மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 15 - எங்குதான் இல்லை சுயநலம்?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

. ‘ஜெர்மனியின் அனைத்து வல்லுநர்களையும் எங்கள் நாட்டுக்குக் கடத்திவிட வேண்டும். அவர்களைப் பயன்படுத்தி, உலகின் உயர்ந்த நாடாகவும் மாறிவிட வேண்டும்’

இரண்டாம் உலகப்போர் பற்றிச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. அவற்றை அறிந்தும், கேட்டும் அலுத்துப்போயிருப்பீர்கள். இரண்டாம் உலகப்போரில் மறைக்கப்பட்ட பல மர்மங்களில் ஒன்றைப் பகிரலாமென விரும்பினேன். சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயமென்று உலகெங்கும் மத்தியஸ்தத்துக்குச் செல்லும் வல்லாதிக்க நாடுகள், தங்கள் சுயநலனென்று வந்துவிட்டால் எதையும் பார்ப்பதில்லை. அதைச் சொல்வதே இந்தக் கட்டுரை. ராக்கெட் விஞ்ஞானம், ஜெட் இன்ஜின்கள், மருத்துவத்துறை என அனைத்துத் துறைகளிலும், ஜெர்மன் விஞ்ஞானிகள் முன்னணியில் இருந்த காலம் அது. நாடொன்றைக் கைப்பற்றும்போது, அதன் பொருள் வளங்களைத் தமதாக்குவது நாடுகளின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கும். இரண்டாம் உலகப்போரிலும் அதுவே நடந்தது. ஆனால், கைப்பற்றப்பட்டவை பொருள் வளங்கள் மட்டுமல்ல, புத்திஜீவிகளான மனித வளங்களும்தான். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில், மறைமுகமான யுத்தம் நடந்துகொண்டிருந்தது. உலகில் நான்தான் பெரியவன் என்று காட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. கம்யூனிசமா, முதலாளித்துவமா எனும் இரண்டு இசங்களினூடாக அவை நடைமுறைப் படுத்தப்பட்டன. விண்வெளியில் யார் தன் பலத்தைக் காட்டுகிறாரோ, அவரே பெரியவர் எனும் நிலை உருவாகியது. எப்படிக் காட்டுவது என்பதே கேள்வி. இதற்குள், இந்த இரு நாடுகளிலும் இல்லாத விண்வெளி அறிவை வளர்த்துவைத்திருந்தது ஜெர்மனி. ரஷ்யாவையும் அமெரிக்காவையும்விட பல மடங்குகள் முன்னேற்றத்துடன் காணப்பட்டது ஜெர்மனி. அந்தச் சமயத்தில்தான் இரண்டாம் உலகப்போரும் ஆரம்பமானது. ஹிட்லரும் ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாகப் பிடிக்க ஆரம்பித்தான். தனிநாடாக அவனைச் சமாளிக்க முடியவில்லை. பல நாடுகள் ஒன்று சேர்ந்து தாக்கினால் மட்டுமே வெற்றிகொள்ள முடியும். ஹிட்லரை எதிர்ப்பதில் முன்னின்ற பிரான்ஸுடனும் இங்கிலாந்துடனும் கைகோத்துப் போராட முன்வந்தன அமெரிக்காவும் ரஷ்யாவும். ஒருவகையில் அது உதவிதான். ஆனால், உற்றுப் பார்த்தால் அவற்றின் திட்டம் வேறாக இருந்தது. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தெரியாமல், திட்டங்களை வகுத்துக்கொண்டன. யாராலும் ரசிக்க முடியாத சுயநலத் திட்டங்களாக அவை இருந்தன.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 15 - எங்குதான் இல்லை சுயநலம்?

