மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 47 - பயங்கரவாதிகளின் அட்டாக்... முறியடித்த காவலர்கள்!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

திடீரென இரண்டு பயங்கரவாதிகளும் காவலர் கையிலிருந்த சாவியைப் பிடுங்கி, சில நிமிடங்களில் மற்ற ஆறு பயங்கரவாதிகளின் அறைகளையும் திறந்துவிட்டனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கை, `பூமியின் சொர்க்கம்’ என்று வர்ணித்திருக்கிறார் முகலாய சக்கரவர்த்தி ஜஹாங்கீர். சீனா, பாகிஸ்தான், ஆப்கன் மற்றும் ரஷ்யாவை எல்லையாகக்கொண்ட இந்தப் பேரழகுப் பிரதேசம் யாருக்கு உரிமை என்பதில்தான் இத்தனை பகைமை, வன்முறை, உயிரிழப்பு அத்தனையும். இங்கு பயங்கரவாதக் கும்பல்களை உருவாக்கிவருவதில் முக்கியப் பங்குவகிக்கிறது பாகிஸ்தான்.

இந்த பயங்கரவாதிகளில் முக்கியமான வர்களைத்தான் மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து, கோவை மத்தியச் சிறைக்கு அனுப்பியிருந்தது அரசு. இவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் நான் இருந்தேன். நெருப்பைக் கையாளும் பொறுப்பு அது. மிகவும் எச்சரிக்கையாகவே அவர்களைக் கையாண்டோம். ஒரு நேரத்தில் ஒரு பயங்கரவாதியை மட்டுமே வெளியே அனுமதிப்போம். மற்றவர்கள் அறைக்குள் பூட்டப்பட்டிருப்பார்கள். இரண்டு தளங்கள் கொண்ட பிளாக்குகளில் அவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு தளத்திலும் 20 அறைகள்.

 ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

இதுபோல எட்டு பிளாக்குகள் இருந்தன. ஆனால், கீழ்த்தளத்திலுள்ள 80 அறைகளில் மட்டுமே இவர்களை ஓர் அறை விட்டு, ஓர் அறையில் அடைத்திருந்தோம். ஒருவருக்கு மற்றவர் இருக்கும் இடம் தெரியாது. அதை அறிய அவர்கள் ஒரு தந்திரத்தைக் கையாண்டார்கள். ஒருவர் நமாஸ் படிக்கத் தொடங்கி, ‘அல்லாஹூ அக்பர்’ என்று சத்தமாகச் சொல்வார். அவர் முடித்ததும், மற்றொருவர் ஆரம்பிப்பார். அவர்கள் பேசியது உருது மொழி. அது எங்களில் யாருக்குமே தெரியாது. அவர்கள் தரப்பில் வக்கீல் ஒருவருக்கும், ஆசிரியர் ஒருவருக்கும் ஆங்கிலம் தெரிந்திருந்தது. அவர்கள் மூலம்தான் தகவல் பரிமாறிக்கொண்டோம்.

பயங்கரவாதிகளின் மற்றொரு கொடூர முகத்தை நாங்கள் காண நேரிட்ட அந்த நாளும் வந்தது. ஒருநாள் அவர்கள் அனைவரும் ரகசியமாகத் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, மொத்தமாகத் தப்பிக்கத் திட்டமிட்டனர். அன்றைய தினம் காலையில் முதல் ஆளாக ஒரு பயங்கரவாதியைக் காலைக்கடன் கழிக்கத் திறந்து விட்டனர். டாய்லெட்டில் அவர் இருக்கும்போது வெளியில் ஒரு காவலர் நிற்பார். முதல் ஆள் திரும்பி வருவதற்குள், மற்றொரு பயங்கரவாதி ‘எனக்கு அவசரம்’ என்று கத்தினார். முதல் நபரை உள்ளே வைத்துப் பூட்டாமலேயே அடுத்த நபருக்குக் கதவைத் திறந்துவிட்டார் காவலர். இரண்டு பயங்கரவாதிகள் வெளியில் இருந்தனர். அந்தத் தொகுதியில் பணியில் இருந்தது மூன்று காவலர்கள். ஒருவர் டாய்லெட் காவலில் தள்ளி நின்றுகொண்டிருந்தார்.

