
நாங்க செய்றது ஒரு தலைமுறைக்கான வேலை. சென்னையில வாய்ப்புகளை உருவாக்கியிருக்கோம். பிற நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் ஆயிரக்கணக்கானவங்க தவிப்போடு வாழ்றாங்க
‘‘பார்வையில்லாதவங்க வாழ்க்கை ரொம்பக் கொடுமை தோழர். சின்ன வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து முடிஞ்சிடுறாங்க. இசை அல்லது இலக்கியம் படிச்சு வாத்தியாராகலாம். அதைத்தாண்டி வேறெந்தக் கனவும் அவங்களால காணமுடியாது. படிக்க, எழுதன்னு எல்லாத்துக்கும் மத்தவங்க உதவி தேவை. பல நேரங்கள் சுயமரியாதையை இழக்க வேண்டியிருக்கும். மத்தவங்க துணையில்லாம வாழவே முடியாதான்னு ஒரு கேள்வி வந்தப்போதான், அதுக்கான வாய்ப்புகளை நாமதான் உருவாக்கணும்னு முடிவு செஞ்சேன். இன்னைக்கு அது சாத்தியமாகியிருக்கு தோழர்...’’
அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது, ரகுராமனிடம் பேசும்போது. மேலே அண்ணாந்து இமைமூடிய விழிகளில் நிழல் பார்த்துப் பேசுகிறார். அவ்வளவு நிதானமும் கனிவும் அவரது முகத்தில். நந்தனம் அரசுக் கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் ரகுராமன், பார்வைச்சவால் கொண்ட பல நூறு இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார். தொழில்நுட்பங்களின் மூலம் எவரின் துணையுமின்றிக் கற்று, இன்று டெஸ்டிங் இன்ஜினீயராக, புராஜெக்ட் அதிகாரியாக, அசோசியேட்டாக, வாடிக்கையாளர் உதவி அதிகாரியாக எனப் பல நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள்.
கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் மூன்றாவது பேஸ் கட்டடத்துக்குள் ஒரு சிறிய வெளியில் இயங்குகிறது, ரகுராமன் வழிகாட்டுதலில் செயல்படும் பயிற்சி மையம். பார்வைச்சவால் கொண்ட மாணவர்களுக்கான கல்விசார் திறன் பயிற்சி, பட்டதாரிகளுக்கான பணித்திறன் பயிற்சி எனப் பல்வேறு பயிற்சிகள் இங்கே வழங்கப்படுகின்றன. சிறு குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை வாரத்தில் ஏழு நாள்களும் ஏராளமானோர் இங்கு வந்து பயிற்சி பெறுகிறார்கள்.
ரகுராமன் சென்னை, மயிலாப்பூரில் பிறந்தவர். 10 வயதுவரை அவருக்குக் குறைந்தபட்சப் பார்வையிருந்தது.

‘‘அப்போ எனக்குப் பேரே சோடாப்புட்டிதான் தோழர். அவ்ளோ பெரிய கண்ணாடி போட்டிருப்பேன். ரொம்பப் பக்கத்துல வச்சுப் பார்த்தா மங்கலாத் தெரியும். அப்பா கருவூல அதிகாரி. நிறைய சிகிச்சை பார்த்தாங்க. ‘ரெட்டினாவோட வளர்ச்சி குறைவா இருக்கு... சரி பண்றது கஷ்டம்'ன்னு இங்கிருக்கிற மருத்துவர்களெல்லாம் சொல்லிட்டாங்க. ஆனா அப்பா விடலே. இந்தூருக்குக் கூட்டிக்கிட்டுப் போனார். ஆப்பரேஷன் முடிஞ்சதும் இருந்த கொஞ்ச பார்வையும் போயிடுச்சு. அப்போ நான் 6-ம் வகுப்பு படிச்சுக்கிட்டிருந்தேன்.
பார்வையில்லாமப் பிறக்குறது வேற உளவியல். கொஞ்ச காலம் பார்வையோட இருந்துட்டு, இனிமே வெளிச்சமே இல்லேன்னு ஆகுறது ரொம்பக் கொடுமை. அதுவரைக்கும் நான் எல்லோரும் படிக்கிற பள்ளியிலதான் படிச்சேன். 9-ம் வகுப்புக்கு அடையாறுல இருக்கிற செயிண்ட் லூயிஸ் பார்வையற்றோர் பள்ளிக்குப் போயிட்டேன். அங்க போற வரைக்கும் எனக்கு பிரெய்லி தெரியாது. அப்பா ரயில்வே ஸ்டேஷன்ல ஒரு பார்வையற்றவரைப் பார்த்து ‘என் பையனுக்கு பிரெய்லி கத்துக்கொடுக்க முடியுமா'ன்னு கேட்டு வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தார். அவர் பேரு பாஸ்கர். அவர் எனக்கு பிரெய்லி கத்துக்கொடுத்தார். பார்வையில்லாதவங்க நடக்கிறதுக்கான ஏற்பாடுகூட இங்கே இல்லை தோழர். ஒவ்வொரு நிமிடமும் சவால்தான். எல்லாப் புலன்களையும் ஒண்ணுதிரட்டி மனக்கூர்மையில நடக்கணும்.
