Published:Updated:

உலகை இயக்கும் இந்தியர்கள் - 7

உலகை இயக்கும் இந்தியர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உலகை இயக்கும் இந்தியர்கள்

ஜார்ஜைப் பற்றிப் பேசினாலும் தாமஸைப் பற்றிப் பேசினாலும் இரண்டு கதைகளிலும் இருவருமே வந்துவிடுவார்கள்.

டவுளின் தேசமாம் கேரளாவில் விவசாய கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. அவர் மகனுக்குப் படிப்பென்பது நமக்குக் கேரளா போல; அவ்வளவு பிடிக்கும்.தானே வேலை செய்து, சம்பாதித்து அதில் படிப்பை முடித்தவர். பின்னாளில் ஒருபெரிய நிறுவனத்தின் பொதுமேலாளர் ஆனவர்.

அவர் இப்படியென்றால், அவர் மனைவி அதற்கும் மேல். இலங்கையில் வாழ்ந்த இந்தியப் பெற்றோர்களுக்குப் பிறந்த அவர், படிக்க வேண்டுமென்பதற்காக இந்தியாவிற்கு வந்தவர். அந்தக் காலத்தில் ஒரு பெண் படிப்புக்காக இவ்வளவு மெனக்கெடுவது என்ற கதையையே யாரும் கேட்டதில்லை. இந்த இருவருக்கும் நான்கு மகன்கள். அம்மா கொஞ்சம் அல்ல; ரொம்பவே ஸ்டிரிக்ட். அக்கம்பக்கத்தில் எல்லோருக்கும் தெரியும் அந்தக் கண்டிப்பு. மகன்கள் 6 மணி வரை கிரிக்கெட் ஆடலாம். 6.01க்கு கைகால்கள் கழுவிவிட்டு வீட்டுக்குள் இருக்க வேண்டும். இல்லையேல், இரவு உணவு பச்சைத்தண்ணீர்தான். வீட்டு வேலைகளில் பாலின பேதமெல்லாம் கிடையாது. நான்கு மகன்களும் சுழற்சி முறையில் சமைக்க வேண்டும்; பாத்திரம் கழுவ வேண்டும்; வீடு துடைக்க வேண்டும். முக்கியமாக, நன்றாகப் படிக்க வேண்டும்.

உலகை இயக்கும் இந்தியர்கள் - 7

இப்படியெல்லாம் இருந்ததால் அவருக்கு என்ன கிடைத்தது என்கிறீர்களா? மூத்தமகன் பெங்களூரில் செட்டில் ஆகிவிட்ட முதலீட்டாளர். இரண்டாம் மகன் இங்கிலாந்தில் வாழும் குழந்தை நல மருத்துவர். அடுத்த இரண்டு மகன்களும் இரட்டையர்கள். ஜார்ஜ் குரியன் மற்றும் தாமஸ் குரியன். இதில் இளையவரான தாமஸ் குரியன் ஆரக்கிள் நிறுவனத்தின் மிக முக்கியமான ஆளாக இருந்து, 2019-ல்தான் கூகுளின் அங்கமான ‘கூகுள் கிளவுட்’ என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனார். ஆனால், இன்று நாம் பார்க்கப்போவது தாமஸுக்குச் சில நொடிகள் மூத்தவரான ஜார்ஜ் குரியனைப் பற்றி. சென்ற ஆண்டு 6.15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 45,000 கோடி) வருமானம் பார்த்த, 26 ஆண்டு அனுபவமுடைய, 12,000க்கும் அதிகமான ஊழியர்கள் கொண்ட, உலகின் முக்கியமான டேட்டா மேனேஜ்மென்ட் நிறுவனமான நெட்ஆப்பின்(Netapp) தலைமைச் செயல் அதிகாரி அவர்.

