
இதுவரை நாம் பார்த்த மற்ற சி.இ.ஓ-க்களிலிருந்து இவர் கொஞ்சம் வித்தியாசமானவர்.
‘`24 மணி நேரத்தில் நாம் அதிகம் இருப்பது பணிபுரியும் இடத்தில்தான். அதனால்தான் நான் அங்கு எல்லோருக்கும் நண்பனாக இருக்க விரும்புகிறேன். உலகின் எந்த பாஸிடமும் சொல்ல முடியாத விஷயங்களைக்கூட என்னிடம் என் டீம் சொல்ல முடியும். இது ஒன்றும் என் அப்பா வேலை செய்த ஆர்மி கிடையாது. நான் ராணுவத் தளபதிபோல விறைப்பு காட்டினால், எனக்கு சிப்பாய்கள்தான் கிடைப்பார்கள்.’’
இப்படி அஜய்பால் சிங் பாங்கா பேசினால் கேட்டுக்கொண்டேயிருக்கலாம். இதுவரை நாம் பார்த்த மற்ற சி.இ.ஓ-க்களிலிருந்து இவர் கொஞ்சம் வித்தியாசமானவர். பெரிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளாக ஆன இந்தியர்களில் சிலர் பிறந்து வளர்ந்ததே அமெரிக்காவாகவோ அல்லது வேறு ஒரு வெளிநாடாகவோ இருக்கும். அவர்களின் பெற்றோர்கள் அங்கு சென்று குடியேறியிருப்பார்கள் அல்லது, அவர்களே கல்லூரிப் படிப்புக்காக அங்கு சென்றவர்களாக இருப்பார்கள். ஆனால், அஜய்பால் இந்தியாவில் படித்து முடித்து, இந்தியாவிலே பல ஆண்டுகள் வேலை செய்தவர். அவரின் திறமையைக் கண்டு ‘நீ வாய்யா எங்க நாட்டுக்கு’ என அவர் பணிபுரியும் நிறுவனத்தால் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர். இதுவரை மற்ற சி.இ.ஓ-க்களுக்கு நாம் விட்ட ‘Fire’-ஐவிட இவருக்கு நிறையவே விடலாம். அஜய்பால் சிங் பாங்கா இப்போது மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் சி.இ.ஓ.

பொதுவாக, சி.இ.ஓ-க்களை அடிக்கடி மாற்ற மாட்டார்கள். அதுவும், நிதி நிறுவனங்கள் அந்த விஷயத்தில் ரொம்பவே கவனமானவர்கள். ‘முடிவெடுக்குறதுக்கு முன்னாடி அவ்ளோ யோசிப்பேன். ஆனா முடிவெடுத்த பின்னாடி யோசிக்கவே மாட்டேன்’ என்பவர்கள். 1997 முதல் 2010 வரை ராபர்ட் என்பவர்தான் மாஸ்டர் கார்டின் சி.இ.ஓ. அதன்பின், கடந்த பத்தாண்டுகளாக அஜய்பால் அதன் தலைமைச் செயல் அதிகாரி.
