
ஷாப் ஃப்ளோர் மீதான காதல் ரேவதிக்குக் குறையவில்லை என்றாலும், அவரின் அபார திறமை அவரை மெல்ல மெல்ல கரியரில் மேலேற்றியது.
பெரும்பாலான சி.இ.ஓ-க்கள் எம்.பி.ஏ முடித்திருப்பார்கள்; முதல் வேலையே மேலாண்மை சார்ந்தோ அல்லது மிடில் லெவல் எனப்படும் நிலையில் உள்ள வேலையில் இருந்தோதான் கரியரைத் தொடங்கியிருப்பார்கள். இதுவரை நாம் பார்த்த பெரும்பாலான வெற்றிக்கதைகள் அப்படித்தான். ஆனால், இங்கு நாம் பார்க்கப்போகிறவர் அப்படியல்ல... அவர் பெயர் ரேவதி அத்வைதி.
பெயரை வைத்து நீங்கள் யூகித்திருக்கலாம். ரேவதி சென்னையில் பிறந்தவர். இவருடன் சேர்த்து வீட்டில் ஐந்து பெண்கள். இந்தியாவின் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றான பிட்ஸ் பிலானியில்தான் பொறியியல் படித்தார் ரேவதி. அந்தக் காலத்தில் பெண்கள் பொறியியல் படிப்பது ஒன்றும் அதிசயமில்லை. ஆனால், ரேவதி படித்தது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் என்பது அப்போது அதிசயம். அவர் வகுப்பில் ரேவதி ஒரேயொரு பெண். ஆனால், இயந்திரவியல் துறையில் இயல்பாகவே ஆர்வம் அதிகம் கொண்ட ரேவதிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எப்படியாவது ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஆக வேண்டுமென்பது மட்டுமே அவர் மனதிலிருந்தது. நல்ல மதிப்பெண்களுடன் பொறியியல் முடித்தார். ரேவதியின் ஆர்வம் அவரை மேற்படிப்பு படிக்க அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்றது. தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ முடித்தார்.

ஆனால், அவரின் முதல் வேலை கம்ப்யூட்டர் முன்னால் அமர்வது அல்ல. ஷாப் ஃப்ளோர். உற்பத்திக் கூடத்தைத்தான் ஷாப் ஃப்ளோர் என்பார்கள். ஒரு சிறிய நிறுவனத்தில், ஷாப் ஃப்ளோர் சூப்பர்வைசராக தன் கரியரைத் தொடங்கினார் ரேவதி. அங்குதான் அவர் லேத் மிஷின் இயக்கக் கற்றுக்கொண்டார். லேத் மட்டுமல்ல; இன்னும் பல சிக்கலான இயந்திரங்களை சிக்கலின்றி இயக்குவார் ரேவதி. கெமிக்கல் இன்ஜினீயரான ரேவதியின் தந்தைக்கு அது அப்போது மகிழ்ச்சியைத் தந்தது.
“ஒரு ஷாப் ஃப்ளோரில் ஏதேனும் ஒரு பொருள் உருவாக்கப்படும்போது அதனருகே நின்று பார்ப்பது ஒரு மேஜிக்கல் மொமென்ட். அதற்கு ஈடு இணையே இல்லை” - இது இந்த ஆண்டு ரேவதி தந்த பேட்டியொன்றில் சொன்னது. ஆனால், அந்த ஆர்வம் அவருக்கு ஆரம்பம் முதலே இருந்தது. சில ஆண்டுகள் அந்த சிறிய நிறுவனத்தில் பணியாற்றியவர், 2002-ல் ஹனிவெல் என்ற நிறுவனத்துக்கு மாறினார். உலகம் முழுவதும் அறிந்த பெயர்தான் ஹனிவெல்.ஏகப்பட்ட துறைகளில் ஹனிவெல் இருந்தாலும், அடிப்படையில் அது ஓர் உற்பத்தி நிறுவனம். அதுவே ரேவதிக்குப் போதுமானதாக இருந்தது. உற்பத்தி தொடங்கி அதன் சப்ளை செயினிலிருக்கும் அத்தனை பிரிவுகளிலும் வேலை செய்தார். ஆனால், அத்தனையும் ஷாப் ஃப்ளோர் இருக்குமிடத்திலேதான் இருந்தன. கார்ப்பரேட் ஆபீஸுக்கு நகர்ந்து செல்லவில்லை ரேவதி.
