மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 14 - விண்வெளி ராக்கெட்டா, பழிவாங்கும் ஆயுதமா?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

இதன் முதல் பகுதியைப் படித்தவர்களுக்கு, அமெரிக்காவையும் ரஷ்யாவையும் நான் கடுமையாகத் தாக்கியதுபோலத் தோன்றியிருக்கலாம்.

முடிந்துபோன வரலாறுகளில், நமக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டவை அதிகம்தான். ஒளிக்கப்பட்ட சம்பவங்கள் வழியாகவே வரலாறுகள் எழுதப்படுகின்றன. அதுபோல, ஒளித்துவைக்கப்பட்டிருந்த மர்மத் திட்டமொன்று 1980-களில் வெளியே கசிந்தது. ஆனால், இன்றுவரை அதிகம் வெளிவராமல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக் கிறது. அதை ‘ஜூனியர் விகடன்’ வாசகர்கள் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். மறைக்கப்பட்ட அந்தத் திட்டத்தின் பெயர், ‘ஆபரேஷன் பேப்பர்கிளிப்’ (Operation Paperclip). ஒரு நாட்டின் சுயநலத்துக்காக, பயங்கரவாதம்கூடப் பூக்களின் மெத்தையாக மாற்றப்படும். ஆபரேஷன் பேப்பர்கிளிப்பின் மர்மத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நாம் இரண்டாம் உலகப்போருக்குள்ளும், ஹிட்லரின் ஜெர்மனிக்குள்ளும் நுழைய வேண்டும்.

இதன் முதல் பகுதியைப் படித்தவர்களுக்கு, அமெரிக்காவையும் ரஷ்யாவையும் நான் கடுமையாகத் தாக்கியதுபோலத் தோன்றியிருக்கலாம். ‘இவர் ஜெர்மனியில் வாழ்வதால், ஜெர்மன் விஞ்ஞானிகளை உயர்வாகப் பேசுகிறாரோ?’ என்றும் நினைத்திருக்கலாம். ஆனால், அப்படி எதுவுமில்லை. ‘தண்டனை பெற வேண்டிய நாஜி விஞ்ஞானிகள், தண்டனையின்றித் தப்பியது எப்படி?’ என்பதே கேள்வி. ஹிட்லரை எவரும் எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவோ, ஆதரிக்கவோ முடியாது. பிரபல அமெரிக்க எழுத்தாளரும் புலனாய்வுப் பத்திரிகையாளருமான, ‘ஆன்னி ஜேக்கப்சன்’ (Annie Jacobsen) என்பவர் எழுதிய, ‘ஆபரேஷன் பேப்பர்கிளிப்’ (Operation Paperclip) நூல்தான், இந்தக் கட்டுரையின் அடித்தளம்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 14 - விண்வெளி ராக்கெட்டா, பழிவாங்கும் ஆயுதமா?

சிறிய உதாரணம் ஒன்றுடன் கட்டுரைக்குள் இறங்கலாம். 1965-ம் ஆண்டு அக்டோபர், கென்னெடி விண்வெளி மையத்தின் (Kennedy Space Centre) தலைவராக, ‘குர்ட் டெபஸ்’ (Kurt Debus) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாசாவின் டைரக்டரான மிக உயர்ந்த பதவியது. இதைவிட, ஒரு விஞ்ஞானியைக் கௌரவப்படுத்த முடியாது. ‘இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?’ என்று நீங்கள் கேட்டால், ‘இதில்தான் ஆச்சர்யமே இருக்கிறது!’ என்று நான் பதில் சொல்வேன். இந்த குர்ட் டெபஸ் யார் தெரியுமா? நாஜி ஜெர்மனியில், V2 ராக்கெட்டைத் தயாரிப்பதில் ஈடுபட்ட நாஜி விஞ்ஞானிகளில் ஒருவர். போர்க் குற்றவாளியாக தண்டனை பெற்றிருக்க வேண்டியவர், அமெரிக்காவின் அதியுயர் பதவி பெற்றது எப்படி? அது மட்டுமல்ல... அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடிக்கும், உப அதிபர் லிண்டன் ஜான்சனுக்கும் மத்தியில் இவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் உலகப் பிரசித்தம். அமெரிக்க அதிபர்கள் மத்தியில் நாஜியொருவர் அமர்ந்திருப்பது ஆச்சர்யமாக இல்லையா... இது எப்படிச் சாத்தியமாயிற்று? ‘அங்கு என்னென்ன ஒளிந்திருக்கின்றன?’ எனும் உண்மைகளைத் தேடலாம்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 14 - விண்வெளி ராக்கெட்டா, பழிவாங்கும் ஆயுதமா?

