Published:Updated:

உலகை இயக்கும் இந்தியர்கள் - 9

சஞ்சய் மேரோத்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
சஞ்சய் மேரோத்ரா

அடுத்த சில ஆண்டுகளில் சேன் டிஸ்க் பில்லியனுக்கும் அதிகமான டாலரைத் தந்து பல நிறுவனங்களை வாங்கியது.

னவுகளுக்கு எல்லை கிடையாது. சொல்லப்போனால், முடியாதெனத் தோன்றும் ஒன்றைச் செய்துமுடிக்க விரும்புவதுதான் கனவு. சிலரின் கனவு தலைமுறைகள் தாண்டியும் நன்மைகள் தரும். அப்படியொரு கனவுடன் கான்பூரில் ஒருவர் இருந்தார்.

1970களில் வாழ்ந்த கீழ்நடுத்தர வர்க்கத் தந்தை அவர். அப்போதெல்லாம் மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வதென்பது என்னவென்றே பெரும்பாலான இந்தியத் தந்தைகளுக்குத் தெரியாது. சில மாணவர்கள் மட்டும் பட்டப்படிப்பு முடித்ததும் மேற்படிப்புக்காகச் செல்வதுண்டு. ஆனால், நம் கனவுக்காரத் தந்தைக்குத் தன் மகனைப் பட்டப்படிப்பு படிக்கவே அமெரிக்கா அனுப்ப வேண்டுமென்ற ஆசை. ஆசை மட்டும் படாமல் அதற்கான வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். கனவுகளைத் துரத்துபவனுக்கு எங்காவது சிறு வெளிச்சம் கண்ணில் பட்டே தீரும். கான்பூர்க்காரருக்கும் அப்படியொரு ஒளி கண்ணில்பட்டது. தன் மகனுக்காக அப்ளிகேஷன் போட்டார்.

சஞ்சய் மேரோத்ரா
சஞ்சய் மேரோத்ரா

அவ்வளவு எளிதில் நனவாகக்கூடிய கனவா அது? முதல் சவால் எழுந்தது. இந்தியாவில் அப்போது உயர் கல்வி என்பது 11 ஆண்டுகள். அமெரிக்காவோ 12 ஆண்டுகள் வேண்டுமென்றது. அந்தக் காரணத்தால் இடம் கிடைக்கவில்லை. மகனை இந்தியாவிலே கல்லூரியில் சேர்த்து முதலாண்டு படிக்க வைத்தார். அடுத்த ஆண்டு மீண்டும் விண்ணப்பித்தார். இப்போது UC Berkeley என்ற கல்வி நிலையத்தில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், மகனுக்கு அப்போது 18 வயது ஆகவில்லை என்ற காரணத்தால் விசா ரிஜெக்ட் ஆனது. விடவில்லை கனவுக்காரன். மீண்டும் விசாவுக்கு விண்ணப்பித்தார். மீண்டும் மறுக்கப்பட்டது. இப்படியாக மூன்று முறை விசா ரிஜெக்ட் ஆனது. முதலில் கல்லூரியின் இடமே கிடைக்கவில்லை. இப்போது சீட் கிடைத்து விசா கிடைக்கவில்லை. ஒன்றும் இல்லாதபோதே கனவைக் கைவிடாதவர் ஓரடி முன்னால் சென்ற பின்பா பின்வாங்குவார்? வேதாளமாக மாறி விசா என்ற முருங்கை மரம் ஏறிக்கொண்டேயிருந்தார் அந்தத் தந்தை.

அடுத்த முறை விசா அலுவலகம் சென்றிருந்த போது, விசா அனுமதி தர வேண்டிய அதிகாரி யார் என்பதை அந்த அலுவலகத்திலிருந்த புகைப்படம் மூலம் தெரிந்துகொண்டார். அவர் உணவு இடைவேளையின் போது வெளியே வரட்டுமெனக் காத்திருந்தார். அலுவலரும் வந்தார். அந்த அதிகாரி எதுவும் பேசவில்லையென்றாலும் கனவுக்காரத் தந்தை சொல்வதைக் கேட்டார். 20 நிமிடங்கள் தன் கனவைப் பற்றியும், போராட்டம் பற்றியும், கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பற்றியும் கோபத்துடன் உணர்ச்சி பொங்கப் பேசினார் தந்தை. உடன் மகனும் நின்றிருந்தார். தன் தந்தையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் மகன். முடிவில் அதிகாரி விசா அனுமதி தர சம்மதித்தார்.

