மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பத்தல... பத்தல... மினிமலிசம் - புதிய பகுதி 1

பத்தல... பத்தல...
பிரீமியம் ஸ்டோரி
News
பத்தல... பத்தல...

- சஹானா

ஆசையும் ஆர்வமும்தான் நம் வாழ்க்கையின் மீது பிடிமானத்தைக் கொண்டு வருகின்றன என்பது உண்மைதான். அதுவே பேராசையாகவும் ஆர்வக்கோளாறாகவும் மாறும்போது என்ன ஆகும்? இந்த எண்ணம்தான் இந்த உலகில் ஒரு புதுமையான கலை வடிவத்தை உருவாக்கியது. கலையில் தொடங்கிய அந்த எளிய புரட்சி, இன்று வாழ்க்கைமுறையிலும்கூட மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் பெயர் மினிமலிசம்!

மினிமலிசம் என்றால் என்ன?

மினிமலிசம் என்பது எளிமை... மிகவும் எளிமை. சுதந்திரத்தைக் கண்டறிய உதவும் ஒரு கருவி. பயத்தி லிருந்து விடுதலை. கவலையிலிருந்து விடுதலை. மனக்கசப்பிலிருந்து விடுதலை. குற்ற உணர்விலிருந்து விடுதலை. மனச் சோர்விலிருந்து விடுதலை. மொத்தத் தில் நுகர்வோர் கலாசாரத்தின் பொறிகளிலிருந்து விடுபட்டு, நாம் நம் வாழ்க்கையை கட்டமைக்கக்கூடிய உண்மையான சுதந்திர வழிமுறையே மினிமலிசம்.

இதை ஒரு வாக்கியத்தில் சுருக்கமாகச் சொன்னால், மினிமலிசம் என்பது வாழ்க்கைக்கு அவசியமானவற்றில் மட்டும் கவனம் செலுத்தி, அதிகப்படியாக உள்ளவற்றை அகற்றுவதற்கான (டீகிளட்டரிங்) வழிமுறை. இதன் மூலம் மகிழ்ச்சி, நிறைவு மற்றும் சுதந்திரத்தை நாம் அடைய முடியும்.

பத்தல... பத்தல... மினிமலிசம் - புதிய பகுதி 1

அன்றே ஆரம்பமான மினிமலிசம்!


மினிமலிசம் என்பது எளிமையான யோசனைகள், ஒலிகள் அல்லது வடிவங்களைப் பயன்படுத்தும் நவீன கலை அல்லது இசையை உருவாக்கும் ஒரு வழிமுறையாகவே முதலில் அறிமுகமானது. இது 1960கள் மற்றும் 1970களில் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருந்தது. இன்று மினிமலிசத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அண்மைக்காலத்தில் வாழ்க்கைமுறையில் முக்கிய அங்கமாகி வரும் மினிமலிசம், வடிவமைப்பு, கட்டடக்கலை, கவிதை, திரைப்படம் எனப் பல்வேறு துறைகளில் ஒரு பாணியாகவே பயன்படுத்தப்படுகிறது.

மினிமலிசம் என்ன செய்யும்?

நேரத்தை மீட்டெடுக்கவும், அந்தந்த கணத்தில் வாழவும், நல்ல பணிகளைக் கண்டறியவும், அதிகமாகச் செயல்படவும், குறைவாக உட்கொள்ளவும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும், நம்மைத் தாண்டி இந்த உலகத்துக்குப் பங்களிக்கவும் மினிமலிசம் வழிகாட்டும்.

இழப்பதற்கு ஏதேனும் இருக்கிறதா?

வித்தியாசமான வாழ்க்கையை நடத்தும் வெற்றிகரமான மினிமலிஸ்டுகள் (அதாவது குறைந்தபட்சவாதிகள்) அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் நமக்கு வித்தியாசமானவராகத் தோன்றினாலும், அனைவருமே பொதுவாக ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அது... மினிமலிச வாழ்க்கை முறையைப் பின்பற்றும் இவர்கள் அவசியமான எதையும் இழந்துவிடவில்லை. அதோடு, இவர்களின் நோக்கம் அல்லது இலக்கு சார்ந்த வாழ்க்கை யையும் வெற்றிகரமாகத் தொடர முடிகிறது.

குறைந்தபட்சவாதி ஆவது எப்படி?

அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள்களைக் குறைத்து, தேவையற்ற செயல்பாடுகளைத் தவிர்த்து, நமக்கு உண்மையிலேயே தேவையானவற்றில் மட்டுமே ஆர்வம் காட்டத் தொடங்க வேண்டும். ஏனென்றால், உடைமைகளை மாற்றுவது எளிது. அதேநேரம் நம் அன்புக்குரியவர்களை மாற்றுவது எளிதல்ல.

