மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 5

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

புதிய தொடர்

சிறைகளில் பாலியல் தேவை... என்ன தீர்வு வைத்திருக்கிறோம்?

அந்த அலறல் என்னை உலுக்கிப்போட்டது. எந்த பிளாக்கிலிருந்து அலறல் வந்தது என்பதை சரியாக அறிய முடியவில்லை. ஒவ்வொரு பிளாக்கிலும் 40 அறைகள்.

தேடிக் கண்டுபிடிப்பதற்குள் பொழுது விடியத் தொடங்கிவிட்டது. காலையில் அனைத்து அறைகளும் திறக்கப்பட்டன. கைதிகள் அனைவரும் நான்கு நான்கு பேராக உட்காரவைக்கப்பட்டனர். தலைகள் எண்ணப்பட்டன. விசாரணைக் கைதி ஒருவன் விசும்பிக்கொண்டிருந்தான். ‘`ஏன் அழுகிறாய்?’’ என்று கேட்டேன். அவன் எழுந்து நின்றான். அவன் அணிந்திருந்த வெள்ளை வேட்டியில் ரத்தம். நேற்று இரவில் கேட்ட அலறல் அவனுடையதுதான். ``எதனால் ரத்தம், எங்கே அடிபட்டது, யார் அடித்தார்கள்?’’ என்றெல்லாம் விசாரித்தேன்.

அவனுக்கு வயது 35 இருக்கலாம். அரைகுறை தமிழ். கேரளாவைச் சேர்ந்தவன். காரணத்தைச் சொல்லத் தயங்கினான். வலியில் துடிப்பது தெரிந்தது. அவனை தனியாக அழைத்து விசாரித்தேன். முதல் நாள், சந்தேக வழக்கு ஒன்றில் சிறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறான். கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த அறையில் அவன் அடைக்கப்பட்டிருக்கிறான். சரி, அந்த இரவு அவனுக்கு என்னதான் நடந்தது?

வழக்கமாக சிறையில் நடக்கும் பாலியல் வன்கொடுமைதான். அறையில் இருந்த நான்கு முரட்டு இளைஞர்களும் அவனை பாலியல்ரீதியாக வன்கொடுமை செய்துவிட்டனர். அவனது ஆசனவாயிலில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. எனக்கு கோபம் தலைக்கேறியது. பணியில் சேர்ந்த மறுநாளே என் பேட்டனுக்கு வேலை வந்துவிட்டது.

என் பாதுகாப்பில் இருக்கும் ஒரு கைதிக்கு இப்படியொரு கொடுமை நடந்திருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கும் இளம் ரத்தமல்லவா... உடலில் ஒட்டியிருந்த காக்கிச்சட்டை, தவறுகளைத் தட்டிக்கேட்க வேண்டும் என்கிற உத்வேகம், அரசின் முத்திரை பதித்த தொப்பி எல்லாம் சேர்ந்து என் உள்ளத்தின் உஷ்ணத்தைக் கூட்டின. விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் நான் இல்லை. நான்கு பேரையும் அழைத்தேன். எனது பேட்டன் அவர்களை விளாசித்தள்ளியது. இரவில் எதிரொலித்த அந்த ஒற்றை அலறலுக்கு பதில் சொல்லும்விதமாக பகலில் அந்த நான்கு அலறல்கள் எதிரொலித்தன. நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கோபுரக் காவலரிடம் புகார் செய்யப்பட்டது.

`சிறைக்குள் இத்தகைய கொடுமை அடிக்கடி நடப்பதுதான். அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து புகார் ஆக்கியிருக்கத் தேவையில்லை. வேலைக்குப் புதிது என்பதால் இதை பெரிய பிரச்னை ஆக்கிவிட்டாய்’
என்றார்கள் சீனியர் வார்டன்கள்.

விதிகளை மீறி கைதிகளை அடித்தது, சிறைக்குள் நடந்த சகஜமான ஒன்றை பெரிய பிரச்னையாக்கியது என்றெல்லாம் அதிகாரிகளுக்கு என் மீது அதிருப்தி.

அடுத்த நாள் காலையில் சிறைக்கண்காணிப் பாளர் கைதிகளைப் பார்வையிடும் நாள். அதற்கு `வாராந்தர ஃபைல்’ என்று சொல்வார்கள். கண்காணிப்பாளர் அனைத்து சிறைவாசிகளையும் நேரில் பார்த்து குறைகள் கேட்பார். என்னால் தாக்கப்பட்ட அந்தக் கைதிகள் நால்வரும் தங்களுக்கு ஏற்பட்ட காயத்தை கண்காணிப் பாளரிடம் காட்டி என்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்கள். தாங்கள் எதுவுமே செய்யவில்லை என்றும், பாதிக்கப்பட்ட சிறைவாசிதான் தங்களிடம் மோசமாக நடந்துகொண்டார் என்றும் கதையைத் திருப்பிப்போட்டார்கள்.

