Published:Updated:

உலகை இயக்கும் இந்தியர்கள் - Bata ce12

சந்தீப் கட்டாரியா
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தீப் கட்டாரியா

சந்தீப் டெல்லி ஐ.ஐ.டி-யில் கோல்டு மெடல் பெற்ற மாணவர். இந்தியாவின் முக்கியமான மேனேஜ்மென்ட் கல்லூரியான XLRI-ல் எம்.பி.ஏ முடித்தார்.

சில பிராண்டு பெயர்களைக் கேட்டதும், அவை எந்த நாட்டைச் சேர்ந்தவை என எளிதில் சொல்லிவிட முடியும். ‘சாம்சங்’ என்றால் கொரியா, ‘ஷியோமி’ என்றால் சீனா, ‘கூகுள்’ என்றால் அமெரிக்கா என்பது போல! ஆனால், சில பெயர்கள் குழப்பிவிடும்.

அவற்றில் ஒன்று, காலணித் துறையில் முக்கியமான பிராண்டான ‘பாட்டா’ (BATA). பாட்டா ஓர் இந்திய நிறுவனமென்றுதான் இரண்டு மாதங்களுக்கு முன்புவரை பெரும்பாலான இந்தியர்கள் நம்பியிருந்தார்கள். இப்போதுதான் அது சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனமென்ற தகவல் பிரபலமாகியிருக்கிறது. 126 ஆண்டுகள் வரலாறு கொண்ட பாட்டாவின் பூர்வீகம் பற்றிய உண்மை இப்போது வெளிவரக் காரணமானவர் சந்தீப் கட்டாரியா. பாட்டா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி. அந்நிறுவனத்தின் முதல் இந்திய சி.இ.ஓ.

சந்தீப் கட்டாரியா
சந்தீப் கட்டாரியா

மாஸ்டர் கார்டின் சி.இ.ஓ அஜய் பாங்கா பற்றி எழுதியபோது, அவர் தனித்துவமானவர் எனச் சொல்லியிருந்தேன். காரணம், நாம் பார்த்த மற்ற சி.இ.ஓ-க்களைப் போல படிப்புக்காக வெளிநாடு சென்று அப்படியே வேலையில் சேர்ந்தோ, அல்லது, பெற்றோர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆனதால் அங்கு வேலை செய்தோ அந்நாட்டு நிறுவனத்துக்கு சி.இ.ஓ ஆனவர் இல்லை அஜய். இந்தியாவில் வேலை செய்து, திறமையால் உலகளாவிய சி.இ.ஓ ஆனவர். இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார் சந்தீப் கட்டாரியா.

பாட்டாவின் உலகளாவிய செயல்பாடுகளுக்குத் தலைமையேற்கும் முன், அதன் இந்தியப் பிரிவில் பணிபுரிந்தவர் சந்தீப். அவரின் சிறப்பான பங்களிப்புக்காக பாட்டா தந்த பரிசுதான் சி.இ.ஓ பதவி. கொரோனா அச்சுறுத்திய கடந்த ஒன்பது மாதங்களாக காலணி விற்பனை மந்தமாகத்தான் இருந்தது. வெளியே செல்லும் வாய்ப்புகள் குறைந்த பின், ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அதிகரித்த பின், யாருக்குத் தேவைப்படும் ஷூக்களும் செருப்புகளும்? பாட்டாவும் இந்த மந்தநிலையிலிருந்து தப்பவில்லை. 2020-ம் ஆண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளிலும் விற்பனை மிகவும் குறைவு. சொல்லப்போனால் நீண்ட காலம் கழித்து அதன் பேலன்ஸ் ஷீட், நஷ்டத்தைப் பார்த்திருந்தது. ஆனாலும், சந்தீப்பை பாட்டா அதன் சி.இ.ஓ ஆக்கியிருக்கிறது. இதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை.

