Published:Updated:

உலகை இயக்கும் இந்தியர்கள் - 11

நிகேஷ் அரோரா
பிரீமியம் ஸ்டோரி
News
நிகேஷ் அரோரா

வேலை வேண்டுமே! கிட்டத்தட்ட 450 நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தார். எல்லா இடங்களிலும் நிகேஷுக்குக் கிடைத்தது ஒரே பதில்தான்.

கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்படுவதற்கு முன், மூன்று பேரின் பெயர்கள் அதற்காகப் பரிசீலிக்கப்பட்டன. அந்தப் பட்டியலில் சுந்தர் பிச்சையைத் தாண்டி இன்னொரு இந்தியரும் இருந்தார். அவர், நிகேஷ் அரோரா. அப்போது கூகுளின் டாப் 4 நிர்வாகிகளில் நிகேஷும் ஒருவர். மற்ற மூவர் கூகுளின் நிறுவனர்கள் மற்றும் சேர்மன். அதனால் நிகேஷ், கூகுளின் மிக முக்கியமான ஊழியர். நிகேஷின் இடம் சுந்தருக்கும் மேலே இருந்தது. ‘பிறகு ஏன் நிகேஷ் சி.இ.ஓ ஆகவில்லை’ என்பதைத் தெரிந்துகொள்ளும் முன் நிகேஷைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

நிகேஷ் 1968-ல் இந்தியாவில் பிறந்து, வளர்ந்தவர். அப்பா இந்திய விமானப் படை அதிகாரி. பள்ளிக்காலங்களில் நிகேஷ் கடைசி பென்ச்தான். ஆனால், பத்தாம் வகுப்பில் திடீரென மாறினார். ‘நேஷனல் டேலன்ட் ஸ்காலர்ஷிப்’ தேர்வில் தான் தேர்வானதை அவரால் நம்ப முடியவில்லை. அப்போதுதான் அவரது கனவு பெரிதாகத் தொடங்கியது.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் ஐ.ஐ.டி (வாரணாசி) மாணவர் ஆனார். மின்னியலில் பொறியியல் பட்டம் முடித்துவிட்டு, அரசுத் துறைகளுக்குக் கணினி விற்பனை (விப்ரோ நிறுவனத்துக்காக) செய்யத் தொடங்கினார். நிகேஷின் கனவு பெரியது. டெல்லியில் கணினி விற்றுக்கொண்டிருந்தால் அதை சாதிக்க முடியாது. அது தெரிந்ததும், அமெரிக்காவுக்குச் சென்று எம்.பி.ஏ முடித்தார்.

வேலை வேண்டுமே! கிட்டத்தட்ட 450 நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தார். எல்லா இடங்களிலும் நிகேஷுக்குக் கிடைத்தது ஒரே பதில்தான். ‘வேலை இல்லை.’ காரணம், அவர் படித்த பல்கலைக்கழகம் அவ்வளவு புகழ்பெற்ற ஒன்று கிடையாது. கையில் பணமில்லாததால், எங்கு கல்விக் கட்டணம் இலவசமோ அங்கு படித்தார் நிகேஷ்.

450 பேர் நிராகரித்தும் ஒரு நொடிகூடச் சோர்ந்துபோகவில்லை. தோல்வியை எப்படி அவர் எதிர்கொண்டார் என்பதை மறக்காமல் இருப்பதற்காக, அத்தனை விண்ணப்பங்களையும் இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறார் நிகேஷ். ‘தோல்விகளை மறப்பதல்ல தலைவர்களின் குணம்; அவற்றைக் கடந்து செல்வதே.’ நிகேஷ் ஒரு சிறந்த தலைவர்.

ஆனால், வேலை இல்லாமல் என்ன செய்வது? இந்தியாவில் இருக்கும் தந்தையிடம் பணம் அனுப்பச் சொன்னார். அவரால் அனுப்ப முடிந்தது மாதம் 200 டாலர்கள். இன்றைய இந்திய ரூபாயில் 14,600 ரூபாய். அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு வேலை தேடினார். ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனம் முதலில் நிகேஷுக்கு வேலை தர முன்வந்தது. எம்.பி.ஏ முடித்த உடனே வேலை கிடைத்திருந்தால்கூட அவர் சுமாராக பெர்ஃபார்ம் பண்ணியிருப்பாரோ என்னவோ... 450க்கும் மேற்பட்ட முறை நிராகரிக்கப்பட்டதால், நிகேஷ் நித்திரையின்றி வேலை செய்தார். அவர் உழைப்பையும் திறமையையும் நிறுவனத்தால் புறந்தள்ளவே முடியவில்லை. சில ஆண்டுகளிலேயே நிறுவனத்தின் வைஸ் பிரெஸிடென்ட் ஆக வளர்ந்து நின்றார். ‘இங்கு இதற்கு மேல் தனக்கு சவால்கள் இல்லை’ என்பதை உணர்ந்த கணத்தில் வெளியேறினார்.