அமெரிக்காவும் ரஷ்யாவும் போருக்கு ஆயத்தமாகும்போதே, ஒரு முடிவை எடுத்துக்கொண்டன. ‘ஜெர்மனியின் அனைத்து வல்லுநர்களையும் எங்கள் நாட்டுக்குக் கடத்திவிட வேண்டும். அவர்களைப் பயன்படுத்தி, உலகின் உயர்ந்த நாடாகவும் மாறிவிட வேண்டும்’ என்பதே முடிவு. ஜெர்மனியைத் தாக்கச் சென்றதே, ‘நாஜிக்களையும், நாஜிக் கட்சியினரையும் இல்லாது ஒழிக்க வேண்டும்’ என்பதற்காகத்தான். ஆனால், நாஜிகளான விஞ்ஞானிகள் மட்டும் உயிருடன் தேவைப்பட்டனர். அமெரிக்கா இப்படி நினைத்துக்கொண்டது: `ஜெர்மன் விஞ்ஞானிகளை நாம் கைப்பற்றாவிட்டால், அவர்களை ரஷ்யா கைப்பற்றும். அவர்களைப் பயன்படுத்தி, உலகின் சிறந்த நாடாக மாறிவிடும். அதனால், ரஷ்யா பிடிப்பதற்கு முன்னர் நாம் அவர்களைப் பிடித்துவிட வேண்டும்’ என்று தீர்மானித்தது. அதற்காகவே, ‘ஆபரேஷன் பேப்பர்கிளிப்’ திட்டத்தின் மூலம், ஜெர்மனியின் முதல்தர விஞ்ஞானிகளையும் அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்ல முடிவெடுத்தது. ஆனால், ரஷ்யாவும் சளைத்ததல்ல. அதேபோன்ற திட்டத்தையே ரஷ்யாவும் போட்டது. ‘ஆபரேஷன் ஒசோவாவியாக்கிம்’ (Operation Osoaviakhim) எனும் திட்டத்தில், ஜெர்மன் விஞ்ஞானி களைக் கைப்பற்ற முடிவெடுத்தது. இரண்டு நாடுகளுமே ஒரே முடிவோடுதான் ஜெர்மனிக்குள் நுழைந்தன.

பினெமுண்டெ தீவு தாக்கப்பட்ட பிறகு, ஏவுகணைத் தயாரிப்புகள் நார்ட்ஹவுஸன் எனும் இடத்துக்கு மாற்றப்பட்டன. அங்குள்ள மலைப்பகுதியில், 35 அடி அகலமும், 25 அடி உயரமும், ஒரு மைல் நீளமும்கொண்ட இரண்டு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டன. அவற்றுடன் இணையும் வகையில் 45 கிளைச் சுரங்கங்களும் அமைக்கப்பட்டு, மிகப்பெரிய ஆராய்ச்சி நிலையம் உருவானது. ஆயிரக்கணக்கில் ராக்கெட்டுகளைத் தயாரிப்பதற்கு அதிக அளவில் பணியாளர்கள் தேவைப்பட்டனர். ராக்கெட் விஞ்ஞானியும், மூன்றாம்நிலைப் பொறுப்பதிகாரியுமாக இருந்த ஆர்தர் ருடால்ஃப் (Arthur Rudolph) அதற்கு ஒரு வழி இருப்பதாகச் சொன்னார். வேர்னர் பிரவுனும், இரண்டாவது நிலையிலிருந்த வால்டர் டோர்ன்பெர்கெரும் (Walter Dornberger) சம்மதம் தெரிவித்தனர். மூவரும் இணைந்து பிரேரித்த அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. உலகின் மிகக் கொடூரம் வாய்ந்த, சகிக்கவே முடியாத மனித அவலத்துடன் அந்தத் திட்டம் நிறைவேறியது கொடுமை. அதுவே இந்தக் கட்டுரையின் அடித்தளமும்கூட. யுத்தத்தின்போது பிடிபட்ட கைதிகள் நார்ட்ஹவுஸனில் மிகப்பெரிய முகாமொன்றில் அடைக்கப்பட்டி ருந்தார்கள். அவர்களைச் சுரங்கத்தில் பணியாளர்களாக அமர்த்தலாம் என்பதே ருடால்ஃப் முன்மொழிந்த திட்டம். சுரங்க ஆராய்ச்சி நிலையத்தின் பணிக்காக, 40,000 வரையிலான கைதிகள் பயன்படுத்தப்பட்டனர்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 15 - எங்குதான் இல்லை சுயநலம்?

