங்கே போனாலும் நதி, மலை, விலங்குகள், தாவரங்கள் என்று கண்ணில்படும் அனைத்தையும் ஆர்வத்தோடு கவனிப்பார். விரிந்திருக்கும் கூடாரத்துக்குள் விளக்கொளியில் ஏடுகளைப் பரப்பி வைத்துக்கொண்டு நீண்ட நேரம் வாசிப்பார். போருக்கு வந்திருக்கிறாரா அல்லது ஆய்வுப் பணிக்கா என்று பார்ப்பவர்கள் குழம்புவது உறுதி. அதிலும் முக்கியமான போர் என்று அவர் கருதினால், படைகளோடு சேர்த்து தனது பரிவாரத்தையும் அழைத்துச் சென்றுவிடுவார். இந்தியாவுக்கும் அப்படியொரு பிரத்யேக பரிவாரத்தை அவர் அழைத்து வந்திருந்தார். அலெக்சாண்டரின் பயணம் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம் அவரல்ல, அவருடைய பரிவாரம்தான்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 9 - புதிய நிலம், புதிய பார்வை

யாரையெல்லாம் அவர் இந்தியாவுக்கு அழைத்து வந்திருந்தார்? கேள்வி கேட்பது, விவாதிப்பது, தர்க்கம் செய்வது ஆகியவற்றில் ஈர்ப்புகொண்டவர் என்பதால் தத்துவவாதிகளைத்தான் முதலில் இணைத்துக்கொண்டார் அலெக்சாண்டர். கணிதம் முதல் கடவுள் வரை அனைத்தையும் தத்துவத்தின் வழியேதான் கற்க முடியும். எல்லா அறிவுத் துறைகளுக்கும் தத்துவமே தாய் என்பது அவருடைய நம்பிக்கை. அலெக்சாண்டரின் குழுவில் இடம்பெற்ற தத்துவவாதிகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒருவர் பிரோ. இந்தியா உள்ளிட்ட கிழக்கத்திய நாடுகளில் எத்தகைய தத்துவ விவாதங்கள் நடைபெறுகின்றன, அவற்றிலிருந்து நான் ஏதேனும் கற்றுக்கொள்ள முடியுமா என்று ஆர்வத்தோடு இந்தியாவுக்கு வந்தவர் இவர். அரிஸ்டாட்டிலால் வர இயலவில்லை. என்றாலும், அவருடைய உறவினரொருவர் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

அடுத்து, அறிவியலாளர்கள். இந்த உலகில் எனக்குத் தெரியாத ஒரேயோர் உயிரினம்கூட இருக்கக் கூடாது என்பார் அரிஸ்டாட்டில். அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் அலெக்சாண்டரும் அறிவியல் வேட்கை கொண்டவர்தான் என்பதால் தாவரவியல், புவியியல், உயிரியல், வானியல், விலங்கியல் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆய்வாளர்களை அவர் திரட்டிக்கொண்டார். புதிய நிலத்தில் இவர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் நிச்சயம் கிரேக்கத்தை வளப்படுத்தும். தவிரவும், கிரேக்கத்தின் அறிவியல் முன்னேற்றங்களைப் பிற நாடுகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டாமா?

திறன்மிக்க வேடர்களும் குழுவில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் வேலை, கண்ணில்படும் விதவிதமான விலங்குகளையும் பறவைகளையும் லபக்கென்று பிடித்து கூண்டில் போட்டு கிரேக்கத்துக்கு பத்திரமாகக் கொண்டுசெல்வது. கைப்பற்ற முடியாத உயிரினங்களைப் பின்தொடர்ந்து, கவனித்து, அவற்றின் தோற்றம், அசைவுகள், உணவு வழக்கம் போன்றவற்றை வரைந்தும் குறிப்பெடுத்தும் ஆவணப்படுத்துவதற்கு வேறு சிலர் இருந்தனர்.

பின்னர், மருத்துவர்கள். மன்னரும் வீரர்களும் காயமடைந்தால் சிகிச்சை அளிப்பது முதன்மைப் பணி. புதிய இடத்தில் தங்கள் துறை சார்ந்து ஏதேனும் கற்பதற்கும் பயணம் உதவக்கூடும். இந்தியா சிகிச்சைக்குப் பேர் போன இடம், அங்கே மனிதர்கள் நீண்டகாலம் வாழ்கிறார்கள் என்றெல்லாம் மருத்துவரான தீஷியஸ் தனது இண்டிகாவில் எழுதியிருந்தார் அல்லவா? பல அரிய மூலிகைகள் வளரும் இடம் என்று வேறு சொல்கிறார். அவற்றையெல்லாம் கிரேக்க மருத்துவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

அலெக்சாண்டரே அழைத்துச் சென்றவர்கள் போக, ‘நானும் உங்கள் குழுவில் இணைந்து இந்தியா வரலாமா?’ என்று பிற துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் விண்ணப்பிக்க, அவர்களில் சிலரையும் அலெக்சாண்டர் சேர்த்துக்கொண்டார். தகுதி, திறமைக்கேற்ப ஊதியமோ, ஊக்கத்தொகையோ, பரிசுகளோ அளிக்கப்பட்டன. எதுவுமே வேண்டாம், இந்தியாவுக்கு வருவதே பரிசுதான் என்றும் சிலர் சொல்லியிருக்கக்கூடும்.