நிகேஷ் அரோரா
நிகேஷ் அரோரா

2001-ல் டி-மொபைல் என்ற நிறுவனத்துக்கு வந்தார் நிகேஷ். டி-மொபைலில் நிகேஷ் சீஃப் மார்க்கெட்டிங் ஆபீஸர். மூன்று ஆண்டுகள். நல்ல வேலை; நல்ல சம்பளம்; நல்ல பதவி. ஆனால், தலைவர்களுக்கு எப்போது போதுமென்ற மனம் இருந்திருக்கிறது? 2004-ம் ஆண்டு அங்கிருந்து, வளர்ந்து வரும் ஒரு டெக் நிறுவனத்துக்கு மாறினார். அந்த டெக் நிறுவனத்தின் பெயர்... கூகுள்!

கூகுளின் ஐரோப்பியப்பகுதிச் செயல்பாடுகளுக்கு நிகேஷ் பொறுப்பு. கூகுள் போன்ற ஒரு டெக் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு அது முக்கியமான காலம். வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஆயிரம் மடங்காகப் பெருகும் வாய்ப்பிருக்கும் நேரம். கூகுளும் வளர்ந்தது. அதைவிட வேகமாக இருந்தது நிகேஷின் வளர்ச்சி. 2011-ம் ஆண்டு நிகேஷை ‘சீஃப் பிசினஸ் ஆபீஸர்’ ஆக்கி அழகு பார்த்தது கூகுள். அப்போது கூகுளில் அதிக சம்பளம் வாங்கிய ஊழியர், நிகேஷ்தான். 2012-ம் ஆண்டு போனஸாக மட்டுமே நிகேஷுக்குக் கிடைத்தது ரூ. 50 கோடி. அடுத்த ஆண்டு அவர் சம்பளம் ரூ.310 கோடி ஆனது என்கிறார்கள் (Source: Bloomberg.com).

பின்னர், யூடியூபை நிகேஷின் வசம் தந்தது கூகுள். யூடியூப் மூலம் கூகுளுக்குக் கிடைத்த வருமானம் தாறுமாறாக அப்போது உயர்ந்தது. அதற்கு முழுமுதல் காரணம் நிகேஷ்தான். கூகுள் நிறுவனர் லாரி பேஜுக்கு நிகேஷ்தான் செல்லப்பிள்ளை. சி.இ.ஓ ஆகிவிடுவார் என எல்லோரும் நினைத்த நேரத்தில்தான் நிகேஷ் கூகுளிலிருந்து வெளியேறினார். காரணம், சாஃப்ட் பேங்க்.

சாஃப்ட் பேங்க், ஜப்பானின் இரண்டாவது பெரிய நிறுவனம். அதன் மதிப்பு ரூ. 5 லட்சம் கோடிக்கும் மேல். உலகின் பல முக்கியமான டெக் நிறுவனங்களில் சாஃப்ட் பேங்கின் முதலீடு இருக்கிறது. ‘யார் வளர்வார்கள்’, ‘எந்த ஐடியா ஜெயிக்கும்’ என்று கணித்து அவர்களுக்கு முதலீடு தரும் நிறுவனம் அது. அதன் பிரசிடென்ட் மற்றும் சி.இ.ஓ பொறுப்பை ஏற்றார் நிகேஷ். அங்கு சேர்ந்த அடுத்த ஆண்டு நிகேஷுக்கு சம்பளமாகக் கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு ரூ. 500 கோடி. அதாவது, மாதம் சுமார் 42 கோடி ரூபாய். அந்தச் சமயத்தில் உலகளவில் அதிக சம்பளம் வாங்கிய நபர் நிகேஷ்தான். மாதம் 14,000 ரூபாயை அப்பாவிடம் உதவியாகக் கேட்ட நிகேஷ், 25 ஆண்டுகளில் கண்ட உயரம் அது.

நிகேஷ் சாஃப்ட் பேங்கில் இருந்தபோது ஸ்னாப்டீல், ஓயோ ரூம்ஸ், ஹவுசிங்.காம், ஓலா உள்ளிட்ட பல இந்திய ஸ்டார்ட் அப்களில் சாஃப்ட் பேங்கை முதலீடு செய்ய வைத்தார். அவர் சாஃப்ட் பேங்கில் இருந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 15,000 கோடி ரூபாய் இந்திய ஸ்டார்ட் அப்களுக்கு முதலீடாகக் கிடைத்தது. போர்டுக்கும் அவருக்கும் சில சங்கடங்கள் ஏற்பட்டபோது, அங்கிருந்தும் வெளியேறினார்.

