மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பத்தல... பத்தல... மினிமலிசம் - 3 - வீட்டை உருப்படியாக மாற்றுவதற்கு ஒரு வழிகாட்டி!

வீடு
பிரீமியம் ஸ்டோரி
News
வீடு

- சஹானா

அண்மையில் ஒரு மினிமலிஸ்ட் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அந்த வீட்டை ஓர் அழகான குறைந்த பட்ச வீடு என்று கூறலாம். அங்கிருந்த சமையலறையைப் பார்த்து, ‘‘இவ்வளவு சுத்தமாகவும், பொருள்கள் இல்லாமலும் இருக்கும் சமையலறையை நான் பார்த்த தில்லை!’’ என்று ஆச்சர்யப்பட்டேன். நண்பர் மிக மகிழ்ச்சியாகக் கூறினார்... ‘‘இதை சுத்தமாக வைத்திருக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். தேவையற்ற பொருள்களை அகற்றுவதே இதில் முக்கியமானது. எடுத்துக்காட்டாக, எனது சமையலறை/சாப்பாட்டு அறையின் தரையில் சில அத்தியாவசியங்கள் மட்டுமே உள்ளன’’ என்றார்.

வாழ்க்கையின் எந்த மகிழ்ச்சிகரமான விஷயங்க ளுக்கும் இதுபோன்ற மினிமலிச வீட்டில் குறையேது மில்லை. அதோடு, மகிழ்ச்சி என்பது அவரவர் மனம் சார்ந்த விஷயம்தானே? எனக்கு அந்த வீடு, வித்தியாச மான திருப்தியையும், நிறைவையும், எவ்வித களேபரங் களுமற்ற ஒரு விடுதலை உணர்வையும் அளித்தது.

குறைந்தபட்ச வீட்டின் நன்மைகள் என்னென்ன?

மன அழுத்தம் குறையும்: குறைவான மன அழுத்தம்தான் குறைந்தபட்ச வீட்டின் மிகப்பெரிய நன்மை. மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் இதயம் எவ்வளவு இதமாக இருக்கும்?

ஒழுங்கீனம் என்பது பார்வை திசைத் திருப்பலின் ஒரு வடிவமாகும். நம் பார்வையில் உள்ள அனைத்தும் நம் கவனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்கின்றன. திசைத்திருப்பல் காரணமாக நாம் திட்டமிட்ட பணிகள் சீர்குலையலாம். ஒழுங்கீனம் இல்லாமல் இருப்பது குறைவான திசைத்திருப்பலையே அளிக்கும். அதனால், ஒரு குறைந்தபட்ச வீட்டில் அமைதி முதல் அனுபவம் வரை அத்தனையும் புதுமையே.

எளிமையின் அழகு: குறைந்தபட்ச வீடுகளில் சில அவசியமான மரச்சாமான்கள், சில நல்ல கலைப் படைப்புகள், மிகக் குறைவான அலங்காரங்கள் ஆகிய வற்றைத் தவிர வேறு எதுவும் இல்லை. இவை நம்மில் பெரும்பாலானோரை ஈர்க்கும். நம் வீட்டை இன்னும் கச்சிதமாக மாற்றுவதன் மூலம் அதை மேலும் கவர்ச்சி கரமானதாக மாற்றலாம்.

சுத்தம் செய்வது எளிது: உங்களிடம் அதிகமான பொருள்கள் இருந்தால், அத்தனை பொருள்களையும் நீங்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் பெரிய மரச்சமான்களைச் சுற்றியும் அவற்றின் கீழும் சுத்தம் செய்வதும் மிகவும் சிக்கலானது. 50 பொருள்க ளைக் கொண்ட ஓர் அறையைவிட வெற்று அறையை சுத்தம் செய்வது எவ்வளவு எளிது என்று சிந்தியுங்கள்.

பத்தல... பத்தல... மினிமலிசம் - 3 - வீட்டை உருப்படியாக மாற்றுவதற்கு ஒரு வழிகாட்டி!

