
மினிமலிசம் என்பது நம் வாழ்க்கையை நாம் வாழும் விதத்தில்தான் உள்ளது. நம் இடத்தையும் நேரத்தையும் எடுத்துக்கொள்ளத் தகுதியான மிக முக்கியமான மதிப்புகளை மட்டுமே அது அனுமதிக்கிறது
எளிமையான வாழ்க்கைமுறை என்பதில் நமக்கு ஒரு தெளிவு இருக்கிறது. அதே நேரத்தில் குறைந்தபட்ச வாழ்க்கை முறை என்பது பற்றி சரியாக உணர்ந்து கொள்வதில் பலருக்கு குழப்பங்கள் உள்ளன. அது பற்றி நிறைய தவறான கருத்துகளும் வதந்திகளும்கூட உலவு கின்றன. எளிமைக்கும் குறைந்தபட்சத்துக்கும் வித்தியாசங்கள் உண்டு என்பதையும், இது நபருக்கு நபர் மாறக்கூடியது என்பதையும் நாம் உணர்ந்துகொள்வதே குழப்பத்திலிருந்து விடுபடுவதற்கான முதல்படி.
குறைந்தபட்ச வாழ்க்கை முறை நம் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் அளிக்கிறது என்பது பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டிருப்பது அவசியம். மினிமலிசம் என்பது ஒரு பயணத்தைப் போலவே இறுதியாக நாம் அடையவிருக்கும் இடம்தான். இருந்தாலும், நம் வாழ்க்கை யில் மினிமலிசம் எப்படி இருக்க வேண்டும் என்கிற தெளிவான குறிக்கோள் இல்லாமல், அந்தப் பாதையில் செல்வது எளிதல்ல.
சுருக்கமாகச் சொல்வதானால்... மினிமலிசம் என்பது நாம் மிகவும் மதிக்கும் விஷயங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துவது மற்றும் அதிலிருந்து நம்மைத் திசை திருப்பும் எதையும் அகற்றுவது.
மேற்கண்ட வாக்கியம் மினி மலிசத்தை மிகச் சரியாக விவரிக் கிறது. நம் வாழ்க்கையில் நாம் எதை அதிகம் மதிக்கிறோம் என்பது பற்றிய தெளிவு உள்ளது தானே? அது நம் இடத்தையும் நேரத்தையும் எடுக்கும் விஷய மாகவே இருக்கும். அதேபோல நம் வாழ்க்கையில் நாம் மிகவும் மதிக்கும் விஷயங்களிலிருந்து திசை திருப்பும் அநாவசிய விஷ யங்களை அகற்றுவது அடுத்தபடி.
மினிமலிசம் என்பது நம் வாழ்க்கையை நாம் வாழும் விதத்தில்தான் உள்ளது. நம் இடத்தையும் நேரத்தையும் எடுத்துக்கொள்ளத் தகுதியான மிக முக்கியமான மதிப்புகளை மட்டுமே அது அனுமதிக்கிறது. இந்தத் தகுதி, மதிப்பு, முக்கியம் ஆகிய வார்த்தைகள் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். நாம் ஒவ்வொருவரும் எதை மதிக்கிறோம் என்பது நம் தனிப்பட்ட விருப்பத்துக் குரியது. உங்களுக்கு எது மிகவும் முக்கியமானது என்பதை நீங்கள் முடிவு செய்து, அந்த மதிப்புகளுடன் சரிவராத எதையும் அகற்றுவது மட்டுமே இதில் முக்கியமானது. எவையெல்லாம் மினிமலிசத்துக்குள் வரும் என்று பட்டியலிட முயற்சி செய்வதற்குப் பதிலாக, எவையெல்லாம் மினிமலிசம் இல்லை என்பதைக் கண்டுபிடிப்பதே எளிது.
மினிமலிசம் பற்றி பொதுவான தவறான பல கருத்துகள் உள்ளன.

X - மினிமலிசம் என்பது உங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் அகற்றிவிடும்!
மினிமலிசம் என்பது உங்கள் வாழ்க்கையிலிருந்து பல விஷயங்களை நீக்குகிறது என்பது உண்மைதான். ஆனால், மினிமலிசமானது உங்கள் வாழ்க்கைக்கு மதிப்பளிக்காத விஷயங் களை விட்டுவிடுவதன் மூலம் நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பதில்தான் கவனம் செலுத்துகிறது. நீங்கள் எதை அகற்றுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மினிமலிசம் உங்களுக்கு எதை அதிகம் தருகிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். அதாவது... அதிக நேரம், அதிக இடம், அதிக அமைதி, அதிக சுதந்திரம்!
