மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பத்தல... பத்தல... மினிமலிசம் - 6 - புத்தாண்டு தீர்மானங்கள்... தப்பாமல் நிறைவேற்ற முத்தான யோசனைகள்!

புத்தாண்டு தீர்மானங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தாண்டு தீர்மானங்கள்

‘நான் அனுபவங்களுக்காக பணம் செலவழிப்பேன்... இசைக் கச்சேரிகள், திரைப்படங்கள், உணவு வகைகள்... இப்படி. இவை பொருள்கள் அல்லவே.

பிறந்துவிட்டது புத்தாண்டு. 2023-ம் ஆண்டின் முதல் நாளை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று விட்டோம். புதிய உற்சாகத்துடன் புறப்பட்டிருக்கிறோம்.

இருப்பினும், பலர் எதிர் காலத்தை பற்றி கவலைப் படுகிறோம். நம் கப்பல் எங்கு செல்கிறது, அதை எவ்வாறு இயக்குவது? இந்தச் சூழலில், மினி மலிச வழிமுறையில் கவனத்தைத் திருப்புவதன் மூலம் வாழ்க்கையை எளிமையாகவும் இனிமையாகவும் மாற்றியமைக்க முடியும். இது பணிவாழ்க்கையில் இருப்பவர் களுக்கு மட்டுமல்ல; புதிதாக தொழில்முனைவோர் ஆக விரும்புகிறவர்களுக்கும் உதவும்.

இதுவே உங்கள் இலக்கு!

புத்தாண்டு தீர்மானங்கள் பெரும்பாலும் தோல்வியடை கின்றன. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 31 அன்று, புத்தாண்டில் சாதிக்க விரும்பும் விஷயங்களின் பட்டியலை எழுதுகிறோம். ஆனால், அதைப் பின்பற்றாமல் தள்ளிப் போடுகிறோம். ஆனால், இந்த ஆண்டு நமக்கான புத்தாண்டு தீர்மானமாக நான் பரிந்துரைப்பது மிக எளிதான ஒரே விஷயத்தை மட்டுமே. அது...

‘பொன்னான நேரத்தில் முக்கியமான விஷயங்களில் மட்டுமே என் கவனத்தைச் செலுத்துவேன்!’

பத்தல... பத்தல... மினிமலிசம் - 6 - புத்தாண்டு தீர்மானங்கள்... தப்பாமல் நிறைவேற்ற முத்தான யோசனைகள்!

எவையெல்லாம் முக்கியம்?

நம் அனைவரின் நேரமும் பொன்னானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ‘எனக்கு முக்கியமான விஷயங்கள்’ என்பது எனக்கும் உங்களுக்கும் இன்னொரு வருக்கும் நிச்சயம் மாறுபடும். அந்த மாற்றம் மிக நியாயமானதும்கூட. இருப்பினும், அடிப்படையான மற்றும் பொதுவான முக்கியமான விஷயங்களை நாம் அலசுவோம்.

உதாரணமாக...

இந்த ஆண்டு நுகர்பொருள்கள் (சுகா தாரம் சார்ந்த பொருள்கள் மற்றும் உணவு) தவிர வேறு எதையும் வாங்க மாட்டேன்.

‘இனி புதிய உடைகள் இல்லை, புதிய காலணிகள் இல்லை, புதிய எலெக்ட்ரானிக்ஸ் இல்லை, புதிய கேஜெட்டுகள் இல்லை, புதிய பொருள்கள் இல்லை’ என்பதை உறுதிமொழியாக எடுத்து, அதை சீரியஸாக கடைப்பிடிக்கும் மினிமலிஸ்ட்டுகளும் நம்முடன் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க.

உடைகளுமா என்று நீங்கள் மனத்துக்குள் மருளுவது எனக்குத் தெரிகிறது. அந்தக் கவலை இப்போது வேண்டாம். மினிமலிஸ்ட் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் தொடங்கிய பிறகு உடைகளுக்கும் தடை போடலாம். அதுவரை அவசியத்துக்கேற்ற உடைகளை வாங்கலாம்தான்.

ஏன் மினிமலிஸ்ட்டுகள் இப்படி இருப்பதைக் கொண்டே வாழ நினைக் கிறார்கள்? ‘எனக்குத் தேவையான அனைத் தும் ஏற்கெனவே என்னிடம் உள்ளன’ என்பதுதான் அவர்களின் பதில்!

