Published:Updated:

உலகை இயக்கும் இந்தியர்கள் - 5 - ஜெய்ஸ்ரீ உல்லல்

ஜெய்ஸ்ரீ உல்லல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெய்ஸ்ரீ உல்லல்

ARISTA

நமக்கு கோலியைத் தெரியும். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பெயர் தெரியுமா? ட்ரம்ப்பைத் தெரியும். எதாவது ஒரு பெண் பிரதமர் பெயர் தெரியுமா? விளையாட்டில் தொடங்கி அரசியல் வரை எல்லாத் துறைகளிலும் ஆண், பெண் இருவரும்தான் சாதிக்கிறார்கள். ஆனால், அந்தப் பெண்களின் பெயர்கள் நமக்குப் பெரும்பாலும் நினைவில் இருப்பதில்லை. உலகின் முக்கியமான சி.இ.ஓ-க்களாக இருந்தவர்களில்கூட பெண்கள் என்றால் பெப்ஸியின் இந்திரா நூயியை மட்டும் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இப்போது இன்னொருவரைத் தெரிந்துகொள்ளலாம். அந்தப் பெயரைச் சொல்லும் முன் அவரைப் பற்றிய சில விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன்.

டெக் உலகின் டாப்50 இன்ப்ளூயன்சர்களில் ஒருவர்; 2018 மற்றும் 2019-ம் ஆண்டில் Barron’s நிறுவனம் வெளியிட்ட உலகின் தலைசிறந்த சி.இ.ஓ பட்டியலில் இடம்பெற்றவர்; 2019-ம் ஆண்டின் பார்ச்சூன்ஸ் பிஸினஸ்பெர்சன் பட்டியலில் இடம்பெற்றவர்; உலகின் சக்தி வாய்ந்த 50 பேர்களில் ஒருவர் - 2011 நெட்வொர்க் வேர்ல்டு; உலகின் சிறந்த சி.இ.ஓ - குரோத் லீடர்ஸ் 2018...

பட்டியல் இன்னும் நீள்கிறது. இத்தனை அங்கீகாரங்களுக்கும் சொந்தக்காரர் ஜெய்ஸ்ரீ உல்லல். நெட்வொர்க்கிங் துறையில் உலகின் மிக முக்கிய நிறுவனமான அரிஸ்டா நெட்வொர்க்ஸின் 12 ஆண்டுக்கால தலைமைச் செயல் அதிகாரி.

ஜெய்ஸ்ரீ லண்டனில் பிறந்தவர்; இந்தியாவில் பள்ளிப் படிப்பை முடித்தவர். பின், அவர் தந்தையின் வேலை காரணமாக அமெரிக்கா செல்ல, அங்கே கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். கணவர் விஜய் உல்லல். அவரும் மின்னணு நிறுவனம் ஒன்றின் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். இரண்டு மகள்கள்.

இந்தியாவில் பெண்கள் பள்ளியில்தான் ஜெய்ஸ்ரீ சேர்க்கப்பட்டிருந்தார். ஒரு விதத்தில் அது அவருக்கு நல்லது என்பது அவர் கருத்து. ஆண்களால் நிகழும் எந்தப் பிரச்னைகளும் அந்தப் பள்ளியில் இல்லை; போலவே, ஆண் பெரியவனா இல்லை பெண்ணா என்ற போட்டி மனப்பான்மையும் எழவில்லை என்கிறார். கவனம் முழுவதும் படிப்பில்தான் என்றாலும் அவரால் முதல் பென்ச் மாணவி ஆக முடியவில்லை. அதைப்பற்றிப் பெரிதாகக் கவலையும்படவில்லை. தன்னால் முடிந்தவற்றை மனம் மகிழச் செய்திருக்கிறார் ஜெய்ஸ்ரீ. கணக்குதான் அவருக்குப் பிடித்த பாடம். அதில் நன்றாகவே தேர்வாகியிருந்தார். பின் ஜெய்ஸ்ரீயின் தந்தை அமெரிக்காவுக்கு மாற்றலாகிச் சென்றவுடன், கல்லூரியில் பிடித்த பாடத்தை முடித்தார். ஜெய்ஸ்ரீயின் தந்தையும் அறிவியல் துறை என்றாலும் அவரின் நிழலில் வளர ஜெய்ஸ்ரீக்கு விருப்பமில்லை. தன்னைத்தானே செதுக்கிக்கொள்வார்களாம் தலைவர்கள்.