உலகை இயக்கும் இந்தியர்கள் - 7

ஜார்ஜைப் பற்றிப் பேசினாலும் தாமஸைப் பற்றிப் பேசினாலும் இரண்டு கதைகளிலும் இருவருமே வந்துவிடுவார்கள். இரட்டையர்கள் இல்லையா? இருவருமே பெங்களூரில் பள்ளிப் படிப்பை முடித்தார்கள். இருவருக்கும் சென்னை ஐ.ஐ.டி-யில் இடம்கிடைத்தது. அதே நேரம், அமெரிக்காவில் படிக்க ஸ்காலர்ஷிப்புடன் வாய்ப்புவந்தது. இந்தியாவிலிருந்து படிப்புக்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்தபோது இருவருமாகச் சென்றது அவர்களுக்கு உதவியது. திட்டமிட்ட வாழ்வுக்குப் பழகியிருந்த இருவருக்கும் உணவிலிருந்து அனைத்து விஷயங்களிலும் எதிர்கொண்ட மாற்றங்கள் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தன. அந்த நேரத்தில் நண்பன்போல கூட ஒருவன் அதே சிக்கலுடன் இருந்தது செளகரியமாக இருந்தது. பீட்ஸா கடைவெயிட்டர் வேலை தொடங்கி பார் டெண்டர் வரை பார்க்காத வேலை கிடையாது. தாமஸ் சந்தித்ததை ஜார்ஜும், ஜார்ஜ் சந்தித்ததை தாமஸும் பகிர, பாரங்கள் குறைந்தன.

ஜார்ஜ் குரியன்
ஜார்ஜ் குரியன்

இருவரும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்தார்கள். கல்லூரியில் முதலிடம் தாமஸ் குரியன். இரண்டாமிடம் ஜார்ஜ் குரியன். அங்கேயும் அருகருகேதான் அண்ணன் தம்பி இருவரும். பின்னர், இருவரும் ஸ்டான்ஃபோர்டில் எம்.பி.ஏ. கல்லூரி முடித்ததும் ஜார்ஜுக்கு ஆரக்கிளில் வேலை கிடைத்தது; தாமஸுக்கு மெக்கன்ஸியில் வேலை. கட்டுரையின் ஆரம்பத்தில் தாமஸ்தானே ஆரக்கிள் ஆள் என்றேன் என சிலருக்கு நினைவிருக்கலாம். இந்தக் கேரள ட்வின்ஸுக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம். வேலைக்குச் சேர்ந்த சில நாள்களில் ‘நீ என்ன பண்றன்னு நான் பாக்குறேண்டா’ என அண்ணன் வேலைக்குத் தம்பியும், தம்பி வேலைக்கு அண்ணனும் மாறிக்கொண்டார்கள். இப்படித்தான் இருவரும். சிறுவயதில் விளையாட்டாகப் பெயர் மாற்றிக்கொண்டு நண்பர்கள் வீடுகளுக்கும், பார்ட்டிகளுக்கும் செல்வதுண்டு.

புதிய வேலையில் சேர்ந்த ஜார்ஜுக்கு, சில ஆண்டுகளில் பாஸ்டன் நகரில் ஓர் இணையதள நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்க அங்கே சென்றுவிட்டார். அங்குதான் தன் மனைவியைச் சந்தித்தார். ஜார்ஜ் இப்படியென்றால் தாமஸ் சும்மா இருப்பாரா? அவரும் பாஸ்டன் நகரைச் சேர்ந்த இன்னொரு பெண்ணைக் கைப்பிடித்தார்.

ஜார்ஜின் கரியர் பின்னர் சிஸ்கோவுக்கு மாறியது. அங்குதான் நீண்ட நாள்கள் தங்கினார். ஒன்பது ஆண்டுகள் சிஸ்கோவில் அவர் செய்த விஷயங்கள், நெட்ஆப்பின் ‘OnTap’ என்ற புராடக்டை முன்னின்று வழி நடத்தும் வாய்ப்பை வழங்கியது. (அப்போது சிஸ்கோவும் நெட்ஆப்பும் தொழில்முறைப் பங்குதாரர்கள்). கேட்க நன்றாக இருந்தாலும் OnTap-இன் அன்றைய நிலவரம் கலவரமாகத்தான் இருந்தது. பல ஆண்டுகளாக அதைச் செப்பனிட நெட்ஆப் செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வி. எதிர்காலமே இருண்டிருந்தது. வேறு வழியின்றி தன் நீண்டகாலப் பணியாளர்களில் நூற்றுக்கணக்கானோரை வேலையிலிருந்து வெளியே அனுப்ப வேண்டியிருந்தது. எஞ்சியவர்களின் கண்களில் கனவுகள் இல்லை. கலக்கம் மட்டுமே.

