
தனக்கு சரியெனத் தோன்றினால், அதற்கு முன்னர் எடுத்த முடிவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்.
2020 இந்த ஆண்டைப் பார்த்ததும் பயப்பட வேண்டாம். ஒரு நல்ல விஷயத்தைத்தான் பார்க்கப் போகிறோம். 2020-ம் ஆண்டில் பட்டப்படிப்பு முடித்த வர்களிடம் யூடியூப் மூலம் பேசியிருக்கிறார், டெக் உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை.
‘100 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் பேண்டமிக் காலத்தில்தான் பல மாணவர்கள் பட்டதாரி ஆனார்கள். 50 ஆண்டுகளுக்கு முன் வியட்நாம் போர் நடந்துகொண்டிருக்கும் போதே சிலர் பட்டதாரி ஆனார்கள். வரலாறு நமக்குச் சொல்வதெல்லாம் ஒன்றுதான். நம்பிக்கையை விடாதீர்கள். 2020க்கும் இது பொருந்தும். எனக்கு 10 வயது ஆகும்வரை என் வீட்டில் தொலைபேசி கிடையாது. எங்கள் வீட்டுக்குத் தொலைக்காட்சி வந்தபோது அதில் தெரிந்தது ஒரே ஒரு சேனல்தான். கல்லூரி முடித்துவிட்டு முதுகலைப் படிப்புக்காக அமெரிக்கா வரும்வரை என்னிடத்தில் சொந்தமாகக் கணினி கிடையாது. இன்று எல்லா அளவிலும் உங்களிடம் கேட்ஜெட்ஸ் உண்டு. கடந்த 10 ஆண்டுகளாக நான் எதற்காக வெல்லாம் உழைத்தேனோ அவையெல்லாம் இன்று உங்களுக்கு சாதாரணம். ஆனால், நீங்கள் நாளை உருவாக்கப் போகும் தொழில்நுட்பம் என் தலைமுறைக்கு இன்றுவரை கனவாகக்கூட இருக்கவில்லை.’

அதாவது, கடந்த 10 ஆண்டுகளாக கூகுள் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் நாளை ஒன்றுமில்லாமல் போகலாம் என்கிறார் அதன் சி.இ.ஓ. ஆனால் அதற்காக அவர் வருந்தவில்லை. சாதனைகளைப் பற்றிக்கொண்டு காலத்தை நகர்த்தாமல், அடுத்து என்னவென்ற தேடுதலோடு எப்போதும் சிரித்துக்கொண்டேயிருக்கும் சுந்தர் பிச்சை தொழில்நுட்ப நிறுவனங்களின் விருப்ப நாயகன்; கூகுளின் செல்லப்பிள்ளை. சென்னை, அசோக் நகரில் அரை டிராயர் போட்டுக்கொண்டு விளையாடிய தமிழ்நாட்டுச் சிறுவன், சிலிக்கான் வேலியின் தவிர்க்க முடியாத ஐகானாக மாறிய கதை நாம் மிஸ் பண்ணக்கூடாத ஒன்று.
சுந்தரின் முழுப்பெயர் சுந்தர்ராஜன் பிச்சை, வீட்டில் செல்லமாக ராஜேஷ். அப்பா ரகுநாத் பிச்சை, மின் பொறியாளர். அம்மா லட்சுமி ஸ்டெனோவாக வேலை பார்த்தவர். சுந்தரின் அப்பாவுக்கு ஒன்றுமட்டும் நன்றாகத் தெரிந்திருந்தது. அது ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.’ எந்தச் செலவையாவது விட்டுக் கொடுத்து கல்விச் செலவைப் பார்த்துக்கொள்வார். +2 முடித்ததும் சுந்தர் ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகவியல் துறையில் இன்ஜினீயரிங் முடித்தார். அங்கிருந்து நேராக காதலியுடன் மாஸ்டர்ஸ் படிக்க அமெரிக்கா சென்றார். ஆமாம், ஐஐடியில் படிக்கும்போது காதலித்த அஞ்சலியைத்தான் பின்னர் சுந்தர் மணந்தார்.