மாஸ்டர்ஸ் முடித்தவுடன் ஜெய்ஸ்ரீ வேலைக்குச் சேர்ந்ததே நெட்வொர்க்கிங் துறைதான். சின்னச்சின்ன நிறுவனங்களில் வேலை செய்தவர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் சிஸ்கோ என்ற பிரமாண்ட ஆலமரத்தின் கீழ் வந்தார். அதன்பின்னர் 15 ஆண்டுகள் அங்குமிங்கும் நகரவில்லை. கவனம் முழுவதும் கரியர்மீதுதான். அதில் வளர்வது பற்றிதான். 2000-ம் ஆண்டில் ஒரு நாள், ஜெய்ஸ்ரீக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களுக்கு எழும் அதே சந்தேகம்: ‘நாம் ஒரு நல்ல அம்மாவாக இருக்கிறோமா?’ சில மாதங்கள் வேலைக்கு விடுமுறை தந்தார். வீட்டிலே முழு நேரமும் மகள்களுடன் செலவிட்டார். ரெகுலர் அம்மாவாக அத்தனை வேலைகளையும் தானே செய்ய வேண்டுமென ஆசைப்பட்டுச் செய்தார். ஆனால், அவர் மகள்கள் அவரிடம் கேட்டதெல்லாம் ஒன்றுதான், “எப்போம்மா வேலைக்குப் போவீங்க?”

ஒரு நல்ல அம்மாவாக இருப்பதற்கு வேலைக்குப் போகாமல் இருப்பது முக்கியத் தகுதியல்ல என்பதை உணர்ந்தார். தன் கரியரும் அதில் கிடைக்கும் அங்கீகாரங்களும், பாராட்டுகளும் தன் மகள்களுக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்தார். குழந்தைகள் எல்லோரும் புத்திசாலிகளே. பெற்றோர் சொல்லும்விதத்தில் சொன்னால் புரிந்துகொள்பவர்கள். மகள்கள் சொல்படி மீண்டும் வேலைக்கு வந்தார். அதன் பின்னர்தான் ஜெய்ஸ்ரீ கரியர் ராக்கெட் வேகத்தில் மேலே சென்றது. அதனால்தான் தனது அத்தனை வெற்றிகளுக்கும் எல்லா நேர்காணல்களிலும் குடும்பத்திற்கு நன்றி சொல்கிறார் ஜெய்ஸ்ரீ.

ஜெய்ஸ்ரீ உல்லல்
ஜெய்ஸ்ரீ உல்லல்

வேலைக்குச் செல்லும், செல்ல விரும்பும் பெண்களுக்கு நீங்க சொல்ல விரும்புவது என்ன என்ற கேள்விக்கு உலகின் முக்கியமான சி.இ.ஓ ஜெய்ஸ்ரீ சொன்ன மூன்று விஷயங்கள்:

‘உங்க மனசு சொல்றதக் கேளுங்க. உங்களுடைய திறமை எதுல இருக்குன்னு அதன் மூலமா கண்டுபிடிங்க.’

‘உங்களுக்கான வாய்ப்புகளையும் திருப்பு முனைகளையும் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காம நீங்களே உருவாக்குங்க.’

‘உங்களைச் சுத்தியிருக்கிற மனிதர்களுக்கு மதிப்பளிங்க. ஒரு நல்ல சூழலை உருவாக்குங்க.’