தாமஸ் குரியன்
தாமஸ் குரியன்

இந்தச் சூழலில்தான் ஜார்ஜ் உள்ளே அடியெடுத்து வைக்கிறார். ஜார்ஜ், நெட்வொர்க்கிங் மற்றும் சர்வர் விஷயங்களில் கில்லாடி. ஆனால், OnTap போன்ற கிளவுட் ஸ்டோரேஜ் தயாரிப்புகளில் பெரிய அனுபவம் கிடையாது. இது அங்கிருந்தவர்களுக்கும் தெரியும். ஏற்கெனவே கடுப்பிலிருந்தவர்கள் ‘உனக்கு இதெல்லாம் தெரியாதில்ல’ என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார்கள். அமெரிக்கா வந்தபோது ஜார்ஜுக்கு டீசல் போடத் தெரியாது. பீட்ஸா டெலிவரி செய்யத் தெரியாது. கற்றுக்கொண்டு செய்யவில்லையா? கற்றுக்கொள்ளும் ஆர்வமும் உழைப்பதற்கான மனமும் இருந்தால் எதையும் செய்யலாம் என்பது ஜார்ஜின் நம்பிக்கை. டீமிடமே ஐடியாக்கள் கேட்டார். அவர்களிடமே சவால் விட்டார். சிலர் டென்ஷன் ஆகி வேலையை விட்டே சென்றார்கள். மிச்சமிருப்பவர்கள்தான் தனது துருப்புச் சீட்டு என நினைத்தார். தலைவன் என்பவன் வெற்றியைப் பற்றிக் கனவு காண்பவன் அல்லன்; அதற்காக உழைப்பவன். ஜார்ஜ் உழைக்கத் தொடங்கினார்.

ஊழியர்களிடம் பேசினார். ‘இப்ப நாம செய்யப் போறதுதான் நம்ம கம்பெனியைக் காப்பாற்றும் கடைசி ஆயுதம். ஜெயிச்சா நம்ம வெற்றி. தோத்தாலும் நம்ம தோல்வி’ என்றார் ஜார்ஜ். கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது ரஜினி ‘நான் வென்றாலும் தோற்றாலும் அது மக்களுக்கு’ என்றாரே. அப்படிச் சொல்லவில்லை ஜார்ஜ். எதுவாக இருந்தாலும் நம் முயற்சி; நம் பலன் என்றார். தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஊழியர்கள் களம் இறங்கினார்கள். நீருக்குச் சக்தி அதிகம். அதை மடைமாற்றுவதில்தான் விளைவுகளின் வீரியம் இருக்கும். ஜார்ஜ் செய்ததெல்லாம் ஊழியர்களின் சக்தியை ஒருங்கிணைத்து தேவையான திசையில் செலுத்தியதுதான். மனித சக்திக்குத் தலைவன் ஒருவனின் தேவையும் அதற்காகத்தான். ஜார்ஜ் OnTap டீம் ஊழியர்களின் நிஜத் தலைவன் ஆனார்.

ஜார்ஜ் நெட்ஆப்பில் சேர்ந்தபோது OnTap ஸ்டோரேஜ் தயாரிப்புகளின் விற்பனை கிட்டத்தட்ட ஜீரோ. ஆனால், இப்போது இந்தத் துறை விற்பனையில் 80% நெட்ஆப் நிறுவனத் தயாரிப்புகள்தாம். இது ஜார்ஜ் என்ற தனியாளின் வெற்றி கிடையாதுதான். ஆனால், அந்தத் தனியாள் இல்லையேல் இந்த வெற்றி கிடையாது என்பதுதான் உண்மை. 2011-ல் OnTap பிரிவின் தவைவராகத்தான் இவையெல்லாவற்றையும் செய்தார் ஜார்ஜ். 2015-ல் நெட்ஆப்பின் சி.இ.ஓவாக இருந்தவர் டாம் (Tom Georgens). பத்தாண்டுகள் நெட்ஆப்போடு இருந்தவரை வெளியே போகச் சொன்னது நெட்ஆப் போர்டு. அந்த இடத்துக்கு இடைக்கால சி.இ.ஓவாக ஜார்ஜைத் தேர்வு செய்தார்கள். சிலமாதங்களிலே அதை உறுதி செய்தார்கள். OnTap தப்பித்தாலும் நெட்ஆப் அப்போது மூழ்கிக்கொண்டிருந்தது. அது தெரிந்துதான் ஜார்ஜ் சி.இ.ஓ ஆக சம்மதித்தார். தலைவன் என்பவனுக்கு சரியான வழி தெரியும்; அதைக் காட்டத் தெரியும்; அதில் கைப்பிடித்துக் கூட்டிப் போகவும் தெரியும். ஜார்ஜை நெட் ஆப்பைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றார். இன்னமும் கைகளை விடவில்லை.