ஸ்காலர்ஷிப் கிடைத்ததால் அமெரிக்கா சென்று பட்ட மேற்படிப்பு முடித்தவருக்கு பிஹெச்.டி செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அதைப் பாதியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றார். காரணம், பிஹெச்.டி முடித்துவிட்டு கற்பிக்கும் ஆசிரியர் ஆவதைவிட, தொழில்நுட்பம் பக்கம் போவது தனக்கு நல்லது என நினைத்தார். இப்படித்தான் எப்போதும் சுந்தர் தனக்கு சரியெனத் தோன்றினால், அதற்கு முன்னர் எடுத்த முடிவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். அந்தந்த நேரத்து நியாயத்தில் சுந்தருக்கு நம்பிக்கை அதிகம். இதற்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம். மெக்கன்ஸி நிறுவனத்தில் சுந்தருடன் பணிபுரிந்த ஒருவர் கூகுள் நிறுவனத்தில் சேரப்போவதாகச் சொன்னார். மெக்கன்ஸி ஒரு கன்சல்டிங் நிறுவனம். கூகுள் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனம். அதனால் சுந்தர் அவரை வேண்டாமென்றார். ஆனால், அந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே சுந்தர் கூகுளில் சேர்ந்துவிட்டார்.
சுந்தர் கூகுளில் சேர்ந்த கதை செம காமெடிதான். அன்று 2004, ஏப்ரல் 1-ம் தேதி. நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தார்கள். அன்றுதான் கூகுள் தனது முக்கியமான சேவையான ஜிமெயிலைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிட்டிருந்தது. சுந்தரும் அதைப் பார்த்திருந்தார். ஆனால், அன்று முட்டாள்கள் தினம் என்பதால் அது கூகுள் செய்த காமெடி என நம்பிவிட்டார். நேர்முகத்தேர்வில் எல்லோரும் ‘ஜிமெயில் எப்படி இருக்கு?’ என்ற கேள்வியையே கேட்டார்கள். ‘முட்டாள்கள் தின பிராங்க் இல்லையா அது’ என சுந்தரால் கேட்க முடியவில்லை. ஆனால், அவர் சொன்ன பதில் கேள்வி கேட்டவர்களுக்குத் திருப்தியைத் தந்தது.
‘நான் இன்னும் ஜிமெயிலைப் பயன்படுத்திப் பார்க்கவில்லை. வாய்ப்பு தந்தால் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்’ என்றார். அந்த வெளிப்படைத்தன்மையும் ஆர்வமும் கலந்த பதில் சுந்தருக்கு ஜிமெயிலில் ஒரு அக்கவுன்ட்டை மட்டுமல்ல; கூகுளில் வேலையையும் பெற்றுத் தந்தது. அதன் பின் சுந்தரின் கரியர் பரமபதத்தில் ஏணி மட்டும்தான்; பாம்புகளுக்கு எப்போதும் ரெஸ்ட்.
அப்போது சுந்தருக்கு என்ன வேலை தெரியுமா? இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஃபயர் ஃபாக்ஸ் போன்ற பிரவுசர்களுக்கு கூகுள் சர்ச் டூல்பார் உருவாக்கும் பணி. ஆர்வத்துடன் வேலை செய்தவருக்கு, கூகுளுக்கென ஒரு பிரவுசர் இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றியது. இந்த ஐடியாவை அப்போதைய சி.இ.ஓ எரிக்கிடம் சொன்னார். ‘ஏற்கெனவே ரஜினியும் (இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்), கமலும் (ஃபயர் ஃபாக்ஸ்) இருக்கிறப்ப இன்னொரு ஹீரோ எதுக்கு?” என்ற ரீதியில் ஏதோ சொல்லி நிராகரித்துவிட்டார் எரிக். சொன்னால் கேட்டுக்கிற ஆளா நம்ம சுந்தர்? கூகுளின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின்னிடம் இந்த ஐடியாவைச் சொன்னார். ‘ரஜினியும் கமலும் இருந்தப்பதான் விஜய்யும் அஜித்தும் வந்தாங்க’ என்ற ரீதியில் சுந்தர் சொல்ல, ஐடியா ஓகே ஆனது. கூகுள் க்ரோம் உருவானது; பின்னர் அந்த பிரவுஸர் உலகையே வென்றது. 2008-ல் இந்த மாஸ்டர் ஸ்டிரோக்கால் கூகுளின் வைஸ் பிரஸிடெண்ட் ஆனார் சுந்தர் பிச்சை. தலைவர்களுக்கே உரிய குணம் அது; சரியெனத் தோன்றினால் அவ்வளவு எளிதில் பின்வாங்கிவிட மாட்டார்கள்.

