பத்தல... பத்தல... மினிமலிசம் - 7 - ‘நீங்கள் இதுவரை தொடங்காதது மட்டுமே அசாத்தியமான ஒரே பயணம்!’

ஓராண்டுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு சதவிகிதம் சிறப்பாகச் செய்ய முடிந்தால், அது 37 மடங்கு சிறப்பாக முடிவடையும் என் கிறார்கள், இதை அனுபவத்தில் உணர்ந்த மினிமலிஸ்ட்டுகள்
புத்தாண்டு இலக்கைத் திட்டமிட்டு எட்டு வதற்கான இலக்குகளைத் தொடர்ந்து பேசுவோம். மினிமலிச வாழ்வியல் முறை யானது ஒட்டுமொத்தத்தில் ஒழுங்கின் அமைதியை, எளிமையின் இனிமையை, சேமிப்பின் வலிமையை அளிக்கும் என்பதை நாம் அறிவோம். இவை மட்டுமல்ல... கவலை யின்றி செயல்படவும் மினிமலிசம் உதவும். அது எப்படி? உதாரணமாக... தொழில்முனை வோராக மிளிர விரும்புகிறவர்கள் மினிமலிச வழிமுறையில் அதற்காகத் திட்டமிடுவது பற்றி பார்க்கலாம். இதே வழிகளை குடும்ப நிர்வாகிகளும் பணிபுரிகிறவர்களும் மாணவர் களும்கூட பின்பற்றலாம்.
கடமைகளை, பொறுப்புகளை, சுமைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்...
புத்தாண்டு தீர்மானங்களைப் பின்பற்றத் தொடங்கும் முன், நம் பொறுப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பது அவசியம். பலர் ஏற்கெனவே இருக்கும் கடமைகளுடன் முரண்படும் புத்தாண்டு தீர்மானங்களையே உருவாக்குகிறார்கள். உதாரணமாக, புத்தாண் டில் ஜிம் வொர்க் அவுட்டை தொடங்க விரும் பலாம். இருப்பினும், அதற்கான நேரத்தைப் பெற முடியாத அளவுக்கு ஏற்கெனவே பல பொறுப்புகள் இருக்கும். என்ன செய்வது?
வெற்றி பெறுவதற்கான உண்மையான வாய்ப்பைப் பெற, நாம் முதலில் அதற்கான இடத்தையும் நேரத்தையும் உருவாக்க வேண்டும். இதை நம் அனைத்துக் கடமைகளை யும் பணிகளையும் உள்ளடக்கிய பட்டியலை முறைப்படுத்துவதிலிருந்து தொடங்கலாம். ஏற்கெனவே உள்ள அனைத்துப் பணிகளையும் தொகுத்தவுடன், புதிய ஆண்டில் எவற்றை யெல்லாம் செய்யலாம் என்பதை மதிப்பிட வேண்டும். இன்றியமையாதவை மற்றும் அத்தியாவசியமற்றவை என வேறுபடுத்த வேண்டும். இந்தப் பட்டியலில் அத்தியாவசிய மில்லாத அனைத்தும், அவசியமற்றவையே.

அத்தியாவசியமானவற்றுக்கான உங்கள் நேரத்தைக் குறைப்பதன் மூலம் நம் மனத்தில் இடத்தை உருவாக்கலாம். இதை அடைந்த வுடன், நம் வாழ்க்கையில் புதிய திட்டங்களை வரவேற்கும் திறன் நிச்சயம் கிடைக்கும்.
சிறியதாகவே தொடங்குங்கள்...
பொருளாதாரத்தில் ‘சிறியதே அழகு’ என்கிற பொன்மொழி உண்டு. அதுபோல சிறந்த தீர்மானங்களை அடைவதற்கான முதல்படி சிறியதாகத் தொடங்குவதுதான்.
சிலர் அபத்தமான லட்சிய இலக்குகளை உருவாக்குகிறார்கள். உதாரணமாக, இதுவரை ஆன்லைனில் பணம் சம்பாதிக்காத ஆர்வ முள்ள தொழில்முனைவோர் தங்கள் முதல் முயற்சிகளிலேயே மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் சோர் வடைந்து தங்கள் இலக்கை நோக்கிய பயணத்தை முழுவதுமாக விட்டுவிடுகிறார்கள்.
