மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 10 - கடவுளையும் உருவாக்குமா காலம்?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

உலக அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான வழியைத் தேடி விண்வெளிப் பயணமொன்றை மேற்கொள்ள விருக்கிறான் படத்தின் நாயகனான கூப்பர்.

`இன்டர்ஸ்டெல்லர்’ (Interstellar) திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். காலப்பயணத்தை (Time Travel) மையமாகவைத்து எடுக்கப்பட்ட படம். கருந்துளை (Black hole), புழுத்துளை (Wormhole), பரிமாணங்கள் (Dimensions) போன்ற சிக்கலான அறிவியல் கோட்பாடுகளைக் கலந்து அந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பலருக்கு அந்தப் படம் சொன்ன அறிவியல் ஆச்சர்யங்களைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. `அறிவியலில் ஆச்சர்யங்களா?’ என்று நீங்கள் கேட்கலாம். ஆம்! இன்றைய நவீன அறிவியல், பல விந்தைகளையும், மர்மங்களையும் உள்ளடக்கியது. அறிய அறிய வியப்பின் உச்சத்துக்கே கொண்டுசெல்வது. அப்படிப்பட்ட அறிவியல் விந்தை நிகழ்வொன்றுடன்தான் இப்போது நம் பயணம் ஆரம்பிக்கப்போகிறது. அதை `இன்டர்ஸ்டெல்லர்’ படத்தின் காட்சியொன்றிலிருந்து ஆரம்பிக்கலாம்.

உலக அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான வழியைத் தேடி விண்வெளிப் பயணமொன்றை மேற்கொள்ள விருக்கிறான் படத்தின் நாயகனான கூப்பர். ஆனால், சிறுமியாக இருக்கும் அவர் மகள் மர்பி (Murphy) அதை விரும்பவில்லை. தந்தை, தங்களை விட்டுவிட்டுத் தொலைதூரம் விண்வெளிப் பயணம் செய்வதை அவள் விரும்பவில்லை. மர்பியைச் சமாதானம் செய்வதற்கு கூப்பர் முயல்வார். கூப்பருக்கு முப்பத்தைந்து வயதும், மர்பிக்கு பன்னிரண்டு வயதுமிருக்கலாம். மகளிடம் தகப்பன், ``நான் நிச்சயம் திரும்பி வருவேன். உன்னைச் சந்திப்பேன். ஒருவேளை அந்தச் சமயத்தில், எனக்கும் உனக்கும் சம வயதாகக்கூட இருக்கலாம்” என்பார். அது எப்படித் தகப்பனுக்கும் மகளுக்கும் ஒரே வயது இருக்க முடியும்? காலப்பயணத்தால் உருவாகும் ஆச்சர்ய விளைவுகளில் ஒன்று இது. ஐன்ஸ்டைனால் சொல்லப்பட்ட இயற்பியலின் விந்தைக் கோட்பாடு. காலப்பயணங்களில், இது போன்று பல ஆச்சர்யங்கள் நடைபெறும் என்கிறது அறிவியல்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 10 - கடவுளையும் உருவாக்குமா காலம்?