இரண்டாம் உலகப்போருக்கு முன்னரே, ராக்கெட் தயாரிப்புகளில் ஜெர்மனி இறங்கிவிட்டது. 1937-ம் ஆண்டு, போருக்கான ஆயத்தங்களையும், விஞ்ஞான ஆராய்ச்சிகளையும் ஒன்றாகவே முடுக்கிவிட்டிருந்தார் ஹிட்லர். ஆயுதங்கள், மருத்துவம், விண்வெளி போன்ற பலவித ஆராய்ச்சிகளில் ஜெர்மன் ஈடுபட்டிருந்தது. நாடு முழுவதும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் மிக முக்கியமானது, ‘பெனெமுண்டெ’ (Peenemunde) ஆராய்ச்சி நிலையம். இது, பால்டிக் கடலில் ஜெர்மனிக்குச் சொந்தமான ஒரு தீவு. யாருமில்லா தீவில் மிகப்பெரிய ராக்கெட் ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்பட்டது. 2,000-க்கும் அதிகமான விஞ்ஞானிகளுடன், பொறியாளர்களும், பணியாளர்களுமாக மொத்தம், 11,000 பேருக்கு மேல், அந்தத் தீவில் குடியேற்றப்பட்டார்கள். ராக்கெட்டுகளைக் கண்டுபிடித்துப் பரிசோதிப்பதும், தயாரிப்பதுமே அவர்களின் பணி. அப்போதே, பல பில்லியன் மார்க்குகளை ஆராய்ச்சிக்கு என ஹிட்லர் ஒதுக்கியிருந்தார். அந்த ஆராய்ச்சிகளுக்குத் தலைமை வகித்தவர்தான், அமெரிக்கா விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதற்குப் பெரும் உதவியாக இருந்த ‘வேர்னர் வான் பிரவுன்’ (Wernher von Braun).

முதலில், A1, A2 எனும் இரண்டு வகை ராக்கெட்டுகளை பிரவுன் உருவாக்கினார். அவை மிகச்சிறியவை. பரிசோதனைகளில் இரண்டும் வெற்றிகளைக் கொடுத்தன. பின்னர், 20 அடி நீளமான, A3 ராக்கெட் தயாரிக்கப்பட்டது. பரிசோதனையில் அதுவும் வெற்றிகண்டது. அடுத்தகட்டமாக, A4 ராக்கெட் தயார்செய்யப் பட்டது. அது, 46 அடி நீளமும், 12,500 கிலோ எடையுமாக இருந்தது. அவ்வளவு பெரிய ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்ப முடியுமா என்பது சந்தேகமே!

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 14 - விண்வெளி ராக்கெட்டா, பழிவாங்கும் ஆயுதமா?

A4 ராக்கெட்டின் முதல் பரிசோதனை ஆரம்ப மானது. நெருப்புப் பிழம்புடன் சீறியெழவிருந்த ராக்கெட், அங்கேயே விழுந்து வெடித்தது. பெருஞ்செலவுடன் தயாரிக்கப்பட்ட ராக்கெட், கண்முன்னே பற்றியெரிவதைக் கண்டு பிரவுன் கலங்கிப்போனார். ஆனாலும், முயற்சிகளைக் கைவிடவில்லை. இரண்டாவது ராக்கெட்டும் தயாரிக்கப்பட்டது. அதன் பரிசோதனையும் ஆரம்பமானது. மெல்ல உயர்ந்து பறக்க ஆரம்பித்தது. ஆனால், சிறிது உயரத்தில் பாதையை மாற்றி பூமியில் விழுந்தது. அதை பிரவுன் எதிர்பார்க்கவே இல்லை. அடுத்தடுத்த தொடர் சம்பவங்கள் ஹிட்லருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அச்சமயம், போலந்தைக் கைப்பற்றும் போருக்கு ஹிட்லர் தயாராகிக் கொண்டிருந்தார். போருக்கான செலவுகளும் அதிகம். ராக்கெட் பரிசோதனைத் தோல்விகள் சிந்திக்கவைத்தன. ‘தற்சமயம் ராக்கெட் பரிசோதனைகள் அவசியம்தானா?’ என்று யோசித்தார். இறுதியில், ஹிட்லர் அந்த முடிவை எடுத்தார். எந்த முடிவை எடுத்திருக்கக் கூடாதோ, அந்த முடிவை எடுத்தார். ஹிட்லர் மட்டும் அந்த முடிவை எடுக்காமலிருந்தால், இன்று உலகமே அவரது காலடியில் கிடந்திருக்கும். ஹிட்லரின் வாயில் சனி புகுந்துகொண்டது. “போர் முடியும் வரை, ராக்கெட் பரிசோதனைகளை இடை நிறுத்திவையுங்கள்” என்று கட்டளையிட்டார்.