அப்போ நான் தாம்பரத்துல இருந்தேன். வாசிப்பாளர்கள் இருந்தாதான் நாங்க பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகவே முடியும். ஆனா கிடைக்கவே மாட்டாங்க. தொடர்ந்து முயற்சி செஞ்சு தாம்பரம் எம்.ஐ.டி-யில இருந்து சில மாணவர்கள் வாசிப்பாளர்களா வந்தாங்க. பிளஸ் டூவுல ஓரளவுக்கு மார்க் வாங்கிட்டேன். எம்.சி.சி-யில ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். டாக்டர் விஷ்ணு பட், டாக்டர் சிவராமன்னு இறைவனுக்குச் சமமான மனிதர்களை அங்கேதான் சந்திச்சேன். பிள்ளையைப் போல அரவணைச்சுக் கத்துக்கொடுப்பாங்க. எம்.ஏ பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணினேன். ‘வாத்தியாராயிடு... எதிர்காலத்துல பிரச்னை யிருக்காது'ன்னு சொன்னாங்க. பி.எட் முடிச்சுட்டு ஒரு தனியார் பள்ளியில ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியரா வேலை பார்த்தேன்.
கொஞ்சநாள்ல டி.ஆர்.பி தேர்வு வந்துச்சு. கடைசிப் பத்து நாள்கள் மட்டுமே படிச்சு மாநிலத்திலேயே ரெண்டாவதா வந்தேன். திருமால்பூர் அரசுப்பள்ளியில வேலை கிடைச்சுச்சு. இதுக்கு மத்தியில எம்.பில் முடிச்சேன். SET தேர்வு எழுதினேன். 2011-ல உதவிப்பேராசிரியர் ஆகிட்டேன்.
என் 43 வருட வாழ்க்கையை ரொம்ப எளிமையா சொல்லிட்டேன் தோழர். இதுக்குப்பின்னாடி ஒரு தலைமுறையோட வலி இருக்கு. எவ்வளவு அவமானம், புறக்கணிப்பு, துயரம், வாய்ப்பு மறுப்பைக் கடந்து வந்திருப்பேன்னு யோசிக்கவே முடியலே. இன்னைக்குத் தொழில்நுட்பம் ஏகப்பட்ட வாய்ப்புகளை வழங்கியிருக்கு. அதுல ஒரு துளிகூட பார்வையற்றவங்களுக்குக் கிடைக்கலே. எனக்குக் கிடைக்காத வாய்ப்பை அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்காவது உருவாக்கணும்னு யோசிச்சேன். அந்த யோசனைதான் இன்னைக்கு இங்கே கொண்டு வந்திருக்கு...’’ நிதானமாகப் பேசுகிறார் ரகுராமன்.
2005 வாக்கிலேயே பார்வையற்றவர்களுக்கு உதவும் திரை வாசிப்பான் வந்துவிட்டது. JAWS, NVDA போன்ற வாய்ஸ் சாப்ட்வேர்களை இணைத்துவிட்டால், பி.டி.எப், வேர்டு டாக்குமென்ட்களை கம்ப்யூட்டரே படித்துவிடும். மற்றவர்கள் உதவி தேவைப்படாது.
‘‘திரை வாசிப்பான், பார்வைச்சவால் உள்ளவங்களுக்குக் கிடைச்ச வரம். அதை முறையா கத்துக்கிட்டா எவர் துணையுமில்லாமப் படிக்கலாம். தேர்வு எழுதலாம். ஆனா, அதுக்கு அரசாங்கம் மனசு வைக்கணும். பாடப்புத்தகங்களை மாற்றுத்திறனாளிகளோட அணுகுதலுக்கு ஏத்தமாதிரி இணையப் புத்தகங்களா மாத்தித் தரணும். ஆங்கிலத்துல, எதிர்ல நின்னு ஒரு நண்பன் பேசுற மாதிரி அழகான குரல்கள்ல சாப்ட்வேர்கள் வந்திடுச்சு. தமிழ்ல இன்னும் மெஷின்தான் படிக்குது. நுணுக்கமா கேட்டாதான் புரியும். ஆனா இதுவே பெரிய விடுதலை...’’ உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் ரகுராமன்.