ஷாப் ஃப்ளோர் மீதான காதல் ரேவதிக்குக் குறையவில்லை என்றாலும், அவரின் அபார திறமை அவரை மெல்ல மெல்ல கரியரில் மேலேற்றியது. ஆனால், ஒன்றில் ரேவதி தெளிவாக இருந்தார். எப்போது நினைத்தாலும் ஷாப் ஃப்ளோருக்குச் செல்லக்கூடிய, செல்ல வேண்டிய வேலையில்தான் இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அதனால், அதற்கேற்ற மாதிரியான வளர்ச்சியை மட்டும் விரும்பினார். அப்போது அவருக்கு வந்த வாய்ப்புதான் ‘Eaton’. மின் சாதனங்கள் மற்றும் அது தொடர்புடைய பொருள்களைத் தயாரிப்பதில் ஈட்டான் மிக முக்கியமான நிறுவனம். ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுடன், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு டர்ன் ஓவர் செய்யும் நிறுவனம் அது. ரேவதி வந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். ஹனிவெல்லிலிருந்து விலகி ஈட்டான் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கிருந்த பத்தாண்டுகளில் ரேவதியின் வளர்ச்சி சீராகவும், அவர் நினைத்த திசையிலுமே சென்றது. அங்கிருந்து வெளியேறும்போது, ரேவதி Eaton-ன் சீஃப் ஆப்ரேட்டிங் ஆபீஸர்.

‘மேனுஃபேக்சரிங் துறையில் ஒரு பெண் இவ்வளவு பெரிய பதவியிலா’ என உலகம் அப்போதே திரும்பிப் பார்த்தது. அதுவே ரேவதிக்கு உறுத்தலாக இருந்தது. ‘அது என்ன பெண் என்றால் ஒரு ஆச்சர்யப் பார்வை?’ எனச் சீறினார். உற்பத்தித் துறையில் பெண்கள் அதிகம் வரவேண்டுமென்பதை தனது இன்னொரு லட்சியமாகக் கொண்டார். women in STEM என்றொரு அமைப்பில் ரேவதி முக்கியமான நபர். science, technology, engineering, and mathematics என்பதன் சுருக்கம்தான் STEM. பொதுவாக இந்தத் துறைகள் ஆண்களின் ஆதிக்கத்தில்தான் தொன்று தொட்டு இருந்துவருகின்றன. அங்கே பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் STEM-ன் நோக்கம்; ரேவதியின் விருப்பம். செய்யும் வேலை தாண்டி, STEM வேலையும் ரேவதிமீது உலகின் கவனம் திரும்பக் காரணமாயிருந்தது.
வேலையில் ரேவதியின் பிராக்ரஸ் கார்டு பிரகாசமாக இருந்ததால் அவர் அடுத்து ஏதேனும் ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ ஆகும் வாய்ப்பிருப்பதாகச் சிலர் கருதினார்கள். ஆனால், பெண் என்பதால் வாய்ப்பு குறைவு எனச் சிலர் சொன்னார்கள். அப்படியே ஆனாலும் ஏதேனும் ஒரு சிறு நிறுவனத்தில்தான் சி.இ.ஓ ஆக முடியும் என்றவர்கள், 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாயடைத்துப்போனார்கள். காரணம், ரேவதியைத் தங்கள் சி.இ.ஓ ஆக ஆக்கிய நிறுவனம் ஃப்ளெக்ஸ் (Flex).
ரேவதி சி.இ.ஓ ஆவார் என எதிர்பார்த்தவர்கள்கூட அவர் ப்ளெக்ஸின் சி.இ.ஓ ஆவார் என நினைக்கவில்லை. காரணம், அந்தத் துறையில் ஃப்ளெக்ஸ் அவ்வளவு பெரிய பிரமாண்டம். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை செய்யும் ஃப்ளெக்ஸுக்கு உலகம் முழுவதும் 100 இடங்களில் உற்பத்திக் கூடங்கள் இருக்கின்றன. 2019-ம் ஆண்டு அதன் வருவாய் இரண்டு லட்சம் கோடியைத் தாண்டும். இத்தனைக்கும் அதற்கு முன் சில ஆண்டுகளாக அதன் வருமானம் குறைந்துகொண்டிருந்தது. அதன் முன்னாள் சி.இ.ஓ விலக, அவருக்கு மாற்றாக ஒரு கெத்தான தலைவரை ஃப்ளெக்ஸ், உலகம் முழுவதும் சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்தது. அத்தனையையும் தாண்டி ஃப்ளெக்ஸ் நிறுவனம் ஏக மனதாக டிக் அடித்த பெயர்தான்... ரேவதி அத்வைதி.