மினிமலிசம் என்பது நாம் பற்றாக்குறைக்குள்ளோ கஞ்சத்தனத்துக்குள்ளோ வாழ்வது அல்ல. இது நம் வாழ்க்கையில் மிக முக்கியமானவற்றுக்கு அதிக நேரத்தையும் இடத்தையும் பெறுவதற்காக குறைந்தபட்ச விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதே!
X - மினிமலிசம் மிகவும் கட்டுப்பாடானது... அது வாழ்க்கையை மிகவும் கடினமாக்குகிறது!
இது ஒரு பொதுவான தவறான கருத்து. குறைந்த பட்சமாக இருப்பது என்பது, மிகக் குறைவாக வாழ்வதல்ல. அத்தியாவசியமான விஷயங்களை வைத்துக்கொண்டு தேவையற்ற விஷயங்களை மட்டுமே அகற்றுவதே!
குறைந்தபட்ச வாழ்க்கைமுறையானது உண்மையில் பல வழிகளில் எளிதானது. இம்முறையில் வீட்டைச் சுத்தம் செய்வதற்கும், பொருள்களைத் தேடுவதற்கும், பராமரிப்ப தற்கும், ஒழுங்கமைப்பதற்கும் குறைவான நேரத்தையே செலவிடுகிறோம். குறைந்த பட்சத்தைப் பின்பற்றிய பிறகே, பலர் வாழ்க்கையை எளிதாக்கியதாக நினைத்த விஷயங்கள் உண்மையில் தங்கள் நேரத்தையும் இடத்தையும் திருடுவதை உணர்கிறார்கள்.
மினிமலிசம் என்பது அடிக்கடி பயன் படுத்துகிற, வாழ்க்கையை எளிதாக்குகிற விஷயங்களை அகற்றுவது அல்ல. இது பயன் படுத்தப்படாத, தேவைப்படாத, வீட்டை ஒழுங்கீனம் செய்யும் பொருள்களை அகற்றுவதே!
X - மினிமலிசம் என்பது கஞ்சத்தனமாக இருப்பதுதான்!
முதலில் சிக்கனம் என்பதும் கஞ்சத்தனம் என்பதும் வேறு வேறு என்பதை நாம் அறிவோம். சிக்கனமாக - அதாவது கவனமாகச் செலவு செய்வதும், பணத்தைச் சேமிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுவதும் நல்ல வழிமுறை தானே? குறைந்தபட்ச வாழ்க்கை முறையில் குறைவாக வாங்குகிறோம். வேண்டுமென்றே செய்யும் ஷாப்பிங்கைத் தவிர்க்கிறோம். இது நிச்சயமாக அவசியமான செலவுகளைத் தவிர்க்கும், அடுத்தவர்களுக்கு உதவ மறுக்கும் கஞ்சத்தனமான செயல் அல்ல. சிலர் மிகவும் சிக்கனமாக இருக்கும் முயற்சியில் மினிமலி சத்தை நோக்கி வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை!
மினிமலிஸ்ட்டுகள் குறைவான பொருள் களையே வாங்குகிறார்கள்... ஆனால், அவர்கள் அதிக தரமான பொருளுக்கு தேவை யான பணத்தைச் செலவு செய்யத் தயாராகவே உள்ளனர். ஆகவே, இது கஞ்சத்தனம் அல்ல!
X - நீங்கள் மினிமலிஸ்டாக இருந்தால் பொழுதுபோக்குகளே இருக்காது!
மினிமலிச வாழ்வாளர்கள் தாங்கள் விரும்பும் விஷயங்களை வைத்திருக்க முடியாது என்பது பொதுவான தவறான கருத்து. மினிமலிசம் என்பது நாம் விரும்பும் விஷயங்களையெல்லாம் இழப்பது அல்ல. நிச்சயமாக நமக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு சேகரிப்பு நம்மிடம் இருக்கலாம். நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒரு பொழுதுபோக்கில் நிச்சயம் நாம் உறுதியாக ஈடுபடலாம்.