உலகை இயக்கும் இந்தியர்கள் - 9

‘வெற்றிக்கான வழி விடாமுயற்சிதான் என்பதை என் தந்தையிடம் அன்று நான் கற்றுக் கொண்டேன்’ என்கிறார் அந்தக் கனவுக்காரத் தந்தையின் மகனான சஞ்சய் மேரோத்ரா. இன்று மைக்ரான் என்ற டேட்டா ஸ்டோரேஜ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. மைக்ரானின் சென்ற ஆண்டு வருவாய் 1.5 லட்சம் கோடியைத் தாண்டியது. மைக்ரான் பற்றியும் அங்கு சஞ்சயின் சாம்ராஜ்யம் பற்றியும் சொல்வதற்கு முன் சஞ்சய் செய்த இன்னொரு ‘வெறித்தனமான சம்பவம்’ பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தக் கதை நடந்தது 1988-ம் ஆண்டு. கல்லூரியொன்றில் பட்டம் பெறும் நாள் அது. படிப்புக்காகவே இந்தியா, இஸ்ரேல் மற்றும் சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த மூன்று மாணவர்கள் சந்தித்தார்கள். சிலிக்கான் வேலியே இதுபோன்று இடம்பெயர்ந்தவர்களால் ஆனதுதானே? அவர்கள் பேச்சு முழுவதும் அப்போதுவரை சந்தைப்படுத்தப்படாத, ஆராய்ச்சிக்கட்டத்திலிருந்த ஒன்றைப் பற்றி மட்டுமே இருந்தது. அப்போது டிஜிட்டல் கேமராக்கள் அதிகமாகப் புழக்கத்திலில்லை. ஸ்மார்ட்போன் என்ற ஒன்றே இல்லை. ஆனால், இவற்றுக்கெல்லாம் முக்கியத் தேவையான மெமரி கார்டு தொழில்நுட்பம் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘ஒருநாள் மெமரி கார்டுகள் உலகை ஆளும்’ எனத் திடமாக நம்பிய நண்பர்கள் ஒன்றுசேர்ந்து ‘சன் டிஸ்க் (Sun disk)’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். பின்னாள்களில் சேன் டிஸ்க் (SanDisk) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் மெமரி கார்டு பார்க்காத கேமராவே இல்லை என்னும் அளவுக்கு வளர்ந்தது.

உலகை இயக்கும் இந்தியர்கள் - 9

நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் நாளில் சஞ்சய் 15 நிமிடங்கள் தாமதமாகப் போய்விட்டார். அதனால் நிறுவனத்தின் மூன்றாம் ஊழியராகச் சேர்ந்தார். ஆனால், அந்த நாளுக்குப் பின் சஞ்சயும் சேன் டிஸ்க்கும் எதிலுமே தாமதம் செய்யவில்லை. 1995-ல், நிறுவனம் தொடங்கப்பட்ட ஏழு ஆண்டுகளில் பங்குச்சந்தையில் கால் பதித்தது. 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவின் குடிமகன் கையிலிருக்கும் எந்த டிஜிட்டல் கேமராவைத் திறந்து பார்த்தாலும் சேன் டிஸ்க் மெமரி கார்டுதான் இருக்கும் எனச் சொல்லுமளவுக்கு சேன் டிஸ்க் வளர்ந்தது.