திடீரென இரண்டு பயங்கரவாதி களும் காவலர் கையிலிருந்த சாவியைப் பிடுங்கி, சில நிமிடங்களில் மற்ற ஆறு பயங்கரவாதிகளின் அறைகளையும் திறந்துவிட்டனர். எட்டுப் பேரும் சேர்ந்து காவலர்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, இதர தொகுதிகளிலிருந்த பயங்கரவாதிகளையும் விடுவித்தனர். 48 பேரும் வெளியே வந்துவிட்டனர். அவர்கள் கையில் கிடைத்த கல், கட்டை, தட்டுமுட்டுச் சாமான்கள் எனக் கிடைத்ததையெல்லாம் எடுத்து காவலர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கினர். பலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அபாய ஒலி அலறியது.

ஜெயில்... மதில்... திகில்! - 47 - பயங்கரவாதிகளின் அட்டாக்... முறியடித்த காவலர்கள்!

நான் அப்போது, காலை சிறைத் திறப்பு கணக்கைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் இரவுப்பணி முடித்துச் செல்லும் காவலர்கள் 50 பேர், பகல் பணிக்கு வந்த காவலர்கள் 50 பேர், குற்றக் காவலர்கள் 130 பேர் என் முன்னே நின்றிருந்தார்கள். அவர்கள் 230 பேரையும் அழைத்துக்கொண்டு அபாய ஒலி வந்த திசையை நோக்கி ஓடினேன். அடிபட்ட காவலர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட வந்துகொண்டிருந்தனர். என்ன நடந்தது என்பதைப் பதற்றத்துடன் என்னிடம் விவரித்தனர். அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, எனது பட்டாளத்துடன் பயங்கரவாதிகளை நோக்கி விரைந்தேன். எங்களைப் பார்த்ததும், அவர்கள் மேலும் உக்கிரமானார்கள். எங்களை நோக்கிக் கற்கள் பறந்துவந்தன.

ஆனால், எங்கள் பட்டாளம் பெரிதாக இருந்தது. அதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. தவிர, மூன்றடுக்குப் பாதுகாப்பைத் தாண்டித்தான் தப்ப முடியும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. சிறிது நேரத்தில், தப்பிக்கவே வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்டனர். சக காவலர்கள் ரத்தம் சிந்தியதைப் பார்த்த, என்னுடன் வந்த

230 காவலர்களும் கடும் கொந்தளிப்பில் இருந்தனர். அவர்கள் கைகளில் ஆயுதங்களும் இருந்தன. விட்டால் பயங்கரவாதிகளை அடித்து துவம்சம் செய்திருப்பார்கள். ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஏதாவது ஏற்பட்டால் நானே பொறுப்பேற்க வேண்டும். உடனே பயங்கரவாதிகள் இருந்த பகுதியின் கதவை மூடி, காவலர்கள் உள்ளே நுழைய முடியாதபடி பூட்டிவிட்டேன்.

நான் மட்டும் தனியாக உள்ளே சென்று பயங்கரவாதிகளிடம் பேசினேன். ‘‘நீங்கள் காவலர்களைத் தாக்கிவிட்டு செல்லுக்கு வெளியே வந்தது பெரிய தவறு. நீங்கள் தப்பிச் செல்ல முயன்றீர்கள் என்று சொல்லி, உங்கள்மீது துப்பாக்கிச்சூடுகூட நடத்த முடியும். நீங்கள் உடனே உங்கள் அறைகளுக்குச் சென்று பூட்டிக்கொண்டு சாவியை ஒப்படைத்துவிடுங்கள். காவலர் கூட்டம் இங்கே வந்தால் நீங்கள் ஒருவர்கூட உயிருடன் தப்ப முடியாது!’’ என்று மிரட்டும் தொனியில் பேசினேன்.