சிறியதாகத் தொடங்கு வதில்தான் வெற்றி ரகசியம் இருக்கிறது. காலப்போக்கில் அதிவேக வளர்ச்சிக்கு வழி வகுக்கும் பழக்கங்களை உருவாக்க முடியும். சிறிய, தினசரி செயல் களை இலக்காகக் கொண்டால் இறுதி வெற்றி நமக்கே!
ஓராண்டுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு சதவிகிதம் சிறப்பாகச் செய்ய முடிந்தால், அது 37 மடங்கு சிறப்பாக முடிவடையும் என் கிறார்கள், இதை அனுபவத்தில் உணர்ந்த மினிமலிஸ்ட்டுகள். சிறிய, தினசரி மேம்பாட்டில் தொடங்கி, வீட்டை டீகிளட்டரிங் செய்வது, நிறைய பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களைப் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, அன்பானவர்களோடு நேரம் செல விடுவது ஆகியவற்றை நிச்சயம் சாதிக்கலாம். காலப்போக்கில், இது கணிசமான ஆதாயங்களைக் கூட்டும்.
ஒரு நேரத்தில் ஒரே ஓர் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும்...
எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் நிறை வேற்ற முயற்சி செய்ய வேண்டாம். ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு தலா ஒவ்வொரு முதன்மை இலக்கை வரையறுக்கவும். எனவே, ஜனவரியை ‘எனது பிசினஸை தொடங்குவேன்’ எனக் குறிக்கலாம். அந்த மாதத்தில், அடிப்படைப் பணிகளைச் செய்யலாம். நிச்சயமாக, ஒரே மாதத்தில் லாப கரமான வணிகத்தை உருவாக்க முடியாது. ஆனால், அதன் ஆரம்பச் செயல்முறை அந்த 30 நாள்களுக்கு நம் வாழ்க்கையின் மையப் புள்ளியாக இருக்கும். அதன்பிறகு, பிப்ரவரியில் ஜிம் பயிற்சியைத் திட்டமிடலாம். மார்ச் மாதத்தில் புத்தகங்கள் மீதான ஆர்வத்தை மீண்டும் தூண்டலாம். இப்படியே...
ஒரு திட்டம் மற்றொன்றுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதும் இதில் முக்கியம். 30 நாள் திட்டப்பணிகள் மூலம், நாம் ஒரு குறிப்பிட்ட இலக்கை நிச்சயமாக அடைய முடியும். நம் முந்தைய திட்டம் செயல் பட்டவுடன், புதுப்பிக்கப்படுகிற ஆர்வம் அடுத்த இலக்கையும் முறியடிக்க உதவும்.
இலக்கில் நாம் அடையும் முன்னேற்றத்தை எழுதி வைப்பது அவசியம்...
இது இரண்டு நன்மைகளைக் கொண் டுள்ளது. முதலில், நம் முன்னேற்றங்களைக் கண்காணிக்கவும், நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதைப் பார்த்து, நம் பலம் மற்றும் பலவீனங்களை முன்னிலைப் படுத்தி, அதற்கேற்ப செயல்பட முடியும்.
இரண்டாவதாக, அச்சங்கள், நம்பிக்கைகள் மற்றும் திட்டங்களை மனதில் இருந்து காகிதத்துக்கு மாற்றுவதன் மூலம், அதை வெளியிலிருந்து ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க முடியும். நேர்மறை உளவியலின்படி, காகிதத்தில் எழுதுவது என்பது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்கவும் வாய்ப்பளிக்கிறது.
முன்னுரிமைகளை மறு வரையறை செய்ய வேண்டும்...
* எனது நீண்டகால இலக்குகள் என்ன?
* இந்த நீண்ட கால இலக்குகளை அடைவதற்கான தினசரி பழக்கங்களை நான் எப்படி மேற்கொள்ள வேண்டும்?
இவற்றைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும். தேவையெனில் இலக்குகளில் மாறுதல்கள் செய்துகொள்ள வேண்டும்.