2011-ல் சேன் டிஸ்க்கின் சி.இ.ஓவாக சஞ்சய் ஆகும் முன் மூன்று நண்பர்களில் ஒருவர்தான் சி.இ.ஓ. 2008 உலகமே பொருளாதார மந்த நிலையால் தவித்தபோது சேன் டிஸ்க்கும் வீழ்ந்தது. அதன் பங்கு விலை அதலபாதாளத்துக்குச் சென்றது. உடனே, சாம்சங் நிறுவனம் சேன் டிஸ்க்கை வாங்க ஆர்வம் காட்டியது. சஞ்சய் இதை மறுத்தார். கொஞ்சம் மாறினால் வளமான எதிர்காலம் இருப்பதாக அவர் நம்பினார். இனியும் ‘removable products’ என அழைக்கப்படும் மெமரி கார்டுகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்றார் சஞ்சய். 2008-ல் அதிகம் பேசப்படாத, இன்று எல்லோராலும் பேசப்படும் ப்ளாஷ் மெமரி என்ற கான்செப்ட்டை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றார். 1988-ல் மெமரி கார்டுகளை நண்பர்கள் எப்படிச் சரியாகக் கணித்தார்களோ, அதே போல 2008-ல் ப்ளாஷ் மெமரியை சஞ்சய் கணித்தார். அவர் சொன்னதை சேன் டிஸ்க் போர்டு ஏற்றது.

பின், சஞ்சய் சி.இ.ஓ ஆக்கப்பட்டார். நம்பியதை நிகழ்த்திக்காட்டினார் சஞ்சய். தலைமை என்பதை குணங்களை வைத்து வரையறுக்கக் கூடாது. முடிவுகளை, விளைவுகளை வைத்தே வரையறுக்க வேண்டும். 2011-ல், சஞ்சய் தலைமையில் 100 கோடி அமெரிக்க டாலர் வருமானம் கண்ட நிறுவனமாக சேன் டிஸ்க் மாறியது. விடாப்பிடியாக நின்று இதைச் சாதித்துக்காட்டிய சஞ்சயிடம் அன்று பேட்டி எடுக்காத சர்வதேச ஊடகங்களே இல்லை. எல்லோருக்கும் சஞ்சய் சொன்ன பதில் ‘என் தந்தை எனக்காக எப்படி விடாப்பிடியாக நின்று விசா வாங்கினாரோ அப்படித்தான் நானும். இது என் தந்தையிடம் நான் கற்ற பாடம்’ என்றார். ஒரு விதத்தில் சஞ்சயின் வெற்றி அந்தக் கனவுக்கார கான்பூர் தந்தையின் வெற்றி.

அடுத்த சில ஆண்டுகளில் சேன் டிஸ்க் பில்லியனுக்கும் அதிகமான டாலரைத் தந்து பல நிறுவனங்களை வாங்கியது. சாம்சங் வாங்கிக் கொள்வதாகச் சொன்ன நிறுவனத்தைத் தலைமையேற்று, வெற்றிப்பாதையில் வழி நடத்தி, அந்த நிறுவனம் மற்ற நிறுவனங்களை வாங்கும் அளவுக்கு மாற்றினார் சஞ்சய். தலைவன் என்பவன் அப்படித்தான். அவன் எல்லோரும் நடக்கும் பாதையில் நடப்பவன் கிடையாது. புதுப்பாதையை உருவாக்கி, அதில் தன் தடத்தைப் பதிப்பவன். சஞ்சய் மேரோத்ரா தலைவன்.

மூன்று பேருடன் தொடங்கப்பட்ட நிறுவனம் 25 ஆண்டுகளில் 8,000 பேர் கொண்ட நிறுவனம் ஆனது. நிறுவனர்களில் ஒருவரான ஹராரி 2010-ல் ஓய்வுபெற்றார். இன்னொருவரான ஜேக் 2004-ல் போதுமென நினைத்து ஒதுங்கினார். ஆனால், 1998-ல் இருந்து கடைசிவரை சேன் டிஸ்க்கில் இருந்தவர் சஞ்சய்தான். 2016-ல் சேன் டிஸ்க்கை 19 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி) தந்து வெஸ்டர்ன் டிஜிட்டல் என்ற இன்னொரு டேட்டா ஸ்டோரேஜ் நிறுவனம் வாங்கிக் கொண்டது. அந்த மூன்று நண்பர்களின் சொத்து மதிப்பும் எங்கோ உயர்ந்தது. டெக் உலகில் நிகழ்ந்த மிக முக்கியமான கைமாறலாக அதைப் பார்த்தார்கள். அப்போது சஞ்சய்க்கு வயது 58. இந்தியாவில் ஓய்வுபெறும் வயது. ஆனால், தலைவனுக்கு ஏது ஓய்வு? அடுத்த ஆண்டே மைக்ரான் என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனார் சஞ்சய். இன்று வரை தனது 62-ம் வயதிலும் மைக்ரானை வெற்றிகரமாக நடத்துகிறார் சஞ்சய். தலைவன் ஆகும் முன் ஒருவன் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும். தலைவன் ஆன பின் மற்றவர்களை வளர்க்க வேண்டும். சஞ்சய் என்ற தலைவன் இப்போது மைக்ரானை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமா? சஞ்சய் வசம் 70 புதிய ஐடியாக்களுக்கான பேடன்ட் உரிமை இருக்கிறது.

