மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 11 - எங்கிருந்து வந்தாள் நெஃபெர்டிடி?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

பண்டைக்காலத்தில் நீண்ட தலைகொண்ட மனிதர்கள் பூமியெங்கும் வாழ்ந்திருக்கிறார்கள்.

விந்தைகளும் மர்மங்களும் மொத்தமாகக் குவிந்திருக்கும் ஒரே இடம் எகிப்துதான். அதன் ஒவ்வொரு சதுர அடி மண்ணின் கீழேயும் ஏதோவொரு மர்மம் நம்மை ஆச்சர்யப்பட வைப்பதற்காகக் காத்திருக்கும். எகிப்தின் பிரமிடுகளும் மம்மிகளும் உலகையே உலுக்கிப்போட்டவை. அவற்றின் ஆச்சர்யங்கள் சொல்லி மாளாதவை. ‘பிரமிடுகளும் பிரமிப்புகளும்’ என்ற பெயரில் நெடுந்தொடர் ஒன்றையே எழுதிவிடலாம். தொட்டால், அனுமன் வால்போல நீண்டு கொண்டே போகக்கூடியது. ஆனாலும், நாம் அங்கெல்லாம் நுழையப்போவதில்லை. நமக்காக வேறோர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. அதை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்தான் எகிப்து.

பண்டைய எகிப்தில் வாழ்ந்த பெண்களில் இருவர் மிகவும் புகழ்பெற்றவர்கள். வரலாற்றில் தங்கள் பெயர்களை ஆழமாகப் பதிந்திருப்பவர்கள். இருவரில் ஒருவரை உங்களுக்கு நன்றாகத் தெரியும். `கறுப்பழகி’ என்றும், `கழுதைப்பாலில் குளிப்பவர்’ என்றும் அறியப்பட்ட கிளியோபாட்ரா தான் அவர். ஜூலியஸ் சீசர், ஆன்டனி எனப் பலரைத் திருமணம் செய்து, வரலாற்றின் அசையாத சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர். ஆனால், கிளியோபாட்ராவைவிடச் சிறப்பான இன்னுமொரு ராணியும் இருந்திருக்கிறாள். அவள்தான் ‘நெஃபெர்டிடி’ (Nefertiti). எகிப்தின் ஃபாரோவாகத் திகழ்ந்த, ‘அஹெனாடென்’ (Pharaoh Akhenaten)-ன் அன்பு மனைவி. ‘டுட்டன்காமூன்’ (Tutankhamun) என்னும் இன்னுமொரு புகழ்பெற்ற அரசனின் தாய். ‘நெஃபெர்டிடி’ என்றால், ‘எங்கிருந்தோ வந்த அழகிய பெண்’ என்று அர்த்தம். அவள் எங்கிருந்து வந்தாளென்று யாருக்கும் தெரியாது. வரலாற்று ஆசிரியர்கள் பலவித அனுமானங் களைப் பரிந்துரைத்தாலும், அவள் எங்கிருந்து வந்தாள் என்பதற்கான தெளிவான குறிப்புகள் கிடைக்கவில்லை. இந்த இடத்திலிருந்தே நமக்கான விந்தைகளும் ஆரம்பிக்கின்றன!

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 11 - எங்கிருந்து வந்தாள் நெஃபெர்டிடி?

