Published:Updated:

உலகை இயக்கும் இந்தியர்கள் - புதிய தொடர் - 1

சத்யா நடெல்லா
பிரீமியம் ஸ்டோரி
News
சத்யா நடெல்லா

தோல்வியை நோக்கி ஜெட் வேகத்தில் வீழ்ந்து கொண்டிருந்த அந்த மாஸ்டர் மைக்ரோசாப்ட்.

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்.

திடமான மன உறுதி உடைய மனிதர்கள் நிறையபேர் இருப்பினும் அவர்களை வழிநடத்தும் தலைவன் சரியாக அமையாவிட்டால் வெல்வது இயலாது’ என்கிறார் வள்ளுவர்.

ஒரு விளையாட்டு அணியோ, தொழில்சார் நிறுவனமோ, அரசியல் கட்சியோ... இவற்றின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருக்கலாம்; பலர் காரணமாக இருக்கலாம். ஆனால், அந்தப் பலவற்றை ஒருங்கிணைத்து ஒரே திசையில் செலுத்தி வெற்றிபெற ஒரு தலைவன் வேண்டும். சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்க, வேண்டியவற்றைச் சேர்த்து வேண்டாதவற்றை விலக்க, நோக்கமும் செல்லும் திசையும் சரியாக இருக்க ஒரு தலைவன் வேண்டும். கார்ப்பரேட் உலகமும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘ஒரு நல்ல தலைவன் இருக்கிறான்’ என்ற நம்பிக்கையே பல வெற்றிகளை நோக்கி வேகமாக அடியெடுத்துவைக்க உதவும். அப்படி உலகளவில் மிக முக்கியமான நிறுவனங்களின் இன்றைய தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்கள் பல இந்தியர்கள். அவர்களிடமிருந்து கற்க அந்நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மட்டுமல்ல; உலகத்துக்கே நிறைய பாடம் உண்டு. அவர்களைப் பற்றியும், அவர்கள் செய்த பல ‘வாவ்’ விஷயங்களையும் பேசுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

சத்யா நடெல்லா
சத்யா நடெல்லா

45 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட டெக் நிறுவனம் அது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் போட்டியின்றி உலகை ஆண்ட ஒரு சாம்ராஜ்யம். கணினியை சும்மா தொட்டுப் பார்த்த ஒருவருக்குக்கூட அவர்கள் பெயர் தெரியாமல் போகாது. கண்பட்டதோ, வைரஸ் தாக்கியதோ... 21-ம் நூற்றாண்டில் அந்நிறுவனம் லேசாக அசைந்தது. தடுமாறிய நிறுவனம் விழியெட்டும் தூரம் வரை இருள் மட்டுமே இருப்பதாக உணர்ந்தபின் தலைவரை மாற்ற முடிவு செய்தது. புதிதாக ஒருவர் வந்தார். மென்பொருள்களின் மாஸ்டர், தொழில்நுட்ப உலகின் தாதா என அத்தனை பாரம்பர்யமும் கொண்ட நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ தன் ஊழியர்களுக்குத் தன் முதல் கடிதத்தை எழுதுகிறார். அதில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

Our industry does not respect tradition – it only respects innovation

(நமது துறை பழங்கதைகளைப் பொருட்படுத்தாது. புதுமைகளை மட்டுமே மதிக்கும்)

சத்யா நடெல்லா
சத்யா நடெல்லா

தோல்வியை நோக்கி ஜெட் வேகத்தில் வீழ்ந்து கொண்டிருந்த அந்த மாஸ்டர் மைக்ரோசாப்ட். அதைத் தூக்கி நிறுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்பாதர் சத்யா நடெல்லா. அமெரிக்காவில் செட்டிலான ஓர் இந்தியர்.

45 ஆண்டுகளுக்கு முன்பு பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலனால் தொடங்கப்பட்ட நிறுவனம் மைக்ரோசாப்ட். உலகிலிருந்த அத்தனை கணினிகளிலும் மைக்ரோசாப்ட்டின் ஏதாவது ஒரு மென்பொருள் இருந்தே தீரும் என்ற நிலைக்கு அதன் ஆதிக்கம் உச்சம் தொட்ட காலம் உண்டு. காலம் மாறியது. 21-ம் நூற்றாண்டில் பல புதிய டெக் ஜாம்பவான்கள் உருவாகத் தொடங்கினார்கள். மைக்ரோசாப்ட்டின் முதன்மைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து பில் கேட்ஸ் விலகினார். அந்த இடத்துக்கு 2000-ம் ஆண்டு ஸ்டீவ் பால்மர் என்பவர் வந்தார். கேட்ஸின் நண்பரான அவர் தலைமையில் 14 ஆண்டுகள் இயங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம், 9% வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. அவரை மாற்றியாகவேண்டிய தருணம்.

