மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 1

ஜெயில்... திகில்... மதில்
News
ஜெயில்... திகில்... மதில்

புதிய தொடர்

தொடர் ஆசிரியர் மற்றும் தொடரைப் பற்றி...

ஜி.ராமச்சந்திரன். தமிழ்நாடு சிறைத் துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றியவர்; 1967-2006 இடைப்பட்ட காலகட்டத்தில் வார்டன் பதவியில் ஆரம்பித்து டி.ஐ.ஜி வரை ஒன்பது பதவிகளை வகித்து ஓய்வுபெற்றவர்; சிறப்பாக பணிபுரிந்ததற்காக 1985-ல் தமிழக முதலமைச்சரிடம் விருதும், 2002-ம் ஆண்டு ஜனாதிபதி விருதும் பெற்றவர். தமிழகத்தின் 12 சிறைகளின் சந்துபொந்து களிலெல்லாம் புகுந்து வெளிவந்தவர். அரசியல் கைதிகள், அறம் காக்கக் கைதானவர்கள், சித்தாந்தத்துக்காகச் சிறைபட்டவர்கள், தாதாக்கள், கூலிப்படையினர், சைக்கோ கில்லர்கள், சொத்துக் காக சொந்தங் களையே கொன்றவர்கள், சாதியக் கொலையாளிகள், சந்தர்ப்ப வசத்தால் கொலையாளி ஆனவர்கள், டைம்பாஸ் அக்யூஸ்ட்டுகள், பிக்பாக் கெட்டுகள், பிளேடு போடுபவர்கள் என இவர் கடந்து வந்த மனிதர்கள் கலவையானவர்கள்.

ஜி.ராமச்சந்திரன்
ஜி.ராமச்சந்திரன்

பொதுவாக, சிறையில் உள்ள கைதிகள் மனஅழுத்தத்தில் தவிப்பது சிறைக்கே உரிய அசாதாரண அம்சம். ஏக்கர் கணக்கில் விரிந்துகிடக்கும் சிறை வளாகங்களில் கைதிகள் சிலர் மனஅழுத்தம் தாங்காமல் எங்கேயாவது சென்று பதுங்கி விடுவார்கள்; சுவர்மீது ஏறி ஒளிந்துகொள்வார்கள்; மரக்கிளையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்கிவிடுவார்கள். மதில் நுனியில் நின்றுகொண்டு குதிக்கப்போவதாக மிரட்டும் துயரங்கள் அனுதினமும் தாள முடியாதவை. சில நேரம் தற்கொலையும் செய்துகொள்வர். ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் அட்டெண்டன்ஸ் எடுத்து கைதிகள் அனைவரும் பத்திரமாக உள்ளே இருக்கிறார்களா என உறுதிப்படுத்துவதற்குள் இவரைப் போன்ற அதிகாரிகளுக்கு தாவு தீர்ந்து விடும். இன்னும் சொல்லப் போனால் ராமச்சந்திரனைப் போன்றோர் தங்கள் பணிக்காலத்தில் அதிகாரபூர்வமற்ற கைதிகளாகவே வாழ்நாள்களைக் கடத்தியிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்!