பெங்களூரில் ‘Enable India' என்ற அமைப்பு பார்வைச்சவால் கொண்டவர்களுக்குத் தொழில்நுட்பப் பயிற்சிகள் அளித்துவருகிறது. அவர்களின் தொடர்பு ரகுராமனுக்குப் பெரும் வெளிச்சமானது. 2011-ல், ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கோரமண்டல் அமைப்பின் உதவியோடு சென்னையில் கருணவித்யா பவுண்டேஷன் என்ற பயிற்சி மையத்தைத் தொடங்கினார் ரகுராமன்.
‘‘பார்வைச்சவால் கொண்டவங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தணும். கொஞ்சம் பயிற்சியும் முயற்சியும் இருந்தா நீங்க சுயமா நிக்கலாம். எல்லாரும் பார்க்கிற வேலையை நீங்களும் பாா்க்கலாம். தொழில்நுட்பம் அதற்கான கதவைத் திறந்தாச்சுன்னு நம்ப வைக்கணும். ரோட்டரி கிளப்ல கார்த்திக் நாராயணன் சார் ‘உங்க முயற்சிக்குப் பின்னால நிப்போம்’ன்னு நம்பிக்கை தந்தார். 20 கம்ப்யூட்டர், ஒரு சர்வரோடு இந்த மையத்தை ஆரம்பிச்சோம். எல்லா கம்ப்யூட்டர்லயும் திரை வாசிப்பான் இருக்கும். எல்லா சாப்ட்வேரும் அணுகுதலுக்கு எளிதா உருவாக்கினோம்.
அரசுப்பணி வாய்ப்புகளை இலக்கு வச்சோம். வங்கித்தேர்வு, டி.என்.பி.எஸ்.சி தேர்வு, எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்குப் பயிற்சி கொடுக்கத் தொடங்கினோம். எந்தப் பணிக்குப் போகணும்னாலும் ஆங்கிலம் முக்கியமா இருக்கு. அதுக்குத் தனியா பயிற்சி கொடுத்தோம். தனியார் துறையில பார்வையற்றவங்களுக்கான வாய்ப்புகள் ரொம்பவே குறைவா இருக்கு. பார்வையுள்ளவங்க செய்ற வேலைகள்ல 95% பார்வையற்றவங்களாலும் செய்யமுடியும். பார்வையில்லைன்னு கருணை காட்டி எங்களுக்கு யாரும் வேலை தரத்தேவையில்லை. திறமை, தகுதியை உருவாக்கித் தரத் தொடங்கினோம்.
கல்லூரி எனக்கு 2 மணிக்கு முடியும். அதற்குப் பிறகு என் முழுநேரமும் இங்குதான் கழியும். நாலு பேரை சம்பளம் தந்து ஆசிரியர்களா நியமிச்சோம். ரோட்டரியில இருக்கிற வெங்கட்ராமன் சார் ஒருமுறை எங்க பயிற்சி மையத்தைப் பார்த்தார். அவர் ஒரு கே.பி.ஓ நிறுவனம் நடத்துறார். அப்போ 12 பட்டதாரிகள் பயிற்சியில இருந்தாங்க. ஹெச்.ஆரை எங்க சென்டருக்கே அனுப்பி இன்டர்வியூ செஞ்சார். அவங்க நிறுவனத்துக்குத் தகுந்தமாதிரி 2 மாதம் பயிற்சி கொடுத்து 12 பேரையும் தன் நிறுவனத்துக்கே எடுத்துக்கிட்டார்.
அதன்பின் உற்சாகமா இயங்க ஆரம்பிச்சோம். அமேசான், டி.சி.எஸ்-னு பெரிய பெரிய நிறுவனங்களுக்கெல்லாம் எங்க மாணவர்கள் பணிக்குப் போக ஆரம்பிச்சாங்க. பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாமே தங்கள் பணிச்சூழலைப் பார்வைச்சவால் கொண்டவர்களும் எளிதா இயங்குற மாதிரிதான் வடிவமைச்சிருக்காங்க. அதனால வாய்ப்புகள் பெரிசாச்சு. இப்போ வரைக்கும் 4,000 பேருக்கு மேல பயிற்சி முடிச்சிருக்காங்க. பலர் வேலைக்குப் போயாச்சு.