குறைந்தபட்ச வீடு எப்படி இருக்க வேண்டும்?

இது நிச்சயமாக உங்கள் ரசனையைப் பொறுத்து மாறுபடும். அதோடு, நீங்கள் எவ்வளவு தீவிரமாக இருக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தும். ஒரு குறைந்தபட்ச வீட்டின் சில பண்புகள் இங்கே உங்களுக்காக...

குறைந்தபட்ச பொருள்கள்: ஒரு குறைந்தபட்ச வீட்டின் அறையில் சில அத்தியாவசிய பொருள்கள் மட்டுமே இருக்கும். உதாரணமாக, ஒரு நாற்காலி அல்லது இரட்டையர் இருக்கை, ஒரு காபி டேபிள் (அல்லது டீப்பாய்), ஒரு தொலைக்காட்சி மற்றும் இரண்டு விளக்குகள் இருக்கும். இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்து இன்னும் குறைவாகக்கூட இருக்கலாம். படுக்கையறையில் ஓர் எளிய படுக்கை (அல்லது ஒரு மெத்தை), ஒரு டிரஸ்ஸிங் டேபிள், தேவையெனில் ஒரு நைட் ஸ்டாண்ட் அல்லது புத்தக அலமாரி இருக்கலாம்.

தெளிவான மேற்பரப்புகள்: ஒரு குறைந்தபட்ச வீட்டில், ஓரிரு அலங்காரங்கள் தவிர, மேற்பரப்புகள் தெளி வாகவே காணப்படும். நிச்சயமாக புத்தகங்கள், செய்தித் தாள்கள், காகிதங்கள் அல்லது பிற பொருள்கள் ஆங் காங்கே அடுக்குகளாகவோ, குப்பைகளாகவோ காணப் படாது.

அளவான அழகான அலங்காரங்கள்: முற்றிலும் அழகியல் அம்சமே இல்லாத ஒரு வீடு உண்மையில் சற்று சலிப்பை ஏற்படுத்தும். அதனால், காபி டேபிளை முழுக்க முழுக்க வெற்றிடமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பூச்சாடி வைக்கலாம். மேசையில் குடும்பப் புகைப்படம் மட்டும் இருக்கலாம். காலியான சுவரில் ஒரு கலைப்படைப்பைப் பொருத்தலாம். அந்தப் படைப்பு உங்கள் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டிருந் தால், இன்னும் சிறப்பு.

அளவை விட தரமே முக்கியம்: வீட்டில் நிறைய பொருள்களை வைத்திருப்பதற்குப் பதிலாக, ஒரு மினிமலிஸ்ட் அவர் விரும்பி அடிக்கடி பயன்படுத்தும் சில நல்ல விஷயங்களையே தேர்ந்தெடுப்பார். பாரம்பர்ய பாணி ஜப்பானிய வீடுகள் மினிமலிசத்தின் சிறந்த எடுத்துக்காட்டு. கூகுளில் தேடி படங்களைப் பாருங்கள்.

ஒரு குறைந்தபட்ச வீட்டை உருவாக்குவது எப்படி?

ஒரு நேரத்தில் ஓர் அறை: நீங்கள் வேறெங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாலும்கூட, ஒரு முழு வீட்டையும் ஒரே நேரத்தில் எளிமையாக்குவது கடினம். முதலில் ஓர் அறையில் கவனம் செலுத்துங்கள். அது உங்கள் அமைதியின் மையமாக இருக் கட்டும். அடுத்த அறையையும் அதற்கடுத்த அறையையும் எளிமையாக்க உங்களை ஊக்கப்படுத்த இது உதவும். அப்படியே தொடர வேண்டியதுதான்!

பெரிய பொருள்களிலிருந்து தொடங்குங்கள்: எந்த அறையிலும் மிகப்பெரியவையாக இருப்பவை ஃபர்னிச்சர்களே... அதனால், அவற்றிலிருந்தே நீங்கள் எப்போதும் ஓர் அறையை எளிமைப் படுத்தத் தொடங்க வேண்டும்.