ஒரு கனவு கண்டால் அதில் விடாப்பிடியாக நின்று முயற்சிசெய்ய வேண்டுமென ஒரு தந்தை தன் மகனுக்குக் கற்றுத் தந்தார். அதை மகன் இந்த உலகுக்கே கற்றுத் தந்தார். இருவருக்கும் நாம் நன்றி சொல்லலாம். எப்படித் தெரியுமா? நம் கனவில் நாம் விடாப்பிடியாக நின்று முயற்சி செய்வதன் மூலம்தான்.

- இயக்குவார்கள்

தலைமைப்பண்பைப் பற்றிச் சொல்லும் போது ஐந்து முக்கியமான விஷயங்களைப் பரிந்துரை செய்கிறார் சஞ்சய்.

Team Chemistry - மூன்று நண்பர்களுக்கு இடையே இருந்த ஒற்றுமையைத்தான் சொல்கிறார். ஆரம்பக்கட்டத்தில் இது ரொம்ப முக்கியம். ஒரே கனவுடையவர்கள் ஒன்று சேரும்போது பயணம் வேகமாகும், பாதை எளிதாகும் என்பது சஞ்சயின் அனுபவம்.

Execution - குறைவான செயல்களில் கவனம் செலுத்துங்கள். அதை எந்த அளவிற்குச் சிறப்பாகச் செய்ய முடியுமோ அப்படிச் செய்யுங்கள். மெமரி விஷயங்கள் தாண்டி இன்னும் எத்தனையோ தொழில் செய்ய திறமையும் வாய்ப்பும் இருந்தன. ஆனால், சஞ்சயும் அவர் நண்பர்களும் இதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். தன்னுடைய வெற்றிக்கு இதை முக்கிய காரணமாகச் சொல்கிறார் சஞ்சய்.

Micro-Management. Not. சின்னச் சின்ன விஷயங்களைக் கவனித்துக்கொண்டிருந்தால் பெரிய விஷயங்களைக் கோட்டை விட வேண்டியிருக்கும். அதற்கென சரியான ஆட்களை வேலைக்கு வைத்துவிட்டு, பெரிய விஷயங்களைக் கவனிக்க வேண்டுமென்கிறார் சஞ்சய். Trust but Verify என்பது சஞ்சயின் லீடர்ஷிப் ஸ்டைல்.

Tenacity - தமிழில் விடாமுயற்சி எனச் சொல்லலாம். தன் தந்தை விசாவுக்காக அன்று போராடியபோது, பக்கத்தில் நின்று பார்த்தாரே சஞ்சய்.. அங்கு கற்றுக்கொண்ட விஷயம். அதைத்தான் முதல் பாடமாகச் சொல்கிறார் சஞ்சய்.

Innovation - புதுமையான முயற்சிகள் அவசியம். அதன் எல்லைகளை ‘கேல்குலேட்டிவ் ரிஸ்க்’ மூலம் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கிறார் சஞ்சய். சேன் டிஸ்க்கின் தோற்றமும் சரி, அதன் வளர்ச்சியும் சரி, சரியாகக் கணிக்கப்பட்டு எடுத்த ரிஸ்க்குகளில்தானிருந்தது.