இரண்டு லட்சம் ஊழியர்களின் நம்பிக்கை இப்போது ரேவதி மேல். ஃப்ளெக்ஸின் பங்கு மதிப்பு 19 டாலரிலிருந்து 10 டாலராக அப்போது குறைந்திருந்தது. ஃப்ளெக்ஸின் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தென ஏதுமில்லை. ஆனால், ஒரு முறை ராஜா ஆகிவிட்டால் எப்போதும் ராஜாவாகத்தானே இருக்க வேண்டும்? அதற்கு ஃப்ளெக்ஸ் தன்னைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக ஃப்ளெக்ஸ் நம்புவது ரேவதியைத்தான். அவரும் அதற்குத் தயாராக இருக்கிறார். ‘என் முதல் வேலை இப்போதிருக்கும் எங்கள் கஸ்டமர்களைத் தாண்டி ஃப்ளெக்ஸை நிறைய பேரிடம் சேர்ப்பதுதான்’ என்றார் ரேவதி. தலைவர் ஆன அடுத்த ஆண்டே ஃப்ளெக்ஸ் கோவிட் பிரச்னையில் வேறு சிக்கிக்கொண்டது. உற்பத்தித் துறை என்பதால் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதெல்லாம் இங்கே வேலைக்கு ஆகாது. ஆனால், முதல் கட்டமாக அந்தச் சிக்கலை ஃப்ளெக்ஸ் சமாளித்திருக்கிறது; ரேவதி சமாளித்திருக்கிறார். அது செல்லும் திசை வெளிச்சமாக இருக்கிறது. சேர்ந்து ஒரு வருடத்துக்குள்ளாக அந்த நம்பிக்கையை இரண்டு லட்சம் ஊழியர்களிடமும் பங்குதாரர்களிடமும் உருவாக்கிவிட்டார் ரேவதி.
அமெரிக்காவின் முக்கியமான பத்திரிகை ஃபார்ச்சூன். ஒவ்வொரு ஆண்டும் பல பிரிவுகளில் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை ஃபார்ச்சூன் வெளியிடும். அப்படி, ஃபார்ச்சூன் பத்திரிகை வெளியிட்ட Powerful Women list - 2019 என்ற பட்டியலில் 50 பேரில் ரேவதிக்கு 33வது இடம். இதில் இடம்பெற்ற ஒரே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சி.இ.ஓ ரேவதிதான்.
ரேவதிக்கு மனிதர்களைச் சந்திப்பது பிடித்தமான விஷயம். ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள ஏதேனும் ஒன்று இருக்கும் என நம்புவார். தலைவர்கள் அப்படித்தான். எல்லா விஷயமும் தெரிந்துகொண்டே யாரும் பிறப்பதில்லை. தொடர்ந்து கற்பதன் மூலம்தான் தங்களை வலிமையானவர்களாக மாற்றிக் கொள்வார்கள். ரேவதியும் அப்படித்தான் வலிமையான தலைவர் ஆனார். நிறைய நிறைய கற்க, நிறைய நிறைய மனிதர்களைச் சந்திக்க பயணம் செய்துகொண்டேயிருப்பார் ரேவதி. பெரும்பாலும் ஃப்ளெக்ஸின் உற்பத்திக் கூடங்கள் இருக்கும் ஊராகத்தான் இருக்கும். காரணம், மனிதர்களைவிடவும் ஷாப் ஃப்ளோர் மேல்தான் ரேவதிக்குக் காதல்.
ஃப்ளெக்ஸ் மட்டுமல்ல. ரேவதியின் சேவை இன்னும் பல நிறுவனங்களுக்கும் அமைப்பு களுக்கும்கூடத் தேவை. அதிலொன்று, ஊபர். ஆம், ஊபரின் போர்டு மெம்பர் ஆக சென்ற ஆண்டுதான் சேர்ந்தார் ரேவதி. நான்கு சகோதரிகள் கொண்ட ரேவதிக்கு இரண்டு மகள்கள். பொதுவாகவே பெண்கள் முன்னேற்றம் பற்றி அதிகம் யோசிக்கும் ரேவதி, பெண்கள் முன்னேற்றத்திற்காக யார் என்ன கேட்டாலும் உடனே ‘ஆம்’ எனச் சொல்லிவிடுகிறார்.
51 வயதாகும் ரேவதியின் வெற்றி அவருக்கு மட்டுமேயானதல்ல. அன்று, பொறியியல் வகுப்பில் ஒரேயொரு பெண்ணாக இருந்தார் ரேவதி. இன்று நிறைய ரேவதிகள் உற்பத்தித்துறையில் கலக்கிக்கொண்டி ருக்கிறார்கள். ஒரு தலைவர் செய்ய விரும்புவதெல்லாம் அதுதானே?
இதுவரை 13 தலைமைச் செயல் அதிகாரிகளைப் பற்றிப் பார்த்திருக்கிறோம். இவர்கள் அனைவருக்குமான ஒற்றுமை, அவர்களின் இந்தியப் பின்னணி. இந்தியர்களின் புத்திக்கூர்மையையும் திறமையையும் உலகம் உணர்ந்திருக்கிறது என்பதற்கான உதாரணங்கள் இவர்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கதையும் நமக்குச் சொல்வது ஒன்றுதான். திறமையும் உழைப்பும் சேருமிடத்தில் வெற்றி வந்து அமர்ந்துகொள்ளும்.
தலைமைப்பண்பின் அடையாளங்களான இவர்களின் வாழ்க்கை படிக்க மட்டுமல்ல, புரிந்துகொள்ளவும்தான்.
- நிறைந்தது

Quotes:
There’s something magical about being in a factory floor, watching something being made and nothing can replace that.”
“I always tell people there’s nothing unique about my background or my trajectory that other people can’t do the same way,”