குறைவான சாமான்களை எப்படித் தேர்ந்தெடுப்பது?

அவை சிறந்ததாக இருக்க வேண்டும். நிச்சயமாக அதற்கொரு காரணம் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் வசதி மற்றும் வாழ்வாதாரத்தை தியாகம் செய்யாமல் எந்தெந்தப் பொருள்களை அகற்றலாம் என்று சிந்தியுங்கள். திடமான, அழகிய வண்ணங் களைக் கொண்ட சில எளிய மரச்சாமான்களை மட்டும் வைத்துக்கொள்வது நலம்.

அத்தியாவசியமானவை மட்டுமே அவசியம்: உங்கள் அறையில் உள்ள எதைப் பார்த்தாலும், அந்தப் பொருள் உண்மையிலேயே அவசியமானதா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங் கள். அது இல்லாமல் உங்களால் வாழ முடியும் என்றால், அதை வெளியே எடுத்துவிடுங்கள்.

கவலை வேண்டாம்... அத்தியாவசியமானவற்றைத் தாண்டிய சில விருப்பப் பொருள்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சேர்க்க முடியும்.

தெளிவான தளங்கள்: அத்தியாவசியமான பொருள்கள் தவிர, உங்கள் தளங்கள் முற்றி லும் தெளிவாக இருக்க வேண்டும். எதுவும் தரையில் (மொட்டை மாடியாக இருந்தாலும் கூட) அடுக்கிவைக்கப்படக் கூடாது. தரை தரையாக மட்டுமே இருக்க வேண்டும்.

தெளிவான மேற்பரப்புகள்: அனைத்து மேற்பரப்பு களிலும் ஒன்று அல்லது இரண்டு எளிய அலங்காரங்களைத் தவிர, அவற்றில் எதையும் வைத்திருக்க வேண்டாம். நீங்கள் வேண்டாம் என முடிவுசெய்ததை நன்கொடையாக அளியுங்கள். குப்பையில் போடுங்கள் அல்லது கண்ணுக்குத் தெரியாத சேமிப்பிடத்தைக் கண்டறியுங்கள்.

தெளிவான சுவர்கள்: சிலர் தங்கள் வீட்டுச் சுவர்களில் அனைத்து வகையான பொருள் களையும் தொங்கவிடுவார்கள். ஒரு குறைந்த பட்ச வீட்டில் இப்படியெல்லாம் செய்யக் கூடாது. ஒன்று அல்லது இரண்டு எளிய கலைப்படைப்புகளே உங்கள் சுவர்களை அழகாக்கப் போதும்.

உங்களுக்குத் தேவையான மற்ற பொருள் களை வெளியில் தெரியாதபடி இழுப்பறைகள் மற்றும் பெட்டிகளில் சேமிக்கலாம். புத்தக அலமாரிகளை புத்தகங்கள், டிவிடிகள், குறுந் தகடுகளைச் சேமிக்கப் பயன்படுத்தலாம்.

எளிய அலங்காரங்கள்: ஒன்று அல்லது இரண்டு எளிய அலங்காரங்கள் குறைந்தபட்ச அறைக்குப் போதும். பூச்சாடி அல்லது ஒரு சிறிய பானைச் செடி... இவை இரண்டும் உன்னதமான எடுத்துக்காட்டுகள். உங்கள் அறையின் எஞ்சிய பகுதிகளில் குறைந்த வண்ணங்கள் இருந்தால், உள் அலங்காரத்தில் ஒரு பிரகாசமான நிறத்தை (சிவப்பு, மஞ்சள் போன்றவை) பயன்படுத்தலாம். அது வெற்று அறைக்கு ஓர் ஆற்றலை அளிக்கும்.