ஒரு சர்ட், ஒரு பேன்ட், ஒரு ஜாக்கெட் மட்டும் கொடுக்கப்பட்டு, சுமார் ஆறு மாதங்கள் வரை 16 மணி நேரம் பணிசெய்யவைக்கப்பட்டார்கள். குளிக்கவோ, வெளியே செல்லவோ முடியாது. டாய்லெட்கூட அங்கேயுள்ள வாளிகளில்தான். பின்னர் அவர்களே அதை அகற்ற வேண்டும். தினமும் ஒரு கப் குடிநீர், கொஞ்சம் சூப் அவ்வளவுதான். சித்ரவதையின் உச்சம் அங்கு நடந்தேறியது. உடல் மெலிந்து, சுகாதாரமற்று தினம் தினம் செத்துவிழுந்தார்கள். ஒரு கிறிஸ்துமஸ் நாளன்று 3,000 இறந்த உடல்கள் அகற்றப்பட்டன. 6,000 V2 ராக்கெட்டுகள் செய்து முடிப்பதற்குள், 12,000 பேர் இறந்தார்கள். இன்றுவரை போர்க்கைதிகளைச் சித்ரவதை செய்யும் நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்த சம்பவங்கள் இவை. அங்கு நடந்தவை அனைத்துக்கும் சாட்சிகளாக பிரவுனும் அவரது சக விஞ்ஞானிகளும் இருந்தார்கள். பின்னாள்களில், நார்ட்ஹவுஸனை அமெரிக்கா கைப்பற்றியபோது, அங்கு 600 பேர் மட்டுமே உயிர்தப்பியிருந்தார்கள்.

அவர்களில் இப்போதும் உயிருடனிருக்கும் சிலரின் வாக்குமூலங்களைக் கேட்டால், உடம்பெங்கும் பதற்றத்தில் நடுக்கமெடுக்கும். அந்த அளவுக்குச் சித்ரவதையை அனுபவித்திருக்கிறார்கள். அந்த இறப்புகளுக்கு ஏதோவொரு வகையில் காரணமாக இருந்த நாஜி விஞ்ஞானிகள், நல்லவர்களாகி அமெரிக்கப் பிரஜைகளானார்கள். பின்னாள்களில் சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்தார்கள்.

1944-ம் ஆண்டு, V1, V2 ஏவுகணைகளால் லண்டன் மாநகரம் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டது. வட பிரான்ஸின் துறைமுக நகரமான கலையிலிருந்து (Calais) ஏவப்பட்ட, 9,000-க்கும் அதிகமான V1 ஏவுகணைகளும், 3,000-க்கும் மேலான V2 ஏவுகணைகளும் தாக்கியதில், 24,000 மக்கள் கொல்லப்பட்டார்கள். 7,50,000 வீடுகள் சேதமாகின. இதற்கு மேலும் விட்டால் அனைவரும் அழிய நேரிடலாமென்று, நேச நாடுகள் ஒன்றிணைந்து ஜெர்மனியைத் தாக்கின. ஜெர்மனியும் வீழ்ந்தது. 11 ஏப்ரல், 1945-ல் அமெரிக்காவின் ஒரு பகுதியினர், நார்ட்ஹவுஸன் சுரங்க ஆராய்ச்சி நிலையத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்த ஆயிரக்கணக்கான V2 ராக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரஷ்யாவின் கைகளில் அகப்படக் கூடாதெனத் துடைத்தெடுத்து அமெரிக்கா கொண்டுசென்றனர். மிஞ்சியிருந்த எட்டே எட்டு ராக்கெட்டுகளை, ‘இந்தா பிடி’ என்று இங்கிலாந்துக்குக் கொடுத்தனர். அத்துடன் நின்றுவிடவில்லை. வேர்னர் பிரவுனுடன் 120 ராக்கெட் விஞ்ஞானிகள் உட்பட, 1,600 முதல்தர நாஜி விஞ்ஞானிகளை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றனர். ஒருபுறம், நியூரெம்பெர்க் யுத்த நீதிமன்றத்தின் ஊடாக நாஜிப் படையினருக்கும், நாஜிக் கட்சியினருக்கும் மரண தண்டணை வழங்கப்பட்டுக்கொண்டிருந்தபோது, அமெரிக்காவுக்குத் தேவைப்பட்ட விஞ்ஞானிகள் ரகசியமாக விடுவிக்கப்பட்டு, அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்கள். “அவர்கள் நல்ல விஞ்ஞானிகள். ஹிட்லரின் கொடுமைகளால் கஷ்டப்பட்டவர்கள்” என்று அமெரிக்க மக்களுக்குச் சொல்லப்பட்டது.

