மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பத்தல... பத்தல... மினிமலிசம் - 8 - கேட்ஜெட்சூழ் உலகில் தொலையப் போகிறோமா!

கேட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட்

எந்தவொரு கேட்ஜெட்டை வாங்கும் போதும் ஒருமுறைக்கு பலமுறை யோசிக்கவும். பயன்பாட்டு அவசியம் காரணமாக ஒன்றை வாங்கலாம்.

அடிப்படைத் தேவைகளுக்கான அளவான பொருள்களோடு மட்டுமே வாழ்கிறவர்கள் ஏழைகள் அல்லர். உண்மையில் அவர்களே இந்த உலகில் வாழத் தகுதி படைத்த மானுடர்கள்!

ஒருகாலத்தில் அடிக்கடி கைக்கடிகாரங் களை மாற்றுவதும், உடைகளுக்கேற்ப புதிய கைக்கடிகாரங்களை வாங்குவதும் சிலருக்கு வழக்கமாக இருந்தது. இந்த ஆர்வம் சமூகத்தில் மிகச் சிலருக்கே இருந்தது. இப்போது கைக்கடி காரம் என்பது மொபைலாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. இங்கு நாம் கவலைகொள்ள வேண்டிய விஷயம்... மிக அதிகமானோர் அடிக்கடி மொபைல் போனை மாற்றும் அல்லது புதியதாக வாங்கும் பழக்கத்துக்கு ஆட்பட்டிருக்கின்றனர் என்பதுதான்.

கைக்கடிகாரத்தை அடிக்கடி மாற்றினாலும் கூட, அவர்கள் 24 மணி நேரமும் அதோடே வாழ்வதில்லை. ஆனால், மொபைல் போன் விஷயம் அப்படியல்ல. மொபைல் போன் களின் வரவுக்குப் பிறகு எண்ணற்ற வசதி வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. எனினும், மொபைல் உள்ளிட்ட ‘கேட்ஜெட் இத்யாதி களின் போதை’ காரணமாக நாம் இழந்தவை ஏராளம்!

ஆம்...

புதிய மொபைல் போன் வரும் முன்பே அதற்காக முன்பதிவு செய்வது (நமக்கு ஏன் அது அவசியம் என்கிற கேள்விக்கு பதில் இல்லையென்றாலும்கூட!)

ஐபோனின் புதிய வரவுக்காக இரவெல்லாம் கால் கடுக்க க்யூவில் நின்று காத்திருப்பது (அதன் விலை லட்சம் ரூபாயைத் தொட்டாலும்கூட)

எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல்களோடு புழங்குவது (ஒரே போனில் இரண்டு சிம் கார்டுகள் செயல்படும் வசதி இருந்தாலும்கூட)

புதிய போன் வாங்கிய பிறகும் முந்தைய போனை விற்காமலோ, பிறருக்குக் கொடுக்காமலோ இருப்பது (கவனிக்க: அது பழசாகிப் போன போன் அல்ல. நன்றாகச் செயல்படக்கூடிய நல்ல நிலையில் உள்ளதுதான்!)

கட்டுப்பாடற்ற வசீகரம்

சமீப காலத்தில் அறிமுகமான ஒரு தகவல் தொடர்பு சாதனம் பலரை அசாத்தியமான அளவுக்கு வசீகரித்து வருவதை நாம் போற்றிப் பாட முடியாது. ஏனெனில், அது மினிமலிச வாழ்க்கைக்கு எதிரானது என்பது மட்டுமல்ல... சிகரெட், மது, போதைப் பொருள் வரிசையில் ஒருவரை அடிமையாகவே ஆக்கிவிடுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் போன் பயன்பாடு மட்டுமல்ல; ஒற்றை போன் மட்டுமே வைத்திருந்தாலும்கூட அதற்கு அடிமையாக மாறிவிடுவதும் மினிமலிசத்துக்கு எதிரானதுதான். பெரியவர்களை மட்டுமல்ல... குழந்தைகளும் மொபைல் போன் போன்ற கேட்ஜெட்டுகளுக்கு அடிமையாவது இன்று மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது.

21-ம் நூற்றாண்டின் வருகையுடன், தொழில் நுட்ப யுகமும் வந்துவிட்டது. 2 - 3 வயதுடைய குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள், டேப் லெட்டுகள், கணினிகள் போன்ற கேட்ஜெட் களைப் பயன்படுத்துவதில் திறமையானவர்கள். உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு இது உதவுவதால், இந்தத் திறமை ஒரு வரமாக இருந்தாலும், புறக்கணிக்க முடியாத அளவுக்கு எதிர்மறையானதும்கூட!