கி.மு.1350-களில் எகிப்தை ஆண்டுவந்த மன்னன்தான் ‘அஹெனாடென்.’ இவன் அரியணை ஏறும்போது எகிப்தியர்கள், ‘ஆமென்’ (Amen) எனும் கடவுளையே வழிபட்டுவந்தார்கள். ஆமெனுக்கெனப் பெரிய தேவாலயங்களும் இருந்தன. அஹெனாடெனின் முந்தைய பெயர்கூட கடவுளின் பெயருடன் ‘ஆமென் ஹொடெப்’ (Amenhotep) என்றுதான் இருந்தது. ஆனால், ‘எங்கிருந்தோ வந்த அழகி’யான நெஃபெர்டிடியை மணந்ததும் எல்லாமே மாறிப்போனது. எகிப்தின் வரலாற்றைத் திருப்பிப்போட்ட திருமணம் அது. நெஃபெர்டிடி யுடன் மிகுந்த அன்புடன் இருந்தான் அரசன். இருவரும் ஒன்றாகச் சேர்ந்தே ஆட்சியும் செய்தார்கள். ஓர் அரசியாக மட்டுமல்லாமல், உயர் பூசாரியாகவும் நெஃபெர்டிடி இருந்தாள். அதனாலேயே, எகிப்தில் மாற்றங்கள் ஆரம்பமாகின. அதுவரை, கடவுள் ஆமெனை வழிபட்டுவந்த அஹெனாடெ னுக்குச் சூரியக் கடவுளான ‘ஆடென்’ அறிமுகப்படுத்தப் பட்டார். அதனால், எகிப்து முழுவதும் ஆடெனையே வழிபட வேண்டுமென்று கட்டளையிட்டான். தன் பெயரையும் ஆடென் கடவுளுடன் இணைத்து, ‘அஹெனாடென்’ என்றும் மாற்றிக்கொண்டான். ஆமெனின் தேவாலயங்கள் இடிக்கப்பட்டன. ஆடெனுக் குரிய சூரியக் கோயில்கள் கட்டப்பட்டன. இதனால், பெரும் குழப்பங்களும் கலவரங்களும் உருவாகின. ஆனாலும், தன்னுடைய நல்லாட்சி மூலம் அனைத்தையும் சரிசெய்தான் மன்னன். நெஃபெர்டிடியும் நல்லதொரு அரசியாகவே இருந்தாள். ஆட்சிகளின் மாற்றங்களுக்கும், அரசுகளின் வீழ்ச்சிகளுக்கும் மதங்கள் காரணமாக இருப்பதை நான் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கில்லை. அஹெனாடென் மர்மமான முறையில் இறந்தான். அவன் இறந்த பிறகு நெஃபெர்டிடியும் மாயமாகிப்போனாள். மகன் டுட்டன்காமூனும் இளவயதில் கொல்லப்பட்டான். இவையெல்லாம் எகிப்திய மன்னர்களின் தனிக்கதை. இந்தக் கதையின் நீட்சிக்குள் நாம் போகப்போவதில்லை. புதைபொருள் ஆராய்ச்சியாளர்களால் இவர்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மம்மிகளும் சுவரோவியங்களும் கண்டெடுக்கப் பட்டன. கூடவே, கண்டெடுக்கப்பட்ட நெஃபெர்டிடியின் மார்பளவுச் சிலையில் ஒளிந்திருந்தது ஒரு விந்தை. இப்போது அந்தச் சிலை பெர்லினில் இருக்கிறது.

பெர்லினில் இருக்கும் நெஃபெர்டிடியின் சிலையில், தலை பின்னோக்கி நீண்டதாகக் காணப்படுகிறது. அது, அவள் அணிந்திருக்கும் மணிமுடியாக இருக்கலாம் என்றுதான் சந்தேகப்பட்டார்கள். ஆனால், எகிப்தில் கிடைத்த சுவரோவியங்கள் சொன்ன கதையோ வேறு. அஹெனாடெனும், நெஃபெர்டிடியும், மூன்று குழந்தைகளும் இருக்கும் சுவரோவியம் ஒன்றில், அனைவரின் தலைகளும் நீண்டுபோய்க் காணப்பட்டன. சாதாரண மனிதரின் தலைபோல் இருக்கவில்லை. குழந்தைகள்கூட நீண்ட தலைகளுடன் இருந்தது வியப்பளித்தது. ‘இவள் யார்... எங்கிருந்து வந்தாள்... எதற்காக வணங்கிய கடவுளையே மாற்றினாள்?’ எனும் கேள்விகள் இருந்தநிலையில், ‘இவர்களின் தலை ஏன் இந்த அளவுக்கு நீண்டிருக்கின்றன?’ எனும் கேள்வியும் எழுந்தது. இவற்றுக்கான விடைகள் ‘பெரு’ நாட்டில் கிடைத்தன.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 11 - எங்கிருந்து வந்தாள் நெஃபெர்டிடி?