திடீரென்று சிலர், “இந்த அதிகாரியைப் பிணைக்கைதியாகப் பிடித்துவைத்துக்கொண்டு மிரட்டலாம்” என்றனர். அவர்கள் பேசிக்கொண்டது உருது என்றாலும், என்னைச் சுட்டிக்காட்டிய அவர்களின் உடல்மொழியில் அதை நான் உணர முடிந்தது. அதற்கு நான், “பத்து நிமிடங்களுக்குள் நான் வெளியே செல்லாவிட்டால் மற்றொரு வாயிலைத் திறந்துகொண்டு அனைவரும் உள்ளே வந்துவிடுங்கள்” என்று காவலர்களுக்கு உத்தரவு கொடுத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நான் உடனே வெளியே செல்லாவிட்டால் உங்கள் உயிருக்கு நான் பொறுப்பல்ல’’ என்றேன்.

அனைவரும் தங்களின் செல்களுக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார்கள். அனைத்து செல்களையும் பூட்டி, சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். ஆனால், அங்கே காவலர்கள் கோபத்தின் உச்சியில் இருந்தார்கள். `நமது காவலர்களைத் தாக்கிய அவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்’ என்று வாதிட்டார்கள்.

ஜெயில்... மதில்... திகில்! - 47 - பயங்கரவாதிகளின் அட்டாக்... முறியடித்த காவலர்கள்!

அவர்களைச் சமாதானப் படுத்தி அனுப்பிவைத்தேன். பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட காவலர்கள், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விஷயம் காட்டுத்தீயாய்ப் பரவியது. பத்திரிகைகளில் பெரிய அளவில் செய்தியானது. சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து சிறைத்துறை தலைவர் என்னை அழைத்து விசாரித்தார். நடந்ததை விளக்கினேன். ‘காவலர்களுக்கு ரத்தக்காயம், பயங்கரவாதிகளுக்குக் காயம் எதுவும் இல்லை’ என்பதை அவர் நம்ப மறுத்தார். சிறிது நேரத்தில் விமானத்தைப் பிடித்து கோவை வந்தார்.

பயங்கரவாதிகள் இருந்த தொகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அரசு மருத்துவமனைக்குச் சென்று காயம்பட்ட காவலர்களிடமும் விசாரித்தார். நடந்ததைப் புரிந்துகொண்டு, சூழ்நிலையைப் புத்திசாலித்தனமாகக் கையாண்டிருப்பதாக என்னைப் பாராட்டிவிட்டுச் சென்றார். நான் சொன்னதையே அரசுக்கு அறிக்கையாகக் கொடுத்தார்.

ஆனாலும், காவலர்கள் மீதான தாக்குதல் எனக்குள் அணையா நெருப்பாக எரிந்து கொண்டிருந்தது. மற்றொரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன். அதுவும் வாய்த்தது. மீண்டும் ஒருமுறை தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் பயங்கரவாதிகள். ஒருவன் காவலரின் தோள்மீது காலைவைத்து 12 அடி கேட்டை தாண்டிக் குதித்தான். அவனுக்குத் தரப்பட்ட பயிற்சி அங்கே வெளிப்பட்டது. ஆனால், எல்லாவற்றையும் முறியடித்தோம். பயங்கரவாதிகள்மீது கோபமாக இருந்த காவலர்கள், அவர்களை அடித்து, அடக்கி செல்களுக்குள் அடைத்தனர். எங்களைக் கண்டித்து அவர்கள் உண்ணாவிரதம் தொடங்கினார்கள். அதையும் சரி செய்தோம். என்னை முஸ்லிம்களின் எதிரியாகவே கருதி, ஹிட் லிஸ்ட்டில் வைத்திருந்தார்கள். மாரடைப்பில் உயிருக்குப் போராடிய ஒரு பயங்கரவாதியை நான் காப்பாற்றிய பிறகுதான் அவர்களின் மனநிலை மாறியது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்!

(கதவுகள் திறக்கும்)