‘நான் அனுபவங்களுக்காக பணம் செலவழிப்பேன்... இசைக் கச்சேரிகள், திரைப்படங்கள், உணவு வகைகள்... இப்படி. இவை பொருள்கள் அல்லவே. மகிழ்ச்சியாக இருக்க எனக்கு அதிகமான விஷயங்கள் தேவையில்லை. ஆனால், இனிமையான அனு பவங்கள் அவசியம் வேண்டும்’ என்பது இன்னொரு மினி மலிஸ்ட்டின் பதில். ஏனெனில் மினிமலிஸ்ட்டுகள் கஞ்சத்தன மானவர்கள் அல்லர்... அவர்களும் பணம் செலவழிப்பார்கள். அவை எளிமையான வாழ்க்கைக்காகவும் நல்ல அனுபவங்களுக்காகவும்!

பலன் என்ன?

மேற்கண்ட புத்தாண்டு தீர்மானத்தைக் கடைப் பிடித்தால் என்ன ஆகும்? நம் பொன்னான நேரத்தை நமக்கு மிகவும் முக்கியமான, விருப்பமான விஷயங்களில் கவனம் செலுத்த இது உதவும். உடல்நலம், உறவுகள், எழுதுதல், வாசிப்பு மற்றும் பிற தனிப்பட்ட முன்னுரிமைகள்... இப்படிப் பல.

ஒருவேளை புத்தாண்டு தீர்மானத்தை முழுமை யாகவோ, தொடர்ச்சியாகவோ பின்பற்ற முடியவில்லை என்றால்..?

அப்படி ஏதேனும் நடந்தால், நான் என் தோல்விகளை ஒப்புக்கொள்வேன். ஆனால், நான் தோல்வியடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அதனால், எனது தீர்மானத்தைப் பற்றி உலகுக்குச் சொல்வது, அவர்கள் என்னை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே!

இன்னுமொரு விஷயம்: ஓராண்டுத் தீர்மானம் என்பது பெரும்பாலான மக்களுக்கு மிகக் கடினமாக இருக்கக்கூடும். அதனால் ஒரு வாரம், 15 நாள்கள், ஒரு மாதம், இரண்டு மாதங்கள், காலாண்டு, அரையாண்டு... இப்படி சிறிது சிறிதாக நீடிக்கலாம். இப்படிச் செய்ய உங்களாலும் முடியும் என்று நான் உறுதியாக நம்பு கிறேன்.

வாழ்க்கையை மாற்றும் புத்தாண்டு தீர்மானங்கள்

அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிடுவது என்பது புத்தாண்டு குறிக்கோள் அல்ல. அது மினிமலிஸ்ட்டுகள் எப்போதுமே பின்பற்ற வேண்டிய அடிப்படை விஷயம்! அதைத் தாண்டி வாழ்க்கையை மாற்றும் மற்றும் சில தீர்மானங்கள் இவை. உங்களுக்கு அவசியமானதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

* உடலை உறுதி செய்தல் | BMI அளவுக்கேற்ற எடை பராமரிப்பு

* தொலைக்காட்சி | மொபைல் | இணையப் பயன் பாட்டைக் குறைத்தல் அல்லது அகற்றுதல்

* எளிமையான பயணங்களை மேற்கொள்ளுதல்

* இத்தனை ஆண்டுகளாகச் செய்ய நினைத்து. செய்யத் தவறிய விஷயங்களை இந்த ஆண்டு உறுதியாக நிறைவேற்றுதல்

* பணிமுறை இலக்குகளில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு | பணிமாற்றம்

* வேலையை விட்டுவிட்டு சுயதொழில் தொடங்குதல்.

தொழில் தொடங்குவோருக்கான சில பொன்விதிகள்

சுயதொழில் முடிவை நீங்கள் எடுப்பதாக இருந்தால் சில பொன்விதிகள் உள்ளன. அவை...

1. குறைந்தபட்ச ஆறு மாத குடும்பச் செலவு களுக்கான நிதி வங்கியில் இருக்க வேண்டும்.

2. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் போதுமான அளவு ஆயுள் காப்பீடு (டேர்ம் இன்ஷூரன்ஸ் மட்டும்) மற்றும் மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

3. நாளையே வெற்றிகரமான தொழிலதி பராக உருவாகிவிடுவோம் என்கிற சினிமாத் தனமான மாயையிலிருந்து விடுபட்டு, தோல்வி களைத் தாண்டி பிசினஸை மேற்கொள்ளும் மனவலிமை வேண்டும்.

