
புதிய தொடர்
சின்னத்தாய் அவள்!
சென்னை மத்திய சிறைச்சாலை. 1987 அல்லது 1988-ம் ஆண்டு என்பதாக நினைவு... நல்ல வெயில்காலம். அப்போது நான் ஜெயிலர். ஒரு சிறைக்கு மொத்த பொறுப்பும் ஜெயிலர்தான். நல்லது கெட்டது அனைத்தும் அவர் தலையில்தான் விடியும். காலை 5 மணிக்கெல்லாம் சிறைக்குள் இருக்க வேண்டும். இருள் விலகாத அதிகாலை 5.30 மணிக்கு கைதிகளை ‘அன் - லாக்’ செய்ய வேண்டும். அனைவரையும் அமரவைத்து ‘தலை’ எண்ண வேண்டும். பதிவேட்டில் ஆட்கள் இருப்பு சரிபார்க்க வேண்டும்.
பிறகு கிச்சன் விசிட். இன்றைக்கெல்லாம் விதவிதமாக டிபன், மதியத்துக்கு சிக்கன் என சிறைவாசிகள் வெளுத்துக்கட்டுகிறார்கள். அன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. கூழோ கஞ்சியோ களியோ முதல் கவளம் என் தொண்டையில்தான் இறங்க வேண்டும். அது நன்றாக இருந்து, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வாமல் நானும் நன்றாக இருந்தால்... பிறகுதான் சிறைவாசிகளுக்கு அது உணவாகச் சென்று சேரும். பிற்பாடு வழக்கமான வேலைகள். மாலை 6 மணிக்குமேல் மீண்டும் கைதிகளை ‘லாக் - அப்’ செய்ய வேண்டும். ‘தலை’ எண்ணி பதிவேட்டில் குறித்துவைக்க வேண்டும். ‘தலை’ கணக்கு சரியாக இருந்தால், அன்றைக்கு என் ‘தலை’ தப்பும். இல்லையென்றால் ஜெயில்... மதில்... மரம் எனத் தேட வேண்டும். அப்படி இப்படி என நான் வீட்டுக்குச் செல்ல இரவு 10 மணிக்கு மேலாகிவிடும். கடந்த அத்தியாயத்தில் சொன்னதுபோல் நாங்கள் எல்லோரும் அதிகாரபூர்வமற்ற சிறைவாசிகளே.
அன்றைக்கு காலை 10.30 மணி இருக்கும். நான் ஜெயிலர் இருக்கையில் அமர்ந்திருந்தேன். பெண்கள் சிறைச்சாலை வார்டன் ஒருவர் ஓட்டமும் நடையுமாக என்னிடம் வந்தார். முகத்தில் பதற்றம். ‘‘சார்... கொலை கேஸில் விசாரணைக் கைதியாக வந்திருக்கும் பெண் ஒருத்தி இரண்டு நாள்களாகச் சாப்பிடவில்லை. அழுதுகொண்டே இருக்கிறாள். உடல்நிலை மோசமாக இருக்கிறது” என்றார். அவ்வப்போது நடப்பதுதான்.

நான் எழுந்து நடந்தேன். அந்தப் பெண்ணைப் பார்த்தேன். இளம் தாய் அவர். ஆங்கிலத்தில் அரற்றிக்கொண்டிருந்தார். அடிபட்ட பறவையைப்போல் இருந்தது அவரின் நிலைமை. துவண்டுபோன கண்களில் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. எதையோ நினைத்து திரும்பத் திரும்ப மார்பில் அடித்துக்கொண்டு அழுதார். மெதுவாகப் பேச்சுக்கொடுத்தேன். ஆறுதலுடன் சில வார்த்தைகளைச் சொன்னேன். தமிழ் தெரியாதுபோலிருக்கிறது. அழுகையினூடே திக்கித் திக்கி, தடுமாறி ஏதோ பேசினார். அது இந்தி பாஷையும் அல்ல. ஒருவேளை பெங்காலி மொழியாக இருக்கலாம். திரும்பவும் நான் அவரிடம் மிகுந்த கனிவுடன் ஆங்கிலத்தில், ‘‘நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் கண்களில் உண்மையைப் பார்க்கிறேன். எதனாலோ நீங்கள் மிகவும் பாதிக்கப் பட்டிருப்பதாக உணர்கிறேன். உங்களைப் பார்க்கும்போது என் சகோதரியைப்போல் இருக்கிறது. நான் உங்களுக்கு உதவ வேண்டுமெனில், உங்களுக்கு என்ன நடந்தது என்பதை முழுமையாகச் சொல்லுங்கள்’’ என்று பொறுமையாகச் சொன்னேன். ஒருவழியாக அவரது அழுகை நின்றது.