அது என்ன காலப்பயணம்? காலப்பயணம் என்றால் என்னவென்று இப்போது என்னால் முழுமையாக விளக்க முடியாது. தொடரின் மூன்று பகுதிகளுக்கு மேல் இழுத்துவிடும். அதற்கான நேரம், உங்களுக்கும் ஜூனியர் விகடனுக்கும் கிடையாது. அதனால், எதைச் சொல்ல வேண்டுமோ, அதைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, நான் சொல்லவந்த விந்தை நிகழ்வு நோக்கித் தாவிக்கொள்கிறேன். நான் சொல்லவந்தது வேறு. தொடர்ந்து படியுங்கள் புரியும். வாகனம் ஒன்றின் மூலம், உங்களால் தூரங்களைக் கடந்து பிரயாணம் செய்ய முடியுமல்லவா... அதுபோல, காலங்களைக் கடந்தும் பயணம் செய்யலாம் என்கிறது அறிவியல். அதாவது, இப்போதே இறந்தகாலத்துக்கோ, எதிர்காலத்துக்கோ உங்களால் போக முடியும். அதற்குச் தேவை சில ஏற்பாடுகள் மட்டுமே. “அது எப்படிக் காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியும்... அதெல்லாம் சும்மா. எந்த ஆதாரமுமில்லாத கோட்பாடுகள் அவை” என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், காலப்பயணம் சாத்தியமே! அறிவியல் அதை வெவ்வேறு பரிசோதனைகள் மூலம் நிரூபித்திருக்கிறது. இன்றைய மனிதனால் காலப்பயணம் செய்ய முடியுமா என்பது மட்டும்தான் கேள்விக்குறி. இன்றில்லா விட்டாலும், நாளைய மனிதனால் அது நிச்சயம் சாத்தியப்படும் என்று அறிவியல் அடித்துச் சொல்கிறது. நிஜத்தில், நம்மில் ஒவ்வொருவரும் காலப் பயணிகளே! கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியாகக் காலப்பயணம் செய்தபடிதான் இருக்கிறோம். இறந்தகாலத்தி லிருந்து நிகழ்காலத்துக்கும், நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கும், ஒவ்வொரு விநாடி விநாடியாக நமது காலப்பயணம் நடக்கிறது. இப்போது, உங்கள் வயது முப்பது என்று வைத்துக்கொண்டால், தாயின் வயிற்றில் உருவாகி, இன்றுவரை முப்பது ஆண்டும், பத்து மாதங்களுமாகக் காலத்தினூடாகப் பயணம் செய்துதான் இன்றைய தேதிக்குள் நுழைந்திருக்கிறீர்கள். ஆனால், அதை நாம் புரிந்து கொள்வதில்லை. காரணம், இந்தக் காலப்பயணம் நம் விருப்பப்படி நடைபெறுவதில்லை. விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ அது நடந்துகொண்டேயிருக்கும். எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. எந்தச் செல்வாக்கையும் செலுத்த முடியாது. இந்தக் காலப்பயணம், எதிர்காலம் எனும் ஒரு திசையை நோக்கியே நடைபெறுவது. இறந்தகாலம் எனும் எதிர்த்திசையில் செல்லவே முடியாது. ஆனால், அறிவியல் சொல்லும் காலப்பயணம் அப்படியானதல்ல. இந்த நொடியிலேயே எதிர்காலம், இறந்தகாலம் இரண்டுக்கும் பயணம் செய்வதைச் சொல்கிறது. தூரத்தைக் கடப்பதற்கு உங்களுக்கு வாகனமொன்று தேவைப்பட்டதல்லவா... அதுபோலக் காலத்தைக் கடப்பதற்கும் வாகனமொன்று தேவை. அதுவே, ‘கால எந்திரம்’ (Time Machine) எனப்படுகிறது.

காலப்பயணம் மூன்றுவிதங்களில் சாத்தியமாகிறது. ஒளியின் வேகத்தைவிட, அதிவேகத்தில் பிரயாணம் செய்வது. ‘வார்ம்ஹோல்’ வழியாகப் பயணிப்பது. கருந்துளைகளின் அதியீர்ப்பில் சங்கமித்து மீள்வது. இதற்கு மேலும் உங்களை நான் குழப்பப்போவதில்லை. காலப்பயணம் சாத்தியமானது என்பதை மட்டும் மனதில் எடுத்துக்கொள்ளுங்கள். இதைப் பல திரைப்படங்கள் சொல்லியிருக்கின்றன. ‘24’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய தமிழ்த் திரைப்படங்களும் வந்திருக்கின்றன. காலப்பயணத்தால் நடைபெறக்கூடிய விந்தைச் சிக்கலைப் புனைவாக்கி உங்களுக்கு நடக்கும் நிகழ்வுபோலச் சொல்கிறேன். அங்கு என்ன ஒளிந்திருக்கிறது என்பதை நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 10 - கடவுளையும் உருவாக்குமா காலம்?

