
மினி தொடர்
காஷ்மீர் பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டோம். டெல்லியில் உள்துறையின் உயர் அதிகாரிகள் சிலரைச் சந்தித்து, காஷ்மீர் அனுபவங்களையும் மக்களின் கோரிக்கைகளையும் எடுத்துரைத்தேன். குறிப்பாக, உரி பகுதிக்கு நான் சென்றபோது ‘எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் செல்கள் அடிக்கடி வந்து விழுகின்றன. எனவே, புதிய பதுங்குக் குழிகளைக் கட்டித்தரும்படி மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லுங்கள்’ என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன். அதற்கு அவர்கள், ‘நிச்சயம் பரிசீலிக்கிறோம்’ என்று உறுதியளித்தார்கள்.
காஷ்மீரில் நாம் சந்தித்த மனிதர்கள், கண்ட காட்சிகள், நேரடி அனுபவங்கள் எல்லாம் காஷ்மீரைப் பற்றி நமக்குள் மங்கலாக இருந்த காட்சிகளைக் கொஞ்சம் தெளிவுபடுத்தியிருந்தன. ஆனால், அங்கு உள்ள மக்களுக்கும் அரசு எனும் அதிகார பீடத்தில் இருப்பவர்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதற்கான காரணிகள் மட்டும் புலப்படவேயில்லை. இருதரப்புகளுக்கு மான இணக்கம் மட்டும் கடைசிவரை கானல்நீராகத்தான் இருக்குமோ எனத் தோன்றியது.

காஷ்மீர்... 2019-ம் ஆண்டில் உலக அளவில் கோடானுகோடி பேரால் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை இது. அப்படி ஒரு சூழலை ஏற்படுத்தியது மத்திய அரசு. நீண்ட நெடிய முயற்சிக்குப் பிறகு, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்ட நடவடிக்கைக்கு விளக்கம் அளிக்கும்வகையில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் என்னிடம் பேசினார்கள்.
`இந்திய மண்ணில் ஒற்றுமை குலைந்து தீவிரவாதம் வளர உதவியதே சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏதான்’ என்று கூறும் மத்திய அரசு அதிகாரிகள், அதற்கான காரணங்களாக கீழ்க்காண்பவற்றைப் பட்டியலிடுகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை இருந்தது.
தனி தேசியக்கொடி அளிக்கப்பட்டிருந்தது.
மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல், காஷ்மீர் சட்டமன்றத்துக்கு ஆறு ஆண்டுகள் ஆட்சிசெய்ய அனுமதி இருந்தது.
இந்தியாவின் தேசியக்கொடி மற்றும் தேசிய அடையாளங்களை ஜம்மு-காஷ்மீரில் இழிவு செய்தால் தண்டனையில்லை.
ஜம்மு-காஷ்மீரில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் செல்லாது.
ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறை கிடையாது.
இந்தியாவின் மற்ற மாநிலத்தவர் எவருக்கும் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்க அனுமதியில்லை.
இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களில் மிகச் சொற்பமான சில சட்டங்களைத் தவிர வேறு எவையும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செல்லாது.
இப்படி பல காரணங்களை தீவிரவாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பிரிவினைவாதத்தை ஊக்குவித்ததாலேயே சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது அவசியமானது. இதுதான் மத்திய அரசுத் தரப்பு அளித்திருக்கும் விளக்கத்தின் சுருக்கம்.
இவையெல்லாம் நாம் அறிந்ததே. இவை தவிர்த்து அரசுத் தரப்பு வாதமாக அவர்கள் சொன்ன விளக்கங்கள், சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை நீக்கியதற்கான நியாயத்தை வலியுறுத்துகின்றன. அவற்றையும் வரிசையாகப் பார்ப்போம்.
1) சட்டப்பிரிவு 35-ஏ ‘காஷ்மீரி காலனியாதிக்கத்தின்’ குறியீடு.