‘‘நான் கொல்கத்தாவில் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவள்; இன்ஜினீயரிங் படித்தவள்” என்றவர் திடீரென நிறுத்தி, ‘‘எனக்கு ரொம்பப் பசிக்கிறது. ஏதாவது கிடைக்குமா, சாப்பிட்டு பிறகு பேசுகிறேன்’’ என்றார். அப்போது ஜெயிலில் கஞ்சிதான் இருந்தது. கொண்டுவரச் சொன்னேன். அதை அவர் வாயில் வைத்ததும், அவருக்கு குமட்டிக்கொண்டு வந்தது. பிறகு அவரே, ‘‘எங்கள் ஊரில் இதுபோன்ற உணவுப்பழக்கம் இல்லை. அதேசமயம் உயர்தரமான உணவு வேண்டும் எனக் கேட்கவில்லை. ஏதாவது பிரெட் கிடைத்தால்கூட போதும். சாப்பிட்டு இரண்டு நாள்களாகின்றன’’ என்றார்.
அவரின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, ஸ்பென்ஸர் பிளாசாவுக்கு ஆள் அனுப்பி ரொட்டி பாக்கெட்டும் மினரல் வாட்டர் பாட்டிலும் வாங்கிவரச் சொல்லி, கொடுத்தேன். பிறகு, அவர் சொன்னதை இங்கே காட்சிகளாக விவரிக்கிறேன்...
“ஏய் இதோ பார்றா. நைனா டாபாய்க்கிறாரு!” என்றபடியே அந்த அறைக்கதவை உதைத்துத் தள்ளி உள்ளே செல்கிறது அந்தக் கும்பல். உள்ளே போராட்டம் நடக்கும் சத்தம்.
இரண்டு நாள்களுக்கு முந்தைய தினம் இரவு... சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். டிக்கெட் கவுன்டரில் கையை நீட்டி கொல்கத்தாவுக்கு டிக்கெட் கேட்கிறாள் அந்த இளம் பெண். கையில் ஒன்றரை வயது குழந்தை. ‘‘கொல்கத்தா ரயில் போய்விட்டது’’ என்றார் கிளர்க். அடுத்து என்ன செய்வது, அந்த இரவில் எங்கே தங்குவது என்ற குழப்பம் அவளுக்கு! குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது. என்ன செய்வது எனப் புரியாமல், சென்ட்ரலைவிட்டு இறங்கி சாலையில் நடக்க ஆரம்பித்தாள். இரவு 10 மணிக்குமேல் இருக்கும். இன்றைக்குப் போன்று அப்போதெல்லாம் பெரியளவில் ஆட்கள் நடமாட்டம் இருக்காது. தனியாக இளம்பெண் செல்வதைப் பார்த்து, பிளாட்பாரத்தில் அரட்டையடித்துக்கொண்டிருந்த வாலிபர்கள் சிலர் அவளை நோக்கி வர... பதற்றமாகி ஓட ஆரம்பிக்கிறாள்.
பெரியமேடு ஏரியா... தெருவிளக்கெல்லாம் இல்லை. கும்மிருட்டு. `‘நைனா... வசதியான இடத்துக்குத்தான் வந்து பாப்பா மாட்டியிருக்கு.
நீ அந்தாண்ட போ... நாங்க இந்தாண்ட வளைக்கிறோம்’’ என்றபடி வேட்டைநாய்கள் கணக்காக ஸ்கெட்ச்போட தொடங்கினார்கள். அந்த இருட்டில் சிலரின் கைகளில் திடீரென பட்டன் கத்திகள் முளைத்து வெள்ளியாய் மின்னின. அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஒரு குறுக்குச்சந்தில் புகுந்து ஓடத் தொடங்கினார் அந்த இளம்பெண். ஒரு வளைவில் திரும்பியவுடன் ஒரு விடுதி இருந்தது. கதவைத் தள்ளிக்கொண்டு தபதபவென உள்ளே நுழைந்தாள்.