இனி வரும் சம்பவம் உங்களுக்கானது... நீங்கள் ஓர் அறிவியல் மேதை. இயற்பியலிலும் கணிதத்திலும் கரைகண்டவர். கிட்டத்தட்ட ஐன்ஸ்டைனுக்கு நிகரானவர். ரகசியமாக ஆராய்ச்சிகளைச் செய்துவருபவர். முடிவில் கால எந்திரமொன்றைத் தயாரிக்க ஆரம்பிக்கிறீர்கள். உங்களால் அது முடியும். அவ்வளவு புத்திஜீவி. மெல்ல மெல்ல யாருக்கும் தெரியாமல் கால எந்திரம் உருப்பெறுகிறது. இறுதியில் முழுமையாக முடிவடைந்தும்விட்டது. உங்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஒருநாள் யாருக்கும் தெரியாமல், கால எந்திரத்தை இயக்க முயல்கிறீர்கள். எந்திரம், சற்றுச் சிணுங்கிவிட்டு, ஒரு முனகலுடன் நின்றுவிடுகிறது. எவ்வளவு முயன்றும் அசையவேயில்லை. அப்போது, எந்திரத்தின் முதல் இயக்கத்துக்கு உந்துசக்தியொன்று தேவை என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். இயற்கையில் மிகவும் அபூர்வமாகக் கிடைக்கக்கூடிய கனிமக் கல்லொன்றை (Mineral Stone) மேலோட்டமாக வைத்தாலே போதும், எந்திரம் இயங்க ஆரம்பிக்கும். அந்த விசேஷமான கனிமக் கல்லைத் தேடியெடுப்பது, நடக்கும் காரியமேயில்லை. அவ்வளவு அபூர்வமானது. மிகவும் உடைந்து போகிறீர்கள். இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பதென்றே தெரியவில்லை. அப்படியொரு கனிமக் கல்லைத் தேடுகிறீர்கள் என்று தெரிந்தால், சகலருக்கும் உங்கள்மேல் சந்தேகம் வந்துவிடும். இத்தனை கால முயற்சியும் வீணாகிவிட்டதென்று நொந்துபோகிறீர்கள். அப்போதுதான் உங்கள் முப்பதாவது பிறந்தநாளும் வருகிறது. அந்த அதிசயமும் நடக்கிறது.

உங்கள் முப்பதாவது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட மனைவி விரும்புகிறார். கால எந்திரம் முழுமை பெறாத சோகத்தால் உங்களுக்குப் பெரிய உடன்பாடு இருக்கவில்லை. ஆனாலும், மனைவியின் வற்புறுத்தலுக்கு ஒத்துப்போகிறீர்கள். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றனர். ஜெர்மனியிலிருந்து உங்கள் தாத்தாவும் பாட்டியும்கூட வருகிறார்கள். கொண்டாட்டம் சிறப்பாக நடக்கிறது. பரிசுகள் மலையாகக் குவிகின்றன. கொண்டாட்டம் முடிந்து விருந்தினர்கள் சென்றதும், தாத்தா உங்களருகே வருகிறார். அவருக்குப் பார்வை அவ்வளவு தெளிவில்லை. எல்லாமே நிழல்போலத் தெரியும். உங்களிடம் வந்தவர், ஒரு சிறிய டப்பாவைப் பிறந்தநாள் பரிசாகக் கொடுக்கிறார். “ `இதை மிகவும் பாதுகாப்பாகவைத்து, உன் பேரனின் முப்பதாவது பிறந்த நாளன்று மறக்காமல் கொடுத்துவிடு’ என்று அவன் சொன்னான். இதோ உன்னிடம் தந்துவிட்டேன். அறுபது வருடங்களாகப் பாதுகாத்து வந்தேன். அன்று அவன் சொன்னபோது, எந்த மறுப்பும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டுமென்று என் உள்ளுணர்வு சொன்னது. இன்று நிறைவேற்றிவிட்டேன்” என்றார். அவரின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. அப்படி என்னதான் இருக்கிறது... யார் அவன்? என்று நினைத்தபடி டப்பாவைத் திறக்கிறீர்கள். அங்கே, எந்தக் கல்லைத் தேடினீர்களோ, அது அழகிய வடிவத்தில் பட்டை தீட்டி வெட்டப்பட்டு அங்கே இருக்கிறது. ஆடிப்போய்விடுகிறீர்கள். அவன் யாரென்ற விவரம் தாத்தாவுக்குத் தெரிந்திருக்கவில்லை.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 10 - கடவுளையும் உருவாக்குமா காலம்?

