மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 13 - நானா, நீயா... யார் பெரியவன்?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

இப்போதெல்லாம், ‘‘நான் கோயம்புத்தூர் போயிட்டு வாரேன்” என்று சொல்லிவிட்டு சென்ட்ரலில் ரயிலேறிச் செல்வதுபோல, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது சகஜமாகிவிட்டது.

உலகின் முதல் பணக்காரர் யார்?” என்று உங்களிடம் கேட்டால், பில் கேட்ஸின் பெயரையோ, இன்னொருவரின் பெயரையோ தயக்கமில்லாமல் சொல்லிவிடுவீர்கள். இந்தப் போட்டி, கோடீஸ்வரர்களிடையே தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இது போன்ற போட்டிகள் நாடுகளுக்கிடையேயும் நடந்துவிடுகிறது. ‘நானா, நீயா... யார் பெரியவன்’ என்று நாடுகளும் களத்தில் இறங்கி விடுகின்றன. எல்லைப் போர்களையும், ஏகாதிபத்தியங் களையும் அதிகமாகவே கண்டவர்கள் நாம். முதல்வன் யாரென்ற போட்டியில் அமெரிக்காவும் ரஷ்யாவும் எப்போதும் அடித்துக்கொள்பவை. முதலாம், இரண்டாம் போர்க்காலச் சூழலில், இந்தப் போட்டி மிகவும் அதிகமாகவே காணப்பட்டது. இன்றுபோல் பல நாடுகளாகச் சிதறியிருக்காமல், ‘சோவியத் ரஷ்யா’ எனும் ஒரே நாடாக ரஷ்யா இருந்த காலம் அது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் இரண்டு எதிரெதிர்க் கொள்கைகளைத் தமக்கானவையாக வகுத்துக் கொண்டன. முதலாளித்துவ நாடாக அமெரிக்காவும், கம்யூனிச நாடாக சோவியத் ரஷ்யாவும் உருவானது மட்டுமல்லாமல், ஏனைய நாடுகளையும் தங்களது ஆதரவு நாடுகளாக்கி, இரண்டாகப் பிரித்தும் கொண்டன. நிலப்படை, கடற்படை, வான்படை மூன்றிலும் தங்கள் பலத்தைப் பெருக்கின. மாறி மாறிப் பெருகிய பலத்தை நிரூபித்தும் காட்டின. இறுதியில், அவற்றின் பலம் வெளிப்பட வேண்டிய இடமாக விண்வெளி (Space) மட்டுமே எஞ்சியது. அங்கும் போட்டியை ஆரம்பித்தன. அப்போது ஆரம்பித்த, உலகத்துக்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட மர்மங்களைத்தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம். கூடவே அந்த இரு நாடுகளின் நாடகங்களையும்.