Also Read
ரிசப்ஷனில் இருந்த நபர், `‘என்னம்மா வேணும்?’’ என்றார். அவளுக்கு பயத்தில் வார்த்தைகள் வரவில்லை. `‘காப்பாத்துங்க... ஒரு ரூம் கொடுங்க... என் குழந்தை... என் குழந்தை’’ என்று அழுகையுடன் படபடக்கிறாள். வெளியே ஆட்களின் சத்தம். டிரம்மோ, பழைய சைக்கிளோ எதையோ உருட்டுகிறார்கள்... உடைக்கிறார்கள். விடுதி மேலாளர் அவளின் நிலையைப் புரிந்து கொண்டு, அவசரமாக ஒரு சாவியை எடுத்து நீட்டுகிறார். ஓர் அறையைக் காட்டி, ‘`உள்ளே போயிடும்மா’’ என்று தள்ளாத குறையாக உள்ளே அனுப்பிவிடுகிறார். அவளும் விருட்டென அந்த அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்துகிறாள்.
குடும்பத்தில் தினமும் சண்டை. வேறுவழி இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் இந்தப் பெண்.
பின்னால் விரட்டி வந்த கும்பலும் விடுதிக்குள் நுழைந்துவிட்டது. அவர்கள் மேலாளரைப் பார்த்து கத்தியைக் காட்டி, ‘`ஏய்... எல்லா பக்கமும் பாத்துட்டோம். அவ இங்கதான் வந்திருக்கணும். ஒழுங்கா அனுப்பிடு. இல்லைன்னா இந்த இடமே எங்களுக்கு ரொம்ப வசதிதான்’’ என்று கபகபவெனச் சிரித்தார்கள். மேலாளர் நடுங்கியபடியே, ‘`இல்ல... யாரும் இங்க வரலை’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அறைக்குள்ளிருந்து குழந்தை வீறிடும் சத்தம் கேட்கிறது.
`‘ஏய்... இதோ பார்றா. நைனா டபாய்க்கிறாரு!’’ என்றபடியே அந்த அறைக்கதவை உதைத்துத் தள்ளி உள்ளே செல்கிறது அந்தக் கும்பல். உள்ளே போராட்டம் நடக்கும் சத்தம். அதற்குள் மேலாளர் தெருவில் இறங்கி அக்கம்பக்கம் வீடுகளின் கதவை ஓங்கித்தட்ட, சிறிது நேரத்தில் கூட்டம் சேர்ந்துவிடுகிறது. இதைக் கண்ட அந்தக் கும்பல் ஓடிவிட்டது.
அந்தப் பெண்ணுக்கு எதுவும் நேர்ந்திருக்க வில்லை. ஆனால், அந்த ரெளடிகளுடன் கடுமையாகப் போராடியிருக்கிறாள். நகக்கீறல் கள்... உடை லேசாகக் கிழிந்து இருந்தது. ஆனால், அந்தக் குழந்தை? இந்தக் களேபரத்தில் பெண்ணின் கை தவறி குழந்தை கீழே விழுந்திருக்கிறது. அது பேச்சு மூச்சு இல்லாமல் மூலையில் கிடந்தது. அந்தப் பெண் பீதியடைந்து, குழந்தையை உலுக்குகிறாள். ஆனால், தலை துவண்டுவிட்டது. பயந்துபோன விடுதி மேலாளர், `‘அம்மா... உங்களுக்கு உதவி செய்யப்போய் நான் மாட்டிக்குவேன்போலிருக்கு. தயவுசெஞ்சு இங்கிருந்து கிளம்பிடுங்கம்மா’’ என்று கையெடுத்துக் கும்பிட... அவரிடம், `‘ஆஸ்பத்திரி எங்கே இருக்கு?’’ என்று கத்தினாள் அந்தப் பெண். `‘அதோ... மெயின்ரோட்டுக்குப் போய் திரும்பின உடனே வரும்’’ என்று அவர் சொல்லி முடிப்பதற்குள், குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேகவேகமாக ஓடினாள்.
சென்ட்ரல் எதிரே உள்ள அரசு பொதுமருத்துவ மனை அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த சிலர் ஏதோ பேசிக்கொண்டிருக் கிறார்கள். இவள் குரல்கொடுத்தும் யாரும் சட்டைசெய்ய வில்லை. ஆவேசமான அந்தப் பெண், ‘‘என் குழந்தை ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’’ என்று அந்தக் கட்டடமே அதிரும்படி கத்துகிறாள். அந்த இடம் நிசப்தமானது. கோபமாக அருகே வந்த மருத்துவ மனைப் பணியாளர் ஒருவர், குழந்தையைத் தொட்டுப்பார்க்கிறார். ‘‘என்ன நடந்தது?’’ என்று கேட்கிறார்.