நீங்கள் உருவாக்கிய கால எந்திரத்தில் அக்கல்லைப் பொருத்துகிறீர்கள். எந்தப் பிரச்னையுமின்றி எந்திரம் இயங்க ஆரம்பிக்கிறது. அதன் மூலம் இறந்தகாலம், எதிர்காலமென நீங்கள் விரும்பிய காலமெல்லாம் பயணம் செய்கிறீர்கள். அந்தப் பயணங்களால் அடைந்தவை அனைத்துமே விரும்பத்தகாதவைதான். அதனால், பல சிக்கல்களும் உருவாக ஆரம்பிக்கின்றன. சமூக விரோதிகளின் கையில் எந்திரம் கிடைத்தால், ஏற்படக்கூடிய விபரீதத்தையும் புரிந்துகொள்கிறீர்கள். கால எந்திரம் மகிழ்ச்சியைத் தருவதைவிடத் துன்பத்தையே கொடுக்கிறது என்னும் முடிவுக்கு வருகிறீர்கள். அதை எவரும் இயக்கக் கூடாது என்பதற்காக ஒரு முடிவெடுக்கிறீர்கள். உங்கள் தாத்தா சிறுவனாக இருந்த இறந்தகாலத்துக்குக் கால எந்திரம் மூலம் பயணப்படுகிறீர்கள். தாத்தாவுக்குப் பத்து வயது. எந்திரம் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இருக்க, அந்தக் கனிமக் கல்லை எடுத்துத் தனிமையாக விளையாடிக்கொண்டிருக்கும் தாத்தாச் சிறுவனிடம் கொடுத்து, “இதை மிகவும் பாதுகாப்பாகவைத்து, உன் பேரனின் முப்பதாவது பிறந்தநாளன்று மறக்காமல் கொடுத்துவிடு” என்று சொல்லிவிட்டு, மீண்டும் நிகழ்காலத்துக்குத் திரும்பி விடுகிறீர்கள். இனி, நான் சொல்லப்போகும் விந்தையை கவனியுங்கள்.

அந்தக் கனிமக் கல் எப்படி உருவானது... பூமியில் அது தோன்றியது எப்படி... அதை யார் உருவாக்கினார்கள்... தாத்தாவா... பேரனான நீங்களா... இல்லையென்றால் வேறு எப்படி? காலப்பயணம் சாத்தியமானால், இப்படியான மர்மச் சம்பவங்கள் நடைபெறும் சாத்தியங்கள் உண்டென்று அறிவியல் சொல்கிறது. இதை ‘பாதணிநூல் முரண்நிலை’ (Bootstrap Paradox) என்கிறார்கள். அந்தப் பொருளை யாரும் உருவாக்கவில்லை. இப்படியான நிகழ்வுகளின்போது, மர்மமான முறையில் தானாகவே தோன்றுபவை. இந்த மர்மத்தை விளக்க யாராலும் முடியாது. அந்தப் பொருள், மனிதன் மூலம் தானாகவே உருவானது. கடவுளைப்போல!

(தேடுவோம்)