இப்போதெல்லாம், ‘‘நான் கோயம்புத்தூர் போயிட்டு வாரேன்” என்று சொல்லிவிட்டு சென்ட்ரலில் ரயிலேறிச் செல்வதுபோல, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது சகஜமாகிவிட்டது. சீனா, இந்தியா, ஜப்பான், இஸ்ரேல் எனப் பல நாடுகள் விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பியிருக்கின்றன. துபாய்கூட, ‘நான் செவ்வாய்க்குப் போறேன்’ என்று பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கேட்கும் குரலில் சத்தமாகச் சொல்லியிருக்கிறது. ஆனால், 1975-ம் ஆண்டுக்கு முன்னரெல்லாம் அப்படியில்லை. அமெரிக்கா அல்லது ரஷ்யா மட்டுமே ராக்கெட்டுகளை அனுப்பியிருக்கின்றன. விண்வெளியை விதவிதமாகத் தொடுவதில் இரு நாடுகளுமே முன்னின்ற காலமது. 1957-ம் ஆண்டு, பூமியைச் சுற்றிவருவதற்கு, ‘ஸ்புட்னிக் 1’ (Sputnik 1) விண்கலத்தை முதன்முதலாக ரஷ்யா அனுப்பியது. அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல், அதைவிடச் சிறந்த ‘எக்ஸ்புளோரர் 1’ (Explorer 1) விண்கலத்தை 1958-ம் ஆண்டு அனுப்பியது அமெரிக்கா. போட்டியில் இரண்டு நாடுகளும் சமனாகின. ஆனால், எதையும் முதலில் செய்யும் நாடாகச் சோவியத் ரஷ்யாவே இருந்தது. அடுத்தடுத்து ரஷ்யா செய்த சாதனைகளை அமெரிக்காவால் ரசிக்கவே முடியவில்லை. விண்வெளிக்குச் செல்லும் முதல் உயிரினமாக, ‘லைக்கா’ (Laika) என்னும் நாயையும், முதல் மனிதனாக, ‘யூரி ககாரின்’ என்பவரையும் அனுப்பி வைத்தது. அத்துடன் நிறுத்திவிடாமல், அடுத்துச் செய்ததுதான் சாதனைகளின் உச்சம். 1966-ம் ஆண்டு, ‘லூனா 9’ (Luna 9) எனும் ஆளில்லா ராக்கெட்டை சந்திரனில் இறங்கவைத்தது. அமெரிக்காவும் பல விண்வெளிச் சாதனைகளைச் செய்திருந் தாலும், தொடர்ச்சியான முன்சாதனைகளை ரஷ்யாவே செய்தது. அதைச் சகிக்க முடியாமல், உலகமே வியக்கும்படி சிறந்த சாதனை ஒன்றைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, சந்திரனுக்கு மனிதனை அனுப்பிவைக்கலாம் எனத் திட்டமிட்டது. அதைப் பின்னர் நிறைவேற்றவும் செய்தது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 13 - நானா, நீயா... யார் பெரியவன்?

1969-ம் ஆண்டு, நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதனாகச் சந்திரத் தரையில் காலடி வைத்தார். அத்துடன் எல்லாமே முடிந்துபோனது. அந்தச் சாதனை மூலம், ரஷ்யாவின் முகத்தில் கரியைப் பூசிவிட்டு, முன்னணியில் நிற்பவன் நானே என்று நிரூபித்தது. எது எப்படியிருந்தாலும், ரஷ்யாவும் அமெரிக்காவும் செய்த சாதனைகளை யாரும் மறுக்க முடியாது. மனிதகுலத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு முன்மாதிரியாக நின்றன. அவை விண்வெளியில் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தும் வியக்கவைக்கும் செயல்களே! நிச்சயம் இரு நாடுகளையும் பாராட்டியே ஆக வேண்டும் என்றுதான் நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்வெளிச் சாதனைகள் செய்தன என்பது மிகப்பெரிய பொய். ஒரு உலகப் போர் மூலம், உலக மக்களை ஏமாற்றிய சுயநலம். யாருக்கும் தெரியாமல், பல மர்மச் செயல்களை நடத்திய தந்திரம். அப்போது என்ன நடந்தது, அங்கு என்ன ஒளிந்திருந்தன என்பதை நீங்கள் அறிந்தால், வியப்பின் உச்சிக்கே போவீர்கள்.