சிறைக்கண்காணிப்பாளர், நடந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்க ஜெயிலருக்கு ஆணை யிட்டார். பாதிக்கப்பட்டவர் உட்பட ஐந்து பேரும் சிறை மருத்துவரிடம் அனுப்பப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர் அந்த இளைஞர்கள் நான்கு பேரும் தவறு செய்திருப்பதை உறுதிசெய்தார். நால்வரும் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டனர். கண்காணிப்பாளர் வரச் சொன்னதாக என்னை அழைத்துச் சென்றனர். எனது வேலை காலி என நினைத்துக்கொண்டேன். அவரது அலுவலகம் சென்றேன். என்னை தலைமை வார்டன் அவரிடம் ‘மார்ச்’ செய்தார். ஜெயிலர் புகார் வாசித்தார். டாக்டரின் அறிக்கையும் படிக்கப்பட்டது.

என்னிடம் திரும்பிய கண்காணிப்பாளர், ‘‘Good, Smart boy. Keep it up” என்று கூறி பாராட்டியதுடன், ‘‘உன் பேட்டனை மாற்றிவிட்டு லத்தி வைத்துக்கொள். அவர்கள் செய்தது அராஜகம் என்றாலும் கைதி களை அடிக்க உனக்கு அதிகாரம் இல்லை. சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாத சூழலில் அடிக்க நேரிடும்தான் அதனால் உன்னை மன்னிக் கிறேன். இனிமேல் இப்படிச் செய்தால் வேலை யிலிருந்து நீக்கிவிடுவேன்’’ என்று சொல்லிவிட்டு ஜெயிலரிடம், “இவரை ஆறாம் தொகுதிக்கு பொறுப்பாளராகப் போடுங்கள்” என்று கூறிச் சென்றார். “About turn... quick march” என்று தலைமை வார்டன் கட்டளையிட, நான் பீடுநடைபோட்டு வெளியே வந்தேன்.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

எதிர்பார்த்தது தண்டனை... கிடைத்ததோ பாராட்டு. அந்தக் காலகட்டத்தில் சிறைக் கண்காணிப்பாளரைப் பார்ப்பதே அரிது. ஒரு மாவட்டத்தில் ஆட்சியருக்கு அடுத்தபடியாக மதிக்கப்படுவது சிறைக் கண்காணிப்பாளர்தான். அவரின் இருப்பிடம் கலெக்டர் பங்களாவைவிட பெரியதாக இருக்கும். சுதந்திரத்துக்கு முன்பு பிரிட்டிஷார்தான் பெரும்பாலும் சிறைக் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந் தார்கள். சிறையில் கைதிகள்மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கெல்லாம் அவரே பொறுப்பாவர். அவருக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம். எனவே, அவருக்கு சகல வசதிகளும் அவருடைய பங்களாவில் செய்து கொடுக்கப்பட்டிருக்கும். குதிரை லாயம், நீச்சல்குளம், டான்ஸ் ஹால், டென்னிஸ் கோர்ட், பசுமை போர்த்திய பரந்த மைதானம் என மிகப்பெரிய வளாகம் அது. பிரிட்டிஷார் காலத்தில் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் மட்டுமே சிறைக் கண்காணிப்பாளர்கள் சிறைக்கு வருவார்கள்.

மூதறிஞர் ராஜாஜி எழுதிய ‘சிறை டைரி’ என்ற புத்தகத்தில் சிறைக் கண்காணிப்பாளர் களை சகல அதிகாரங்களும் படைத்த ‘கிங் ஆஃப் கிங்ஸ்’ என எழுதியிருப்பார். அவர் சொல்வது சரியாகத்தான் இருந்தது. ஓர் உயிரைப் பறிக்கக்கூடிய அதிகாரம்கூட கண்காணிப்பாளரிடம் இருந்தது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றுகிற பொறுப்பும் அவருடையதுதான்.

சரி... நம் கதைக்கு வருவோம். பொதுவாக, பாலியல் துன்புறுத்தலுக்கு சிறுவர்களே இலக்கு என்பதால்தான், அவர்களைப் பாதுகாக்க அரசாங்கத்தால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் குற்றம் இழைத்தால் அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கே சிறைக்கான கட்டமைப்பு எதுவும் இருக்காது. தங்கும் விடுதிகள்போல் விசாலமான அறைகள் இருக்கும் (Dormitory Type of Blocks). அங்கு உள்ள வார்டன்கள் சீருடை அணிய வேண்டியதில்லை. அதை நிர்வகிப்பது சிறைத்துறையும் அல்ல. சமூகநலத் துறைதான் அவர்களைப் பராமரிக்கிறது.

