Published:Updated:

உலகை இயக்கும் இந்தியர்கள் - 10

Anjali Sud
பிரீமியம் ஸ்டோரி
News
Anjali Sud

அமேசானிலிருந்து அஞ்சலி வந்த இடம்தான் விமியோ(Vimeo). 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விமியோ, அமேசானைவிட சின்ன நிறுவனம் தான்.

‘இந்த இணைய உலகம் நமக்குத் தந்திருக்கும் பரிசுகள் ஏராளம். நாம் விரும்பும் விஷயங்களைக் கற்க, அது தொடர்பான ஆட்களைச் சந்திக்க, நம் சேவை மற்றும் தயாரிப்புகளுக்கு உலகெங்கும் ஒரு மிகப்பெரிய சந்தையை உருவாக்க... இப்படி எல்லாவற்றுக்குமான வாய்ப்புகளும் நம் பாக்கெட்டில் இருக்கின்றன. இவ்வளவு வசதிகள் இருப்பதால் ஒருவர் தன் கரியரை வழக்கமான முறையில் மட்டுமே வளர்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. கல்லூரி முடித்ததும், கல்யாணம் முடித்ததும், 40 வயது தாண்டியதும் என எப்போது வேண்டுமென்றாலும் கரியர் மாறலாம்; அதில் வெற்றிபெறலாம். It’s the paradox of choice.’

இதைச் சொன்னவர் ஒரு பெண். அதுவும் 37 வயதே ஆன ஒருவர். அதுவும் உலகின் முக்கியமான வீடியோ சேவை நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓவாக 34 வயதில் ஆன ஒரு பெண். அவர், அஞ்சலி சூட்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ முடித்தவர் அஞ்சலி. பெற்றோர் அமெரிக்காவில் செட்டில் ஆன இந்தியர்கள். வசதியான குடும்பம். ஆனால், அஞ்சலிக்கு அது ஒரு விஷயமே இல்லை. தன் வாழ்க்கை தன் இஷ்டப்படி என்னும் கேரக்டர். தோல்விகள்தான் வெற்றிக்கான படிக்கட்டு என்பார்கள். பலர் அதை சப்பைக்கட்டு என்றுகூடச் சொல்வார்கள். அஞ்சலி அப்படிச் சொல்ல மாட்டார். மேற்படிப்பின்போது அஞ்சலிக்கு இன்வெஸ்ட்மென்ட் பேங்கர் ஆக வேண்டும் என்பது விருப்பம். ஒரு விஷயத்தை விரும்பினால் உடனே செய்துவிடுவது அஞ்சலி ஸ்டைல். அப்ளை செய்தார். கிட்டத்தட்ட அத்தனை நிறுவனங்களும் அஞ்சலிக்கு நோ சொல்லிவிட்டன. ஒரே ஒரு நிறுவனம் மட்டும் அவரை நேர்முகத்தேர்வுக்கு அழைத்தது. ஆனால், முடிவில் அவர்களும் ‘இன்வெஸ்ட்மென்ட் பேங்கர் ஆக நீ சரிப்பட்டு வர மாட்ட’ எனச் சொல்லிவிட்டனர். அஞ்சலி தன் வாழ்வில் மிகவும் சோர்ந்திருந்த காலமென அதைச் சொல்கிறார்.