மஹாராஷ்டிரா மாநிலம், புனே நகருக்கு அருகேயிருக்கும் கட்கி என்ற சிறிய ஊரில் பிறந்தவர் அஜய்பால். அப்பா ஹர்பஜன் சிங், ஒரு ராணுவ வீரர். அதனால் இந்தியா முழுக்க பல ஊர்கள் சுற்றி அங்கிருக்கும் பள்ளிகளில் படித்திருக்கிறார் அஜய். அதில் முக்கியமான ஒன்று, ஹைதையில் இருக்கும் ‘ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூல்.’ இந்தப் பள்ளியிலிருந்து அமெரிக்கா போன இரண்டு சி.இ.ஓ-க்களைப் பற்றி ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். ஒருவர், மைக்ரோசாப்ட்டின் சத்யா நடெல்லா. இன்னொருவர், அடோபின் ஷாந்தனு நாராயண். அஜய்பால் நம் பட்டியலில் மூன்றாவது சி.இ.ஓ. ஆனால், சீனியாரிட்டி அடிப்படையில் முதல் சி.இ.ஓ (2010). பள்ளிப் படிப்புக்குப் பின், அஜய் பொருளாதாரத்தில் டிகிரி முடித்துவிட்டு, இந்தியாவின் முக்கியமான கல்வி நிலையங்களில் ஒன்றான அஹமதாபாத் ஐ.ஐ.எம்மில் மாஸ்டர் முடித்தார். ஏனோ, அஜய்க்கும் அவர் அண்ணன் மன்விந்தர் சிங் பாங்காவுக்கும் அப்பாவைப் போல ராணுவத்தில் சேர விருப்பமில்லை. ஆனால், அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே ஜாதகம்தான். சி.இ.ஓ. ஜாதகம். ஆம், அஜய்யின் அண்ணனும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

அஜய்யின் கரியர் கிராப் அவ்வளவு அழகானது. திட்டமிட்ட உழைப்பாலும், அசாத்திய திறமையாலும் உயர விரும்பும் அனைவருக்கும் நான் பரிந்துரை செய்வது அஜய்பால் சிங்கின் கரியரைப்போல ஒன்றைத்தான். அவரைப் போல நம் பயோடேட்டா அமைந்தால் போதும் என்பேன்.
1981-ல் மாஸ்டர்ஸ் முடித்ததும் நெஸ்லே (Nestle) நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் டிரெய்னியாகச் சேர்கிறார் அஜய். வடிவேலு வார்த்தையில் சொல்வதென்றால் ‘அப்ரசண்ட்’. 13 ஆண்டுகள் நெஸ்லேவில் படிப்படியாக உயர்கிறார். சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் நிறைய கற்றுக்கொண்டு, சொல்லிக்கொள்ளும்படி ஒரு நல்ல பதவிக்கு வந்தபிறகு, நிறுவனம் மாறுகிறார். நினைவில் கொள்ளுங்கள்; 13 ஆண்டுகள். அப்போதுதான் பீட்ஸா ஹட் இந்தியாவிற்குள் நுழைகிறது. இந்தியாவின் முக்கியமான நகரங்களில் கிளை திறப்பதும் அதுவரை இந்தியர்களுக்குப் பரிச்சயமற்ற ஓர் உணவுப் பொருளை மார்க்கெட்டிங் செய்வதும் பெரிய வேலை. அந்தப் பொறுப்பை ஏற்கத்தான் நிறுவனம் மாறுகிறார் அஜய். இந்தியா முழுக்க சுற்றி, பீட்ஸா ஹட்டை ஒரு பிராண்ட் ஆக மாற்றினார். அந்த டாஸ்க் முடித்ததும் அஜய் செய்தது மிகப்பெரிய கரியர் மாற்றம். முதல் முறையாக நிதிநிறுவனத்தின் பக்கம் வருகிறார். சிட்டி குரூப்பின் இந்திய மார்க்கெட்டிங் பிரிவின் தலைவர் ஆகிறார். நான்கே ஆண்டுகள். ‘யார் சாமி இவன்’ என ஆச்சர்யப்பட்டது சிட்டி குரூப். அஜய்யை சந்தோஷமாக அமெரிக்காவுக்குக் ‘கடத்துகிறார்கள்.’ சிட்டியின் ‘U.S. consumer assets’ பிரிவின் ஹெட் ஆகிறார் அஜய். அடுத்து, இரண்டே ஆண்டுகள்தான். வட அமெரிக்காவின் ரீடெயில் பேங்க் மொத்தமும் அஜய் வசம் வருகிறது. 2005-ல் சிட்டியின் சர்வதேச வாடிக்கையாளர் வங்கிகளின் ஹெட் ஆகிறார். ஒவ்வொரு பதவி உயர்வுக்கு இடையேயும் இருந்தவை நெஸ்லேயில் அஜய் தந்த அதே திட்டமிட்ட உழைப்பும், வேலைக்குத் தேவையான திறமையை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமும்தான்.