பண்டைக்காலத்தில் நீண்ட தலைகொண்ட மனிதர்கள் பூமியெங்கும் வாழ்ந்திருக்கிறார்கள். சீனா, ஆஸ்திரேலியா, மத்தியக் கிழக்கு, எகிப்து, மத்திய அமெரிக்கா என்று உலகின் பல இடங்களில் நீண்ட தலையுடைய மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. ‘பிரையன் ஃபோர்ஸ்டர்’ (Brien Forster) என்பவர், இவை பற்றிப் பல ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறார். புராதன நாகரிகங்கள் இருந்த இடங்களெங்கும் சென்று ஆராய்ந்திருக்கிறார். 1928-ம் ஆண்டு பெரு (Peru) நாட்டின் ‘பரகாஸ்’ (Paracas) எனுமிடத்தில், 300-க்கும் அதிகமான மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை ஆராய்வதற்கு ஃபோர்ஸ்டருக்கு அனுமதியளித்தது பெரு. அந்த மண்டையோடுகள், 3,000 ஆண்டுகள் பழைமையானவை என்று கார்பன் தேதிப் பரிசோதனைகளில் தெரியவந்தது. பலவித மண்டையோடுகள் அவற்றில் இருந்தன. ஆனால், அவையெல்லாமே பின்னோக்கி நீட்டப்பட்ட தலைகளாகக் காணப்பட்டன. இரண்டரை மடங்குகள் அதிகமான நீளத்திலும் சில மண்டையோடுகள் காணப்பட்டன. மண்டையோடுகளில் இருந்த தலைமுடி, ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் இருந்தது. இது ஃபோர்ஸ்டருக்கு நெருடலைக் கொடுத்தது. பெருவில் வாழ்ந்த மக்களின் முடி கறுப்பாகத்தான் இருக்கும். எப்படிச் சிவப்பாக இருக்க முடியும்... ஒருவேளை வர்ணங்கள் பூசியிருப்பார்களோ? முடியை ஆராய்ச்சி செய்ததில், எந்தவித வர்ணமும் பூசப்படாத இயற்கையான முடியென்பது தெரியவந்தது. பெரு நாட்டில் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்ட பல புராதன மனிதர்களின் மண்டையோடுகளின் வடிவங்களுடனும் இவை ஒத்துப்போகவேயில்லை. சிவப்பு நிற முடியோடு நீண்ட தலையோடு இருக்கும் இவர்கள் யார்... மனிதர்கள்தானா... இல்லை, வேறு எவருமா? எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஃபோர்ஸ்டர் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 11 - எங்கிருந்து வந்தாள் நெஃபெர்டிடி?

ஆதிகால மனிதர்களிடம் செயற்கையாகவே தலையை நீட்டிக்கொள்ளும் பழக்கம் இருந்ததைக் கண்டுபிடித்தார். மரப் பலகைகளையும் தடித்த கயிறுகளையும் தலையில் அழுத்தி, குழந்தைகளின் தலைகளை நீட்டியிருக்கிறார்கள். அதுவொரு பெருமைக்குரிய விஷயமாகவும் பார்க்கப்பட்டது. அவர்களின் அரசர்களும் தெய்வங்களும் நீண்ட தலையுடன் இருந்ததால், அப்படியான பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும், அந்த அரச குடும்பத்தினர்களின் தலைகள் ஏன் நீண்டிருந்தன எனும் கேள்விக்கு பதிலில்லை. யாரைப் பார்த்து யார் ஆரம்பித்தார்கள்? செயற்கையாக நீட்டப்பட்ட தலைகளும் சிறிதளவுதான் நீளமுடையதாக இருக்கும். பரகாஸில் கண்டெடுக்கப்பட்ட மண்டையோடுகளோ, இரண்டரை மடங்குகள் நீளமானவையாகக் காணப்படுகின்றன. அந்த மண்டையோடுகளின் பின்பகுதியில் இரண்டு சிறிய துவாரங்கள் காணப்படுவது விசித்திரம். செயற்கையாக இடப்பட்ட துவாரங்கள் இல்லை. இயற்கையாகவே அப்படிக் காணப்படுகின்றன. சாதாரண மனிதனுக்கு அது போன்ற துவாரங்கள் இருக்கவே முடியாது. செயற்கையாகத் தலையை நீட்டும்போது, நீளமான உருவம் கிடைக்கலாம். ஆனால், அவற்றினுள்ளே கொள்ளளவு மாறாது. மாற்றவும் முடியாது. ஆனால், பரகாஸ் மண்டையோடுகள் அதிகக் கொள்ளளவு கொண்டவையாகக் காணப்படுகின்றன. ‘சரி, இங்கு என்னதான் ஒளிந்திருக்கிறது எனப் பார்த்துவிடலாம்’ என்ற முடிவுடன், DNA பரிசோதனை செய்வதற்கு ஃபோர்ஸ்டர் விரும்பினார். அதற்கான அனுமதியும் கிடைத்தது. அந்தச் சமயத்தில், ஊடகங்கள் தங்களின் சந்தேகத்தைக் கேட்டனர். “இவை ஏலியன்களின் மண்டையோடுகளாக இருக்கலாம் என்று சந்தேகப்படு கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “நான் அப்படிச் சொல்லவில்லை. மனிதனின் பரிணாம வளர்ச்சியில், நாம் இதுவரை அறிந்திருக்காத இன்னுமொரு கிளையினமாக இருப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு” என்று ஃபோர்ஸ்டர் பதிலளித்தார்.