இனி, இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் வேண்டாமென முடிவெடுத்தார். அடுத்து என்ன செய்வது? சில ஸ்டார்ட் அப் நிறுவனர்களைச் சந்தித்தார். நிதித்துறையைச் சேர்ந்த அவர், அடுத்து எங்கு செல்லலாம் எனக் கேட்டார். ஒரு கட்டத்தில் உறைந்து நிற்கும்போது தகுதியானவர்களிடம் தகுந்த அட்வைஸ்களைக் கேட்பதில் தவறில்லை. சொல்லப்போனால் அதுதான் புத்திசாலித்தனம். அஞ்சலியைப் பற்றி அறிந்த சிலர் ‘பிசினஸ் டெவலப்மென்ட் அவருக்கு ஒத்து வரும்’ என்றார்கள். அஞ்சலிக்கும் சரியெனப்பட்டது. ஆனால், அதைப் பற்றிக் கற்க வேண்டுமே... ஹார்வர்டு எம்.பி.ஏ என்பதால் எல்லா வேலைகளும் தெரிந்துவிடுமா என்ன? அமேசான் நிறுவனத்தில் பிசினஸ் டெவலப் மென்ட்டுக்காக இண்டெர்ன்ஷிப் அப்ளை செய்தார். கிடைத்தது. 24 மணி நேரமும் வேலை செய்வதும் அதைப் பற்றிக் கற்பதுமாகப் போனது அஞ்சலியின் நேரம். முடிவில், அமேசான் அவருக்கு வேலை கொடுக்க முடிவு செய்தது; ஆனால் மார்க்கெட்டிங் துறையில் வேலை. அஞ்சலிக்குத் தலை சுற்றியது. பரவாயில்லை, மார்க்கெட்டிங் செய்வோம் எனக் களத்தில் இறங்கினார். 2010-2014 வரை அமேசானில் வேலை செய்தார். பல வேலைகள்; பல பதவிகள்.

உலகை இயக்கும் இந்தியர்கள் - 10

அமேசானிலிருந்து அஞ்சலி வந்த இடம்தான் விமியோ(Vimeo). 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விமியோ, அமேசானைவிட சின்ன நிறுவனம் தான். ஆனால், அங்கு அஞ்சலிக்கு அதிக வேலை இருந்தது. அதனால் இடம் மாறினார். அங்கு அவர் செய்ததெல்லாம் ஜகஜ்ஜாலக் கில்லாடி வேலைகள். சேர்ந்த மூன்றே ஆண்டுகளில், அஞ்சலியின் 34வது வயதில் விமியோ அவரிடம் கேட்டது, ‘எங்க சி.இ.ஓ ஆகிடுறீங்களா?’ என்று. அஞ்சலிக்கு அது ஆச்சர்யம்.

இப்படியொரு ஆஃபர் வந்ததும் அஞ்சலி செய்த முதல் காரியம், அவர் அப்பாவுக்கு போன் செய்ததுதான். அஞ்சலி எப்போதும் அப்படித்தான். சின்ன சந்தேகம் என்றாலும் அப்பாவின் அட்வைஸ் கேட்டுவிடுவார். அன்று அப்பா சொன்னது ‘உன் கம்ஃபர்ட் ஜோன்ல எப்பம்மா நீ இருந்திருக்க? புதுசு புதுசா தேடுவ... அதனால இதுக்கும் ஓகே சொல்லிடலாம்.’ உடனே ஓகே சொல்லிவிட்டார் அஞ்சலி.