சி.இ.ஓ-வை மீறி, நிறுவனர்களிடம் பேசி ஒரு விஷயத்தைச் சாதித்துவிடுவது பெரிய விஷயமில்லையா? அதற்குப் பின்னர் சுந்தரின் வளர்ச்சி வேகமெடுத்தது. கூகுளைத் தாண்டி அவர் புகழ் பரவியது. 2011-ல் ட்விட்டர் ‘என் பக்கம் வந்துடுப்பா. எவ்ளோ சம்பளம் வேணும்னாலும் தர்றேன்’என்றது. ‘நமக்கு எப்பவும் கூகுள்தாங்க’ என நிதானமாக நிராகரித்தார். அதன்பின்னர், மைக்ரோசாப்ட் வலை விரித்தது. அப்போதும் கூகுளை விட்டுவிடவில்லை சுந்தர். அந்த இடத்துக்குத்தான் நாம், கடந்த அத்தியாயத்தில் பார்த்த சத்யா நடெல்லா வந்தார். இன்னொவேட்டிவ் ஐடியாக்கள், அதைச் சாத்தியப்படுத்தும் நிர்வாகத் திறமை; அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பொறுமை என சுந்தரின் ஹைலைட்ஸ் எல்லாமே கூகுளின் நிறுவனர்களுக்குப் பிடித்துப்போனது. அதனால், 2014 முதல் கூகுளின் அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் கவனிக்கும் பொறுப்பு சுந்தரிடம் வந்தது. அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்தே அவர் அதிகாரபூர்வமாக தலைமைச் செயல் அதிகாரி ஆனார். அதாவது முதலில் ஆக்டிங் கேப்டன்; பின்னர் அபீஷியல் கேப்டன். ஒருவேளை கிரிக்கெட் ஆடியிருந்தால்கூட இப்படி ஒரு கரியர் கிடைத்திருக்காது சுந்தருக்கு. அங்கே அவுட் ஆப் பார்ம் போவது நிகழ்ந்திருக்கும். ஆனால், கூகுளில் சேர்ந்த 2004-ம் ஆண்டிலிருந்து சுந்தர் எப்போதும் பார்மில்தான் இருக்கிறார். சர்ச் பார் மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள் என சுந்தரை அழைத்த கூகுள் இப்போது சர்ச், ஆண்டிராய்டு, ஆப்ஸ், மேப்ஸ், யூடியூப் எனப் பெரும்பாலான சேவைகளை சுந்தரின் பாக்கெட்டுக்குள் திணித்திருக்கிறது. ‘அப்ப இன்னொரு பாக்கெட்டுக்கு என்ன?’ எனச் சிரிக்கிறார் சுந்தர். எனக்கு நேரமில்லை என எந்தத் தலைவரும் சொல்வதில்லை. எவ்வளவு வேலை இருந்தாலும் அதை நிகழ்த்திக்காட்டுவது மட்டுமே தலைவர்களின் செயல். சுந்தர் ஒரு தலைவன்.