அதாவது ஓர் இனிய இல்லம் என்பது அதிலுள்ள பொருள்களால் அமைவதல்ல... அங்கு மகிழ்ச்சியாக வாழும் மனிதர்களால் மட்டுமே அந்த இல்லம் இனிமையாகிறது.

பெரும்பாலும் நாம் பொருள்களுக்கே உணர்ச்சிபூர்வமான முக்கியத்துவத்தை அளிக்கிறோம். அவற்றை முதலில் நாம் விரும்பிய காரணத்தை மறந்து விடுகிறோம். உண்மை என்ன? நாம் நேசிப்பவருடன் பகிர்ந்த ஒரு தலையணை அழுக்காகிவிட்டால், நம் நினைவுகள் மங்கிவிடுமா, என்ன? அம்மா அளித்த புடவை காணாமல் போனால், அவர் சொன்ன கதைகளும் மறந்துபோகுமா, என்ன? இல்லையே! நாம் பொருள்களை நேசிப்பதற் கான காரணம் பொருள்களைவிட ஆழ மானது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாம் பொருள்களை விரும்புகிறோம். அவற்றின் பின்னால் உள்ள கதைகளும், அவற்றை நமக்குக் கொடுத்தவர்கள் மற்றும் அவற்றின் பயன்பாட்டில் நாம் உருவாக்கிய நினைவுகளும்தாம் இதற்கு காரணம். நாம் எதையாவது நேசித்தால், நாம் உண்மையில் அந்தப் பொருளை நேசிப்பதில்லை. அது நமக்கு விசேஷமாக மாறிய விதத்தையே விரும்புகிறோம்.

உங்களுக்குப் பிடித்த உடையை இழந்தால், கவலைப்பட வேண்டாம். அதை அணிந்த போது நீங்கள் அனுபவித்த நல்ல தருணங்கள் திடீரென்று உங்கள் நினைவிலிருந்து அகன்று விடாது. அவை இன்னமும் உங்களுக்குள்தான் இருக்கும்.

பொருள் சார்ந்த விஷயங்களில் நமது நேரத் தையும் சக்தியையும் குறைவாகச் செலவிடும் போது, நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர் களுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியும். அற்புதமான நினைவுகளை உருவாக்க முடியும். இந்த அவசர யுகத்தில் இதுபோன்ற நினைவலைகளை உருவாக்கவும் எளிய வழிகள் பல உண்டு.

காலையில் காபி அருந்தும்போது, இணை யோடு அன்றைய செய்திகள் பற்றி விவாதிக்க வேண்டும். மாலையில் வீடு திரும்பிய பிறகு அன்றைய நாள் ஒவ்வொருவருக்கும் எப்படிக் கழிந்தது என உரையாட வேண்டும். எல்லோரும் சேர்ந்து உணவருந்தும் தருணங் களில் மொபைல் போன்களைத் தள்ளி வைத்துவிட வேண்டும். தொலைக்காட்சியை அணைத்து வைத்துவிட வேண்டும்.

ஆம்... வாழ்வில் மினிமலிசத்தை இணைத்துக்கொள்வதன் மூலம், நாம் நிரந்தரமான மகிழ்ச்சியைக் காண முடியும். அதைத்தானே நாம் அனைவரும் தேடுகிறோம்? மினிமலிஸ்டுகள் மகிழ்ச்சியைத் தேடுவது விஷயங்களின் / பொருள்களின் மூலமாக அல்ல... வாழ்க்கையின் மூலமாகவே. அதனால், உங்கள் வாழ்க்கையில் எது அவசியம் மற்றும் எது மிதமிஞ்சியது என்ப தைத் தீர்மானிக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பே!

எப்படித் தொடங்கலாம்?

‘குறிப்பிட்ட சில நாள்களுக்குச் செலவே செய்ய மாட்டேன்’ என்பது போன்ற ஓர் உறுதி மொழியிலிருந்து மினிமலிச வாழ்வைத் தொடங்கலாம். தேவை யான பொருள்களை மட்டுமே வீட்டில் வைத்திருக்கலாம். இதன் மூலம் பணத்தைச் சேமிக்க முடிவ தோடு, சுத்தம் செய்வதற்கும் ஒழுங் கமைப்பதற்கும் செலவாகும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

மினிமலிசத்தைப் பயிற்சி செய்வது தொடர்ச்சியான ஒரு செயல்முறையாகும். நம்மில் பலர் அதிகமான பொருள்களை வைத்திருக்கலாம். தேவை யில்லாமல் ஷாப்பிங் சென்று அதிகமாகச் செலவு செய்யலாம். இதைத் தவிர்க்கும் வகையில், நிலையான, ஆரோக்கியமான பட்ஜெட்டை உருவாக்குவதன் மூலம் தேவையில்லாத விஷயங் களைக் குறைக்கலாம். இது பொருளாதாரம் சார்ந்த உங்கள் கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.