அறையின் பெரும்பாலான பகுதிகளில் மிகவும் நுட்பமான வண்ணங்கள் இருக்க வேண்டும். வெள்ளை என்பது உன்னதமான மினிமலிஸ்ட். ஆனால் உண்மையில் கண் களுக்கு அழுத்தம் கொடுக்காத ப்ளூ, பிரவுன், கிரீன் போன்ற பூமி வண்ணங்கள் சிறந்தவை.

எளிய சாளரங்கள்: வெற்று ஜன்னல்கள் அல்லது எளிமையான திரைச்சீலைகளே போதும். ஜன்னல்களைச் சுற்றி அலங்கரிக்கப் பட்ட பொருள்களை வைத்து அடைக்க வேண்டாம்.

இனிய இல்லத்தில் பொழுதைக் கழியுங்கள்: இனி ஓரிரு நாள்கள் அவகாசம் கொடுங்கள். பின்னர் எல்லாவற்றையும் ஒரு புதிய கண்ணு டன் பாருங்கள். இன்னும் எதையெல்லாம் தவிர்க்க முடியும்? பார்வையில் படாதபடி வைக்கப்பட்டுள்ளவற்றில் எவையெல்லாம் அவசியமற்றவை? சிந்தியுங்கள்.

இப்படி சில மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வோர் அறைக்கும் நீங்கள் திரும்பி வரலாம். சில நேரங்களில் நீங்கள் இன்னும் உங்கள் வீட்டை எளிமையாக்கக்கூடிய விஷயங்களைக் கண்டறியலாம்.

உங்களால் திருத்தப்பட்ட உங்கள் இனிய இல்லத்தில் உட்கார்ந்து, ஓய்வெடுத்து, மகிழுங்கள். நீங்கள் ஓர் அறையை எளிமைப் படுத்தியவுடன், சிறிது நேரம் சுற்றிப் பார்த்து மகிழுங்கள். அது அமைதியையும் திருப்தியை யும் அளிக்கும். இது உங்கள் கடின உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி. ஆஹா!

- இனிதே வாழப் பழகுவோம்...

மினிமலிச மொழி

‘‘பணக்காரனாக இருப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அதிகம் வாங்குவது. மற்றொன்று கொஞ்சம் ஆசைப்படுவது!’’- அமெரிக்க எழுத்தாளர் ஜாக்கி பிரஞ்சு கொல்லர் (1948).

வாழ்க மினிமலிசம்!

`தேவைக்கு அதிகமானதை நாடுவதில்லை’, `அவசியத்துக்கும் அதிகமாக வாங்கிக் குவிப்பதில்லை’ என்பதை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போதெல்லாம், எதிலெல்லாம், எங்கெல்லாம், எப்படியெல்லாம் பின்பற்றுகிறீர்கள்... அதன் மூலமாக அடைந்த பலன்கள் என்னென்ன? அந்த ரகசியங்களை மற்றவர்களுக்கும் பகிரலாம். தேர்வுபெறும் ஒவ்வொரு பகிர்வுக்கும் ரொக்கப் பரிசு ரூ.300. சிறந்த பகிர்வுக்கு, விகடன் குழும இணையதள ஆறு மாத சந்தா வழங்கப்படும். இதன் மூலம் விகடன் குழுமத்தில் அனைத்து இதழ்கள் மற்றும் பிரீமியம் கட்டுரைகளை டிஜிட்டலில் படிக்க முடியும் என்று அறிவித்திருந்தோம். வாசகர்கள் அனுப்பியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவை...

பத்தல... பத்தல... மினிமலிசம் - 3 - வீட்டை உருப்படியாக மாற்றுவதற்கு ஒரு வழிகாட்டி!

சிறப்புப் பரிசு விகடன் குழும இணையதள ஆறு மாத சந்தா

மெச்சவைத்த மினிமலிச பாலிசி!

எங்கள் வீட்டில் எந்த ஒரு மின்னணு சாதனம் பழுதடைந் தாலும் அதை அப்படியே தூக்கிப்போட்டுவிட்டு, உடனே புதிது வாங்கும் பழக்கம் இல்லை. அதை சரி செய்து மீண்டும் உபயோகப்படுத்துவோம்.