உலகை இயக்கும் இந்தியர்கள் - புதிய தொடர் - 1

2014-ம் ஆண்டு. மைக்ரோசாப்ட் தன் புதிய தலைவரைத் தேடிக்கொண்டிருந்தது. உண்மையில், மைக்ரோசாப்ட் மட்டுமல்ல; உலகமே அந்த சி.இ.ஓ யார் என்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது. மைக்ரோசாப்ட்டை ஓரங்கட்டிய பல டெக் நிறுவனங்களுக்குத் தெரியும், ஒரேயொரு மாற்றம் கூட மைக்ரோசாப்ட்டை மீண்டும் முதலிடத்துக்குக் கொண்டு வருமென. அப்போது உலகம் அறிந்த பெயர்தான்... சத்யா நடெல்லா.

சத்யா சி.இ.ஓ ஆகும் முன்புதான் மைக்ரோசாப்ட் 7.4 பில்லியன் டாலர் தந்து நோக்கியாவை வாங்கியிருந்தது. காரணம், மைக்ரோசாப்ட்டின் மொபைல்கள் தோல்வியடைந்திருந்ததுதான். அதற்கு முன் வெளியான வின்டோஸ் 8 ஆபரேட்டிங் சிஸ்டமும் மகா தோல்வி. 2009-ல் உலகின் 90% கணினிகளில் மைக்ரோசாப்ட் இருந்தது. அப்போதுதான் நோக்கியா விஷயம் வந்தது. நோக்கியாவை வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்தபோதே “உலகுக்கு ஆப்பிள், ஆண்ட்ராய்டு தாண்டி இன்னொரு மொபைல் இயங்குதளம் தேவையில்லை” எனச் சொன்னவர் சத்யா. மைக்ரோசாப்ட் அப்போது சத்யாவை மீறிப் போனது; நோக்கியாவை வாங்கியது. பின்னர் சுதாரித்து “நீங்கதான் பாஸ் எங்கள காப்பாத்தணும்” என அவரையே சி.இ.ஓ ஆக்கியது. சத்யாவும் சரியென்றார். ஏனென்றால், சத்யாவுக்கும் மைக்ரோசாப்ட்டுக்குமான உறவு 1992-ல் தொடங்கியது.

சத்யா சி.இ.ஓ ஆனபோது அவர் முன் இருந்தது பில் கேட்ஸ் கட்டி வைத்த கோட்டையல்ல. எங்கும் ஓட்டைகள் விழுந்து ஒழுகிக்கொண்டிருந்த கட்டடம். இன்ஜின் பழுதான விமானம். ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள், கிளவுட் சேவையில் அமேசான், சர்ச் இன்ஜின் பக்கம் கூகுள் என எல்லா இடங்களிலும் பின்வரிசையிலே இருந்தது மைக்ரோசாப்ட். வானிலை அறிக்கையில் சொல்வார்களே, ‘பத்தாண்டுக்காலத்தில் பெய்த அதிக மழை’. அப்படி பங்குச்சந்தையில் கடைசி பெஞ்ச் மாணவனாக இருந்தது மைக்ரோசாப்ட். மீண்டும் பர்ஸ்ட் ரேங்க் வாங்க சத்யா செய்த முதல் வேலைதான் மேலே சொன்ன மின்னஞ்சல். அதன் பின்னர் அவர் செய்த விஷயங்கள் வரலாற்றை மாற்றி எழுதின. “நாங்க யானை அல்ல; குதிரை” என கம்பீரமாக எழுந்து நிற்கிறது இன்று மைக்ரோசாப்ட். நான்கே ஆண்டுகளில் அதன் பங்கு விலை மூன்று மடங்கு ஏறியிருக்கிறது; மன்னிக்க... ஏற்றியிருக்கிறார் சத்யா. என்ன செய்தார் புதிய தலைவர்?

