மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 12 - எஸ்ஸீன்கள் வரலாற்றில் ஏன் மறைக்கப்பட்டார்கள்?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

மலைகள் சூழ்ந்த பொட்டல்வெளியில் ஆடுகளை மேயவிட்டு, மூவரும் பேரீச்சை மரங்களடியில் இளைப்பாறினார்கள். அதில் ஒருவனுக்கு இளைப்பாறுதல் சலித்துவிட, மலைச்சரிவை நோக்கி நடக்கலானான்.

அவர்கள் மூவரும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் இஸ்லாமியச் சிறுவர்கள். உங்களுக்குச் சாக்கடல் (Dead Sea) தெரியுமா? இஸ்ரேல், ஜோர்டான், வெஸ்ட் பாங்க் (பாலஸ்தீனம்) ஆகிய நாடுகளுக்கிடையே இருக்கும் மிகச்சிறிய கடல். பெரிய உப்புநீர் ஏரியென்றும் சொல்லலாம். வெறும் 50 கிலோமீட்டர் நீளமும், 15 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. ஆனால், வேறு எந்தக் கடலுக்கும் இல்லாத பெருமை இதற்கு உண்டு. இந்தக் கடலில் உயிரினங்கள் பெரும்பாலும் உயிர்வாழ முடியாது. அதனாலேயே ‘சாக்கடல்’ என்று பெயர். உப்பின் செறிவு அதிகம். கிட்டத்தட்ட ஏனைய சமுத்திரங்களில் காணப்படும் உப்பைவிட, பத்து மடங்கு அதிகமான உப்பைக்கொண்டது.
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 12 - எஸ்ஸீன்கள் வரலாற்றில் ஏன் மறைக்கப்பட்டார்கள்?

அந்தக் கடலில் குதித்தால், நீங்கள் அமிழ்ந்துபோவதற்கு பதிலாக மிதப்பீர்கள். கடற்கரையோரமெங்கும் உப்புக் குவியல்கள் கொட்டிக் கிடக்கும். அப்படியான உப்புக் கரையைக்கொண்ட பாலஸ்தீனிய ஊர்தான், ‘கும்ரான்’ (Qumran). ஒருபுறம் கடற்கரை, மறுபுறம் உயரமற்ற மலைத்தொடர், சற்றே பேரீச்சை மரங்கள்கொண்ட பசுமைவெளி... எனக் காணப்படுகிறது. எவரும் வசிக்காத, வசிக்க முடியாத ஊர். அங்கிருக்கும் வெளிகளில், தங்கள் ஆடுகளை மேய்ப்பதற்கெனக் கொண்டுவந்திருந்தார்கள் அந்தச் சிறுவர்கள். இது நடந்ததோ 1947-ம் ஆண்டுகளில். முஹம்மது ஆ-டீப், ஜூம்-ஆ முஹம்மது மற்றும் கலீல் மூஸா என்பவை அம்மூன்று சிறுவர்களின் பெயர்கள். ‘பெயர்களைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு முக்கியமானவர்களா?’ என்று கேட்டால், ‘ஆம்! 20-ம் நூற்றாண்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த புராதனப் பொருள்களைக் கண்டுபிடித்தவர்கள் அவர்கள்’. அப்படி எதைக் கண்டுபிடித்தார்கள் என்பதைத்தான் பார்க்கப்போகிறோம்.