2009-ல் அஜய்க்கு அடுத்த மாற்றம். சும்மா சும்மா வேலை மாறுபவரல்ல அஜய். அவர் மாஸ்டர் கார்டுக்கு வருகிறார் என்றால் ஒரு காரணம் தேவை. அப்போது, தனது அடுத்த புதிய தலைவரை மாஸ்டர் கார்டு தேடிக் கொண்டிருந்தது. அதற்காகத்தான் இங்கு வந்தார் அஜய். 2009-2010. ஓராண்டு… மாஸ்டர் கார்டின் தேர்வு சரிதானென அவர்களுக்குப் புரிய வைக்க ஓராண்டே போதுமானதாக இருந்தது அஜய்க்கு. 2010-ல், முடிசூடினார்.
சி.இ.ஓ ஆனால் சும்மா இருக்க முடியுமா? இல்லை, அப்படியிருக்க விட்டுவிடுவார்களா? விசா கார்டுதான் அந்த ஏரியாவில் தாதா. அவர்களோடு போட்டி போட்டு மேலே வர வேண்டிய கட்டாயம் அஜய்க்கு. யோசித்தார். கிரெடிட் கார்டு என்றால் வயதான, வசதியான ஆட்கள்தான் வாங்க முடியுமா? ‘இளைஞர்கள்தான் இனி இலக்கு’ என முடிவெடுத்தார். 50 வயதைத் தாண்டியவர், 20 வயதுக்காரனுக்காகச் சிந்தித்தார். ‘அவர்களைச் சென்றடைய இசைதான் சரியான வழி’ எனக் கண்டறிந்தார். ஒட்டுமொத்த மார்க்கெட்டிங் உத்திகளையும் கலைத்துப் போட்டார். நிறுவனத்தின் மூத்த ஆட்கள் இதைக் கண்டு பயந்து நிற்க, ‘மிஷின் சுத்துறது நிக்கட்டும்... அப்புறம் பாருங்க’ என்றார் தன்னம்பிக்கைத் தலைவன். சொன்னது போலவே, யூத்களின் கவனம் மாஸ்டர் கார்டு பக்கம் சுனாமியெனப் பாய்ந்தது.
ஒவ்வொருமுறை தன்மீது சந்தேகம் எழும்போதெல்லாம் தலைவன் என்பவன் சிரித்துக்கொள்வான். ஏனெனில், அது தன்னை மீண்டும் நிரூபிக்க வாய்ப்பு என்பது அவனுக்குத் தெரியும். அஜய்பால் சிங் பாகாவுக்கும் தெரிந்திருந்தது. நிரூபித்தார். கிரெடிட் கார்டு விஷயத்தில் அஜய் செய்த அந்த மாற்றம், அந்தத் துறையில் ‘கேம் சேஞ்சர்’ எனப் போற்றப்படுகிறது.
உலகம் டிஜிட்டல் வாலட்களை நோக்கி நகர்ந்துவிட்டது. அத்தனை சவால்களுக்கும் மாஸ்டர் கார்டு தயாராகவிருக்கிறது; காரணம், அதன் மாஸ்டர் அப்படி. ‘யாரால் டிஜிட்டல் உலகின் சவால்களையும் பாதுகாப்புப் பிரச்னைகளையும் சமாளிக்க முடிந்து, நிஜ உலகில் வலுவான அஸ்திவாரத்தையும் கொண்டிருக்க முடிகிறதோ, அவர்கள்தான் இனி இந்தத் துறையின் சாம்பியன்ஸ்; அதுதான் மாஸ்டர் கார்டு’ என கெத்து காட்டுகிறார் அஜய்பால். ஒரு சின்னக் கணக்கு சொல்கிறேன். 2015-ல் மாஸ்டர் கார்டின் ஆண்டு வருமானம் 96 பில்லியன் டாலர். 2016-ல் 107 பில்லியன் டாலர். 2019-ல் 169 பில்லியன் டாலர். இந்திய ரூபாயில் 1.25 லட்சம் கோடி.