ஜெய்ஸ்ரீக்கு ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற கனவோ லட்சியமோ இருந்ததில்லை. சிஸ்கோவின் தலைமைப் பொறுப்புகளின் ஒன்று அவரிடம் வந்ததையே விபத்து என்கிறார். ஜெய்ஸ்ரீ முதலில் ஒப்பந்த ஊழியராகத்தான் சிஸ்கோ நிறுவனத்தில் இருந்தார். அவரால் அங்கே இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க முடியாது என்ற எண்ணமிருந்தது. ஆனால், அவர் அங்கே இருந்தது 15 ஆண்டுகள். அந்நிறுவனத்தை விட்டு வெளியேறும்போது அவர் சிஸ்கோவின் சீனியர் வைஸ் பிரஸிடெண்ட். நல்ல சம்பளம். மரியாதைக்குரிய பதவி. நெட்வொர்க்கிங் உலகின் முக்கியமான பெண் என நல்ல வாய்ப்பு அது. ஆனால், அவர் விரும்பியது அது இல்லையே. அவருக்குத் தொழில் முனைவோர் ஆக வேண்டுமென்ற கனவுதான் இருந்தது. ஒரு பெரிய நிறுவனத்தை வழிநடத்துவதைவிட ஜீரோவிலிருந்து தொடங்கி ஒரு நிறுவனத்தை வளர்த்தால்தான் அதற்குத் தன்னைக் காரணமாகச் சொல்ல முடியுமென்ற எண்ணம் ஜெய்ஸ்ரீக்கு இருந்தது. தங்களுக்கான வாய்ப்புகளைத் தாமே உருவாக்க வேண்டுமென பெண்களுக்கு அறிவுரை சொன்னவர் அதைச் செய்யாமலா சொல்வார்? சிஸ்கோவின் சீனியர் வைஸ் பிரஸிடெண்டாக இருந்தவர், தொடங்கி நான்கு ஆண்டுகளே ஆன, கிட்டத்தட்ட லாபமே பார்க்கத் தொடங்காத, 50க்கும் குறைவான ஊழியர்கள் இருந்த அரிஸ்டா நெட்வொர்க்ஸ்க்கு வருகிறார். அதாவது அரிஸ்டா அப்போது ஜீரோ. அதன் சி.இ.ஓ பொறுப்பை ஜெய்ஸ்ரீ உல்லல் ஏற்கிறார். இப்போது அந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 18,000 கோடி. 2,300க்கும் அதிகமானோர் இப்போது அரிஸ்டாவின் ஊழியர்கள். இந்த அனைத்து எண்களுக்கும், வெற்றிகளுக்கும் முக்கிய காரணம் ஜெய்ஸ்ரீ. தன் திறமையைக் கண்டறிந்து, அதில் தன்னை வளர்த்துக்கொண்டு, தனக்கான வாய்ப்புகளைத் தானே உருவாக்கி அதில் விடாமுயற்சியுடன் உழைத்து வெற்றி பெற்றி ஜெய்ஸ்ரீ, பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் எனர்ஜி டானிக்.

ஜெய்ஸ்ரீக்கு ஆரம்பம் சரியாக இருக்க வேண்டும். எனவே, ஆர்&டி எனப்படும் ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். மற்ற எந்த டெக் நிறுவனங்களை விடவும் குட்டிப்பையனான அரிஸ்டா அப்போது ஆர்&டி துறைக்கு அதிகம் செலவு செய்தது. போலவே, நெட்வொர்க்கிங் துறையின் டாப் டேலன்ட்களில் 5% அரிஸ்டாவில்தான் இருக்கிறார்கள் என கெத்து காட்டும் அளவிற்கு திறமையான ஊழியர்களுக்கும் செலவு செய்தார். டெக்னிக்கலாக மட்டுமல்ல, அந்நிறுவனத்தை எல்லா விதத்திலும் வளர்த்தெடுத்தவர் ஜெய்ஸ்ரீ. 2014-ல் அரிஸ்டா பங்குச்சந்தையில் நுழைய முடிவெடுத்தது. அந்த ஐடியா தொடங்கியதிலிருந்து அதை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது வரை எல்லாமே ஜெய்யின் திறமை மற்றும் உழைப்பு. ஒரு கணக்கு சொல்கிறார்கள். 2014-ல் அரிஸ்டாவின் ஒரு பங்கு 43 டாலர். அதன் இன்றைய மதிப்பு 230 டாலர். ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஆறு மடங்கு. ‘ரிஸ்க்கும் குறைவு அதுதான் அரிஸ்டா’ என்கிறது பங்குச்சந்தை. அதுதான் ஜெய்ஸ்ரீ என்கிறேன் நான்.