`என்ன இது, அமெரிக்காவையும் ரஷ்யாவையும் இவர் இப்படியெல்லாம் குற்றம் சுமத்துகிறாரே!’ என்று ஆச்சர்யப்படுகிறீர்கள் அல்லவா? ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். வல்லாதிக்க நாடுகள், தங்களுக்கு ஆதாயமில்லாமல், எந்த நாட்டுக்குள்ளும் பெரும்பாலும் மூக்கை நுழைப்பதில்லை. உதவி செய்கிறேனென்று அவர்கள் வந்திருந்தால், அவற்றின் நன்மைக்கான திட்டமொன்றைத் தீட்டி விட்டன என்று அர்த்தம். உலக நாடுகள் அனைத்தும், சிதறிச் சின்னா பின்னமான இரண்டாம் உலகப்போரிலும், கிட்டத்தட்ட அதுவே நடந்தது. மாபெரும் கொடுங் கோலனான ஹிட்லரின் அட்டகாசங்களை அடக்குவதற்காகவே அமெரிக்காவும் ரஷ்யாவும் உதவிக்கு வந்ததாகச் சொல்லப்பட்டது. அதை யாரும் மறுக்க முடியாதுதான். ஆனால், அவர்களின் வரவுக்கு இன்னுமோர் உட்காரணமும் இருந்தது. அந்தக் காரணம் எதுவெனத் தெரிந்தால் ஆச்சர்யப்பட்டுப்போவீர்கள். ஹிட்லரால் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சிதைந்தன. அந்தக் கொடூரனுடன் நம்ப முடியாத பெரும் துணையும் கூடவே இருந்தது. வெற்றிகொள்ள முடியாத சர்வாதிகாரியாக அவனை நினைக்கவைத்ததும் அதுவே. அதனால், வெறிகொண்டவன்போலவே நடந்தும்கொண்டான். ஹிட்லரின் கூடவேயிருந்த அந்தத் துணை எது தெரியுமா? விஞ்ஞானம். ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் நம்ப முடியாத அளவுக்கு விஞ்ஞானிகள் குவிந்திருந்தார்கள். குறிப்பாக, ராக்கெட் கட்டுமான விஞ்ஞானத்தில் வியக்கவைக்கும் வல்லுநர்கள் நிறைந்துபோயிருந்தனர். வரலாற்றையே தலைகீழாக மாற்றியிருக்கக்கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள். வரலாற்றின் மிகப்பெரிய அத்தியாயம் அது. முழுமையாக மறைக்கப்பட்ட அத்தியாயம்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 13 - நானா, நீயா... யார் பெரியவன்?

உலகின் முதல் ராக்கெட்டை சீனர்கள்தான் கண்டுபிடித்தார்கள். வெடிமருந்தாகப் பயன்படுத்தும் கருந்தூளில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளைக் கொண்டு, 700 ஆண்டுகளுக்கு முன்னரே எதிரிகளைத் தாக்கியிருக்கிறார்கள். அதன் பின்னர், ‘ராபர்ட் கோடார்ட்’ (Robert Goddard) எனும் அமெரிக்கர் நவீன ராக்கெட்டைக் கண்டுபிடித்தார். ஆனால், பின்னாள்களில் ராக்கெட் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியவர்கள் ஜெர்மானியர்கள்தான். அதுவும் நாஜிக்கள். இவை எவையும் உலகத்துக்குத் தெரியாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டன. பாடசாலைகளிலோ, பொதுவெளியிலோ சொல்லிக் கொடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டன. ‘விண்வெளிக்கு முதல் ராக்கெட்டை அனுப்பியது யார்?’ என கூகுளில் தேடினீர்களென்றால், ‘ஸ்புட்னிக்’ என்று பதில் வரும். ரஷ்யா ஸ்புட்னிக்கை அக்டோபர் 1957-ம் ஆண்டுதான் அனுப்பியது. அதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்னரே, விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பியிருக்கிறது ஜெர்மனி. 1944-ம் ஆண்டு ஜூன் மாதம், ஜெர்மனியால் அனுப்பப்பட்ட ‘V2 ராக்கெட்’, 176 கிலோமீட்டர் உயரம் சென்று சாதனை படைத்தது. அதுவே விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் ராக்கெட். ஆனால், V2 ராக்கெட் பூமியைச் சுற்றும் அடிப்படை வேகத்தைத் (Orbital Speed) தொடவில்லை எனும் காரணத்தைச் சொல்லி, ஸ்புட்னிக்தான் முதலில் சென்றதென்று பதிவிடுகிறார்கள். ‘ஒருவேளை இவர்கள் சொல்வது சரியாக இருக்குமோ?’ என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அந்த ஸ்புட்னிக்கை அனுப்புவதற்கு உதவியவர்கள் ஜெர்மன் விஞ்ஞானிகள்தான் என்று நமக்குத் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை.

