
காட்டிக்கொடுக்கும் கதை சொல்லும் கடிகாரம்!
அது 1967, ஏப்ரல் 3-ம் தேதி. என் வாழ்க்கையில் உன்னதமான நாள். அன்றைய தினம்தான் சிறைக்காவலராக கோவை மத்திய சிறையில் பணியில் அமர்த்தப்பட்டேன்.
இன்றைக்குப்போல் சீருடைப் பணியாளர் தேர்வாணையமெல்லாம் அன்று இல்லை. இன்றுபோல் போட்டியும் அன்று கிடையாது. சொல்லப்போனால், வலை வீசித் தேடுவார்கள். என் தந்தையும் சிறைத்துறையில் பணியாற்றியவர்தான். அப்போது மைதானத்துக்குச் சென்று ஓட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வேன். சிறைத்துறை சார்பான விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொள்வேன். என்னைப் பார்த்த சிறைத்துறை அதிகாரிகள், “தம்பி வாட்டசாட்டமா இருக்க... வேலைக்கு வந்துடுறியா?” என்று கேட்டு, கையோடு வேலையிலும் சேர்த்துக் கொண்டார்கள். நிஜமாகவே அவ்வளவுதான். நானாவது பரவாயில்லை. என் தந்தை கோபாலன் வேலைக்குச் சேர்ந்த கதை இன்னும் ஆச்சர்யம்.
அது 1930-களில் நடந்திருக்க வேண்டும். கோவையில் தனது வீட்டிலிருந்து கிளம்பி ஏதோ ஒரு வேலையாகச் சென்றுகொண்டிருந்தார் என் தந்தை. வழியே கோவை மத்திய சிறைச்சாலை. நெடுநெடுவென உயர்ந்து இருந்த மதில் சுவரைப் பார்த்து மலைத்தபடி போய்க் கொண்டிருந்தார். பிரமாண்டமான சிறைவாயில். அங்கே இரண்டு காவலர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் என் தந்தையைப் பார்த்து, “டேய் தம்பி... இங்க வா” என்று அதட்டியிருக்கிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில் சிறையில் சித்ரவதைகள் அதிகம் நடக்கும். இதையெல்லாம் கேள்விப்பட்டிருந்த என் தந்தை, அவர்கள் இப்படி அழைத்ததும் சப்தநாடியும் ஒடுங்கிப்போய் தயக்கத்துடன் சென்றிருக்கிறார்.
“ஜெயில்ல வேலைக்குச் சேர்ந்துக்கோ... எழுதப் படிக்க தெரியுமா, கையெழுத்துப் போடுவீயா?” என்று விசாரித்திருக் கிறார்கள். என் தந்தை தயக்கத்துடன், “மலையாளம்தான் தெரியும். தமிழ் தெரியாது” என்று சொல்லவும், “பரவாயில்லை, இதோ இப்படி எழுது” என்று தரையில் அமர்ந்து விரல்களால் மண்ணில் அவரது பெயரை எழுதிக்காட்டியிருக்கிறார்கள். அங்கேயே அரை மணி நேரம் பெயர் எழுதப் பழக்கினர். கையோடு உயரதிகாரி யிடம் அழைத்துச் சென்றவர்கள், அவரிடம் விவரத்தைச் சொல்லி, அங்கு இருந்த பதிவேட்டில் என் தந்தையிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். அடுத்து மருத்துவப் பரிசோதனை. மருத்துவ அதிகாரி ஒருவர், என் தந்தையின் நெஞ்சில் ஓங்கிக் குத்தினார். `அம்மா!’ என்றோ `ஐய்யோ!’ என்றோ சத்தம் வரக் கூடாது. ஏன்... முக்கல், முனகல்கூட வரக் கூடாது. என் தந்தை பலசாலி. அவரிடமிருந்து சத்தம் எழவில்லை. உடல்தகுதியும் பெற்றுவிட்டார். உடனே கையில் சீருடையைக் கொடுத்து, ‘`மறுநாள் காலை வர வேண்டும்’’ என்று கண்டிப்புடன் சொல்லி அனுப்பிவிட்டார்கள். வீட்டிலிருந்து வெறுங்கையுடன் கிளம்பியவர், அரசு உத்தியோகத் துடன் வீடு திரும்பிய அதிசயக்காலம் அது.