அலெக்சாண்டர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தார். இந்த இரண்டு ஆண்டுகளும் அவருடைய ஆய்வுக்குழுவினர் தம்மால் இயன்ற அளவு இந்தியாவைச் சுற்றி வந்து, சேகரிக்க வேண்டியதையெல்லாம் சேகரித்துக்கொண்டும் கற்க வேண்டியதையெல்லாம் கற்றுக்கொண்டும் பலனடைந்தனர். இவர்களில் சிலர் தங்கள் பயணத்தையும், வழித்தடத்தில் ஏற்பட்ட அனுபவங்களையும் பதிவுசெய்தனர். இந்தியாவின் நிலவியலில் சிலரும், கடல்வழித் தடங்களில் வேறு சிலரும் ஆர்வம்கொண்டிருந்தனர். வனங்களில் சுற்றித் திரிந்தவர்களில் எவ்வளவு பேர் அதிசய விலங்குகளைத் தேடித் தேடிக் களைத்துப்போனார்கள் என்று தெரியவில்லை.

வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம்தான் அலெக்சாண்டரின் நுழைவாயில். நீண்ட, கடும் பயணத்துக்குப் பிறகு உள்ளே நுழைந்த அலெக்சாண்டர் இந்தியக் காற்றை முதன்முறையாகச் சுவாசித்தபோது எப்படி உணர்ந்தார் என்று தெரியவில்லை. ஆனால் அடுத்தடுத்து கண்முன் விரிந்த காட்சிகள் அவரைக் கிட்டத்தட்ட தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்க வேண்டும்.

பாரசீகத்துக்கு உட்பட்ட அழுது வடியும் அடிமை நிலங்களைப் பார்க்கப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டே குதிரையைச் செலுத்திய அலெக்சாண்டர் முன்னால், நீளமும் அகலமும் கொண்ட நகரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரியத் தொடங்கின. ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு மன்னரால், அதுவும் இந்திய மன்னரால் ஆளப்படுகிறது என்பதை அறிந்ததும் அலெக்சாண்டர் திகைத்துப்போனார். எனில், இந்தியாவில் சுதந்திரமான பகுதிகளும் இருக்கின்றனவா? இந்தியர்கள் அனைவரும் இரட்டைக் கால்களையும், இரட்டைக் கைகளையும், ஒற்றை மனிதத் தலையையும் கொண்டிருப்பதைப் பார்த்து திகைப்பு நிச்சயம் கூடியிருக்கும். இவர்கள் இயல்பாகத்தானே இருக்கிறார்கள்... இவர்கள் வாழும் நிலமும் இயல்பாகத்தானே காட்சியளிக்கிறது... எனில், இந்தியா கிட்டத்தட்ட கிரேக்கம் போன்ற மற்றொரு நிலம்தான் இல்லையா... கிரேக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் வெளித் தோற்றத்தில் வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுதானே உண்மை?

கிரேக்கம்போல் இந்தியாவிலும் குடியரசுகளும் முடியரசுகளும் இயங்கிக்கொண்டிருந்ததை அலெக்சாண்டர் தெரிந்துகொண்டார். மன்னர்கள் வசிப்பதற்கு மாளிகைகளும், மக்களுக்குத் தனி குடியிருப்புகளும் அமைந்திருந்ததைக் கண்டார். வீதிகள், கடைகள், சந்தைகள், நீர்நிலைகள், சாலைகள் என்று எல்லாவற்றையும் பார்வையிட்டார். நகரங்களின் பெயர்களையெல்லாம் அவர் நிச்சயம் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். ஏனெனில், அவர் படித்த எந்த ஏட்டிலும் இந்தியாவிலுள்ள எந்த ஊரின் பெயரும், நகரின் பெயரும் இடம்பெற்றிருக்கவில்லை.

மகதம், காந்தாரம், காம்போஜம், அங்கம், காசி என்று பதினாறு பெரும் நகரங்கள் (மகாஜனபதங்கள்) வடமேற்கில் செழித்து வளர்ந்திருந்தன. இந்த நகரங்களெல்லாம் திடீரென்று புதிதாக மலர்ந்திருக்க வாய்ப்பில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய நகரங்களாகவும், அதற்கும் வெகு காலத்துக்கு முன்பு கிராமப்புறக் குடியிருப்புகளாகவும் இந்தப் பகுதிகள் இருந்திருக்க வேண்டும். மெல்ல மெல்ல வளர்ந்துதான் இப்போதுள்ள பளபளப்பான நிலைக்கு இவை வந்து சேர்ந்திருக்க வேண்டும். அப்படியானால் இந்தியாவுக்கென்று நிச்சயம் ஒரு தனித்துவமான வரலாறு இருக்க வேண்டும் அல்லவா?