மலைகள் சூழ்ந்த பொட்டல்வெளியில் ஆடுகளை மேயவிட்டு, மூவரும் பேரீச்சை மரங்களடியில் இளைப்பாறினார்கள். அதில் ஒருவனுக்கு இளைப்பாறுதல் சலித்துவிட, மலைச்சரிவை நோக்கி நடக்கலானான். மலையின் அடிவாரத்தில் தற்செயலாக, ஒரு சிறிய குகை போன்ற அமைப்பு இருப்பதைக் கண்டான். ‘அட! என்ன இது புதிதாயிருக்கிறதே! இதற்கு முன்னர் இதை நான் கவனிக்கவில்லையே!’ என்று நினைத்துக்கொண்டான். அருகே செல்லவும் அச்சமாக இருந்தது. கற்களை எடுத்து குகையின் உட்புறம் நோக்கி வீசலானான். அப்போதுதான் அந்த ஒலியைக் கேட்டான். கல்லெறிபட்டு, ‘கலீர்’ என்ற சத்தத்துடன் ஜாடியொன்று உடைந்து விழுவதைக் கேட்டான். ‘ஆஹா! யாரோ புதையல்களை ஜாடிக்குள் வைத்து குகைக்குள் ஒளித்திருக்கிறார்கள்’ என்று முடிவுசெய்தான். மூவரும் தங்கள் கிராமம் நோக்கி ஓடினார்கள். விஷயமறிந்த பெற்றோர்கள், பெரும் புதையல் கிடைக்கப்போகிறதென்ற எதிர்பார்ப்புடன் குகைக்குள் சென்றார்கள். அங்கு பல ஜாடிகள் காணப்பட்டன. ஒருசில ஜாடிகளில் பழைய நாணயங்களும், பொருள்களும் இருந்ததைத் தவிர, பெரிதாக எதுவும் அங்கிருக்கவில்லை. ஆனால், மூன்று ஜாடிகளில் மட்டும், எதுவோ எழுதப்பட்ட தோல் சுருள்கள் காணப்பட்டன. வெறுத்தேபோனார்கள். `இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ என்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அதன் பின்னர் அங்கிருக்கவே பிடிக்காமல், எடுத்த பொருள்களுடன் வீடு வந்தார்கள். மொத்தமாக மூன்று சுருள்கள் இருந்தன. அவற்றில் என்ன எழுதியிருக்கிறது என்பது புரியவில்லை. 1954-ல் இஸ்ரேலில் வசிக்கும் மத ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் 100 டாலருக்கு விற்றார்கள். அதையே பெரும் பணமாக நினைத்துக்கொண்டார்கள். ஆனால், பின்னாள்களில் அவை அதைவிட ஆயிரம் மடங்குக்கு விற்கப்படப்போகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 12 - எஸ்ஸீன்கள் வரலாற்றில் ஏன் மறைக்கப்பட்டார்கள்?

1956-ம் ஆண்டு, அந்தச் சுருள்கள் அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, 1,25,000 டாலருக்கு விற்கப்பட்டன. அந்த அளவுக்கு விலைகொடுத்து வாங்கப்பட்டதற்கு ஒரு காரணமும் இருந்தது. அந்தச் சுருள்களில் காணப்பட்டவை என்ன தெரியுமா? கி.மு.125-ம் ஆண்டளவில் எழுதப்பட்ட பைபிளின் பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதி. யூதமதம், கிறிஸ்தவ மதங்களின் அடிப்படையான, ‘ஏசயா’ (Isaiah) எனும் புத்தகம் முழுமையாக அவற்றில் எழுதப்பட்டிருந்தது.

கி.மு.800-களில் வாழ்ந்த ஏசயா, தீர்க்கதரிசி. பழைய ஏற்பாட்டை உறுதிசெய்யும் முக்கியமான ஆதாரம். விலைமதிப்பேயில்லாத பொக்கிஷம். பைபிளின் பழைய பிரதியொன்று, கும்ரான் குகையில் கண்டெடுக்கப்பட்டு, அதிக அளவில் விற்கப்பட்ட செய்தி, உலகம் முழுவதும் பரவியது. வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட 66 புத்தகங்களைக்கொண்டது பைபிள். அதிலுள்ள ஒரு புத்தகம்தான் `ஏசயா.’ ஒரு புத்தகம் கிடைத்ததால், ஏனைய புத்தகங்களும் அங்கு கிடைக்குமென்று புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். அவற்றைக் கண்டுபிடிப்பதற்காக, கும்ரான் நோக்கிப் படையெடுத்தார்கள். கும்ரான் மலைகள் அவர்களை ஏமாற்றிவிடவில்லை. நம்ப முடியாத புதையல்கள் அவர்களுக்காகக் காத்திருந்தன. கூடவே மர்மங்களும்.