4. பணியாளர்களுக்கு முறையாகவும் நியாயமாகவும் சம்பளம் தருவதற்கான திட்டம் இருக்க வேண்டும். மினிமலிஸ்ட் போர்வையில் பணியாளர்களுக்கு மிகக் குறைவான சம்பளம் கொடுப்பது உங்கள் பிசினஸை அழிக்கும் முதல் வழி. ஏற்கெனவே கூறியது போல நியாயமான செலவுகளைச் செய்யாமல் இருப்பது மினிமலிஸ்ட் வழிமுறை அல்ல.

5. ‘எல்லா வேலைகளையும் நாம் மட்டுமே தனியாகச் செய்துவிடலாம். செலவும் மிச்சம்... நன்றாகவும் செய்வோம்’ என்று நினைத்து ஒன் வுமன்/மேன் ஆர்மியாகச் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். பிசினஸில் வேலைகளைப் பகிர்ந்தளிப்பது அவசியம். வேலை தெரியாத வர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். ஆனால், அதையும் நாமே செய்துவிடலாம் என நினைத்தால், ஒருபோதும் பிசினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது. அதே நேரத்தில் தேவைக்கு அதிகமான நபர்களைச் சேர்ப்பதையும் தவிர்க்க வேண் டும். ஏனெனில், நாம் மினிமலிஸ்ட் ஆக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

பின்பற்றுவதில் பிரச்னையா?

பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்துக்குள், புத்தாண்டு தீர்மானத்தில் நாம் உறுதியான முடிவுகளைக் காணவில்லை என்றால் கவலை ஏற்படக் கூடும். பதற்றம் பரவக்கூடும். அப்போது நம்மை ஆறுதல்படுத்த, பழைய பழக்கங்களுக்குத் திரும்புகிறோம். கண்டதைச் சாப்பிடுகிறோம். வாழ்க்கையில் முன்னேறு வதற்கான ஊக்கத்தை இழக்கிறோம்.

அது மட்டுமல்ல... குடும்பம் மற்றும் நண்பர் களுடன் அதிக நேரம் செலவிடுவதையும் மறந்து விடுகிறோம். நம் முயற்சிகள் அனைத் தும் நீராவி போல மறைந்து போகின்றன. இந்தச் சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

முன்னேற்றத்துக்கு மூன்று!

எந்தவொரு புத்தாண்டு தீர்மானமும் தானாக வேலை செய்யாது. குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய, நமக்கு மூன்று விஷயங்கள் தேவை.

* அத்தியாவசியங்களில் கவனம் செலுத்துதல்

* நம் தீர்மானங்களை நோக்கிய தினசரி முன்னேற்றத்தை உறுதி செய்யும் பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றுதல்

* கவலையற்ற மனப்பான்மையைத் தக்க வைத்தல்.

யதார்த்தமான நடைமுறை சாத்தியங்கள் கொண்ட புத்தாண்டு தீர்மானங்களை அடைவதற்கு இந்த மூன்றும் உதவும்.

இப்படிச் செய்தால் நம் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் செயல்படலாம்.

உங்கள் புத்தாண்டு இலக்கைத் திட்டமிட்டு எட்ட வாழ்த்துகள்!

- இனிதே வாழப் பழகுவோம்...

சூழலும் முக்கியம்!

புதிய பொருள்களை வாங்காமல் ஓராண்டுக் காலம் இருப்பது என்பது உண்மையிலேயே மிக நீண்ட காலம்தான். நம்மில் சிலருக்கு அடுத்த ஆண்டில் (2024) நிச்சயமாக சில பல பொருள்களை வாங்க வேண்டியிருக்கும்தான். அதனால், இந்தத் தீர்மானத்தை ரயில் தண்டவாளம் போல ஒரே சீராகப் பின்பற்ற வேண்டும் என்று கறாராக இருக்க வேண்டாம். சூழலைப் பொறுத்து முடிவு செய்தாலே போதும்.

பத்தல... பத்தல... மினிமலிசம் - 6 - புத்தாண்டு தீர்மானங்கள்... தப்பாமல் நிறைவேற்ற முத்தான யோசனைகள்!

மினிமலிசம் என்பது மகிழ்ச்சிக்கான தேடல்தான். அதை விரும்பி வேண்டுமென்றே செய்ய வேண்டும்! - மெலிசா கமரா வில்கின்ஸ் (எழுத்தாளர்)