நமக்கு எது நன்றாகத் தெரியுமோ, வருமோ, அதற்குள்ளாகவே வட்டமிட்டுக் கொண்டிருப்பதை ‘கம்ஃபர்ட் ஜோன்’ சொல்வார்கள். அதைத் தாண்டிச் செல்ல மிகப்பெரிய தைரியம் வேண்டும். அதே சமயம் வெற்றி பெரும்பாலும் அந்த கம்ஃபர்ட் சோனுக்கு வெளியேதான் இருக்கும். அஞ்சலிக்கு இந்த எல்லைகளைத் தாண்டிச் செல்லும் மனநிலை இயல்பிலேயே இருந்தது.அஞ்சலியின் குழந்தைப் பருவத்தில் ஒருநாள் அஞ்சலியும் அவர் அப்பாவும் புத்தகக்கடை ஒன்றுக்குச் சென்றிருந்தார்கள். அங்கே அஞ்சலியின் கண்ணில்பட்ட ஒரு புத்தகம் ‘The Best High Schools in America.’ அதைப் பார்த்ததும் அஞ்சலிக்கு ஒரு சோதனை செய்யத் தோன்றியது. அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த முக்கியமான பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கத் தொடங்கினார். அவை எல்லாமே அஞ்சலியின் சொந்த நகரிலிருந்து தள்ளி இருந்தன. அப்போது அஞ்சலிக்கு வயது 14தான். ஒருவேளை இடம் கிடைத்தால் அந்த வயதில் வீட்டிலிருக்க முடியாது. அதெல்லாம் தெரிந்துதான் அஞ்சலி அந்த சோதனையைத் தொடங்கினார். அப்பாவும் அதற்கு ஆதரவாக நின்றார். ‘மனமிருந்தால் மார்க்கம் உண்டு’ என்பது தமிழ்ப் பழமொழிதான்; ஆனால், உலகம் முழுவதுக்குமான செய்தி இல்லையா? அமெரிக்காவின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘Phillips Andover Academy’ அஞ்சலிக்கு இடம் தர முன் வந்தது. அஞ்சலியும் பின்வாங்கவில்லை. 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி படிப்புக்காகச் சென்றார். முதலாண்டில் அங்கே ஏகப்பட்ட தோல்விகள். ஆனால், அதன் பின்னர் அஞ்சலிக்கு எல்லாமே வெற்றிதான். அதைத் தெரிந்தவர் என்பதால்தான் அஞ்சலியின் அப்பா, சி.இ.ஓ ஆஃபரை ஏற்கச் சொன்னார்.

உலகை இயக்கும் இந்தியர்கள் - 10

அஞ்சலிக்கு எல்லாமே ‘இப்ப இப்ப’ நடக்கணும். தலைமையேற்றது மட்டுமல்ல; அதன் பின்னர் தன்னை நிரூபிக்கவும் அவருக்கு அதிக காலம் தேவைப்படவில்லை. 90 நாள்களில், விமியோவில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். அதுவரை விமியோ ஒரு பொழுதுபோக்குத் தளமாகத்தான் இருந்தது. அஞ்சலி அதை software-as-a-service பிசினஸாக மாற்றினார். சுருக்கமாக அது என்னவெனச் சொல்லிவிடுகிறேன். விமியோ தளத்தில் நாம் வீடியோ பார்த்து மகிழ்ந்தால் அது என்டெர்டெய்ன்மென்ட் பக்கமாகிறது. அதற்குப் பதில், விமியோவின் டெக்னாலஜியைப் பயன்படுத்தி நம் வீடியோவை நாம் உருவாக்கினால் அது software-as-a-service-க்கு மாறிவிடும். இதைத்தான் அஞ்சலி மாற்றினார்; அதுவும் 90 நாள்களில். விளைவு, லாபம் பன்மடங்கானது. 2019-ம் ஆண்டு 20 கோடி டாலரை வருமானமாகக் கண்டது விமியோ. எல்லாப் புகழும் அஞ்சலிக்கே. அது மட்டுமல்ல; 90 நாள்களுக்குள் இன்னொரு மிகப்பெரிய நிறுவனத்தை விமியோ வாங்கியது. அதற்கான வேலைகளும் அஞ்சலி தலைமேல். கல்லூரியில் கற்ற பைனான்ஸ் ஸ்கில்ஸ், இப்போது அஞ்சலிக்கு உதவியது.