அதன் பின்னர், வழமையாக எவை நடக்குமோ அவையெல்லாம் நடந்தேறின. அவை, ஃபோர்ஸ்டரின் ஆராய்ச்சிகளுக்குப் பெரும் தடையாக மாறின. ‘தன் புகழுக்காக இல்லாததையெல்லாம் இருப்பதாகக் கட்டமைக்க முயல்கிறார்’, ‘இவரொரு விளம்பரப் பிரியர்’, ‘இவர் சொல்வதில் எந்த உண்மைகளும் கிடையாது’ எனும் மறுப்புகள் எழ ஆரம்பித்தன. அவரின் ஆராய்ச்சிகளுக்குப் பணம் கொடுப்பதையும் அரசுகள் நிறுத்தின. அப்போது தான் டிஎன்ஏ முடிவுகள் வெளிவந்தன. வந்த முடிவுகள் ஆச்சர்யமானவை. மனிதப் பரிணாமக் கிளைகளின் எந்தப் பிரிவுகளிலும் அந்த மண்டையோடுகளில் சில ஒத்துப்போகவில்லை. பரகாஸ் மண்டையோட்டுக்கு உரியவர்களின் பரம்பரை அலகு, வித்தியாசமான தகவல்களைக் கொண்டிருந்தன. ஃபோர்ஸ்டர் பெற்றுக்கொண்ட இந்த முடிவுகளையும் ஏற்க மறுத்தனர். `இவர் பொய் சொல்கிறார்’ என்பது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்தன. ஆனால், ஃபோர்ஸ்டர் கூறியவற்றை உண்மையாக்கும் சம்பவம் கடந்த ஆண்டு நடந்தது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 11 - எங்கிருந்து வந்தாள் நெஃபெர்டிடி?

2019-ம் ஆண்டு, சீனாவின் ‘ஹூட்டாவோமூகா’ (Houtaomuga) எனுமிடத்தில், 25 ஆதிகால மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. கார்பன் தேதிப் பரிசோதனைகளில், 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் எனத் தெரியவந்தது. பூமியெங்கும் புலம்பெயர்ந்த மனிதன், தென்சீனா வரை வந்து வாழ்ந்திருக்கிறான். 12,000 ஆண்டுகள் பழைமை என்பது சாதாரணமானது அல்ல. மிகப் பழைமையான மனிதர்களில் ஒரு பகுதியினர் அவர்கள். கண்டெடுக்கப்பட்ட 25 எலும்புக்கூடுகளில், 11 பேரின் மண்டையோடுகள் பின்புறமாக நீண்டு காணப்படுகின்றன. ஏன், எதற்காக இவர்களின் தலை நீண்டிருந்தன... இயற்கையாகவா, இல்லை செயற்கையாக நீட்டப்பட்டிருந்தனவா தெரியவில்லை. 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்காலத்துக்கும் முந்தைய ஆதிமனிதனுக்குச் செயற்கையாகத் தலையை அழுத்தி நீட்ட வேண்டிய அவசியம் என்ன... அப்படி நீட்டுவதற்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்... அந்த அளவுக்கு இவர்கள் அறிவைக்கொண்டிருந்தார்களா... கற்காலத் துக்கும் முன்னதான பனிக்கால மனிதனால் இது எப்படிச் சாத்தியமானது... இந்தக் கேள்விகளுக்கான பதில் எங்கே ஒளிந்திருக்கிறது?

(தேடுவோம்)