சட்டப்பிரிவு 35ஏ-வை நீக்கியதற்காக அதிகாரிகள் முன்வைக்கும் மிகமுக்கியமான வாதம், அந்தச் சட்டம் காஷ்மீரிகள் தங்கள் ஏகோபித்த செல்வாக்கை, அவர்களின் ஆதிக்க மனநிலையை, அடக்குமுறையை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பிற பிரிவு மக்களிடையே காட்டும் காஷ்மீரி காலனியாதிக்கத்தை உயர்த்திப் பிடித்தது என்பதே.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி களிலிருந்து விரட்டப்பட்ட அகதிகள், சிக்கியர்கள், பண்டிட்கள், மேற்கு பாகிஸ்தான் அகதிகள், பஞ்சாப்பிலிருந்து ஷேக் அப்துல்லாவால் அழைத்துவரப்பட்ட பால்மீகி இன மக்கள், மகாராஜா படையிலிருந்த கோர்கா மக்களின் வாரிசுகள், வெளிமாநில ஆண்களை மணந்து கொண்ட ஜம்மு-காஷ்மீர் பெண்களின் வாரிசுகள் உள்ளிட்டவர்கள் பல ஆண்டுகளாக அந்த மண்ணில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும், பண்டிட்கள் தவிர மற்றவர்களுக்கு எந்த உரிமை யும் கிடையாது. காரணம், இந்தச் சட்டப்பிரிவுதான்
2) அம்பேத்கர் இயற்ற மறுத்த சட்டப்பிரிவு 370
இந்திய இறையாண் மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக இருப்பதாகவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தைக் கொடுக்கும் சட்டப்பிரிவு 370-ஐ எழுதுவதற்கு மறுத்து விட்டார். பிறகு, சட்டப்பிரிவு 370 கோபாலசாமி ஐயங்கார் என்பவரால் இயற்றப்பட்டது.
3) முடியாட்சி போன்ற வாரிசு அரசியல்

மன்னராட்சி முடிவுபெற்று இந்தியாவில் ஜனநாயகம் மலர்ந்த பிறகும் ஜம்மு-காஷ்மீரில் மட்டும் இன்றும் பெயரளவில் மட்டுமே ஜனநாயகம் இருக்கிறது. மகாராஜா ஹரிசிங் ஆட்சிக்குப் பிறகு, அப்துல்லா குடும்பத்தினரும், முஃப்தி குடும்பத்தினரும் மட்டுமே ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்திருக்கிறார்கள். இனி, அவர்கள் செய்த ஊழல்களும் முறைகேடுகளும் வெளிச்சத்துக்கு வரும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.
4) பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை
சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ இரண்டும் காஷ்மீரின் சுற்றுலாத் துறையை முடக்கி, காஷ்மீர் மாநில மக்களின் பொருளாதாரத்தைச் சீர்குலைத் திருப்பதாகச் சொல்கின்றனர் அதிகாரிகள். ஒரு நாட்டின் பொருளாதாரம் செழிக்க அங்கு முதலீடுகள் வேண்டும். அதன் பலனாக வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும். காஷ்மீரில் அது சாத்தியமாகவில்லை. அங்கு எவரும் முதலீடு செய்யத் தயாராக இல்லை. அங்கு தேசிய கல்விமையங்கள் அமைக்கலாம். ஆனால், அங்கு பணிசெய்ய பேராசிரியர்கள் தயாராக இல்லை. ஏனெனில், அவர்களின் பிள்ளைகளுக்கு அங்கு உள்ள பள்ளிகளில் அனுமதியில்லை. இப்படி, ஜம்மு-காஷ்மீர் தன்னை தனித்தே வைத்துக்கொண்டது. அதற்கு சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ இரண்டும் உறுதுணையாக இருந்தன. அதனாலேயே நீக்கப்பட்டது என்கின்றனர் அதிகாரிகள்.
5) லடாக்கின் விடுதலை
சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை செயலிழக்கச்செய்யும் மத்திய அரசின் முடிவு, பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரக்கூடியது. அந்த மாற்றங்களில் மிக அதிக பலன் பெற இருப்பது லடாக் பகுதி என்பது அரசுத் தரப்பு வாதம். ஜம்மு-காஷ்மீர் பிடியில் சிக்கியிருந்த லடாக், இனி விடுதலை பெற்று அந்தப் பகுதி தனக்கான ஓர் அரசியல் வெளியையும், தனித்த சுதந்திர அடையாளத் தையும் பொருளாதார வளர்ச்சியையும் காணும் என்று குறிப்பிடுகின்றனர் அதிகாரிகள்.
இப்படி காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசு எடுத்த முடிவுக்கு வலு சேர்க்கும்விதமாக பல்வேறு காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன. தேசமெங்கும் பா.ஜ.க–வைக் கடுமையாக எதிர்க்கும் ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், டி.ஆர்.எஸ், ஜனதா தளம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் அதன் தலைவர்களும் இந்தச் சட்டப்பிரிவு நீக்கத்தை ஆதரித்துப் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசு ஆயிரம் வாதங்களை முன்வைக்கலாம். பெரும்பான்மை பலத்தைக்கொண்டு அதிரடியாக ஒரு நடவடிக்கையை எடுக்கலாம். ஆனால், மக்களின் மனவோட்டங்களைப் புரிந்து கொள்ளாமல் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் இறுதிவரை நிலைத்திருக்காது. அது ஜனநாயகமும் அல்ல.
அழகாய், அமைதியாய் இருக்கிறது காஷ்மீர். அதற்குள் புதைந்திருக்கிறது ஆபத்து!
(நிறைவடைந்தது)