நிறுவனத்தின் கலாசாரத்தை மாற்றினார். Collaborative culture முறையைக் கொண்டு வந்தார். இதற்காக ஊழியர்களுக்கு ஹேக்கத்தான் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். நிறுவனத்துக்காக நடத்தப்படும் ஹேக்கத்தான் வகைகளில் உலக அளவில் மிகப்பெரிய நிகழ்ச்சி யாக அது நடந்தது. பல புதிய ஐடியாக்களும் திறமைசாலிகளும் சத்யாவின் பார்வைக்கு வந்தார்கள். எதிர்காலம் கிளவுட் மற்றும் ஆர்ட்டிபிஷியல் இன்டெலி ஜென்ஸ்க்கானது எனக் கணித்தார். அந்தத் திசையில் மைக்ரோசாப்ட்டை வழி நடத்தினார். இது என்ன பிரமாதமான ஐடியா என்கிறீர்களா? அப்படித்தான். சத்யா சி.இ.ஓ ஆகும் முன்பு அவர் சொன்னதை நிறுவனம் கேட்கவில்லை இல்லையா? தன்னைப்போல இன்னும் யாரெல்லாம் அப்படி இருக்கிறார்கள் எனக் கண்டறியத்தான் அந்த ஹேக்கத்தான்.

அதற்கு முந்தைய சி.இ.ஓ போட்டியாளர்களை வெறுத்தார். கணினி இயங்கு தளமான லினக்ஸை கேன்சர் என்றார். ஆனால் சத்யா அவர்களோடு தொழில்ரீதியாகக் கூட்டு சேர்ந்தார். GitHub, லிங்க்ட் இன் எனப் பல டெக் நிறுவனங்களை வாங்கினார். இது கூகுளின் உத்தி. கூகுளுடனே போட்டியிட்டு GitHub-ஐ 7.5 பில்லியனுக்கு வாங்கினார். ஆனால், அவை எல்லாமே மைக்ரோசாப்ட்டை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல உதவின. ஸ்டீவ் பால்மர் எந்த ஏரியாக்களில் எல்லாம் மைக்ரோசாப்ட் பலவீனமாக இருந்ததோ அந்தத் துறைகளில் புதிய நிறுவனங்களை வாங்கினார். உதாரணமாக நோக்கியா. காரணம், மொபைல் ஏரியாவில் மைக்ரோசாப்ட் கிட்டத்தட்ட ஜீரோ. ஆனால், சத்யாவோ எவையெல்லாம் மைக்ரோசாப்ட்டின் பலமோ அந்த ஏரியாக்களில் புதிய கூட்டு முயற்சிகள் கொண்டு வந்து யானை பலமாக்கினார். சொல்லப்போனால், சத்யா, பால்மர் செய்த எதையுமே செய்யவில்லை. அல்லது அவர் செய்த எல்லாவற்றையும் தலைகீழாக்கினார். மைக்ரோசாப்ட் தலை நிமிர்ந்தது.

நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வருபவர்களுக்கு தங்கள் தயாரிப்பு பற்றிய மிக நுட்பமான புரிதல் வேண்டும். அதன் எதிர்காலம் பற்றிய கனவு வேண்டும். சத்யாவுக்கு அதில்தான் கூடுதல் தெளிவிருந்தது. ‘மைக்ரோசாப்ட்டின் தயாரிப்புகள் உலகை மாற்றுவதற்கானதல்ல; அப்படி மாற்ற முயலும் மனிதர்களுக்கு உதவியாய் இருப்பதே’ என்கிறார் சத்யா. தேர்வெழுதும் மாணவன், புதிய மொபைல் ஆப் உருவாக்கும் டெவலப்பர், மற்றும் நிறுவனங்களுக்குத் தோள் கொடுக்கிறது மைக்ரோசாப்ட். அந்தப் பாதையைப் பிடித்ததால், அவர்கள் செல்லும் திசையில் தன் நிறுவனத்தைக் கொண்டு செல்ல முடிவு செய்தார் சத்யா. அது முந்தைய தலைமையின் செயல்திட்டத்துக்கு எதிரானது. ஆனால், சத்யா எப்போதும் அப்படித்தான். சொந்தமாகவே முடிவெடுப்பார். அவர் பெற்றோர்களுக்கு அது நன்றாகத் தெரியும்.