பெண்கள் எல்லாத் துறைகளிலும் அதிக பங்காற்றி வந்தாலும், டெக்னிக்கல் விஷயங்களில் அது இன்னும் குறைவுதான் என்பது ஜெய்ஸ்ரீயின் கருத்து. அவர் படித்த மின் பொறியியல் வகுப்பில் இரண்டே இரண்டு பெண்கள்தாம். அதன் பின்னரும், அவர் வேலை செய்த நெட்வொர்க்கிங் ஸ்விட்ச்களுக்கான உற்பத்தித் துறையிலும் பெண்கள் அதிகம் வரவில்லை. அதனால்தான், பெண்கள் படிப்பை ஊக்குவிக்கும் அதே வேளையில் அவர்கள் அறிவியல் சார்ந்து அதிகம் கற்கவும் ஊக்குவிக்க வேண்டுமென்கிறார் ஜெய்ஸ்ரீ.

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் படித்த அனுபவம் கொண்டவர் என்பதால் ஜெய்ஸ்ரீயிடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்கப்பட்டது. இந்திய மற்றும் அமெரிக்கக் கல்வி முறைகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன என்பதே கேள்வி. அதற்கு, ‘இந்தியாவில் அடிப்படைக் கல்வி நன்றாகவே தரப்படுகிறது. ஆனால், அதன் பின்னர் கிரியேட்டிவிட்டியையும் பிரச்னைகளைத் தீர்ப்பது பற்றியும் இந்தியக் கல்வி முறை கவலைப்படவில்லை. உலகுக்குத் தேவை இந்திய மற்றும் மேற்கத்தியக் கல்விமுறையின் கலவைதான் என்கிறார் அவர்.

கல்வித்துறைக்கு மட்டுமல்ல, இந்திய சி.இ.ஓ-க்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கும் ஜெய்ஸ்ரீயிடம் ஒரு வேண்டுகோள் இருக்கிறது. பெண்களை மதிப்பதில் இந்தியா மற்ற நாடுகளைவிட மேலானதுதான். இருந்தாலும் பணியிடத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்கள்மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்கள் இந்தியாவில் ஏராளம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அதைச் சரி செய்யாமல் பெண்கள் அதிகம் பணிபுரிய வர வேண்டுமென எதிர்பார்ப்பது சரியாகாது என்பது ஜெய்ஸ்ரீயின் நியாயமான கணிப்பு. இந்திய நிறுவனங்களும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் அது.

தலைவர் ஆக பாலினம் என்பது தகுதியோ சிறப்புச்சலுகையோ அல்ல. அது முழுக்க முழுக்க ஒருவரின் திறமை சார்ந்தது. ஜெய்ஸ்ரீஉல்லலின் 59 ஆண்டு வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தி அதுதான்.

- இயக்குவார்கள்

ARISTA

இவர் குரல்: “உணவு, குடும்பம், கலாசாரம் போன்ற விஷயங்களில் நான் இன்னமும் ஓர் இந்தியர்தான். ஆனால், என் எண்ணங்கள் மற்றும் நாம் நம்பும் தொழில்சார் கொள்கைகளில் நான் இந்த உலகின் குடிமகள்.” “டெக் துறை ஆண்களின் உலகமாக இருக்கக் காரணம், இன்னும் போதிய பெண்கள் அங்கே நுழையவில்லை என்பதுதான்.”