குறிப்பாக... கோவிட் காலகட்டத்தில் வீட்டிலேயே கிடந்த குழந்தைகளை அமைதிப் படுத்த அவர்களின் கையில் மொபைல் போன்கள் வழங்கப்பட்டன. பின்னர் கல்வி நோக்கங்களுக்காகவும் அந்த மொபைலின் பயன்பாடு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து குழந்தைகளின் ஸ்க்ரீன் டைம் அளவு (மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர், லேப் டாப், டிவி போன்ற திரைகளில் கண்களைச் செலுத்தும் கால அளவு) மிக அதிகமாக மாறியுள்ளது. இது கண்களுக்கு மட்டுமல்ல... மொத்த உடலுக்கும் மனதுக்குமே கேடு விளை விக்கும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். அவற்றில் மிக முக்கியமானவை இவை...

நிஜமான வாழ்க்கை நடைமுறைத் திறன்களை வளர்ப்பதில் ஆர்வமின்மை

ஒரு கேட்ஜெட்டை பயன்படுத்துவது தவிர, வேறெந்தப் பணியிலும் கவனம் அல்லது ஆர்வமின்மை

மோசமான நேர மேலாண்மை

முறையற்ற உணவுப் பழக்கம்

நண்பர்களிடமிருந்து விலகியிருத்தல்

பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களின் மீதான பந்தம் குறைதல்

உடற்பயிற்சி செய்வதில் விருப்பமின்மை

கிரிக்கெட், ஃபுட்பால், கபடி போன்ற புற விளையாட்டுகளிலும், செஸ் போன்ற உள் விளையாட்டுகளிலும் ஈடுபட விருப்பமின்மை.

பத்தல... பத்தல... மினிமலிசம் - 8 - கேட்ஜெட்சூழ் உலகில் தொலையப் போகிறோமா!

போதையிலிருந்து மீள வேண்டும்!

மினிமலிசத்துக்குத் தயாராக மொபைல் போதையிலிருந்து விடுதலையாதல் அவசியம். ஆம்... பெரியவர்களாக இருந்தாலும்கூட, போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். அதனால்தான் நம் குழந்தைகள் அத்தகைய போதைக்கு ஆளாகாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது மிகவும் அவசியமாகிறது. வீடு, பள்ளி, பொது இடங்கள் என எல்லா இடங் களிலும் கேட்ஜெட்டுகள் பரவலாகப் பயன் படுத்தப்படுவதால், இந்த நடவடிக்கைகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டியிருக் கிறது. குழந்தைகளை மினிமலிச வாழ்க்கை முறைக்குத் தயார்படுத்தவும் இது அவசியம். இல்லையெனில், நாம் கேட்ஜெட்டுகள் நிறைந்த மின்சூழ் உலகில் தொலைந்து விடுவோம்!

என்ன செய்யலாம்?

 முன்னுதாரணமாகச் செயல்படுவோம்!

பிள்ளைகள் எப்போதும் பெற்றோர் செய்வதையே பின்பற்றுவார்கள்... பெற்றோர் சொல்வதை அல்ல! நீங்கள் கேட்ஜெட்டுகளில் அதிக நேரத்தைச் செலவிடுவதை அவர்கள் பார்த்தால், அவர்களும் அதையே செய் வார்கள். அதனால் நீங்களே முன்மாதிரியாக மாறி வழிநடத்த வேண்டும். உங்களுக்கான ஆரோக்கியமான பழக்கங்களைப் (படித்தல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை) பின்பற்று வதில் கவனம் செலுத்துங்கள். இதன் மூலம் குழந்தைகளும் அதே பழக்கங்களைப் பின்பற்ற ஊக்கப்படுத்த முடியும். குறைந்தபட்சம், குழந்தையின் அருகில் இருக்கும்போது கேட் ஜெட்களில் (உதாரணமாக மொபைல் போன்!) நீங்கள் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்தவும்.

 விதிகளில் உறுதியாக இருங்கள்!

உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆரோக்கியமற்ற பழக்கங்களைக் கட்டுப்படுத்துவதில் (குறிப்பாக மொபைல் போன் பயன்பாடு) மென்மைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டாம். உங்கள் முடிவுக்குப் பின்னால் உள்ள காரணத்தை அவர்களுக்கு விளக்குவதன் மூலம் இதைச் செய்ய முடியும்.