எழுத்தாளரும் பயிற்சி யாளருமான டோனி ராபின்ஸ் ஒருமுறை கூறியது போல, ‘நீங்கள் இதுவரை தொடங் காதது மட்டுமே அசாத்தியமான ஒரே பயணம்!’
ஆகவே, இன்றே தொடங்கு வோம். ஆம்... நம் கப்பல் துறைமுகத்தை விட்டு வெளி யேறுவதை உறுதிசெய்ய தொடர்புடைய அனைத்துக் கருவிகளையும் எடுத்துக் கொள்வோம். அது செல்லும் வழியில், அவசியமெனில் வெவ்வேறு திசைகளில் திரும் பவும் நமக்கு வாய்ப்பிருக்கிறது.
- இனிதே வாழப் பழகுவோம்...
‘‘பலர் தாங்கள் சம்பாதிக்காத பணத்தைச் செலவழிக்கிறார்கள். தேவையில்லாத பொருள்களை வாங்குகிறார்கள்...’’ - வில் ரோஜர்ஸ் (அமெரிக்க நடிகர்)

எது தேவையில்லாதது? எப்படித் தேர்ந்தெடுப்பது?
நமக்கும் நம் வாழ்வுக்கும் நம் இல்லத்துக்கும் எவை யெல்லாம் தேவையில்லாதவை என்பதை அறிய ஒரு வழிமுறை பரிந்துரைக்கப்படுகிறது.
அதாவது... உங்கள் வீட்டிலிருக்கும் அனைத்துப் பொருள்களையும் ஓர் அறையில் அடைத்து விடுங்கள். பிறகு உங்கள் இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.
உதாரணமாக காலையில் விழித்து பல் துலக்கத் தேவையானவற்றை அந்த அறையிலிருந்து எடுத்துப் பயன்படுத்துங்கள். அதைப் போலவே உங்களுக்குத் தேவையானதை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து பயன் படுத்தத் தொடங்குங்கள்.
உதாரணமாக தேவைக்கேற்ற பொருளை மட்டும் அந்த அறையிலிருந்து வெளியே எடுத்துக் கொள்ளுங்கள். சமைக்கத் தொடங்கும்போது சமையலுக்குத் தேவை யான பாத்திரங்களை எடுத்துக்கொள்ளலாம். இரவு உறங்கச் செல்லும்போது அதற்குத் தேவையான தலையணை, போர்வை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இப்படியொரு மாதம் நீங்கள் வாழ்ந்து பாருங்கள். அதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் அந்த அறையிலிருந்து வெளியே எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு மாதம் முடிந்த பிறகு நீங்கள் வெளியில் எடுத்து வைத்த பொருள்கள் மட்டும் உங்கள் வாழ்வியலுக்கு போதுமானவை. அந்த அறையில் எஞ்சியிருக்கும் பொருள்களில் 90 சதவிகிதப் பொருள்கள் உங்களுக் குத் தேவையில்லாத - அதாவது அத்தியாவசியம் இல்லாத பொருள்களே!
இப்படியாக நாம் இதுவரை சேர்த்த பொருள்களிலிருந்து தேவையில்லாததை விட்டு விலகலாம்.
சலுகைகள் எல்லாம் சலுகைகள் அல்ல!
Buy 2 Get 1 Free, Discount Sale, Offer என்று வியாபார உலகில் வழங்கப்படும் சலுகைகள் எல்லாம் உண்மையில் சலுகைகள் அல்ல! நமக்கு அவசிய மானதை விட்டுவிட்டு, சலுகை அளிக்கப்படுகிறது என்பதற்காக தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதுதான் மினிமலிச வாழ்க்கைமுறைக்கு மட்டுமல்ல... சூழல் பாதுகாப்புக்கும் முதல் எதிரி. அதாவது சலுகைகளில் மயங்கி வீடு முழுவதும் பொருள்களைக் குவித்துக்கொண்டு இருப்பது இந்த இயற்கையை நாம் அழிப்பதற்கும் சமம். இயற்கை வளம் காப்பது என்பது நாம் வாழும் அன்றாட வாழ்க்கையிலும் இருக்கிறது.