16 வயதுக்கு மேற்பட்ட இளம் குற்றவாளிகள் 21 வயது வரை பார்ஸ்டல் பள்ளியில் (Borstal school) பாதுகாக்கப்படுவார்கள். 21 வயதுக்குமேல் 25 வயது வரை உள்ள வாலிப வயது குற்றவாளிகள் மத்திய சிறையில் அடைக்கப் பட்டாலும் அவர்கள் இளம் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு மற்ற கைதிகளிடமிருந்து தனியே பிரித்து வைக்கப்படுவார்கள். குற்றவாளிகள் சிறைக்குள் அனுமதிக்கப்பட்டதும் அவர்கள் வயதுக்கேற்ப, குற்றத்திற்கேற்ப வகைப்பாடு செய்யப்படுகிறார்கள்.

விசாரணைக் கைதிகள் தனி இடத்திலும் தண்டனைக் கைதிகள் வேறு இடத்திலும் அடைக்கப் பட்டிருப்பார்கள்.

பயங்கரவாதிகள், கொலை, கொள்ளை குற்றங்களைச் செய்தவர்கள், தேசியப் பாதுகாப்பு சிறைவாசிகள், தடுப்புக் காவல் சிறைவாசிகள், மரணதண்டனைக் கைதிகள், இளம் குற்றவாளிகள், பொருளாதார மோசடி குற்றவாளிகள், அரசியல் குற்றவாளிகள், மனநிலை சரியில்லாத கைதிகள் என ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு அடைக்கப் படுவார்கள். வருமானவரி செலுத்துவோர், குற்றவாளிகளாக உள்ளே வந்தால் சிறப்பு வகுப்பு அளிக்கப்படும்.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

இப்படி குற்றரீதியாக, உளவியல்ரீதியாக பார்த்துப் பார்த்துப் பிரித்து வைத்தாலும் பாலியல் வன்கொடுமை களைத் தவிர்க்க இயலவில்லை. என் மனம் ஏதேதோ யோசித்தது. சிறைக் கட்டமைப்பைப் பொறுத்தவரை ஆண்கள் சிறையிலும் சரி... பெண்கள் சிறையிலும் சரி பாலியல் வன்கொடுமை களெல்லாம் சர்வசாதாரணம். ஒரு மனிதனுக்கு உணவு தேவை என்பதுபோல் பாலியல் தேவையும் இயற்கையானதுதான். பல ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு பாலியல் தேவையை ஈடுகட்ட என்ன தீர்வு வைத்திருக்கிறது நம் நிர்வாகக் கட்டமைப்பு.

சிறை என்பதே தவறுகளைத் திருத்தும் இடம்தானே? அப்படியெனில், பாலியல் தேவை என்கிற அடிப்படையான இயற்கைத் தேவையை நீண்டகாலத்துக்கு ஒருவருக்கு முடக்கிவைப்பது கைதிக்குத் தரும் கூடுதல் தண்டனையல்லவா! தண்டனை என்கிற பெயரில், அவரது இயற்கைத் தேவையை நிராகரிப்பது எந்த வகையில் நியாயம்? சிறையில் இருக்கும் ஒருவரின் பாலியல் தேவையை முடக்கிவைப்பதும்/மற்றொருவர் பாலியல்ரீதியாக பாதிக்கப்படுவதும் அவர்களை மீண்டும் மீண்டும் குற்றவாளிகளாக மாற்றாதா? தவிர, ஒருவருக்கு சிறைத்தண்டனை அளிப்பது அவரது உடலுக்கா, மனதுக்கா? இதையெல்லாம் அன்றைய கால கட்டத்தில் நான் பேசியிருந்தால் என்னை வேலையை விட்டுத் தூக்கியிருப்பார்கள். ஆனாலும், இன்றைக்குகூட இந்த விஷயங்கள் நீண்ட விவாதத்துக்கு உரியவை.

இப்படியான சூழலில் சிறைகளில் பல ஆண்டுக்காலம் அடைபட்டிருக்கும் கைதிகளுக் கான பாலியல் தேவை குறித்த சிக்கலுக்கு தீர்வுகாண... சமூகச் சிந்தனையாளர்கள், உளவியல் நிபுணர்கள், மானுடவியல் ஆய்வாளர்கள், சட்ட நிபுணர்கள், சிறைத்துறை, காவல்துறை உயரதிகாரிகள் என அனைவரும் விவாதிக்க வேண்டியது அவசியம்!

(கதவுகள் திறக்கும்)