
``My mind is plastic, I can expand it, I can learn more’’ ``Character is of the utmost importance’’
ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எனப்படும் சி.இ.ஓ என்பவரைக் கப்பலின் கேப்டனுடன் ஒப்பிட்டது ஏன் என வாசகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். கப்பலின் கேப்டன் என்பவர் அதை ஓட்டுபவர் அல்லர்.
கடலிலும் கப்பலிலும் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும். பெரும்பாலும் அவரின் வேலை முக்கியமான முடிவுகள் எடுப்பதே. அதன் பிறகு, எடுத்த முடிவைச் செயல்படுத்துவது. மற்ற எந்த வேலையையும்விட கப்பலின் கேப்டன் வேலைதான் ஒரு சி.இ.ஓ-வைக் குறிப்பதற்கு சரியாக இருக்குமெனக் கருதுகிறேன். ஒரு கப்பலின் கேப்டனைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள அந்தக் கப்பலைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சில சமயம் அதுவே அந்த கேப்டனின் பாதிப் பெருமைகளைச் சொல்லிவிடும். நாம் இந்த வாரம் பார்க்கப்போகும் கேப்டனின் பெயர் அர்விந்த் கிருஷ்ணா. கப்பலின் பெயர் ஐ.பி.எம். (IBM)

டெக் துறையின் பழைமையான பிராண்டுகளில் ஒன்று ஐ.பி.எம். 109 வருட அனுபவமுடைய ஐ.பி.எம் என்ற பெயர் கணினியைப் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். ஆனால் ஐ.பி.எம் உண்மையில் என்ன செய்கிறது, என்ன மாதிரியான சேவைகளை வழங்குகிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை. ஆரம்பத்தில் டைப்ரைட்டர், பன்ச் கார்டு மெஷின், கால்குலேட்டர் உள்ளிட்ட, அலுவலகத்திற்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்து வந்த ஐ.பி.எம்., தொழில்நுட்பம் வளர வளர கணினிப் பக்கம் கவனத்தைத் திருப்பியது. 1960களில் உலகிலிருந்த கணினிகளில் 70% ஐ.பி.எம் தயாரிப்புகள்தாம். ஆனால், 21-ம் நூற்றாண்டு ஐ.பி.எம் நிறுவனத்துக்கு அப்படியொன்றும் பிரமாதமாகத் தொடங்கவில்லை. தனது ஹார்டு டிஸ்க் தயாரிப்பை ஹிட்டாச்சிக்கு விற்றது. கணினித் தயாரிப்பை லெனோவாவுக்கு விற்றது. இனி நாங்கள் கணினி உற்பத்தி செய்யப் போவதில்லை என்ற ஐ.பி.எம்-ன் முடிவு உலகுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தந்தது. அதன் பின் புதுப்புது ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தியது. 2001-ம் ஆண்டு 3,000 புதிய விஷயங்களுக்கும், 2008-ம் ஆண்டு 4,000 புதிய விஷயங்களுக்கும் பேடன்ட் பெற்றது ஐ.பி.எம். ஒரே ஆண்டில் இத்தனை பேடன்ட் பெற்ற நிறுவனம் ஐ.பி.எம். மட்டும்தான். ஐ.பி.எம்-மின் முகம் அதன் பின் மாறத் தொடங்கியது. காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு இன்னமும் ஏறுமுகத்தில் இருக்கும் நிறுவனம் அது. அவ்வப்போது சின்னச்சின்னப் பிரச்னைகள், சறுக்கல்களைச் சந்தித்தாலும் நிலையான நிறுவனமாக முன்னோக்கி மட்டுமே சென்றுகொண்டிருக்கும் ஐ.பி.எம்-க்குத்தான் சி.இ.ஓ ஆகியிருக்கிறார் அமெரிக்காவில் செட்டில் ஆன இந்தியரான அர்விந்த் கிருஷ்ணா. இந்த ஆண்டு தொடக்கத்தில் அர்விந்த் தான் அடுத்த சி.இ.ஓ என அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் அதிகாரபூர்வமாக சி.இ.ஓ ஆனார்.