ஒருவேளை, ஹிட்லர் தடை விதிக்காமலிருந்தால், ராக்கெட் கண்டுபிடிப்பின் அடுத்தகட்டத்துக்கு ஜெர்மனி நுழைந்திருக்கும். பிரவுனும் நிகழ்த்திக் காட்டியிருப்பார். விண்வெளிக்கு மனிதனை அனுப்பிவைக்கும் திட்டம் அப்போதே அவரிடமிருந்தது. அடுத்ததாக அதற்கான ஆராய்ச்சியைச் செய்யவிருந்தார். அதிக தூரம் செல்லும் ஏவுகணைகளையும் தயாரிக்கவிருந்தார். முதல் மனிதனை விண்வெளிக்கு ஜெர்மனியே அனுப்ப வேண்டும் என்பதே அவர் கனவு. இரண்டாண்டுகள் ராக்கெட் ஆராய்ச்சிகள் நிறுத்தப்பட்டன. பிரவுனுக்கான மிகப்பெரிய தடைக்கல் அது. இரண்டாண்டுக்குள் பல சாதனைகள் செய்யக்கூடியவர். எல்லாமே தலைகீழாகிப் போனது. ஒருவழியாக போலந்துப் போர் முடிந்தது. 1941-ம் ஆண்டு, ராக்கெட் ஆராய்ச்சிகளுக்கு ஹிட்லரால் அனுமதி கொடுக்கப்பட்டது. A4 ராக்கெட், அனைத்துத் தவறுகளும் திருத்தப்பட்டு மூன்றாம்கட்டப் பரிசோதனைக்காகக் காத்திருந்தது. இரண்டாண்டுகளில் பிரவுன் அனைத்தையும் மாற்றியிருந்தார். 1948-ம் ஆண்டு, A4 ராக்கெட் வானில் பறக்கவிடப்பட்டது. இம்முறை பிரவுன் தோற்கவில்லை. மனித வரலாற்றின் முதல் அற்புதம் நிகழ்ந்தேறியது. ராக்கெட்டின் வேகம், ஒலியின் வேகத்தின் நான்கு மடங்காக இருந்தது. 190 கி.மீ உயரத்துக்கு விண்வெளிக்குள் நுழைந்தது. நாசாவின் கணிப்பின்படி, 80 கி.மீ உயரத்தில் இருக்கும் கார்மன் கோட்டுடன் (Karman Line) விண்வெளி ஆரம்பமாகிறது. அதன்படி, விண்வெளிக்குள் நுழைந்த முதல் ராக்கெட்டை ஜெர்மனியே அனுப்பியது. உலகமே திகைத்துப்போனது. எந்நேரமும் ஜெர்மனியால் தாக்கப்படுவோம் என்று பயந்த நாடுகள், நடுங்க ஆரம்பித்தன. அப்போதுதான் இங்கிலாந்து அப்படியொரு காரியத்தைச் செய்தது. அதன் பின்னர் நடந்தவை எல்லாமே அழிவுகள்தான். உலகமகா அழிவு.

விண்வெளிக்குச் செல்லும் வெறும் ராக்கெட்டுகளாக அல்ல. வெடிகுண்டுகளை நிரப்பிய ஏவுகணைகளாகத் தயாரிக்கக் கட்டளையிட்டார்.