தலைவர்களுக்கு வாய்ப்புகள் வர வேண்டியதில்லை. அவர்களாகவே உருவாக்கிக் கொள்வார்கள். யாரும் எதிர்பாராதவிதமாக, 2018-ல் Palo Alto Networks என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் சேர்மனாகப் பொறுப்பேற்றுக்கொண்டார் நிகேஷ். அவர் தலைமையேற்ற அந்த ஆண்டிலே அதன் வரலாற்றில் இல்லாத அளவுக்கு நிறைய நிறுவனங்களை வாங்கி பாலோ ஆல்டோ குழுமத்தைப் பெரிதாக்கினார். விளைவு, 2018-ம் ஆண்டு Forbes Digital 100 பட்டியலில் 8-வது இடம் கிடைத்தது.

நிகேஷ் தன் 17 வயதில் பள்ளியில் முக்கியமான ஸ்பீச் ஒன்று தர வேண்டியிருந்தது. இரவு பகலாகக் கண்விழித்து நிகேஷ் தயாரித்த நோட்ஸ், கடைசி நேரத்தில் காணாமல்போய்விட்டது. மனதில் இருந்ததை வைத்து அன்று பேசிவிட்டார். அவர் நினைத்ததைவிடவும் நன்றாகவே பேசியிருந்தார். அதன்பின் இன்றுவரை நிகேஷ் பேச வேண்டியதற்கு நோட்ஸ் எடுப்பதில்லை. பலம் எதுவெனத் தெரிந்த பின், அதைத் தவற விடக்கூடாது என்பது தலைவர்களின் குணம். நிகேஷும் அப்படித்தான்.

தன் வெற்றிக்கான காரணங்களாக மூன்றைச் சொல்வார் நிகேஷ். கடின உழைப்பு, சூழலுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ளும் தன்மை மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டம். நிகேஷ் சொல்லும் அதிர்ஷ்டம் கொஞ்சம் வித்தியாசமானது. ‘என்னை 450 நிறுவனங்கள் நிராகரித்ததுகூட அதிர்ஷ்டம்தான். இல்லையேல் இந்த கரியர் எனக்குக் கிடைக்காமல்கூடப் போயிருக்கலாம்’ என்கிறார். இந்த மூன்றின் காம்பினேஷனுடன் திறமையும் சேர்ந்தால்தான் வெற்றி. ‘அதிர்ஷ்டம் நம் கையில் இல்லை’ என்பதால், மற்ற மூன்றையும் தவறாமல் பார்த்துக்கொள்ளச் சொல்கிறார் நிகேஷ்.

‘நாளை நீங்கள் செய்யப்போகும் வித்தியாசமான அந்த ஒரு விஷயம் என்ன?’ - நிகேஷ் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. நாம் செய்யும் பணிகளில் எதுவும் மாறவில்லையென்றால், பின் ரிசல்ட் மட்டும் எப்படி வேறு மாதிரி வருமென்பதைத்தான் இப்படிக் கேட்கிறார் நிகேஷ். வேலையைப் புதுமையாகச் செய்ய வலியுறுத்துகிறார்.

நிகேஷ் கிரிக்கெட் பிரியர். கோல்ஃபும் ஆடுவார். ஆனால், விளையாட்டாக அல்ல! ஒருவர் கோல்ஃப் ஆடும் விதத்தை வைத்தே அவரைப் பற்றி நிகேஷ் கணித்துவிடுவார். ‘கோல்ஃப் மிகுந்த மன அழுத்தம் தரும் விளையாட்டு. தொடர்ந்து 5 மணி நேரமெல்லாம் ஒருவரால் போலியாக இருக்க முடியாது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடிந்தவர்களால்தான் கோல்ஃப் சாம்பியன் ஆக முடியும்’ என்கிறார் நிகேஷ். அவர் ஒரு கோல்ஃப் சாம்பியன் எனச் சொல்லவும் வேண்டுமா?

இந்திய உணவென்றால் நிகேஷ் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார். அவ்வளவு பிரியம். நிகேஷின் முதல் மனைவி பெயர் கிரன். இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். அந்தத் திருமணம் முறிந்ததும், இந்தியாவின் முக்கியமான பெண் தொழிலதிபர்களில் ஒருவரான ஆயிஷா தப்பர் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் நிகேஷ். திருமணம், இத்தாலியில் படு விமரிசையாக நடைபெற்றது.

நிகேஷுக்குப் பயணம் செய்வதுதான் டைம்பாஸ். 60-க்கும் அதிகமான நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். இந்தியாவின் ஒரு சிறு நகரத்தில் ஏர்ஃபோர்ஸ் அதிகாரிக்கு மகனாகப் பிறந்த ஒருவர், இத்தனை நாடுகளுக்குப் பறக்க முடிந்ததற்குப் பின்னால் ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. அது, உலகை வெல்ல வேண்டுமென்ற கனவை விடாமல் துரத்திய உழைப்பு.

உங்கள் கனவென்ன? அதை அடைவதற்கு எப்படி உழைக்கப்போகிறீர்கள்?

- இயக்குவார்கள்

உலகை இயக்கும் இந்தியர்கள் - 11

Quotes:

Always Know When to Exit!

Life is a combination of capability and luck and hard work, if you get all three you’re able to break through various ceilings.