உலகை இயக்கும் இந்தியர்கள் - Bata ce12

இந்தியச் சந்தை மிகப்பெரியது. அதன் உட்பிரிவுகள் அதிகம். வாடிக்கையாளர்களின் வகைகளும் அதிகம். நில அமைப்பு, மொழி மற்றும் வர்க்க ரீதியாக இங்கே நிறைய வித்தியாசங்கள் உண்டு. அத்தனை பேரையும் திருப்திப்படுத்துவது மிகவும் சிரமம். அதனால், அவ்வப்போது டார்கெட் ஆடியன்ஸையே மாற்ற வேண்டியது நிறுவனங்களுக்கு அவசியம். சரியான நேரத்தில் இதைச் செய்யாமல் போனதால் சுருண்டு விழுந்த நிறுவனங்கள் இங்கே ஏராளம். பாட்டாவுக்கு இந்த சவால்கள் இருந்தபோது அதை வெற்றி நடையில் கொண்டு சென்றவர் சந்தீப். சென்ற சில ஆண்டுகளில் இந்தியாவில் ஜி.எஸ்.டி அமலானது, டிஜிட்டல் பரிவர்த்தனை, பொருளாதார மந்தநிலை, கோவிட் என ஏகப்பட்ட பிரச்னைகள் பல தொழில்களை பாதித்தன. இவற்றையெல்லாம் சமாளிக்க ஸ்மார்ட் மார்க்கெட்டிங் உத்திகளும், இன்னோவேட்டிவான தயாரிப்புகளும் தேவை. அதை சந்தீப் சரியாகச் செய்ததாக பாட்டா இந்தியப் பிரிவின் சேர்மன் ஆஷ்வானி வின்ட்லாஸ் சொல்லியிருக்கிறார். சந்தீப்பின் தலைமையை ‘இன்க்ளூசிவ் லீடர்ஷிப்’ என்கிறது பாட்டா. முடிந்தவரை சிஸ்டத்துக்குள் இருக்கும் அத்தனை பேரையும் அரவணைத்துச் செல்லும் ஆற்றல் சந்தீப்பிடம் இருக்கிறது. இந்திய நுகர்வோர்கள் பற்றிய அறிவும், பாட்டா ஊழியர்கள்மீதான அன்பும்தான் அவருக்கு இந்தப் பெரிய இடத்தைத் தந்திருக்கிறது.

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் பாட்டாவின் இந்தியப் பிரிவுக்குத் தலைமையேற்றார் சந்தீப். அப்போதும் பாட்டா லாபத்தில் இருந்தாலும், அதன் மார்க்கெட் ஷேர் குறைவுதான். ரிலாக்ஸோ, பாரகன் போன்ற நிறுவனங்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தன. சந்தீப் ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி, புதிய மற்றும் அதிக மதிப்பு கொண்ட காலணிகள் மற்றும் ஷூக்களை அறிமுகப்படுத்தினார். இதனால், அதன் மார்க்கெட் ஷேர் உயருமென்பது அவரது கணிப்பு. ஆனால், ‘நல்ல தரமென்றாலும் விலை அதிகமுள்ள பொருள்களை வாங்க எவ்வளவு பேர் முன்வருவார்கள்’ என்ற கேள்வி இருந்தது. காரணம், அதுவரை பாட்டாவின் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் வயதானவர்கள். சிறு வயதில் பாட்டா ஷூக்களைப் போட்டுப் பள்ளிகளுக்குச் சென்றவர்கள். அவர்கள் காலணிகளுக்கு அதிகம் செலவு செய்ய மாட்டார்கள். சந்தீப்பிற்கு இது தெரியும். அதனால்தான் ‘மில்லினியல்ஸ்’ எனப்படும் 25-35 வயதினரை நோக்கி பாட்டாவை நகர்த்த முனைந்தார். அவர்களுக்குத் தேவைப்படும் ஃபிட்னெஸ் ஷூ, 9-9 கலெக்‌ஷன்ஸ் என நிறைய புதிய மாடல்களை அறிமுகப்படுத்தினார். மில்லினியல்ஸ் மத்தியில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களை பாட்டாவின் பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்தார். மார்க்கெட்டிங் சரியாக நடக்க, திட்டமிட்ட வாடிக்கையாளர்களை ஈர்த்தது. புதிய கலெக்‌ஷன்ஸ் அவர்கள் தேவையைத் தீர்த்தது. பாட்டாவின் மார்க்கெட் ஷேர் உயர்ந்தது. இது, சந்தீப் மீது பாட்டாவின் மற்ற நாட்டுப் பிரிவுகளின் பார்வை விழுவதற்குக் காரணமானது.