சென்ற வருட தீபாவளிக்கு நான்கு நாள்கள் முன்னர் ஆன்லைனில் வாங்கிய எங்களுடைய 55 இன்ச் டி.வி திடீரென்று பழுதடைந்தது. டி.வி கம்பெனிக்கு போனில் தகவல் சொல்ல, ‘`டி.வியின் டிஸ்ப்ளே போய்விட்டது. புது டிஸ்ப்ளே மாற்ற வேண்டும். அதற்கு 35,000 ரூபாய் ஆகும். இப்பவே ஆர்டர் போட்டு விடவா...'’ என்றார் மெக்கானிக். அதிர்ந்து போனோம். உள்ளூர் டிவி மெக்கானிக்கிடம் விசாரிக்க, அவரோ ``இந்த பிராண்டு டி.வியின் டிஸ்ப்ளே மாற்ற 38,000 ரூபாய் ஆகும்'' என்றார்.

பக்கத்து வீட்டு நண்பர், ‘`எனக்குத் தெரிந்த மெக்கானிக் ஒருவர் மிகவும் திறமையானவர். அநாவசிய செலவு இழுத்துவிட மாட்டார். எதற்கும் அவரிடம் கேட்டுப் பாருங்கள்’’ என்று அவருடைய கடை முகவரியைத் தந்தார்.

அவர் டி.வியை செக் செய்துவிட்டு, ``டிஸ்ப்ளே நன்றாகத்தான் இருக்கிறது. டி.விக்குள் இருக்கும் ஒரு ஒயர் கனெக்‌ஷன் விடுபட்டுப் போயிருக்கிறது. நான் சரி செய்து தருகிறேன்" என்று எடுத்துப் போனார். நான்கே நாள்களில் வெறும் 4,500 ரூபாயில் எங்கள் டி.வி சரி செய்யப்பட்டது. அவசரப்பட்டு டிஸ்ப்ளே மாற்றி இருந்தால் எங்களுக்கு 30,000 ரூபாய்க்கு மேல் நஷ்டமாயிருக்கும். எங்களுடைய மினிமலிச பாலிசியை நாங்களே மெச்சிக்கொண்ட தருணம் அது. ஒரு வருடம் கடந்தும் நன்றாக வேலை செய்கிறது எங்கள் டி.வி. - விஜிரவி, ஈரோடு

ரொக்கப் பரிசு ரூ.300

புத்தகங்கள்... தீர்வுகள்...

என் கணவர் ஓர் எழுத்தாளர், நூல் விமர்சகர். அவருக்கு தபாலில் தினமும் ஏதாவது புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கும். இதனால் வீடு முழுக்க புத்தகங்கள் இரைந்து கிடக்கும். இந்தப் பிரச்னைக்கு என்ன விடிவு என யோசித்தேன். அதுவரை வந்த புத்தகங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அவரையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றேன். தலைமையாசிரி யரைச் சந்தித்து புத்தக விவரம் பகிர்ந்துகொண்டு அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்ளச் சொன்னேன். அவரும் மனமகிழ்ந்து பள்ளி நூலகத்தை விரிவாக்கம் செய்யப்போவதால் நல்ல புத்தகங்களின் தேவை இருப்பதாகச் சொல்லி, புத்தகங்களை எடுத்துக்கொள்வதாகச் சொன்னார். மாணவர்களிடம் எங்களை அறிமுகப்படுத்தி மாண வர்கள் படிப்பதற்காக புத்தகங்கள் வழங்கிய விவரம் சொன்னார். அதைக் கேட்டதும் மாணவர்கள் கர வொலி எழுப்பியபோது கணவர் முகத்தில் பெருமை... வீட்டில் அடைசலாகக் கிடந்த புத்தகங்களுக்குத் தீர்வு கண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. - டி.எச்.லோகாவதி, மதுரை-12

வாசகர்களே... நீங்களும் எழுதி அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

வாழ்க மினிமலிசம்! அவள் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com