சத்யாவின் அப்பா அவர் வீட்டில் காரல் மார்க்ஸ் படத்தைப் பெரிதாக மாட்டியிருந்தார். அவரின் அம்மா, கடவுள் லட்சுமியின் படம் மாட்டியிருந்தார். இருவரும் தங்களிடமிருந்து சத்யா கற்க வேண்டுமென நினைத்தார்கள். மகனிடம் அவர்கள் அவருக்கு என்ன படம் வேண்டுமெனக் கேட்டபோது சத்யா, கிரிக்கெட் வீரர் ஜெய்சிம்ஹா படம் வேண்டும் என்றார். சத்யாவுக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பது மட்டுமல்ல காரணம்; ஜெய்சிம்ஹா ஸ்டைலான பிளேயர்.

சத்யா கிரிக்கெட் பார்ப்பார்; விளையாடவும் செய்வார். ஓர் அணியாக சிறப்பாகச் செயல்படவும், தலைமைப்பொறுப்பை உணர்ந்து செயல்படவும் கிரிக்கெட் தனக்கு உதவியதாகச் சொல்கிறார் சத்யா. HIT REFRESH என்ற தன் சுயசரிதையை 2017-ல் எழுதி வெளியிட்டார் சத்யா. கிரிக்கெட்டிலிருந்து நிறைய உதாரணங்களுடன் நிர்வாகத்தைப் பற்றி நிறைய எழுதியிருந்தார் சத்யா. சத்யாவிற்குக் கவிதைகள் என்றாலும் விருப்பம். ‘கவிதைகள் புரோகிராமிங் கோட் போலதான். நிறைய பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயத்தைச் சுருக்கமாகச் சில வரிகளில் சொல்வதுதான் இரண்டும்” என்கிறார் சத்யா.

சத்யாவிற்கு பிறரிடமிருந்து கற்பது பிடிக்கும். ஒருவரின் வெற்றிக்கதைகளைவிட அவர்களின் கடினமான காலம் குறித்தே அதிகம் கேட்பார். “200க்கு ஒரு விக்கெட் இருக்கும்போது ஒரு பேட்ஸ்மேன் என்ன செய்தார் என்பதில் என்ன இருக்கிறது? அவர் அணி 18 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தபோது களமிறங்கியவனிடம்தான் நான் பேசுவேன்” என்பார் சத்யா. மைக்ரோசாப்ட் அப்படித் தத்தளித்தபோது களமிறங்கி அணியை வெற்றி பெறச் செய்தவர் இல்லையா?

சத்யாவிடமிருந்து நாம் கற்க வேண்டியவை நிறைய உண்டு. அதில் முக்கியமானது, தேங்கிவிடக்கூடாது என்பதே. மாற்றம் ஒன்றுதான் மாறாதது. அதற்கு எப்போதும் தயாராக வேண்டும். அப்படி இல்லாமல், தேங்கி நின்றால் காலம் நமக்காகக் காத்திருக்காது. மைக்ரோசாப்ட் உணராததும் அதுதான்; சத்யா உணர்ந்திருந்ததும் அதுதான். வெற்றியின் திசையும் அதுதான்!

- இயக்குவார்கள்

பிறந்த தேதி: August 19, 1967

பிறந்த ஊர்: ஹைதராபாத்

குடும்பம்: மனைவி அனுபமா நடெல்லா, இரண்டு மகள்கள், ஒரு மகன்

சத்யா நடெல்லா
சத்யா நடெல்லா

Quotes: “ஒரு நல்ல லீடர் நிறுவனத்துக்கு வெளியேயிருக்கும் வாய்ப்புகளையும் நிறுவனத்தின் உள்ளேயிருக்கும் திறமைகளையும் இணைத்து, வேறொருவர் அதைச் செய்யும் முன் செய்துமுடிக்க வேண்டும்.”

“ஒரு வியாபார நிறுவனத்தின் ஆயுட்காலம் என்பது தன்னைத்தானே புதுப்பிப்பதிலோ அல்லது எதிர்காலத்தைக் கணிப்பதிலோதான் இருக்கிறது.”

“ஒருவர் எதனால் வெற்றிபெற்றாரோ அந்தப் பழக்கங்களை மறக்கச் செய்யும் வல்லமை வெற்றிக்கு உண்டு.”