உலகை இயக்கும் இந்தியர்கள் - Bata ce12

2019-ம் ஆண்டில் மட்டும் ஐந்து கோடி காலணிகளை பாட்டா விற்றது. சந்தீப்பால் பாட்டாவின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்தது; லாபமும் அதிகரித்தது. இவர் தலைமையில் பாட்டாவின் லாபம் இரண்டு மடங்கானது என்கின்றன அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கைகள். போட்டி நிறைந்த காலணித்துறையில் இந்த லாபம் சில ரிஸ்க்குகளை எடுக்க பாட்டாவுக்கு உதவியது. அதையும் சந்தீப் ‘கககபோ’ செய்தது அவர் திறமையை உலகறியச் செய்தது.

மற்ற பிரச்னைகளை விட்டுவிடுவோம். கோவிட் காலத்தில் பாட்டாவை அவர் எப்படிக் காப்பாற்றினார் என்பதே சுவாரஸ்யமான கதைதான். பொதுவாக, இந்தச் சூழலில் அனைத்து பிராண்டுகளும் ஸ்டோர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தன. சானிட்டைசர், வாடிக்கையாளரின் வெப்பநிலையைச் சோதிப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, அடிக்கடி ஸ்டோரை சுத்தம் செய்வது போன்றவற்றின் மூலம் வாடிக்கையாளர்களை அதிகம் வர வைக்க முயன்றனர். பாட்டா இதையும் செய்தது. கூடுதலாகச் சிலவற்றையும் செய்தது. அதிலொன்று, Bata Store on Wheels. அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் அதிகம் பேர் வசிக்கும் பகுதிகளில் வேன் மூலம் தற்காலிக ஷோரூமை உருவாக்கினார் சந்தீப். இது வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பான ஷாப்பிங் மாடலாக நினைக்க வைத்தது. நிறைய விற்பனையும் நடந்தது. ஒருவேளை வாடிக்கையாளர் கேட்கும் மாடல் அல்லது சைஸ் இல்லையென்றால், அருகிலிருக்கும் பாட்டா ஷோரூமிலிருந்து அதை வரவழைத்துக் கொடுத்தனர். 35 நகரங்களில், வாரம் 100 இடங்களுக்கு இந்த வண்டிகள் சென்றன. கோவிட் காலத்தில் சட்டென யோசித்துச் செயல்படுத்தப்பட்ட இந்த ஐடியா, பாட்டாவின் விற்பனையைக் கொஞ்சம் அதிகரிக்க உதவியது. மேலும், பாட்டா ஷோரூமுக்கே இதுவரை வந்திருக்காத வாடிக்கையாளர்களையும் பாட்டா தயாரிப்புகளைப் பார்க்க வைத்தது. ஒரு புதிய மொபைல் செயலியையும் பாட்டா அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நம் கால்களைப் புகைப்படமெடுத்தால் சரியான ஷூவின் அளவை அந்த ஆப் சொல்லிவிடும். பிறகு, ஆன்லைன் மூலமே நமக்குத் தேவையான காலணியை ஆர்டர் செய்துவிடலாம்.இவையெல்லாம் சந்தீப்பை சி.இ.ஓ-வாகத் தேர்ந்தெடுக்கும் வேலையை எளிதாக்கின.