கோவை மத்திய சிறையில் நான் வேலைக்குச் சேர்ந்தபோது, வயது 18. மீசைகூட முளைக்கவில்லை. சீருடை அணிந்து ‘Are you Smart?’ என எழுதப்பட்ட நிலைக்கண்ணாடி முன் நின்று, ‘சீருடையில் நான் ஸ்மார்ட்டாகத்தான் இருக்கிறேன்’ என்று என்னையே நான் பாராட்டிக்கொண்டு சிறை வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தேன். அதிகாரிகளுக்கு எப்படி சல்யூட் அடிப்பது என்பதுதான் எனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட முதல் பாடம். பிரிட்டிஷ் வழிவந்த இந்தியச் சீருடைப் பணியாளர் துறையில் சல்யூட் அடிப்பது, மரபாகக் கடைப்பிடிக்கப்படும் ஒன்று.
‘அட்டென்ஷன்...’ ‘ஸ்டேண்ட் அட் ஈஸ்...’ ‘அட்டென்ஷன்...’ ‘சல்யூட்’ என உச்சஸ்தாயில் கத்துவார்கள். விறைப்பாக நிமிர்ந்து நின்று சல்யூட் அடிக்க வேண்டும். சிறையின் வாயிலில் நுழைந்தவுடன் அங்கு வாயில் காப்பாளராக இருந்த அதிகாரிக்கு சல்யூட் அடித்துவிட்டு, சிறை வளாகத்துக்குள் செல்கிறேன். நான் சிறைக்குள் கண்ட முதல் காட்சியே அதிர்ச்சியாக இருந்தது. கைதி ஒருவரின் கால்கள் இரும்புக்குண்டுகளால் இணைக்கப்பட்ட சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்தன. அதைத் தூக்கிப் பிடித்தபடி அவர் என்னைப் பார்த்து முறைத்தார். அந்த இரும்புச் சங்கிலிக்கு பெயர் ‘Link Fetters’ என்று பிறகு அறிந்துகொண்டேன். சிறைக்கு வந்த பிறகும் குற்றங்கள் செய்பவர்களுக்கு இப்படி தண்டனை கொடுப்பது பிரிட்டிஷார் காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்படும் வழக்கம். இப்போது இந்த வழக்கமெல்லாம் மாறிவிட்டன.
நான் உள்ளே நுழைந்து சென்ற பாதையில் வலதுபுறம் இருந்தது பனிஷ்மென்ட் பிளாக் (Punishment Black). அங்கு கொடூரமான குற்றங் களைச் செய்தவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். இடதுபுறம் திரும்பிப் பார்த்தேன். பூஞ்சோலையாக இருந்தது மற்றொரு சிறை வளாகம். அதில் ‘A கிளாஸ்’ என எழுதப்பட்டிருந்தது. அங்கு அன்றைய தினம் பிரபலமான கோவை நூற்பாலை அதிபர் ஒருவர் இருந்தார். கள்ளநோட்டு வழக்கில் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஒற்றை ஆளாக அவர் சகல சௌகரியத்துடன் அங்கே உலவிக் கொண்டிருந்தார்.
சிறைச்சாலைக்கு நடுவே ஒரு கோபுரம். கோபுர தலைமைக் காவலரிடம் நான் ரிப்போர்ட் செய்ய வேண்டும். அந்தக் கோபுரத்தின் பெயர் ‘Panopticon type of Tower’. அதன் மேலிருந்து பார்த்தால் அந்த டவரைச் சுற்றியும் பத்து கட்டட தொகுதிகள் (Block) தெரியும். ஒவ்வொன்றிலும் 40 அறைகள். கோபுரத் தளத்திலிருந்து அந்த பத்துத் தொகுதிகளிலும் உள்ள சிறைவாசிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியும். கோபுர தலைமைக் காவலர் எனக்கு அளிக்கப்பட்ட பணி நியமன உத்தரவைப் படித்துவிட்டு, என்னை பணியில் அமர்த்திக்கொண்டார். அன்றைய தினம் எனக்கு இரவு டூட்டி.