நிறைய கல்வி நிறுவனங்கள் அவங்க கேம்பஸ்லயே இதுமாதிரி பயிற்சி மையங்களைத் தொடங்க விரும்பினாங்க. அங்கேயெல்லாம் போய் பயிற்சி தர ஆரம்பிச்சோம். நிறைய இ-புத்தகங்கள் இணையத்துல இருக்கு. ஆனா, பார்வைச்சவால் கொண்டவங்க எளிதா எடுத்துப் படிக்கிற மாதிரியில்லை. தமிழக அரசோட பாடநூல்கள்கூட அணுகுதலுக்கேற்ற மாதிரி இல்லை. மத்தவங்களைக் குறை சொல்லிக்கிட்டே இருக்காம நாமளே அதற்கான முனைப்பை எடுக்கலாம்னு கொஞ்சம் பேரைப் பணிக்கமர்த்தி ஒரு பப்ளிகேஷன் யூனிட்டை ஆரம்பிச்சோம். பள்ளி, கல்லூரிப் பாடநூல்கள், வேலைவாய்ப்புக்கான நூல்கள்னு முக்கியமான 150 நூல்களைப் பார்வையில்லாதவங்களும் வாசிக்கிற மாதிரி உருவாக்கிட்டோம். காக்னிசென்ட் பவுண்டேஷன் நிறுவனத்தின் பங்களிப்போட 300 மொபைல்கள் வாங்கி சிறப்புப்பள்ளிகள், அரசுப்பள்ளிகள்ல படிக்கிற பார்வைச்சவால் கொண்ட மாணவர்களுக்குத் தந்து வாசிக்கிற பழக்கத்தையும் உருவாக்கினோம்.

2013-ல டெல்லியைச் சேர்ந்த கார்த்திக் சானேங்கிற சி.பி.எஸ்.இ மாணவன் கடும் போராட்டத்துக்குப் பிறகு யாரோட உதவியும் இல்லாம கம்ப்யூட்டர் மூலம் பிளஸ் டூ தேர்வை எழுதி பாஸ் பண்ணினார். அதுக்கப்புறம்தான் சி.பி.எஸ்.இ, ‘பார்வையில்லாத மாணவர்கள் சயின்ஸ், மேத்ஸ் பிரிவு படிக்கலாம். கம்ப்யூட்டர் மூலம் தேர்வெழுதலாம்'ங்கிற விதியையே உருவாக்குச்சு. சானேவுக்கு ஐ.ஐ.டி-யில சீட்தர மறுத்துட்டாங்க. அமெரிக்காவுல ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டி மெரிட் ஸ்காலர்ஷிப் கொடுத்து அழைச்சுச்சு. முடிச்சிட்டு இப்போ மைக்ரோசாப்ட்ல வேலை செய்றார். சானேயை இங்கு அழைச்சுட்டு வந்து மாணவர்கள் மத்தியில பேசவச்சோம். தமிழக அரசு இன்னும் பார்வையற்ற மாணவர்கள் சயின்ஸ், மேத்ஸ் குரூப் எடுக்கிற விஷயத்துல தெளிவா முடிவெடுக்கலே. பள்ளிகள்ல கிடைக்காத அறிவியலையும் கணிதத்தையும் நாங்க கத்துக் கொடுக்கத் தொடங்கினோம்.
நாங்க செய்றது ஒரு தலைமுறைக்கான வேலை. சென்னையில வாய்ப்புகளை உருவாக்கியிருக்கோம். பிற நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் ஆயிரக்கணக்கானவங்க தவிப்போடு வாழ்றாங்க. அவங்க இடத்துக்கெல்லாம் இந்த வாய்ப்புகளைக் கொண்டு சேர்க்கணும். நிறைய சிறப்புப்பள்ளிகள்ல ஆசிரியர்கள் இல்லை. மற்ற மாணவர்களோட சேர்ந்து படிக்கிற பார்வையில்லாத மாணவர்களுக்கு உரிய வசதிகள் செய்யப்படலே. தமிழக அரசு அவங்களை கருணைக்கண் கொண்டு பார்க்கணும்...’’ என்கிறார் ரகுராமன்.
விடைபெறும் முன் ரகுராமனிடம் கேட்டேன்... ‘‘ஏன் தோழர் இன்னும் திருமணம் செஞ்சுக்கலே?’’ இறுக்கமாகிய முகம் சில நொடிகளில் இயல்பான மலர்ச்சிக்கு மாறியது. ‘‘விட்டுட்டேன் தோழர். ஒருத்தி ‘நீதான் உலகம்’னு எனக்காகவே காத்திருந்தா... எல்லாத்தையும்விட எனக்கு இந்த வேலைதான் பெருசாத் தெரிஞ்சுச்சு. அப்பா சமீபத்துல இறந்துட்டார். அவர் இறந்தபிறகு வாழ்க்கை ரொம்ப வெறுமையா இருக்கு. இப்போ பேச்சுத்துணைக்காவது ஒருவர் வேணும்னு தோணுது...’’ முகம் பார்த்துச் சொல்லிச் சிரிக்கிறார்.
எல்லாக் கனவுகளும் வசப்படும் தோழர்!
- வருவார்கள்