பெனெமுண்டெ தீவில் ராக்கெட் தயாரிக்கப் படுகிறது என்பதை அப்போதுதான் இங்கிலாந்து புரிந்துகொண்டது. உளவு விமானங்கள் மூலம் அந்தச் செய்தி உண்மைதான் என ஊர்ஜித மாயிற்று. 17 ஆகஸ்ட், 1943 அன்று இங்கிலாந்தின் விமானப்படை, பெனெமுண்டெ தீவை குண்டுகள் போட்டு அழித்தது. அதற்கு, ‘ஆபரேஷன் ஹைட்ரா’ என்று பெயரும் இடப்பட்டது. அந்தத் தாக்குதலில், இரண்டு மிக முக்கியமான ஜெர்மன் விஞ்ஞானி களுடன், 735 பேர் இறந்தார்கள். இரண்டு நவீன A4 ராக்கெட்டுகளும் அழிந்தன. பெனெமுண்டெ தீவே சுடுகாடானது. ஆனால், வேர்னர் பிரவுனும் சக விஞ்ஞானிகளும் தப்பினார்கள். அந்தத் தாக்குதலால் ஹிட்லர், கொலைவெறியின் உச்சத்துக்கே போனார்; இங்கிலாந்தைப் பழிவாங்க முடிவெடுத்தார். ராக்கெட் தயாரிப்புகளைத் துரிதப்படுத்தும்படி கட்டளையிட்டார். விண்வெளிக்குச் செல்லும் வெறும் ராக்கெட்டு களாக அல்ல. வெடிகுண்டுகளை நிரப்பிய ஏவுகணைகளாகத் தயாரிக்கக் கட்டளையிட்டார். ஹிட்லரின் முடிவுக்குப் பெரும்துணையாக இருந்தவர்கள் பிரவுனும் அவரது விஞ்ஞானிகளும் தான். பெனெமுண்டெ தீவின் அழிவை அவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பழிக்குப் பழி என்றே மனம் துடித்தது. அவர்களும் நாஜிகளாகவே இருந்தனர். உயிருக்கான அவர்களின் மதிப்பு வெற்றுச் சில்லறைகளே! பழிவாங்கும் உணர்வால், ராக்கெட்டின் பெயரையே மாற்றினார்கள். A4 என்றிருந்த ராக்கெட்டுக்கு, ‘பழிவாங்கும் ஆயுதம்’ எனும் அர்த்தத்தில், ‘Vergeltungswaffen’ என்று பெயரிடப்பட்டது. அதைச் சுருக்கி, ‘V ராக்கெட்’ என்றார்கள். ராக்கெட்டுகள் V1, V2 எனும் பெயருடைய ஏவுகணைகளாக மாறின. 900 கிலோ வெடிகுண்டுடன் பறக்கக்கூடியவை. இவற்றால் ஏற்பட்ட அழிவை ஐரோப்பா மறக்கவே மறக்காது. லண்டன் மாநகரமே சிதைந்துபோனது.

லண்டனில் நடந்தவற்றை விவரமாக அடுத்த பகுதியில் பார்ப்போம். அதற்கு முன், “ஹிட்லர் கட்டளையிட்டதால் விஞ்ஞானிகள் நிறைவேற்றினார்கள். அதில் அவர்களின் தப்பு ஏது... அவர்கள் ஏன் யுத்த கைதிகளாக வேண்டும்... விஞ்ஞானிகளையெல்லாம் தப்பாகச் சொன்னால் எப்படி?” எனும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 14 - விண்வெளி ராக்கெட்டா, பழிவாங்கும் ஆயுதமா?

பெனெமுண்டெ தீவு அழிந்த பின்னர், ‘நார்ட்ஹவுசன்’ (Nordhausen) எனும் இடத்துக்கு ஏவுகணைத் தயாரிப்புகள் மாற்றப்பட்டன. விஞ்ஞானிகளும் அங்கு அனுப்பப்பட்டார்கள். மீண்டும் இங்கிலாந்து தாக்கலாம் என்பதால், சுரங்கம் ஒன்றினுள்தான் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. ஏவுகணைத் தயாரிப்புக்கான உதவிக்குப் பணியாளர்கள் தேவைப்பட்டதால், அருகிலிருந்த முகாமில் அடைக்கப்பட்டிருந்த 40,000 யுத்த கைதிகள், பணிக்காக அங்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு நடந்த கொடுமையோ எழுத்தால் சொல்ல முடியாதது. 20,000 யுத்த கைதிகள் சுரங்கத்தின் பணியின்போதே இறந்துபோனார்கள். அவர்கள் கொல்லப் பட்டார்கள் என்றும் சொல்லலாம். அவர்களின் இறப்புக்கு ஏவுகணைத் தயாரிப்பு மட்டுமே காரணம். அதற்குப் பொறுப்பாக இருந்தவர்கள், அந்த விஞ்ஞானிகள்தான். அவர்களின் கண்களின் முன்னேதான் 20,000 பேரும் படிப்படியாகச் செத்து விழுந்தார்கள். இப்போது சொல்லுங்கள், இவர்கள் எந்தத் தண்டனையும் இல்லாமல் எப்படி அமெரிக்கா சென்றார்கள்? அந்த மர்மங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

(தேடுவோம்)