வாழ்க மின்மலிசம்!
`தேவைக்கு அதிகமானதை நாடுவதில்லை’, `அவசியத்துக்கும் அதிகமாக வாங்கிக் குவிப்பதில்லை’ என்பதை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போதெல்லாம், எதிலெல்லாம், எங்கெல்லாம், எப்படி யெல்லாம் பின்பற்றுகிறீர்கள்... அதன் மூலமாக அடைந்த பலன்கள் என்னென்ன? அந்த ரகசியங்களை மற்றவர்களுக்கும் பகிரலாம் என்று அறிவித்திருந்தோம். வாசகர்கள் அனுப்பியவற்றில் சென்னையைச் சேர்ந்த ஜி.பிரேமா எழுதிய இந்தப் பகிர்வு, விகடன் குழும இணைய தள ஆறு மாத சந்தா சிறப்புப் பரிசு பெறுகிறது.
மின்சாரச் சேமிப்புக்கு `மின்'மலிசம்!
`மின்மலிசம்' என்றுகூட சொல்லலாம், நான் தற்போது சொல்லவிருக்கும் சிக்கன நடவடிக் கையை. பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், பலராலும் பின்பற்றப்படாத விஷயம். பல ஆண்டுகளாக எனக்குக் கைகொடுத்து வரு கிறது என்பதால் எழுதுகிறேன்.
ஒரு வீட்டில் பல அறைகள் இருக்கும். ஒவ் வோர் அறையிலும் மின்விசிறிகள் மற்றும் மின் விளக்குகள் இருக்கும். எங்கள் வீட்டில் தேவை என்றால் மட்டுமே விளக்குகளை எரிய விடுவோம். சமைக்கும் நேரத்தில் சமையற்கட்டில்... படிக்கும் நேரத்தில் அறைகளில்... பாத்ரூம் போகும்போது பாத்ரூமில்... அனை வரும் ஓய்வாகப் புத்தகம் படிக்க, டிவி பார்க்க என்றால் மொத்தமாக குழுமியிருந்து அந்த இடத்தில் மட்டுமே விளக்கு மற்றும் மின்விசிறிகளை இயக்குவது வழக்கம். வெளியில் செல்கிறோம் என்றால், ஏதாவது ஒரு விளக்கை எரியவிட்டுச் செல்வதும் எங்கள் வீட்டில் வழக்கமில்லை.
வாசல், புறவாசல் போன்ற இடங்களில் ஆறு மணிக்கெல்லாம் `டான்' என்றும் எரிய விடுவதில்லை. நன்றாக இருட்டிய பிறகே எரிய விடுவோம். தெரு விளக்குகள் இருப்பதால், புறவாசல் விளக்குகளை இரவு 10 மணிக்கு முன்பாகவே அணைத்துவிடுவோம். அதேபோல, வீட்டிலிருக்கும் மின்மோட்டார்களை இயக்கும்போது, அலாரம் வைத்து சரியாக அணைத்துவிடுவோம்.
குறிப்பாக, கடந்த நான்கு மாத காலத்தில் முதல் பில்லிங் மாதத்தில் 1,400 ரூபாய், இரண்டாவது பில்லிங் மாதத்தில் 1,200 ரூபாய் மட்டுமே மின்கட்டணமாக வந்தது. இத்தனைக்கும் இந்த நான்கு மாத காலமாக மின்கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மழை மற்றும் குளிர்காலமாக இருந்ததால் ஏசி-யை சுத்தமாக இயக்கவில்லை. அதோடு, ஜன்னலைத் திறந்துவைத்து கொசுவலையைப் பயன்படுத்து வதால் மின்விசிறியும் தேவைப்படவில்லை. வெந்நீருக்காக ஹீட்டர் பயன்படுத்தியும்கூட வழக்கமாக வரும் 2,000, 3,000 ரூபாய்க்கெல்லாம் செல்லவே இல்லை. மின்சிக்கனம் என்பது காசை மிச்சப்படுத்துவது மட்டுமல்ல... சுற்றுச்சூழல் கேட்டையும் குறைக்கும் என்பதே உண்மை!
- ஜி.பிரேமா, பட்டாபிராம், சென்னை