மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 3 - ஆட்டோ சங்கரின் கடைசி முத்தம்!

 ஆட்டோ சங்கரின் இறுதி நிமிடங்கள்
News
ஆட்டோ சங்கரின் இறுதி நிமிடங்கள்

“அதெல்லாம் வேணாம் சார். நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன். யாரையும் எதுவும் செய்ய மாட்டேன்’’

ஆறு கொலைகளைச் செய்த ஆட்டோ சங்கருக்கு, செங்கல்பட்டு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது. சில அரபுநாடுகளைப்போல் இங்கே உடனேயெல்லாம் தூக்கிலிட முடியாது.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், கவர்னருக்கு கருணை மனு, ஜனாதிபதிக்கு கருணை மனு என, குற்றவாளிகளுக்கு பலகட்ட வாய்ப்புகள் உள்ளன. ஒருவன் எத்தகைய குற்றம் செய்திருப்பினும் ஒவ்வோர் உயிருக்கும் இங்கே பெரும்மதிப்பு உண்டு. அதுவே நமது ஜனநாயகத்தின் சிறப்பும்கூட.

அன்றைய காலகட்டத்தில் ஆட்டோ சங்கரின் தூக்குத்தண்டனை ஏகத்துக்கும் எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்தது. பலமுறை கடைசி சில மணி நேரத்தில் அவரது தூக்குத்தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. விடியாமலேயேபோகும் எனக் கருதப்பட்ட சங்கரின் இறுதி இரவுகள் பல, பகலவனைக் கண்டது இப்படித்தான். இன்றைக்கு நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கான தூக்குத்தண்டனை மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளதே... இதேபோன்றதொரு நிலைமை அன்றைக்கும் நிலவியது. அதனாலேயே, இந்த முறையும் தனக்கான தூக்குத்தண்டனை இறுதி நிமிடங்களில் தள்ளிவைக்கப்படும் என நம்பிக்கையுடன் காத்திருந்தார் சங்கர். அவரது பேச்சில் அவ்வளவு தன்னம்பிக்கை.

1995-ம் ஆண்டு, ஏப்ரல் 26-ம் தேதி. மறுநாள் 27-ம் தேதி வியாழக்கிழமை அதிகாலையில் சங்கருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டும்.

சேலம் மத்திய சிறையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது டெல்லியில் உள்ள பிரபலமான தொலைக் காட்சி நிறுவனம் ஒன்று, ‘ஆட்டோ சங்கருக்கான தூக்குத்தண்டனையைப் படமாக்க வேண்டும்’ என்று சிறைத்துறை தலைவரிடம் கோரிக்கைவைத்தது. விதிகளில் அதற்கு இடமில்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், தொலைக்காட்சி நிறுவனத்தினரோ, “நீங்கள் அனுமதிக்கவில்லை என்றாலும் நாங்கள் அதை எப்படியும் எடுத்துவிடு வோம்” என்று சவால் விட்டனர். அதுமட்டும் நடந்துவிட்டால் சிறைத் துறைக்கு வேறு களங்கம் தேவையில்லை. பதற்றம் பற்றிக்கொள்ள... பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

கோவை சரக டி.ஐ.ஜி-யும் சேலம் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சேலம் மத்திய சிறையில் தூக்குமேடை, சிறைக்கு வெளியே வேறொரு வளாகத்தில் இருந்தது. ஜெயிலர் அலுவலகத்தின் பின்பக்கமாக ஒரு வாயில் இருக்கும். அந்த வழியில் தூக்குத்தண்டனைக் கைதி தூக்குமேடைக்குக் அழைத்துச் செல்லப்படுவார். ஜெயிலர் அலுவலகத்துக்கும் தூக்கு மேடைக்கும் இடைப்பட்ட தூரத்தில் மேற்கூரை எதுவும் இல்லை. தொலைக்காட்சி நிறுவனத்தினர் மர உச்சியில் இருந்தோ கட்டடத்தின் உச்சியில் இருந்தோ தொலைநோக்கு கேமரா மூலம் படம் எடுத்துவிட முடியும்.

அவசர அவசரமாக அந்த இடைவெளியில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டது. சிறையின் அருகே இருந்த மரங்கள், உயர்ந்த கட்டடங்களில் காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். அஸ்தம்பட்டி ரவுண்டானாவிலிருந்து சிறைச்சாலை அமைந்திருந்த ஏற்காடு செல்லும் சாலையில் மக்கள் நடமாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அனைத்து நபர்களும் கடும் சோதனைக்குப் பிறகே சிறைக்குள் அனுமதிக்கப் பட்டனர்.