மினிமலிச கலையானது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதை நிச்சயம் உணரச் செய்யும்.

உண்மையில், நீங்கள் நினைத் திருந்ததைவிட உங்களுக்கு எப் போதும் குறைவாகவே தேவைப் படுகிறது என்பதை விரைவிலேயே நீங்கள் எங்களுக்குச் சொல்வீர்கள்!

- ஆரம்பிக்கலாங்களா...

மினிமலிச வழிமுறைகள் சில...

1. பொருளின் தரமே முக்கியம்... அளவு அல்ல!

2. இசை, திரைப்படங்கள், புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குங்கள்... அவை நிச்சயம் பயன்படுத்தப் படும் என்கிற உறுதி இருந்தால் மட்டுமே அப்படிச் செய்யுங்கள். ஏனெனில் டிஜிட்டலாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாமலே இருந்தாலும்கூட குப்பை குப்பையே!

3. தவிர்க்கக்கூடிய பொருள்களைத் தவிர்த்துக் கொண்டே இருங்கள். மனிதர்களுக்கு முக்கியத் துவம் கொடுங்கள்.

4. மறுபயன்பாடுகளில் கவனம் செலுத்துங்கள். அது செலவல்ல... முதலீடு!

5. அவசியமானவற்றுக்கு அவசியம் இடம் கொடுங்கள்.

6. அனுபவங்களில் முதலீடு செய்யுங்கள்; ஆடம் பரங்களில் அல்ல!

7. உங்கள் வாழ்க்கையை அடிக்கடி மறுதணிக்கை செய்யுங்கள்.

8. அர்த்தமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

9. உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை விட்டுவிடுங்கள். மன அழுத்தத்துக்குள் சிக்காதீர்கள்.

10. உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழப் பழகுங்கள். நிச்சயம் அது முடியும்!

பத்தல... பத்தல... மினிமலிசம் - புதிய பகுதி 1

உங்களுக்கு ஒரு சவால்!

அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு வீட்டில் உள்ள மொத்த பொருள்களின் சராசரி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ‘லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகை இதை ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அந்த எண்ணிக்கை என்ன?

சொன்னால் நம்பவே மாட்டீர்கள்... அது மூன்று லட்சம்!

ஆம்... உங்கள் வீட்டில் இருக்கும் மொத்த பொருள்களின் எண்ணிக்கையை எப்போதாவது கணக்கிட்டுப் பாருங்கள். அந்த எண்ணிக்கை உங்களை நிச்சயம் அதிர்ச்சியில் தள்ளும்.

மொத்த பொருள்களை எண்ணுவதற்கு நேரமில்லை என்பவர்கள், குறைந்தபட்சம் உங்கள் வார்ட்ரோபில் இருக்கும் உடைகளின் எண்ணிக்கையை மட்டும் சொல்லுங்கள். அது இன்னமும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய எண்ணாகவே இருக்கும்.

அந்த உடைகளில் ஒரே ஒருமுறை மட்டுமே அணிந்தவை எத்தனை? ஒருமுறைகூட அணியாமல் அளவு மாறிப்போனவை எத்தனை?

இன்னமும் சொல்ல வேண்டுமா? உங்கள் மினிமலிச வாழ்வைத் தொடங்க, நீங்கள் முதலில் திறக்க வேண்டியது இந்த உடை அலமாரியைத்தான்!

மினிமலிஸ்ட் கர்ட்னி கார்வர், உடைகள் மீதான நமது பேரார்வத் தைக் குறைப்பதற்காகவே ‘ப்ராஜெக்ட் 333’ என்கிற சவாலைத் தொடங்கினார். அது வேறு ஒன்றுமில்லை... உங்கள் உடை அலமாரி யில் உள்ள மொத்த உடைகளின் எண்ணிக்கையை மூன்று மாதங்களுக்குள் 33 ஆகக் குறைப்பதுதான்!

இந்தச் சவாலில் உங்களால் வெற்றிபெற முடியுமா?

உடைகள் மட்டுமல்ல... எல்லா பொருள்களையும் கணக் கிட்டாலும், நாம் இப்போது பயன்படுத்தும் பொருள்களில் 10 சதவிகிதத்தைக் கொண்டே குறையேதும் இன்றி வாழ்ந்துவிட முடியும்!