மாலை 6 மணிக்கு இரவு பாரா பணிக்கு, கையில் ஒரு பேட்டன் (இரு முனைகளிலும் பித்தளை பூண் பூட்டப்பட்ட உறுதியான மூங்கில் தடி) மற்றும் லாந்தர் விளக்கு ஒன்றையும் பெற்றுக் கொண்டு விசாரணைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூன்றாம் தொகுதியில் காவல் பணி மேற்கொண்டேன். அன்றைய நாள்களில் பெரியளவில் மின்வசதி கிடையாது. ஆங்காங்கே 20 வாட்ஸ் ஒளியில் சில பல்புகள் மங்கலாக ஒளிரும். மற்ற இடங்களிலெல்லாம் இருள். அந்த பிளாக்கின் ஒவ்வோர் அறையிலும் ஐந்து கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
மண்ணெண்ணெயில் எரியும் அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் ஒவ்வோர் அறையாகச் சென்று கைதிகள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்க வேண்டும். அந்த அரிக்கன் விளக்கை கீழே வைக்கக் கூடாது. விளக்கு என் கையில் ஆடிக்கொண்டே இருந்தால்தான் நான் விழித்திருந்து டூட்டி பார்ப்பதாக அர்த்தம். மேலே கோபுரத் தளத்திலிருந்து இங்கு நான் பாரா பார்ப்பதைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு பிளாக்கிலும் கடைசிச் சுவரில் சிறு பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அந்தப் பெட்டிக்குள் ஒரு சாவி சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கொக்கியில் மாட்டப் பட்டிருக்கும். கடிகாரக் காவலர் (Tell Tale Clock warden) ஒருவர் கையில் கடிகாரத்துடன் பாரா வருவார். அந்தக் கடிகாரத்துக்குள் நேரம் அச்சிடப்பட்டு வட்டவடிவத்தில் ‘டயல்’ ஒன்று இருக்கும். அதன் அடியில் கார்பன் ஷீட் இருக்கும். பிளாக்கின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு பாரா வரும் கடிகாரக் காவலர் ஒவ்வொரு முறையும் அந்தச் சிறு பெட்டி அருகே வந்ததும், அதைத் திறந்து அதில் உள்ள சாவியை எடுத்து தன் கையில் உள்ள கடிகாரத்தில் பொருத்தி ஒரு திருப்புத் திருப்ப வேண்டும்.
Also Read
அப்போது கடிகாரத்தினுள் இருக்கும் லிவர் ஒன்று பேப்பரில் ஒரு பன்ச் அடிக்கும். இப்படி ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பன்ச் வீதம் ஒரு மணி நேரத்துக்கு 12 பன்ச்சுகள் அதில் பதிவாகியிருக்க வேண்டும். ஒரு பன்ச் இல்லையென்றாலும் கதை சொல்லும் கடிகாரம் காட்டிக்கொடுத்துவிடும். அதேபோல் ஒரு பன்ச்சுக்கும் மற்றொரு பன்ச்சுக்கும் இடைவெளி நீண்டால் அந்தக் காவலர் அங்கு தாமதமாகச் சென்றார் என்பதும் தெரிந்துவிடும். அதற்கு ஜெயிலரிடம் விளக்கம் சொல்ல வேண்டும். கண்காணிப்பு கேமரா இல்லாத காலகட்டத்திலேயே இவ்வளவு துல்லியமான நடைமுறைகளா என ஆச்சர்ய மடைந்தேன்.
இப்படியாக நான் இரவுப் பணியில் பாரா பார்த்துக்கொண்டிருக்கும்போது ஓர் அறையிலிருந்து கைதியின் அலறல் சத்தம் கேட்டது!
(கதவுகள் திறக்கும்)