சி.இ.ஓ ஆன பின் ஃபோர்ப்ஸ் நிறுவனத்துக்கு அஞ்சலி தந்த பேட்டி முக்கியமானது. அதில் வெளிப்படையாக அஞ்சலி ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருந்தார். வாய்ப்புகளையும் அங்கீகாரங்களையும் எப்போதும், எல்லா நேரமும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பது அஞ்சலி ஸ்டைல் அல்ல. ‘எப்போது இறங்கி அடிக்க வேண்டுமென முடிவெடுப்பதுதான் தன் செயல் உத்தி’ என்றார் அஞ்சலி. தான் எதிர்பார்க்கும் முடிவுகள் வரும்வரை காத்திருக்கும் அஞ்சலி, அவை வந்தபின் காத்துக் கொண்டிருக்க மாட்டார். தானும் தன் டீமும் என்ன செய்திருக்கிறோம் என்பதைச் சத்தம் போட்டுச் சொல்லிவிடுவார். இப்போது யாரும் அஞ்சலியின் செயல்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்க முடியாது. காரணம், அஞ்சலியிடம் பாசிட்டிவ் ரிசல்ட்டே இருக்கிறதே. ‘ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு’ பழமொழி ஞாபகம் வருகிறதா? இந்தத் திட்டத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. அது, டீம் மேட்களும் அஞ்சலியைப் போல கொக்காக மாற வேண்டும். இல்லையெனில் அவர்கள் சோர்ந்து போகவும், எதிர்த்துப் பேசவும் வாய்ப்பிருக்கிறது. அதற்கும் அஞ்சலியிடம் ஆக்‌ஷன் பிளான் உண்டு. சகாக்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்கிறார் அஞ்சலி. அதற்காக, அவர் வேலையோ இல்லையோ... எல்லோருக்கும் பர்சனலாகவும், அபீஷியலாகவும் தன்னால் முடிந்த, சில சமயம் அதையும் தாண்டிய உதவிகளைச் செய்துவிடுகிறார். ‘நீ சொன்னா மாடில இருந்துகூட குதிப்பேன் அஞ்சு’ என எல்லோரையும் சொல்ல வைத்துவிடுகிறார். இல்லை இல்லை, அவர்கள் சொல்லும்படி நடந்துகொள்கிறார். அஞ்சலி ஒரு சி.இ.ஓ மெட்டீரியல் என்பதை மேனேஜ்மென்ட் உணரும் முன்பே அதன் ஊழியர்கள் உணர்ந்திருந்தார்கள். அதாவது, சி.இ.ஓ ஆகும் முன்பே ‘மக்கள் சி.இ.ஓ’ ஆகிவிட்டார் அஞ்சலி.

அஞ்சலிக்குத் திருமணமாகிவிட்டது. ஒரு மகன். சி.இ.ஓ என்பதால் முழு நேரமும் நிறுவனமே கதியெனக் கிடப்பவர் என நினைக்கவேண்டாம். இந்த கோவிட் காலத்தில் நியூ யார்க்கிலிருந்து மிச்சிகன் நகருக்கு இடம்பெயர்ந்துவிட்டார் அஞ்சலி. அங்குதான் அவர் பெற்றோர் வசிக்கிறார்கள். தினமும் டைம் டேபிள் போட்டு மகனை அஞ்சலியும் அவர் கணவரும் கவனித்துக்கொள்கிறார்கள். தினமும் மாலை 6 மணிக்கு தான் வளர்ந்த ஏரியாவில் ஒரு தனிமை வாக்கிங் போகிறார் அஞ்சலி. ‘அது எனக்கான நேரம்’ என்கிறார். தினமும் கொஞ்ச நேரம் பாட்டியுடன் வீடியோ காலிங் உண்டு. அம்மாவுடன் அரட்டையுண்டு. இத்தனைக்கும் நடுவில் விமியோவையும் அதன் 600 ஊழியர்களையும் பார்த்துக் கொள்கிறார். போர்டுக்கு ரிப்போர்ட் செய்கிறார். மாறி வரும் உலகில் விமியோவால் இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியுமென யோசிக்கிறார். இவை அனைத்தையும் செய்யக்கூடிய இடத்துக்கு வர அஞ்சலி செய்ததெல்லாம் ஒன்றுதான். அதைத்தான் வெற்றிபெற விரும்பும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வாருங்கள்.

- இயக்குவார்கள்

உலகை இயக்கும் இந்தியர்கள் - 10

கோட்ஸ்

  • Having more of a willingness to fail and putting yourself in vulnerable positions can often be the fastest way to succeed

  • There’s no rule book or playbook for success. Write your own roles.