‘‘குழந்தை சுவரில் மோதிவிட்டது. அதன் பிறகு அசைவு இல்லை’’ என்று படபடப்பாகச் சொல்கிறாள். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவப் பணியாளர், அது இறந்துவிட்டதை உறுதிசெய்கிறார். பிறகு, ‘‘நீ உன் குழந்தையைக் கொன்றுவிட்டாய். அது இறந்து அரை மணி நேரம் ஆகிவிட்டது. போலீஸை அழைத்தாக வேண்டும்’’ என்றபடி போலீஸுக்கு போன் செய்கிறார். விரக்தியின் உச்சிக்கே சென்ற அந்தப் பெண், தலையில் கைவைத்தபடி மயங்கி விழுகிறாள்.
*******
இப்படித்தான் சிறைச்சாலைக்குள் அவள் வர நேர்ந்தது. அவளை பெயிலில் எடுக்க ஆள் இல்லை. அந்தப் பெண்ணின் கணவர், கொல்கத்தாவில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர். தாயார், கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியை. ஒரே பெண். திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், ஒரு நாள் வீட்டில் அந்தப் பெண் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியின் உச்சிக்கே கொண்டுசென்றது. தன் அம்மாவும் கணவருமே நெருக்கமாக இருந்திருக்கின்றனர்.
அந்தப் பெண்ணின் தாயாருக்கும் கணவனுக் கும், ஏற்கெனவே தவறான உறவு இருந்திருக்கிறது. அந்த உறவைத் தொடர்வதற்காகவே தன் பெண்ணை மணமுடித்துவைத்திருக்கிறார் அந்தத் தாய். இவள் தட்டிக்கேட்கப்போய், இருவரும் ‘‘ஆமாம்... அப்படித்தான்’’ என்றதுடன் இன்னும் பகிரங்கமாக இவள் முன்னிலையிலேயே நெருக்கமாக இருந்திருக்கின்றனர். குடும்பத்தில் தினமும் சண்டை. வேறுவழியில்லாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் இந்தப் பெண். மனநிம்மதியைத் தேடி, பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்திருக்கிறார். அவரின் வீட்டிலும் யாரும் கண்டுகொள்ளவில்லை; தேடவுமில்லை போலிருக்கிறது. அரவிந்தர் ஆசிரமத்துக்குப் போய்விட்டு சென்னைக்கு வந்து, கொல்கத்தா போவது அந்தப் பெண்ணின் திட்டம். அதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டன.
‘எப்படி அந்தப் பெண்ணுக்கு உதவுவது?’ என யோசித்தபோதுதான் ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் நினைவுக்குவந்தார். அவரைப் பற்றி பிறகு ஒரு சமயம் சொல்கிறேன். அவருக்கு போன் செய்தேன். விவரங்களைச் சொன்னேன். பொறுமையாகக் கேட்டுக் கொண்டவர், வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்தார். அப்போது போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மனிதாபிமானத்துடன் சில உதவிகளைச் செய்தார். நீதிமன்றம், ஜெயில் என சில வாரங்கள் ஓடின. ஒருவழியாக அந்த அப்பாவிப் பெண்ணும் வெளியே வந்தார்.
என் வீட்டுக்கு அழைத்துவந்து என் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தினேன். என் மனைவி ஜெயஸ்ரீ அவரைக் கட்டியணைத்து, சில உடைகளைக் கொடுத்து உடுத்திக்கொள்ளச் செய்தார். அந்தப் பெண்ணின் தலையில் பூ சூடி, நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டார். என் பிள்ளைகள் பாலாஜியும் கடைக்குட்டி லட்சுமியும் அவரிடம் ஒட்டிக்கொண்டார்கள். ‘‘நான் கொல்கத்தாவுக்குப் போக வேண்டும்’’ என்றார். எவருக்கும் சொந்த மண்ணைவிட பாதுகாப்பான இடம் வேறு ஏது?
அதே சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் ஏற்றிவிட்டேன். வரும்போது கையில் குழந்தை யுடன் வந்தவள், திரும்பிப் போகும்போது... வெற்றுக்கைகளுடன் கண்ணீர் தளும்ப என்னைப் பார்த்துக் கைகூப்பினார். அதில் ஆயிரம் அர்த்தங்கள். ரயில் ஜன்னலோரம் கையசைத்தபடியே அவர் என்னைக் கடந்துபோன காட்சி, அழியாத ஒரு சித்திரமாக எனக்குள் பதிந்து கிடக்கிறது!
(கதவுகள் திறக்கும்)