சும்மா கொடுத்துவிடுவார்களா, அதுவும் 100 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு நிறுவனத்தின், ஆண்டுக்கு ஆறு லட்சம் கோடி வருமானம் பார்க்கும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை? அர்விந்த் அதற்காக உழைத்தது 30 ஆண்டுகள். ஆம். 1990-ம் ஆண்டில் பிஹெச்.டி முடித்த கையோடு ஐ.பி.எம்-மில் கால் வைத்தவர், அதன்பின் வேறெங்கும் நகரவேயில்லை. கடிவாளம் கட்டிய குதிரை போல, டெம்பிள் ரன் ஓடும் சிறுவன்போல, இலக்கு மாறாமல், அங்குமிங்கும் அலைபாயாமல் ஐ.பி.எம்-முக்காகவே உழைத்தவர் அர்விந்த் கிருஷ்ணா. அதனால், ஐ.பி.எம்மின் கலாசாரம் தொடங்கி எல்லாமே அவருக்கு அத்துப்படி. கூடவே, காதலும். அதுதான் அவரை அவரது 57வது வயதில் அவரை சி.இ.ஓ ஆக்கியிருக்கிறது. இவருக்கு முன் சி.இ.ஓ-வாக இருந்தவர் விர்ஜெனியா ரொமெட்டி என்ற பெண். 40 ஆண்டுக்கால ஐ.பி.எம். வாழ்க்கைக்குப் பின், அவருக்கு ஓய்வு பெறும் (62) வயதானதால் அவர் விலகி, அர்விந்துக்கு வழி விட்டிருக்கிறார். ‘எனக்குப் பின் ஐ.பி.எம்-மைத் திறம்பட நடத்தும் அத்தனை திறமைகளும் கொண்டவர் அர்விந்த். அதை எனக்கு மட்டுமல்ல, உலகுக்கே காட்டிவிட்டார் அர்விந்த்’ எனப் பாராட்டுப் பத்திரம் வேறு வாசித்துவிட்டுச் சென்றிருக்கிறார் ரொமெட்டி. அப்படி என்ன செய்தார் அர்விந்த்?
2012க்குப் பின் ஐ.பி.எம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. ரொமெட்டி, கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைதான் இனி உலகம் என முடிவு செய்து அதில் அதிக கவனம் செலுத்தினார். ‘வாட்சன்’ என்ற பெயரில் ஐ.பி.எம் உருவாக்கிய மென்பொருள், வாடிக்கை யாளர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. கிளவுட் ஏரியாவிலும் அமேசான் ‘மேல ஏறி வாரோம்... நீ ஒதுங்கி நில்லு’ என எகிறி அடித்தது. பொருளாதார ரீதியாக ஐ.பி.எம் கொஞ்சம் அல்ல; நிறையவே ஆட்டம் கண்டது. கிட்டத்தட்ட 17 காலாண்டுகள் தொடர்ந்து விற்பனை சரிந்தது. ஏதாவது செய்தே ஆக வேண்டுமென்ற நிலையில் ரொமெட்டி எடுத்த முடிவுதான் ‘ரெட் ஹேட்’ நிறுவனத்தை வாங்குவது என்பது.

ரெட் ஹேட் ஒரு ஓப்பன் சோர்ஸ் நிறுவனம். அதை 34 பில்லியன் அமெரிக்க டாலர் தந்து ஐ.பி.எம் வாங்க முன் வந்தது. டெக் உலகின் இரண்டாவது மிகப்பெரிய இணைப்பு அந்த டீல். அப்படியென்றால் அதுதான் ஐ.பி.எம்-மின் தலையெழுத்தைக் கிட்டத்தட்ட நிர்ணயிக்கப் போகும் விஷயம். அந்த டீலை முன்னின்று முழுவதுமாக, சரியாக நடத்திக் காட்டியவர் அர்விந்த் கிருஷ்ணா. சொன்ன வேலையைச் செய்தால் தலைவர் ஆகிவிட முடியுமா என இப்போது ஒரு சந்தேகம் எழலாம். இன்னொன்றையும் சொல்கிறேன். தடுமாற்றத்தில் ஐ.பி.எம் இருந்தபோது ரெட் ஹேட்டுடன் கைகோப்பது என்ற ஐடியாவையும், அதனால் ஐ.பி.எம்-முக்கு என்னவெல்லாம் நன்மை என்பதையும் ரொமெட்டியிடமும் ஐ.பி.எம்-மின் போர்டு மெம்பர்களிடமும் சொன்னவர் அர்விந்த் கிருஷ்ணாதான். தடுமாற்றத்தில் இருக்கும்போது என்ன தேவை என்பதை அறிந்து அர்விந்த் கிருஷ்ணா தந்த தீர்வும், அதை முறையாகச் செய்து முடித்த பொறுப்பும்தான் இன்று ஐ.பி.எம்-மின் சி.இ.ஓ என்ற மிகப்பெரிய இடத்தை அவருக்குத் தந்திருக்கிறது.