ஒரு வாரத்துக்கு முன்பே தூக்குமேடை சுத்தம் செய்யப்பட்டு தூக்குத்தண்டனைக் கைதியின் எடைக்கு ஒன்றரை மடங்கு கூடுதலாக மணல் மூட்டை தயாரித்து தூக்குக்கயிறு பலமாக இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டிருந்தது. தூக்குத்தண்டனைக் கைதி நிற்கவைக்கப்பட வேண்டிய தளம் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் பரிசோதனை செய்யப் பட்டிருந்தன. ஆட்டோ சங்கர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக தூக்குத்தண்டனையை எதிர்நோக்கி சிறைகளில் இருந்தார். சிறைக்குள் அவர் தற்கொலை முயற்சி களும் செய்துள்ளார். தூக்குத்தண்டனை நிறைவேற்றாமல் இருக்க தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டு ஏதாவது தந்திரங்கள் செய்வாரோ என்ற சந்தேகம் இருந்தது. அவ்வாறு நிகழாமல் இருக்க என் தலைமையில் நான்கு அதிகாரிகளுடன் சங்கரின் செல்லில் இரவு முழுவதும் பூட்டிவைக்கப்பட்டேன்.

மீண்டும் ஓர் இறுதி இரவு... இந்த முறை சங்கர் வெளிச்சத்தைப் பார்ப்பாரா எனத் தெரியவில்லை. ஏற்கெனவே அவரிடம் பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறேன்தான். ஆனால், இந்த முறை சங்கடமாக உணர்ந்தேன். மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். சகஜமாகப் பேசினார். குரலில் நடுக்கமோ பதற்றமோ இல்லை. அவர் கண்கள் நேருக்குநேராக என் கண்களைப் பார்த்தன. “சார், நான் செஞ்சதெல்லாம் ரொம்பத் தப்புதான். அவ்வளவு கெட்டது பண்ணியிருக்கேன். ஆனா, அதைச் செய்யுறப்பெல்லாம் எந்த உறுத்தலும் ஏற்படலை. இப்ப யோசிக்கிறப்ப எத்தனை பேருக்கு எவ்வளவு கொடுமை பண்ணியிருக்கேன்னு உணர முடியுது. என்னைத் தூக்குல போட்ருங்க சார். அதுதான் சரியான தண்டனையா இருக்கும்” என்றார். இப்போது குரல் சற்றே உடைந்திருந்தது.

அவருடன் பழகிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலமான பலர் தனக்கு வாடிக்கையாளர்கள் என்றார். நள்ளிரவைத் தாண்டியிருந்தது.

 ஆட்டோ சங்கரின் இறுதி நிமிடங்கள்
ஆட்டோ சங்கரின் இறுதி நிமிடங்கள்

சங்கர் எங்கள் அனைவரிடமும் நலம் விசாரித்தார். இரவு மணி 3 இருக்கும். “சார்... ஆர்டர் ஏதாச்சும் வந்திருக்குதா பாருங்க” என்றார். “ஆர்டர் வந்தால் உடனடியாக நமக்குச் சொல்வார்கள். கடைசி நிமிடம் வரை ஆர்டருக்காகக் காத்திருப்போம். உன்னைத் தூக்கிலிட வேண்டும் என்று எங்களுக்கு ஆசை ஒன்றுமில்லை’’ என்றேன்.

‘‘எனக்கு தாகமா இருக்கு. ஒரு கூல்டிரிங்க்ஸ் வேணும். என்னுடைய கடைசி ஆசைனு வெச்சுக்கோங்களேன்’’ என்றார். அந்தப் பின்னிரவிலும் ஒரு காவலரை அனுப்பி, கடை ஒன்றைத் தேடிப்பிடித்து, குளிர்பானம் வாங்கி வரச்செய்து கொடுத்தேன். அதை ரசித்து அருந்தியபடி என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென, “சார்... நான் இந்த பாட்டிலை உடைச்சு என் வயித்துல குத்திக்கிட்டா என்னைத் தூக்கிலிட முடியுமா?” என்றார். ‘‘இது உன்னிடமிருந்து எதிர்பார்த்ததுதான். அதற்கு பதிலும் வைத்திருக் கிறேன். ஒருவேளை நீ அவ்வாறு செய்தாலும் ஒரு துணியை வைத்துக் கட்டி உன்னை அப்படியே தூக்கிக்கொண்டு போய் தூக்குக்கயிற்றில் மாட்டிவிடுவேன்” என்றேன். `‘சார், சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்’’ என்றார்.

அடுத்து என்ன பேசுவது எனத் தெரியவில்லை. கனத்த மெளனம் நிலவியது. காலை மணி 4. அன்றைய காலகட்டத்தில் சேலம் சிறை வளாகம் மற்றும் சுற்றுப்பகுதி ஏற்காட்டின் சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரமாக இருந்தது. அடர்ந்த வனப்பகுதி அது. எங்கோ நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்டது. கோட்டான் ஒன்று அலறியது. விடியலின் அறிகுறிகள் அவை. சங்கரின் தைரியம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. பேச்சும் குறைந்தது. அமைதியாக இருந்தார். முகத்தில் கவலை ரேகைகள் படியத் தொடங்கின. `இந்த முறை நிச்சயமாக தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும்’ என முணுமுணுத்தார். கண்களை மூடி ஏதோ ஜெபித்தார். என் மனத்திலும் ஏனோ ஒரு சஞ்சலம். ‘அதிகாரபூர்வமாக கொலையைச் செய்ய உடன்படுகிறேன் நான். அந்தக் கொலையாளிகளுள் நானும் ஒருவன். சேலம் சிறைச்சாலை, அன்றைய தினம் கொலைச் சாலையாக மாறப்போகிறது.’ இப்படி எண்ணங்கள் ஓட... நான் சங்கரிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து, ‘`ஏதாவது உன் மகளுக்கு எழுது’’ என்றேன். எழுதி முடித்தபோது மணி 5 ஆகியிருந்தது. தூக்குமேடைக்குக் கொண்டு செல்லும் நேரம் வந்துவிட்டது. ‘‘குளிப்பதாக இருந்தால் குளித்துவிட்டு வா சங்கர்’’ என்றேன். ‘`இல்ல சார்... வேணாம். மணி ஆயிருச்சா?’’ என்றார். ‘`ஆம்’’ என்றேன். நாங்கள் அனைவரும் தூக்குமேடையை நோக்கி நடந்தோம்.