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 9 - புதிய நிலம், புதிய பார்வை

அலெக்சாண்டர் யூகித்ததைப்போலவே மகாஜனபதங்கள் உருவாவதற்கு முன்பு ஜனபதங்கள் என்னும் சிறிய மக்கள் குழுக்களைக் கொண்ட முடியாட்சிகள் வடக்கில் தழைத்திருந்தன. பொஆமு 1200 முதல் பொஆமு 6-ம் நூற்றாண்டுவரை குரு நாடு, பாஞ்சாலம், விதேகம், கோசலம் உள்ளிட்ட பெயர்களில் இவை அழைக்கப்பட்டன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கல்விக்கும் வணிகத்துக்கும் பெயர்போன இடங்கள் இவை. உண்மையில் இதுதான் நிஜமான, அதிசய இந்தியா. ஆனால், நான் வியந்து படித்த கிரேக்க நூல்கள் இதை விட்டுவிட்டு ஏன் வீண் கட்டுக்கதைகளைப் புனைந்திருக்கின்றன? இந்த நிலத்தையா `காட்டுமிராண்டிகளின் தேசம்’ என்றும், `பிற்போக்கான இடம்’ என்றும் எழுதிவைத்திருக்கிறார்கள்? `யாமறிந்த நாடுகளில் கிரேக்கம் போல் இனிதானது இன்னொன்றில்லை’ என்னும் அலெக்சாண்டரின் இறுமாப்பு மெல்ல கரைய ஆரம்பித்தது. புகைமூட்டம் மறைந்து தெளிவு கிடைத்ததும், இந்தியாவைப் புதிய கண்கள்கொண்டு அவர் காண ஆரம்பித்தார்.

அலெக்சாண்டரின் ஆய்வாளர்களின் நிலையும் இதுவேதான். இப்படியொரு இந்தியாவை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. புத்தகத்துக்கும் நிஜத்துக்குமான வேறுபாடு அவர்களுக்கு உறைத்தது. தாங்கள் கண்ட இந்தியாவை அவர்கள் புத்தம் புதிதாக எழுதத் தொடங்கினார்கள். இந்தியா குறித்து கிரேக்கமும் உலகமும் பல நூற்றாண்டுகளாகக் கொண்டிருந்த பார்வையை மாற்றியமைக்கும் பெரும் பணியை இந்தப் பதிவுகள் மேற்கொள்ளத் தொடங்கின. இந்தியாவை எழுதுவதற்கு இந்தியாவைக் காண வேண்டிய அவசியமில்லை என்னும் நூற்றாண்டுக்கால நம்பிக்கையை இந்த கிரேக்கப் பதிவுகள் உடைத்து நொறுக்கின. ஓரிடத்தில் நிம்மதியாக அமர்ந்துகொண்டு காதில் விழுந்த கதைகளைக் கேட்டு எழுதுவதற்கும், கால் வலிக்க வலிக்க நடந்து சென்று ஆராய்ந்து எழுதுவதற்கும் உள்ள மிகப் பெரிய இடைவெளியை அலெக்சாண்டரின் குழுவினர் முதன்முறையாக உலகுக்கு அழுத்தமாக உணர்த்தினர். அறிவுத் தேடலுக்கும், பயணத்துக்கும் உள்ள தொடர்பையும் இவர்கள் ஆதாரபூர்வமாகப் புரியவைத்தனர்.

முதல் கிரேக்கப் பதிவுகளில் பெருமளவு காணாமல் போய்விட்டன என்பது உண்மையிலேயே பெருஞ்சோகம். ஆனால் இவற்றிலிருந்து எடுத்தாண்டு மற்றவர்கள் எழுதியிருக்கும் குறிப்புகளும், அந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி பிற்கால கிரேக்க, ரோமானிய வரலாற்றாசிரியர்கள் தீட்டியுள்ள சித்திரங்களும் நம்மிடம் உள்ளன. அலெக் சாண்டரின் பயணத்தைக் கட்டமைக்க உதவும் முதன்மைத் தரவுகளாக இவை இருக்கின்றன.

அலெக்சாண்டர் எத்தனை நகரங்களைக் கைப்பற்றினார், யார் யாரையெல்லாம் தோற்கடித்தார், நிலங்களையும் நதிகளையும் எவ்வாறு கடந்தார், எத்தகைய போர் உத்திகளை வகுத்தார், அவர் படைகள் எப்படியெல்லாம் வீர தீரத்தோடு போரிட்டன என்பதெல்லாம் நுணுக்கமான தகவல்களோடு விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுவிட்டன. ஆனால் ஏற்கெனவே நாம் பார்த்ததுபோல் அலெக்சாண்டர் அதற்காகவெல்லாம் இங்கே நினைவுகூரப்படுவதேயில்லை. நமக்கு முக்கியம் அவரல்ல, உடன் வந்தவர்கள்தான். கிரேக்கத்தை இந்தியாவுக்கு அழைத்து வந்ததன் மூலம் இந்தியாவை உலகுக்கு வெளிப்படுத்தினார் அலெக்சாண்டர். அந்தவகையில், இந்தியாவை வென்றதல்ல அவர் சாதனை. இந்தியா வந்தது மட்டும்தான்.

(விரியும்)