வழக்கம்போல அவர்களும் நம்பினார்கள். விஞ்ஞானிகள் உயர் பதவிகளிலும், உயர் பொறுப்புகளிலும் அமர்த்தப்பட்டார்கள். அவர்களில், ஆர்தர் ருடால்ஃபும் இருந்ததுதான் உலக மகா நகைச்சுவை. நார்ட்ஹவுஸன் சித்ரவதைகளுக்கு மூல காரணமாக இருந்தவரே அவர்தான். பின்னாள்களில் இந்த விஷயமெல்லாம் கசிய ஆரம்பித்ததும், 1979-ம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸ், ஆபரேஷன் ‘பேப்பர்கிளிப்’ பற்றி அறிக்கை தரும்படி கேட்டது. அப்போது பெரும்பாலானவர்கள் இறந்துபோயிருந்தார்கள். எஞ்சியவர்களில் ருடால்ஃபுக்கு மட்டும் அமெரிக்க பிரஜா உரிமை பறிக்கப்பட்டது. பிரவுனும், அவரது சக ராக்கெட் விஞ்ஞானிகளும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிகளில் பல சாதனைகள் செய்தார்கள். அவர்களால் வடிவமைக்கப்பட்ட ராக்கெட், மனிதனைச் சுமந்தபடி சந்திரனில் இறங்கியது. ரஷ்யாவும் சும்மா இருக்கவில்லை.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 15 - எங்குதான் இல்லை சுயநலம்?

அமெரிக்கா வடித்தெடுத்துக் கொண்டுசென்ற விஞ்ஞானிகளில் எஞ்சி இருந்தவர்களில், 2,200 ஜெர்மன் விஞ்ஞானிகளை ரஷ்யா அழைத்துச் சென்றது. அவர்கள் அனைவரையும் இரண்டாம்தர விஞ்ஞானிகள் என்றே சொல்லலாம். ஆனால் அவர்களின் உதவியால், அமெரிக்காவைவிட அதிக அளவில் விண்வெளிச் சாதனைகளை ரஷ்யா செய்து முடித்தது என்பதுதான் வரலாற்றின் நம்ப முடியாத வேடிக்கை. ரஷ்யாவுடன் போட்டி போட முடியாமல், கலங்கியபடி அமெரிக்கா இருந்தது என்னவோ உண்மைதான்.

இத்தனை பரபரப்புகளின் நடுவே பெரியதொரு விந்தைச் செய்தி உலகெங்கும் பரவலாயிற்று. பறக்கும்தட்டு ஒன்று ஹிட்லரிடம் இருந்தது என்பதே அந்தச் செய்தி. கோயில் மணியின் வடிவத்தில், மிகப்பெரிய விண்கலம் ஒன்றைப் பலர் கண்டதாகச் சொல்கிறார்கள். ஜெர்மனி, போலந்து எல்லையில் அதை நிறுத்திவைக்கும் கட்டமைப்பும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ‘மணி’ எனும் அர்த்தத்தில், ஜெர்மன் மொழியில், `Die Glocke’ என்று அதை அழைக்கிறார்கள். ‘அதிசய ஆயுதம்’ (Wunderwaffe) என்றும் அழைக்கப்படுகிறது. ஹிட்லரின் படையில், ஆயுதங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர், ஹான்ஸ் காம்லெர் (Hans Kammler). அவரின் பொறுப்பிலேயே மணி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஜெர்மனிப் போர் முடிவடைந்த நிலையில், ஆஸ்திரியாவின் எல்லையில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்றும் சொல்கிறார்கள். ஆனால், அவரது உடல் கிடைக்கவேயில்லை. அவரையும், மணி விண்கலத்தையும் அதன் பிறகு யாரும் பார்க்கவில்லை. இருவருமே மாயமாகிப் போனார்கள். அப்படியானதொரு விண்கலம் உண்மையாகவே இருந்ததா, இல்லையா என்பது பற்றி எந்த விவரமும் இல்லை. இல்லாத ஒன்றைப் பார்த்ததாகப் பலர் சொல்வதையும் எப்படிப் புரிந்துகொள்வதென்றும் தெரியவில்லை.

ஆனால், ஆபரேஷன் பேப்பர்கிளிப்புக்கு பொறுப்பாக இருந்த அமெரிக்கரான ‘டொனால்டு ரிச்சர்ட்சன்’ என்பவரின் மகனான, ஜான் ரிச்சர்ட்சனின் வாக்குமூலத்தின்படியும், அமெரிக்க ஆவணங்களின்படியும், ஹான்ஸ் காம்லெர் அமெரிக்காவில் இருந்தது நிரூபணமாகிறது. மணி போன்ற வடிவத்தில் பறக்கும் பொருளொன்றை பென்சில்வேனியா மக்களில் சிலர் கண்டதாகச் சொல்லப்படுகிறது. இவை எதற்கும் தகுந்த ஆதாரங்கள் கிடையாது. எல்லாமே விடை தெரியாத மர்மங்கள்தான். அங்கு என்ன ஒளிந்திருக் கிறது என்பது இன்றும் கேள்விக்குறியே!

(தேடுவோம்)