கும்ரானில் மலைப்பகுதிகள் சிக்கலான அமைப்பைக் கொண்டிருந்தன. மலைத்தொடரின் மேற்பகுதி திடமான கற்களாலும், மலையடிவாரப் பகுதி உதிர்ந்துபோகக்கூடிய கெட்டிப்பட்ட மண்ணாகவும் காணப்பட்டன. ‘ஏசயா’ சுருள்கள், மலையடிவாரத்தில் செயற்கையாகத் தோண்டப்பட்ட குகை ஒன்றினுள்ளிருந்தே கண்டெடுக்கப்பட்டிருந்தன. அங்கு ஒவ்வோர் அங்குலமாகத் தேடியதில், அதிர்ஷ்டக் கதவுகள் திறக்க ஆரம்பித்தன. மேலும் ஐந்து செயற்கையாகத் தோண்டப்பட்ட குகைகளை, அடுத்தடுத்து கண்டுபிடித்தார்கள். மொத்தமாக ஆறு செயற்கைக் குகைகள். அத்துடன் முடிந்துவிடவில்லை. மலை உச்சிகளில் இயற்கைக் குகைகள் இருப்பதையும் கண்டுகொண்டார்கள். அங்கும் ஐந்து குகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தமாகப் பதினொரு குகைகள். எல்லாக் குகைகளிலும் ஜாடிகளை நிரப்பியபடி, தோலால் செய்யப்பட்ட சுருள்கள் காணப்பட்டன. மிருகங்களின் தோலைப் பதப்படுத்தி, ஒருவகைக் கரிகொண்டு எழுதப்பட்ட தோல் சுருள்கள் அவை. மொத்தமாக 927 சுருள்கள் இருந்தன. எல்லாமே 2,000 ஆண்டுகள் பழைமையானவை. நம்பவே முடியாத கண்டுபிடிப்பு. அவை, ‘சாக்கடல் சுருள்கள்’ (Dead Sea Scrolls) என்றும், ‘கும்ரான் சுருள்கள்’ (Qumran Scrolls) என்றும் அழைக்கப்படுகின்றன. ‘எஸ்தர்’ (Esther) என்னும் பழைய ஏற்பாட்டின் புத்தகம் ஒன்றைத் தவிர, ஏனைய பகுதிகள் அனைத்தும் எழுத்துப் பிரதிகளாக அங்கு காணப்பட்டன. விரல் அளவிலிருந்து, 7 மீட்டர்வரை நீளம் கொண்டவையாக இருந்தன. ‘பழைய ஏற்பாட்டை அத்தாட்சிப்படுத்தும் ஆதாரங்களாக இவை கிடைத்தனவே!’ என்று மகிழ்ச்சியடைந்தார்கள். ஒவ்வொன்றையும் நிதானமாக ஆராய்ந்தார்கள். அவற்றில் புதையலும் இருந்தன, பூதங்களும் கிளம்பின.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 12 - எஸ்ஸீன்கள் வரலாற்றில் ஏன் மறைக்கப்பட்டார்கள்?

கண்டெடுக்கப்பட்ட சுருள்கள் அரமேய, ஹீப்ரு, கிரேக்க, லத்தீன் மொழிகளில் எழுதப்பட்டிருக்கின்றன. எழுபது ஆண்டுகள் இடைவெளிகளில் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தச் சுருள்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கக்கூடியதாக இருந்தன. முதல் வகை, முழுமையான பழைய ஏற்பாட்டு பைபிள் பிரதிகள். இரண்டாவது வகை, அந்தப் பிரதேசத்தின் அரசுகள், வாழ்க்கைமுறை என்பவற்றைக் கொண்டிருந்தன. மூன்றாவது வகையே சிக்கலையும் மர்மத்தையும் வெளிப்படுத்தும் பூதமாக இருந்தது. பைபிள் பிரதிகளாக மட்டும் இருந்திருந்தால், இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய அவசியமே இருந் திருக்காது. இன்று, கும்ரான் சுருள்கள் உலகின் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கின்றன. பழைய ஏற்பாட்டின் புத்தகங்கள் கும்ரான் சுருளில் பிரதிகளாகக் காணப்பட்டாலும், பைபிளில் இல்லாத சில சம்பவங்களும் அந்தப் புத்தகங்களில் காணப்பட்டதைப் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதாரணமாக, நோவாவுக்கும் அவர் தந்தையான லாமெக்குக்கும் இடையே நடைபெற்ற மிக நீண்ட உரையாடல் தற்போது புழக்கத்திலிருக்கும் பைபிளில் காணப்படவில்லை. இதுபோலப் பல சம்பவங்கள் நீக்கப்பட்டோ, எழுதப்படாமலோ, தவிர்க்கப்பட்டோ இருக்கின்றன. இவற்றில் எது சரியானது எனும் கேள்வி எழுவதால், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். கத்தோலிக்கத் தலைமைப் பீடங்கள் இந்த கும்ரான் சுருள்களை மறுக்க ஆரம்பித்தன. இப்படியான முரண்பாடுகள் பைபிளில் இருப்பதாகக் கூறப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. இந்தச் சமயங்களில் கும்ரான் சுருள்களை எழுதியவர்கள் யார் எனும் கேள்வி முக்கியமானது. அந்தக் கேள்விக்கான பதிலும் கண்டெடுக்கப்பட்ட சுருள்களின் மூன்றாம் பகுதியில் இருந்தது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 12 - எஸ்ஸீன்கள் வரலாற்றில் ஏன் மறைக்கப்பட்டார்கள்?