சி.இ.ஓ ஆவதற்கு முன் அர்விந்த், ஐ.பி.எம்-மில் கிளவுட் சாப்ட்வேர் பிரிவின் தலைவராக இருந்தார். அவர் வயதைவிட இளமையானவர் என்கிறார்கள் அவருடன் பணிபுரிந்தவர்கள். இளமை என்றால் பார்க்கவோ அல்லது உடல் நலத்திலோ அல்ல; சிந்திப்பதில். 57 வயதாகும் அர்விந்தால் 20வயது ஆகும் 2கே கிட்ஸைப் போல யோசிக்க முடியும். எந்த ஈகோவும் இல்லாமல் எல்லோருடனும், எல்லா வயதினருடனும் வேலை செய்ய முடியும். அதனால்தான் 110 ஆண்டுக்கால நிறுவனம் என்ற கெத்து இல்லாமல் ரெட் ஹேட் போன்ற நவீன டெக்னாலஜி நிறுவனங்களுடன் சேர்ந்து பணிபுரிய அர்விந்த் யோசித்தார். தலைமுறைகளைத் தாண்டி யோசிப்பதும், செயல்படுவதும் தலைவனுக்குண்டான முக்கிய குணம்.
அர்விந்த் இந்திய ஐ.ஐ.டி மாணவர். கான்பூர் ஐ.ஐ.டி-யில் மின்பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்கா சென்று அங்கு மாஸ்டர் மற்றும் பிஹெச்.டி முடித்தார். அர்விந்தின் பூர்வீகம் ஆந்திரா என்றாலும் அப்பா ராணுவ அதிகாரி என்பதால் பல மாநிலங்களில் வாழ்ந்திருக்கிறார். சில ஆண்டுகள் குன்னூர்ப் பள்ளியொன்றிலும் படித்திருக்கிறார் அர்விந்த்.

சி.இ.ஓ ஆனதும் கார்ப்பரேட் சம்பிரதாயமான மெயில் ஒன்றை ஐ.பி.எம் ஊழியர்களுக்கு எழுதியிருக்கிறார் அர்விந்த். அதில், இந்த கோவிட் நெருக்கடி காலத்தை எப்படிச் சமாளிப்பது என்பதில் தொடங்கி நிறுவனத்தில் நடந்திருக்கும் மாற்றங்கள் வரை அத்தனையையும் ஒளிவுமறைவின்றி எழுதியிருக்கிறார். ‘நீங்கள் சொல்வதைக் கேட்கவும் உங்களிடமிருந்து கற்கவும் நான் தயாராய் இருக்கிறேன்’ என எழுதியிருந்ததை ஒரு ஐ.பி.எம் ஊழியர் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் பதிவிட்டிருக்கிறார். ஒரு தலைவன் முதலில் தன்னுடன் இருப்பவர்களுக்கு நம்பிக்கையைத் தர வேண்டும். அர்விந்த் அதைச் செய்துவிட்டார்.
அர்விந்த் வாங்கச் சொன்ன ரெட் ஹேட் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருந்த ஜிம் வொயிட்ஹர்ஸ்ட் (Jim Whitehurst) என்பவர்தான் இப்போது ஐ.பி.எம்-மின் புதிய பிரசிடெண்ட். இன்னும் ஐந்து ஆண்டுகளில் அர்விந்த் ஓய்வு பெறும்போது ஜிம்தான் அடுத்த சி.இ.ஓ என்கிறார்கள். ஆனால், இந்த ஐந்து ஆண்டுகளில் அர்விந்த் செய்யப்போகும் மேஜிக்குகள் என்ன என்பதுதான் இப்போது டெக் உலகின் எதிர்பார்ப்பு. காலம் கொஞ்சமே இருப்பதால் அர்விந்த் பவர்ப்ளே ஆட்டம்தான் ஆட நினைத்திருப்பார். அதற்குள் கோவிட் வேறு வந்துவிட்டது. இருந்த கொஞ்ச காலத்திலும் கொஞ்சம் போய்விட்டது. ஆனால், அதெல்லாம் அர்விந்துக்கு விஷயமே இல்லை. பிரச்னைகளைப் போர்த்திக்கொண்டு தூங்குவதுதான் அவர் வழக்கம். 110 ஆண்டுக்கால நிறுவனத்தில் தன் தடத்தை அழுத்தமாகப் பதிக்காமல் விட மாட்டார். விட்டுக்கொடுப்பது மட்டுமல்ல, நினைத்தை விடாமல் செய்து முடிப்பதும் தலைவர்களின் குணம். அர்விந்த் அதைச் செய்து முடிக்க வாழ்த்துவோம்.
- இயக்குவார்கள்