சுந்தரைப் பற்றி கூகுள் செய்தால் பல விஷயங்கள் கிடைக்கலாம். ஆனால், கூகுள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களிடம் கேட்டால் இன்னும் நிறைய சொல்கிறார்கள். ஒன்பது பேர் வேலை செய்யும் நிறுவனத்திலேயே ‘எல்லாம் பாலிட்டிக்ஸ்’ எனச் சலித்துக் கொள்கிறோம். ஆனால், அத்தனை ஆயிரம் பேர் வேலை செய்யும் கூகுளில் சுந்தரைப் பிடிக்காதவர்களே இல்லை என்கிறார்கள். எப்படி ஒரு மனிதனால் எல்லோரிடமும் நல்ல பேர் வாங்க முடிகிறது என்பதுதான் சுந்தரைப் பார்த்து கூகுள் ஆச்சர்யமடைந்த முதல் விஷயமாம். ‘எனக்கு ஒண்ணுன்னா ஆம்புலன்ஸ கூப்பிடுவேன். என் டீமுக்கு ஒண்ணுன்னா நானே ஓடுவேன்’ என்னும் அளவுக்கு டீமுக்காகப் போராடுபவர் சுந்தர் பிச்சை. தன் டீம் மேட்களுக்கு அப்ரைசலில் நல்ல ரேட்டிங் வேண்டுமென விடிய விடிய தன் பாஸ் அறையின் முன் காத்துக் கிடந்த கதையெல்லாம் சுந்தரின் வரலாற்றில் உண்டு. ‘இவனை நம்பினா நம்மள காப்பாத்துவான்’ என்று பேர் எடுப்பதெல்லாம் அத்தனை சாதாரண காரியமல்ல; சுந்தர் மட்டும் விதிவிலக்கு.
இந்த ‘ச்சோ ச்வீட் பேபி’ வெற்றியின் ரகசியம் அறிய நாம் அவர் பள்ளி நாள்களுக்குச் செல்ல வேண்டும். சுந்தர் பள்ளியில் மட்டும் கற்கவில்லை. தினமும் அலுவலகத்திலிருந்து திரும்பும் அவர் அப்பா, அங்கு நடந்த முக்கியமான விஷயங்களை சுந்தருடன் பகிர்வார். இது அவருக்கு சிறு வயதிலே பிரச்னைகளைப் புரிந்துகொள்ளும் குணத்தை வளர்த்துக்கொள்ள உதவியது. இன்னொரு சிறப்பான திறமையும் அவருக்குண்டு. 12 வயதிலே, எந்தத் தொலைபேசி எண்ணுக்கு டயல் செய்தாலும் அந்த எண்ணை அவர் மறக்க மாட்டார். அதாவது சிறு வயதிலே சுந்தரின் மெமரியும் சூப்பர்; புராசஸரும் சூப்பர். ஒரு ஸ்மார்ட் கேட்ஜெட்டின் மனித வடிவம்தான் சுந்தர் பிச்சை.
படிப்பு விஷயத்தில் விளையாட மாட்டார் சுந்தர். ஆனால், விளையாட்டில் நிறைய ஆர்வம் உண்டு. செஸ் முதல் கால்பந்து வரை அவருக்கு நிறைய விளையாட்டுகளில் விருப்பம். ஆனால், களமிறங்கிக் கலக்கியது கிரிக்கெட்டில்தான். பள்ளி அணியின் ‘தல தோனி’ சுந்தர்தான். ஒருவேளை படிப்பு வராமல்போயிருந்தால் அவரது அடுத்த கரியர் சாய்ஸாக இருந்தது கிரிக்கெட். சுந்தர் 1972-ல் பிறந்தவர் என்பதால் சச்சினுடன் விளையாடியிருக்கலாம். இப்போது சென்னை சூப்பர் கிங்ஸின் கோச் ஆகக்கூட ஆகியிருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எங்கு போயிருந்தாலும், என்ன ஆகியிருந்தாலும் சுந்தர் அந்த இடத்தின் தலைவன் ஆகியிருப்பார். அது மட்டும் நிச்சயம்.
- இயக்குவார்கள்

பிறந்த தேதி: ஜூன் 10, 1972
பிறந்த ஊர்: மதுரை
குடும்பம்: மனைவி அஞ்சலி பிச்சை, ஒரு மகன் மற்றும் ஒரு மகள்
கோட்ஸ்:
“As a leader, It is important to not just see your own success, but focus on the success of others.”
“Wear your failure as a badge of honor!”
“In life don’t react, always respond.”

சுந்தரும் கூகுளும்:
2004: கூகுளில் சேர்கிறார்
2008: கூகுள் க்ரோம் ஐடியா க்ளிக் ஆகிறது
2009: கூகுளின் வைஸ் பிரஸிடெண்ட்
2013: ஆண்டிராய்டு இயங்குதளத்துக்குப் பொறுப்பேற்கிறார்
2015: கூகுளின் சி.இ.ஓ
2017: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் போர்டு மெம்பர்
2019: ஆல்ஃபபெட்டின் சி.இ.ஓ