கல்வி சார்ந்ததாக இருந்தாலும்கூட அதிக பட்சமாக ஒரு நாளைக்கு 2-3 மணிநேரத்துக்கு மேல் ஸ்க்ரீன் டைம் வேண்டாம். இதில் டிவி, லேப்டாப், கேமிங், மொபைல் போன் பயன்பாடு ஆகியவை அடங்கும்.

 பிற செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்!

கேட்ஜெட் அடிமையாவதைக் கட்டுப் படுத்த, குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பல்வேறு வழிமுறைகளைப் பயன் படுத்துவது அவசியம். சத்தமாக வாசிக்கும் அமர்வுகள், விளையாட்டு அமர்வுகள், பலகை விளையாட்டுகள், கலை மற்றும் கைவினை நேரம் போன்றவற்றை மேம்படுத்தும் செயல் களில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்.

 கேட்ஜெட்டுகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துங்கள்!

எந்தவொரு கேட்ஜெட்டை வாங்கும் போதும் ஒருமுறைக்கு பலமுறை யோசிக்கவும். பயன்பாட்டு அவசியம் காரணமாக ஒன்றை வாங்கலாம். மலிவு விலையை மனத்தில் வைத்து எதையும் வாங்கக்கூடாது. ஆரம்பத்தில் இருந்தே இதை உறுதியாகக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

 உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள்!

தனிமையில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் கேட்ஜெட்டுகளுக்கு அடிமையாகி விடுவதற்கான அபாய வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே, உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முன்முயற்சி எடுங்கள். அவர் களுக்கு விருப்பமான விஷயங்களைச் செய்யுங்கள் - பொம்மைகளுடன் விளை யாடுவது முதல் ஒளிந்து விளையாடுவது வரை. இதற்கெல்லாம் நிறைய முயற்சி தேவைப் படலாம். ஆனால், அது நிச்சயமாக பலனளிக்கும்.

 குழந்தைகளைச் சமாளிக்க கேட்ஜெட்டு களைப் பயன்படுத்தாதீர்கள்!

நமக்கு அதிக பணிகள் இருக்கும்போது குழந்தையின் கையில் மொபைலை கொடுப்பது அல்லது டிவியை ஆன் செய்து, அதில் ஈடுபடச் செய்வது எளிது. ஆனால், இது உங்கள் குழந்தையை மற்ற நடவடிக்கைகளில் இருந்து திசைத்திருப்பும் போதை என்பதை நினைவில் கொள்ளுங்கள்! அதற்கு பதிலாக, அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று கேளுங்கள்; அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். தேவைப்படும்போது குழந்தை களைக் கவனிக்க உங்கள் இணையர், பெற் றோர் அல்லது உதவியாளர்களிடம் கேட்க லாம்.

 ‘கேட்ஜெட் இல்லாத’ நேரத்தை உருவாக்குங்கள்!

உணவு நேரத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் எந்தவொரு கேட்ஜெட்டையும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். கேட்ஜெட்டுகள் இல்லாத ஓர் உலகம் இருக்கிறது என்பதையும், உறவுகள், நட்புகளின் முக்கியத்துவத்தையும் உங்கள் குழந்தை புரிந்துகொள்ள வழி செய்யுங்கள்.

 கேட்ஜெட் பயன்பாட்டு உள்ளடக்கத் தைக் கண்காணியுங்கள்!

வீடியோ கேம்கள், கார்ட்டூன்கள் உட்பட உங்கள் குழந்தை ஈடுபடுகிற விஷயங்களின் உள்ளடக்கம் குழந்தைகளுக்கு ஏற்றது என்பதை உறுதிப்படுத்தவும். கேமிங்கில் வன்முறை, பெண்களைத் தாழ்வாக நடத்துதல் போன்றவை இருப்பின் அவற்றை பிளாக் செய்யுங்கள்.

 குழந்தையின் முயற்சிகளைப் பாராட்டுங்கள்!

உங்கள் குழந்தை, திரை நேரம் தவிர மற்ற செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க முற்படும்போது, அந்த முயற்சிகளைப் பாராட்டுவது முக்கியம். நேர்மறையான நடத் தையைப் பாராட்டுவது உங்கள் குழந்தை, அதைத் தொடர்ந்து செய்ய ஊக்கப்படுத்தும்!

- இனிதே வாழப் பழகுவோம்...

பத்தல... பத்தல... மினிமலிசம் - 8 - கேட்ஜெட்சூழ் உலகில் தொலையப் போகிறோமா!

உங்களிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். குறையொன்றும் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்தால், உலகம் முழுவதும் உங்களுக்குச் சொந்தமாகிவிடும்!

- சீனத் தத்துவவியலாளர் லாவோ சூ