அஜய்பால் செம ஜாலியான மனிதர். ஜோக் அடிக்க வேண்டுமென நினைத்துவிட்டால் பாஸிடமும் அடிப்பார். அதே போல அவரை யார் கிண்டலடித்தாலும் ஈஸியாக எடுத்துக்கொள்வார். அஜய் வரும் முன், 4.5 லட்சம் சதுர அடி கொண்ட மாஸ்டர் கார்டின் தலைமையகம் பார்க்க ‘டீசன்ட்’ ஆக இருக்கும். ஓப்பன் ஹால்கள். இயற்கையான ஒளி பாயும். குறுக்கும் நெடுக்குமாக கோட் போட்ட ‘அஜித்குமார்’கள் நடந்து கொண்டிருப்பார்கள். அஜய் வந்ததும் 100 குட்டி மின்சார ஸ்கூட்டர்கள் வாங்கினார். மீட்டிங்குக்கு ஜாலியாக வரச் சொன்னார். மரங்களில் குரங்கு பொம்மைகளைத் தொங்கவிட்டார். சிரிப்பவர்கள்தான் சிறந்தவர்கள் என நிறுவனத்தையே நம்ப வைத்தார். முக்கியமாக, கேபட்டீரியாவில் 2 ரூபாய்க்குத் தேன் மிட்டாய் வாங்கினாலும் மாஸ்டர் கார்டு மூலம்தான் பணம் செலுத்த வேண்டும் என்றார். தொழில் நிறுவனங்களில் தலைவன் என்பவன் அதன் லாபக் கணக்கைக் காட்டும் பேலன்ஸ் ஷீட்டுக்கு மட்டும் பொறுப்பு கிடையாது. அந்நிறுவனத்தின் கலாசாரத்துக்கே காரணமானவன்.
2016 அஜய்சிங்குக்கு முக்கியமான ஆண்டு. இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. 2017 இன்னும் சிறப்பானது. ‘Most influential Business Person of the year by Fortune’ பட்டியலில் அஜய்க்கு 6-வது இடம் கிடைத்தது. அதே ஆண்டு, Harvard Business Review’s best-performing CEO பட்டியலிலும் அஜய்யின் பெயர் முன்னாடி வந்து நின்றது. இன்னும் ஏகப்பட்ட அங்கீகாரங்கள் அந்த ஆண்டு அஜய்பால் சிங் பாகாவின் பெயருடன் இணைந்தன.
அஜய்யின் வாழ்க்கை நமக்குச் சொல்வது இதுதான். ‘நீ எங்கிருக்கிறாயோ, என்ன வேலை செய்கிறாயோ... அதைத் திறம்படச் செய். திட்டமிட்டு உழை. அந்த உழைப்பும் திறமையும் உன்னை உலகம் முழுக்க அழைத்துச் செல்லும். ஏன், உலகையே உன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்யும்.’
இப்போது நாம் அஜய்பாலை அப்படித்தானே பார்க்கிறோம்!
- இயக்குவார்கள்
கோட்ஸ்
“உங்கள் வெளிப்படைத்தன்மையாலும் நன்னடத்தையாலும் நோக்கத்தினாலும்தான் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.”“இணையம் வழியாக நாம் இணைந்திருக்கிறோம் என்றாலும், அதில் எல்லோருடனும் ஒன்றிணைத்திருக்கிறோமா என்றால், இல்லை.’’
(We have the Internet of Everything but not the inclusion of everyone.)