சந்தீப் டெல்லி ஐ.ஐ.டி-யில் கோல்டு மெடல் பெற்ற மாணவர். இந்தியாவின் முக்கியமான மேனேஜ்மென்ட் கல்லூரியான XLRI-ல் எம்.பி.ஏ முடித்தார். பின், யுனிலீவர், யம் பிரான்ட், வோடஃபோன் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேலை செய்தார். குறைந்தது மூன்றாண்டுகளாவது ஒரு சிஸ்டமில் இருந்தால்தான் அதை நாம் முழுமையாகப் புரிந்துகொண்டு, நம் பங்களிப்பை முழுமையாகச் செய்ய முடியும் என்பதை சந்தீப் எழுதப்படாத விதியாகவே வைத்திருந்தார்.

பாட்டாவில் சேரும் முன் வோடஃபோன் நிறுவனத்தில் அவர், ‘சீஃப் கமர்ஷியல் ஆபீஸர்’. அதன் வாடிக்கையாளர்களும் பாட்டாவின் வாடிக்கையாளர்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவர்கள் எனச் சொல்லலாம். அந்த நம்பிக்கையில்தான் அவர் பாட்டாவுக்கே வந்தார். டெலிகாம் துறையிலிருந்து காலணித் துறைக்குப் போகலாமா என்றால் பெரும்பாலானோர் வேண்டாம் என்பார்கள். சந்தீப்பிடமும் சிலர் சொன்னார்கள். ஆனால், ‘என்ன வேலை, எந்த பிராண்டுக்காகப் போகிறோம், அங்கே நம் பங்கு என்ன’ என்பதில் தெளிவிருந்தால்தான் சந்தீப் போல புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க முடியும். அடுத்தவர்களிடம் கருத்துகளைக் கேட்டாலும், சொந்தமாக முடிவெடுப்பது தலைவர்களின் குணம். சந்தீப் மட்டும் விதிவிலக்கா என்ன? அதுதான் அவரை பாட்டாவை நோக்கி நகர்த்தியது. பின்னர், அதன் சி.இ.ஓ ஆக்கியது.

கோவிட்டுக்குப் பிறகு அனைத்துத் துறைகளுமே மாற்றம் கண்டுவருகின்றன. யார் மாற்றங்களைச் சரியாகக் கணித்து, அதற்கேற்ற தயாரிப்புகளையும் வழிமுறைகளையும் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கே வெற்றி. அந்த வகையில் சந்தீப், உலகம் கவனிக்கும் சி.இ.ஓ ஆகிவிட்டார். அடுத்தடுத்து என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார் என்பதை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். பாட்டாவுக்கு உலகம் முழுவதும் 5,300 ஸ்டோர்கள் இருக்கின்றன. இந்தியச் சந்தையை நன்கு அறிந்திருந்த சந்தீப்புக்கு எல்லாம் எளிதாக நடந்தன. ஆனால், உலகம் முழுவதும் என்னும்போது அவர் எப்படிச் செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. பாட்டாவின் விற்பனை அதிகமாக இருக்கும் சில நாடுகளில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதை பாட்டா எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பதும் முக்கியம். கரியர் என்னும் ஏணியில் - மன்னிக்க, சந்தீப்புக்கு அது ஏணி அல்ல... எஸ்கலேட்டர். கரியர் என்னும் எஸ்கலேட்டரில் மேலே போகும் ஒவ்வொருமுறையும் சந்தீப் முன் இப்படிப் பல சவால்கள் எழுந்திருக்கின்றன. அத்தனையையும் சமாளித்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். இனியும் அதைச் செய்வார் என நம்பலாம். ‘உழைத்தால் உயரலாம்... உலகம் போற்றும் அளவுக்கு உயரலாம்’ என்ற நம்பிக்கையை இந்திய இளைஞர்களுக்குத் தந்திருக்கும் இன்னொரு இன்ஸ்பிரேஷன் என சந்தீப்பைச் சொல்லலாம். புதிய பொறுப்பில் அவர் இன்னும் இன்னும் சாதனைகளைச் செய்ய வாழ்த்துகள்!

- இயக்குவார்கள்

Quotes

The biggest lesson that the past few months of the pandemic has taught is agility and speed

Passion drives us