தலைமைச் செயல் அதிகாரி ஆனதும் ஜார்ஜிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். `‘நெட்ஆப் தலைநிமிரும் என எப்படி நம்பிக்கையாகச் சொல்கிறீர்கள்?” ஜார்ஜ் சொன்னார் `‘நான் மூன்று விஷயங்களை நம்புகிறேன். எங்கள் வாடிக்கையாளர்கள், எங்கள் ஊழியர்கள், நாங்கள் இப்போது உருவாக்கிக்கொண்டிருக்கும் புதுமையான தயாரிப்புகள்.’’ ஜார்ஜுக்குத் தெரியும், மனிதர்கள் தொழில்நுட்பத்தைவிட முக்கியமானவர்கள். அதனால்தான் அவர்களை முன்னிறுத்தினார். முதல் பந்திலே சிக்ஸர் என்ற தேய்வழக்கு ஒன்றிருக்கிறது இல்லையா. அதுதான் ஜார்ஜ் அடித்தது.

நெட்ஆப்பின் வனவாசமெல்லாம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அதன் மதிப்பு எங்கேயோ சென்றுவிட்டது. இந்தியாவில் மட்டும் 2,500 ஊழியர்கள் இருக்கிறார்கள். கோவிட் காலத்தில் பலரும் கண்முழி பிதுங்கி இருக்க, ‘நாங்க எல்லாத்துக்கும் ரெடியாக்கும்’ எனப் பேசிக்கொண்டிருக்கிறார் ஜார்ஜ். அவை வெறும் சொற்கள் அல்ல. அவர் சி.இ.ஓ ஆன போது சொன்னாரே `புதுமையான தயாரிப்புகள்.’ அவை நெட்ஆப்பை நன்றாகவே காப்பாற்றி வருகின்றன.

இவ்வளவு வளர்ந்த பிறகும் கண்டிப்பான அம்மாவின் வளர்ப்பு ஜார்ஜை இன்னமும் அப்படியே வைத்திருக்கிறது. வசதி இருந்தாலும் அமெரிக்க லைப்ஸ்டைலுக்கு மாறவில்லை. பிரைவேட் ஜெட் வாங்கவில்லை. வாங்கினால் அம்மா அடிப்பார் என்கிறார் ஜார்ஜ். தான், சி.இ.ஓ ஆனதை அம்மாவிடம் சொன்னபோது ‘பிஸினஸ் கார்டையெல்லாம் வீட்டுக்குள் கொண்டு வராதீங்க’ எனச் சொல்லியிருக்கிறார். அதாவது, வீட்டுக்குள் ஜார்ஜ் அம்மாவுக்கு மகன், அண்ணனுக்குத் தம்பி, மனைவிக்குக் கணவன். அவ்வளவுதான். அன்னை காட்டிய வழியில், எளிமையான வாழ்க்கையையே தன் குழந்தைகளுக்கும் சொல்லித் தருகிறார்கள் ஜார்ஜும் மிஸஸ் ஜார்ஜும்.

இந்தியா வந்திருந்தபோது ஜார்ஜ் தந்த நேர்காணலின் ஆரம்பத்தில் அவர் சொன்னது: “நாங்க சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண ஆளுங்க. பெருசா எதையாச்சும் எழுதிடாதீங்க.”

நானும் ஒன்றும் சொல்லப்போவதில்லை; ஜார்ஜ் ஒரு மகத்தான தலைவன் என்பதைத் தவிர!

- இயக்குவார்கள்

கோட்ஸ்

``be humble about knowing you are not expert in all disciplines’’

``Everything will have to be about speed and agilitybecause speed is
the new scale’’