தமிழகத்தில் கடந்த கால் நூற்றாண்டில் நடந்த அரசியல் களேபரங்கள், குற்றச்சம்பவங்கள் அனைத்திலும் தொடர்புடைய வர்கள் பெரும்பாலும் ராமச்சந்திரனின் கண்பார்வையில் தான் இருந்தார்கள். கருணாநிதி, வைகோ, சசிகலா, ஜெயேந்திரர் உள்ளிட்ட வி.ஐ.பி-களை சிறையில் லாகவமாகக் கையாண்ட அனுபவம் இவருக்கு உண்டு. அட்டைப்பட ஜோக் வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் நிறுவனர் எஸ்.பாலசுப்ரமணியன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், ராமச்சந்திரனுடன் அவர் பழகிய அனுபவங்கள் அலாதியானவை. ஆட்டோ சங்கர் தொடங்கி வெல்டிங் குமார் வரை ஆபத்தான அக்யூஸ்ட்டுகளையும் இவர் சமாளித்த அனுபவங்கள் திகிலூட்டுபவை. சிறையில் இருந்த சசிகலாவை ஒருமுறை காணவந்த ஜெயலலிதா, இவரிடம் கோபம்கொண்டு எழுந்து சென்ற சம்பவமும் நடந்திருக்கிறது. சாமியார் பிரேமானந்தாவின் மற்றுமொரு மறுபக்கம் ராமச்சந்திரன் மட்டுமே அறிந்த ரகசியம். சரவண பவன் அண்ணாச்சி, டாக்டர் பிரகாஷ்... ஆகியோர் இவரிடம் பகிர்ந்து கொண்ட வெளிவராத தகவல்கள் ஏராளம்.

தமிழகத்தில் கடந்த கால் நூற்றாண்டில் நடந்த அரசியல் களேபரங்கள், குற்றச்சம்பவங்கள் அனைத்திலும் தொடர்புடையவர்கள் பெரும்பாலும் ராமச்சந்திரனின் கண்பார்வையில் தான் இருந்தார்கள். கருணாநிதி, வைகோ, சசிகலா, ஜெயேந்திரர் உள்ளிட்ட வி.ஐ.பி-களை சிறையில் லாகவமாகக் கையாண்ட அனுபவம் இவருக்கு உண்டு.

1999-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய சென்னை சிறைக்கலவரம் நினைவிருக்கிறதா? பாக்ஸர் வடிவேலு சிறையில் இறந்துபோன விவகாரத்தில் வெடித்த கலவரம் அது. அலுமினியத்தட்டுகள் கத்திகளாகி ரத்தம் பார்த்தன. சிறைக்கம்பிகள் வேல்கம்புகளாகி நெஞ்சம் துளைத்தன. சிறைக்கைதிகளில் பலரும் வன்முறைத் தாண்டவம் ஆட, அப்பாவிக் கைதிகள் தொடங்கி அதிகாரிகள் வரை தாக்கப்பட்டார்கள். சிறையைத் தகர்த்தி ஒட்டுமொத்த கைதிகளும் வெளியேறத் துடித்தனர். அப்போது சிறையில் இருந்த கைதிகள் மொத்தம் 2,100 பேர். வேறு வழியில்லாமல் கலவரத்தை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தார்கள். அதில் நான்கு பேர் ராமச்சந்திரனின் துப்பாக்கிக் குண்டால் பலியானது, அவரின் மனத்தில் வடுவாக மாறிப்போன... மறக்க முடியாத வேதனை!

ஆட்டோ சங்கரை சேலம் சிறையில் தூக்கிலிடும் முன்பாக அவன் கடைசி நொடிகளில் பகிர்ந்துகொண்டவை, இவர் இன்னமும் இறக்கிவைக்க முடியாத பாரங்கள். நக்ஸலைட்டுகள், உல்ஃபா, காஷ்மீர், காலிஸ்தான், அல்-உம்மா பயங்கரவாதிகளை இவர் சந்தித்த திக் திக் நிமிடங்கள் திகிலானவை. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்களில் ஒருவரான கிட்டுவின் அணுகுமுறைகளை இவர் சொல்லச் சொல்ல கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இப்படி சமூகத்தின் கவனிக்கப்பட்ட மனிதர்கள் மட்டுமல்ல... விபத்தாக சிறையுண்ட விளிம்புநிலை மனிதர்களையும் கண்டுணர்ந்து, அவர்களை கருணையுடன் வெளியே கொண்டுவரச் செய்தவர் ராமச்சந்திரன்.

கொல்கத்தாவிலிருந்து அப்படித்தான் வந்தாள் அந்தச் சின்னத்தாய்!

(கதவுகள் திறக்கும்)