‘அடப்போங்க, ஸ்புட்னிக் என்ன ஸ்புட்னிக், சந்திரனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அப்போலோ ராக்கெட்டைக்கூட ஜெர்மன் விஞ்ஞானிகள்தான் வடிவமைத்தார்கள்’ என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதுமட்டுமல்ல, அமெரிக்கா, ரஷ்யா இரண்டும் செய்து முடித்த விண்வெளிச் சாதனைகளுக்கு ஜெர்மன் ராக்கெட் விஞ்ஞானிகளே மூல காரணம். இது எப்படிச் சாத்தியம்? இரண்டு எதிரெதிர் நாடுகள், எப்படி ஒரே நாட்டு விஞ்ஞானி களைப் பயன்படுத்தியிருக்க முடியும்... ஜெர்மனியின் ஏவுகணைத் தாக்குதலால் இங்கிலாந்தே சிதைந்து போயிருந்தது. அதற்குப் பெரிதும் உதவிய ராக்கெட் விஞ்ஞானிகள், எந்தவிதத் தண்டனையுமில்லாமல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் எப்படிச் சென்றார்கள்... தேடித் தேடிக் கொல்லப்பட வேண்டியவர்களல்லவா அவர்கள்... அந்த அதிகாரி களெல்லாம் எப்படி உயிர் தப்பினார்கள்... யார் தப்ப வைத்தார்கள்? நடந்தவை எல்லாமே நாடகங்கள். அமெரிக்காவும் ரஷ்யாவும் உலகறியாமல் நடத்திய மர்மச் செயல். அந்த நாடகங்களை நீங்களும் அறிய வேண்டுமல்லவா? தொடர்ந்து படியுங்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 13 - நானா, நீயா... யார் பெரியவன்?

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், ஹிட்லரின் நாஜிப் படையில் இருந்த ஒவ்வோர் உயரதிகாரியையும் கைதுசெய்து மரண தண்டனையளித்தார்கள். மரண தண்டனை கட்டாயம் வழங்கப்பட வேண்டுமென்று அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒற்றைக்காலில் நின்றார்கள். கொடூரமான நாஜிகள் கொல்லப்படுவதை உலக மக்களும் விரும்பினார்கள். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. அதிகம் ஏன், பெரும்பாலான ஜெர்மானிய மக்களே அதை விரும்பினார்கள். ‘நியூர்ன்பெர்க்’ (Nurnberg) நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று நாஜிகளுக்கு தண்டனைகளும் நிறைவேறின. ஆனால் யாருக்கும் தெரியாமல், 1,600 ஜெர்மானிய நாஜி விஞ்ஞானிகளை அமெரிக்காவும், 2,000 நாஜி விஞ்ஞானிகளைச் சோவியத் ரஷ்யாவும், தங்கள் நாடுகளுக்கு ரகசியமாகக் கடத்திச் சென்றன. கடத்திச் சென்றது தண்டனை வழங்க அல்ல; தங்களுக்கான முக்கியத் திட்டங்களை நிறைவேற்ற. அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்டதெல்லாம் சொகுசான வாழ்க்கைதான். `புகழ்பெற்ற விஞ்ஞானிகள்’ என்னும் அந்தஸ்துடன், அந்நாட்டுப் பிரஜைகள் என்னும் அந்தஸ்தும் கிடைத்தது.

உலகின் முதல்தர நாஜி விஞ்ஞானியும், ஹிட்லருக்கு வான்வெளி ஆயுதங்களைத் தயார்செய்யப் பாடுபட்டவருமான, ‘வேர்னர் வான் பிரவுன்’ (Wernher Von Braun) என்பவரே, பிரபலமான ‘சாட்டர்ன் 5’ (Saturn 5) ராக்கெட்டைத் தயாரித்தவர். அவரே அப்போலோவைச் சந்திரனுக்கு அனுப்பவும் உதவியவர். இவையெல்லாம் பின்னர் மெல்ல மெல்லக் கசியத் தொடங்கின. அதுவரை ரஷ்யாவும் அமெரிக்காவும் பெருங்கதையாடல் ஒன்றையே நிகழ்த்தியிருந்தன. அவற்றையெல்லாம் முழுமையாக அடுத்த பகுதியில் பார்க்கலாம். கூடவே ஹிட்லரிடம் இருந்த பறக்கும் தட்டைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

“என்ன பறக்கும் தட்டா?”

(தேடுவோம்)