‘நன்றாக இருக்கிறது’ என்பதற்காக எல்லா வற்றையும் சேகரித்து வைத்திருப்பதற்குப் பதிலாக, நாம் உண்மையிலேயே பயன்படுத்தும் அல்லது மிகுந்த விருப்பத்துக்குரிய சில பொருள்களை நம் கலெக்ஷனில் வைத்துக் கொள்ளலாம்.
பொருள்கள் தேவைப்படும் பொழுதுபோக்கு நமக்குப் பிடித்திருந்தால், அந்தப் பொருள்களை வைத்திருக்க ஓர் இடத்தை ஒதுக்கலாம். ஒருபோதும் பயன்படுத்தப்படாத பொருள் களைக் குவித்து வைப்பதைவிட, நாம் உண்மையில் பயன்படுத்தும் பொருள்களை மட்டும் வைத்துக்கொள்ளலாம். ஏனெனில், குறைவே அழகு!
- இனிதே வாழப் பழகுவோம்...
தினமும் சிறிது சிறிதாகக் குறைக்கலாம்!
தேவையற்ற பொருள்களை அகற்ற நேரமில்லையா? அதற்காக அப்படியே விட்டுவிட வேண்டாம். எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பதைவிட, சிறிது சிறிதாகச் செய்வது நல்லது என்பதை நினைவில் கொள்வோம்!
வார இறுதி நாளில் அல்லது தொடர் விடுமுறையில் முழு வீட்டையும் சுத்தமாக்க முயற்சி செய்வதற்குப் பதிலாக இப்படிச் செய்யலாம். மெதுவாக, ஆனால் நிலையான முன்னேற்றத்தை நோக்கிச் செல்லலாம். சிறிய தொடர் முயற்சிகள் காலப்போக்கில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
எடுத்துக்காட்டாக, இந்த வேலையைச் செய்ய சில மணி நேரம் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களை இதற்காகச் செலவிடலாம். 5 அல்லது 10 நிமிடங்களைச் செலவிட்டாலும்கூட, அதை நாள்தோறும் தொடர்ந்து செய்தால் முன்னேற்றம் நிச்சயம்!
அதாவது... ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கை யிலான பொருள்களைக் குறைக்கலாம். வீட்டிலிருந்து தேவையற்ற பொருள்களை அகற்ற ஒவ்வொரு நாளும் தொடர்ந்து முயற்சி செய்வதே இதில் முக்கியமானது.
இணைந்து உணவருந்துவோம்!
குடும்ப உணவு நேரம் என்பது மிகவும் அர்த்தமுள்ள மரபு சார்ந்த விஷயம். நம் வாழ்வைச் சிறப்பானதாக உணர வைக்கும் சிறந்த நேரம்.
இன்றைய அவசர யுகத்தில் பல குடும்பங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் தனித்து உணவருந்துவதே வழக்கமாக உள்ளது. அதுவும் டிவி பார்த்துக்கொண்டோ, மொபைல் ஸ்க்ரீனை மற்றொரு கையால் தடவிக்கொண்டோ சாப்பிடுவதுகூட இயல்பாகிவிட்டது.
குறைந்தபட்சம் இரவு உணவையாவது குடும்பத் திலுள்ள எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவதுபோலத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். பிறந்த நாள் போன்ற சிறப்பு தினங்களில் சில மெழுகுவத்திகளை ஏற்றி வைத்தோ, மொட்டை மாடியில் நிலாச் சோறாகவோ சாப்பிட்டால், உணவின் சுவை பன்மடங்காகும். இது போன்ற ஒருமித்து உணவருந்தும் நேரங்கள் மிகவும் சிறப்பானவை... முக்கியமானவை. பொருள்களைக் காட்டிலும் பிரியமான தருணங்கள்தாம் மிக முக்கியம் என்பதை உணரச் செய்யும் நல்விஷயம் இது.
எல்லாச் சாதனங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உண்மையில் ஒருவருக்கொருவர் இருப்பதே உணவு நேரங்களைச் சிறப்புறச் செய்வதற்கான சிறந்த வழி. நீங்கள் விரும்பும் நபர்களுடன் உரையாடலை அனு பவிக்க உணவு நேரங்களே சிறந்த நேரம். இந்த வாய்ப்பைத் தவறவிட வேண்டாமே!