முன்பாக சங்கரின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டன.

ஜெயில்... மதில்... திகில்! - 3 - ஆட்டோ சங்கரின் கடைசி முத்தம்!
“அதெல்லாம் வேணாம் சார். நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன். யாரையும் எதுவும் செய்ய மாட்டேன்’’
என்றார்.

“இல்லை, உன் கைகள் கட்டப்பட வேண்டும். அதுதான் விதி” என்றேன். மெளனமாக தலையசைத்தார். கைகள் கட்டப்பட்டன. ஒரு கையில் சங்கரைப் பிடித்துக் கொண்டு தூக்குமேடையை நோக்கி நகர்ந்தேன். சிறை அலுவலர் அலுவலகத்தில் இதர சிறை அதிகாரிகள், மருத்துவர்கள், தாசில்தார் உள்ளிட்டோர் காத்துக்கொண்டிருந்தனர். தூக்குத் தண்டனை வாரன்ட் படிக்கப்பட்டது.

“சங்கர், நீ செய்த கொலைகளுக்காக செங்கல்பட்டு நீதிமன்றம் உனக்கு தூக்குத்தண்டனை விதித்தது. அதை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், கவர்னர், ஜனாதிபதி ஆகிய அனைத்துத் தரப்புகளும் உறுதிசெய்துள்ளன. எனவே, இன்றைய தினம் நீ சாகும் வரை உன்னைத் தூக்கிலிட ஆணையிடப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றப்போகிறோம். உனக்கு ஏதேனும் சொல்ல வேண்டியுள்ளதா?” என்று கேட்டோம். சில நொடிகள் மெளனம் காத்தவர், ‘எதுவும் இல்லை’ என்பதுபோல் தலையசைத்தார். சங்கரை தூக்குமேடைக்கு அழைத்துச் சென்றேன். தூக்கில் தொங்கும்போது காலை உதறாமல் இருக்க பாதங்களுக்கு மேல் கயிறு கட்டப்பட்டது. தூக்குக்கயிற்றைப் பார்க்காமல் இருக்க கண்களைத் திரையிட்டுக் கட்டினோம்.

ஆட்டோ சங்கரின்
கடைசி முத்தம்!

‘‘ஒரு நிமிஷம் சார், கண் திரையை அவிழ்த்துவிடுங்க’’ என்றார். செய்தோம். ‘‘உங்க கையை கொஞ்சம் கொடுங்கிறீங்களா?’’ என்றார். நீட்டிய கையில் முத்தம் ஒன்று பதித்தார். சங்கரின் கடைசி முத்தம் அது. மீண்டும் கண்கள் கட்டப்பட்டன. லிவர் இழுக்கப்பட்டது. அவர் நின்ற தளம் விரிந்தது. படக்கென எலும்பு உடைபடும் சத்தம். உடலில் எந்தத் துடிப்பும் இல்லை. அரை மணி நேரம் கழித்து சங்கரின் உடல் கீழே இறக்கப்பட்டது. சங்கர் இறந்ததை மருத்துவர் உறுதிப்படுத்தி சான்றிதழ் கொடுத்தார். சங்கரின் உடல் அவரின் மனைவி ஜெகதீஸ்வரியிடம் வழங்கப்பட்டது.

ஆட்டோ சங்கரின் சகாப்தம் முடிந்துவிட்டது. நான் சென்னை மத்திய சிறையில் ஜெயிலராக இருந்தபோது கொலை வழக்கில் விசாரணைக் கைதியாக அனுமதிக்கப்பட்டார் சங்கர். சுமார் 12 ஆண்டுகள் சங்கருடன் பயணம் செய்திருக்கிறேன். இறுதியாக கொலைக்களத்துக்குக் கொண்டுசென்று நானே அவரது உயிரைப் போக்கியிருக்கிறேன். ‘மரண தண்டனை வேண்டும்... மரண தண்டனையே கூடாது’ இப்படியான கோரிக்கைகளையெல்லாம் தாண்டி சங்கரின் மரணத்தை எப்போதும் என்னால் மறக்கவியலாது!

(கதவுகள் திறக்கும்)