ஜெருசலேம் நகரின் தெருக்களில் இயேசு நாதர் எந்தக் காலகட்டத்தில் நடந்து பிரசங்கங்கள் செய்துகொண்டிருந்தாரோ, அதே காலப்பகுதிகளில்தான் இந்த கும்ரான் சுருள்களும் எழுதப்பட்டுக்கொண்டிருந்தன. அதாவது, பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் இடையிலான காலப்பகுதி. ‘எஸ்ஸீன்ஸ்’ (Essenes) என்று சொல்லப்பட்ட மதவழிபாட்டுக் குழுவொன்று அந்தக் காலகட்டங்களில் இயங்கி வந்திருக்கிறது. பெண்கள் இல்லாமல், ஆண்களை மட்டுமேகொண்ட குழு. பணம், பொருள், தங்குமிடம் எதையும் சேர்த்துவைக்காமல், கடவுளை வழிபடுதல் ஒன்றே கடமையாக இருந்திருக்கிறார்கள். அனைத்தும் துறந்த சந்நியாசிகளாகவும் இருந்தார்கள். ‘ஒளியின் குழந்தைகள்’ (Sons of Light) என்று தங்களை அழைத்துக்கொண்டார்கள். அந்த எஸ்ஸீன்களே, கும்ரான் சுருள்கள் அனைத்தையும் எழுதியிருக் கிறார்கள். பல தசாப்தங்களாகத் தொடர்ந்து எழுதிவந்ததால், வெவ்வேறு மொழிகளின் ஆளுமை அங்கே காணப்பட்டிருக்கிறது. கும்ரான் மலைப்பகுதிகளில் தங்கியிருந்து மதச் சடங்குகள் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. மிகவும் தீவிரமான மத நம்பிக்கையாளர்களாக எஸ்ஸீன்கள் இருந்திருக் கிறார்கள். அந்தச் சமயத்தில், இஸ்ரேலை நோக்கி ரோமர்கள் போர்தொடுத்தார்கள். மிகவும் பயங்கரமான அழிவைக் கொடுத்த போர். அகப்பட்டவர்களை ஈவிரக்கமின்றிக் கொன்றும், கையில் கிடைத்தவற்றை அபகரித்தும் ரோமர்கள் அட்டகாசம் செய்தார்கள். அவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக, கும்ரான் மலைக் குகைகளினுள் சுருள்கள் ஒளித்துவைக்கப்பட்டன. ஒளித்துவைத்தவர்களில் சிலர், தங்களைப் பிடித்துவிடக்கூடும் எனத் தற்கொலையும் செய்துகொண்டார்கள். அன்று அவர்களோடு மறைந்துபோன கும்ரான் சுருள்கள், மீண்டும் 2,000 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆடு மேய்க்கும் சிறுவர்களால் வெளியே வந்தன. மூன்றாவது கும்ரான் குகையினுள் செம்பினால் செய்யப்பட்ட உலோகச் சுருள்கள் சில காணப்பட்டன. அவை அனைத்தும், இஸ்ரேல் நகரில் ஒளித்து வைக்கப்பட்ட தங்கப் புதையல்களின் வரைபடங்களாக இருந்தன. ஆனால், இன்றுவரை எந்தப் புதையலும் கண்டுபிடிக்கப்படவில்லை. தேடுவது தொடர்கிறது. ‘அதுசரி, இதிலென்ன மர்மம் இருக்கிறது’ என்றுதானே கேட்கிறீர்கள்?

இவ்வளவு வெளிப்படையாக இஸ்ரேலில் இயங்கிவந்த எஸ்ஸீன்ஸ் பற்றி பைபிளில் ஒரு வார்த்தைகூட எழுதப்படவில்லை. எதற்காக அவர்கள் தவிர்க்கப்பட்டார்கள்? `ஒளியின் குழந்தைகளில் முக்கியமான ஒருவர் சிலுவையில் அறையப்பட்டார்!’ என்றும் கும்ரான் சுருள்களில் எஸ்ஸீன்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்கள் யாரைக் குறிப்பிடுகிறார்கள் என்று நாம் சந்தேகப்பட்டாலும், அதை யாராலும் உறுதிப்படுத்த முடியாது. அங்கு என்ன ஒளிந்திருக்கிறது என்பதும் தெரியாது!

(தேடுவோம்)