என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 17 - பிரபஞ்சத்தின் முதல்வன் நீயா? - மெதூசலா மர்மம்!

புதிதாகக் கண்டுபிடிக்கும் நட்சத்திரங்கள், காலக்ஸிகள் ஆகியவற்றுக்கு புராதன எகிப்து, கிரேக்கக் கடவுள்கள் மற்றும் பிற கடவுள்களின் பெயர்களை வைப்பது வழக்கம்.
ஒவ்வொரு மூலையிலும், மனிதனால் புரிந்துகொள்ள முடியாத ஏதோவொரு மர்மத்தையோ, விந்தையையோ ஒளித்துவைத்திருக்கிறது பூமி. அவற்றைப் புரிந்துகொள்ள ஆயுட்காலம் போதாது. பூமியில் மட்டும்தான் மர்மங்களா என்றால் இல்லை, பூமி தாண்டி பெருவெளியாக விரிந் திருக்கும் பிரபஞ்சமோ மர்மத்தின் குவியல் எனலாம். இரவு வானைக் கண்களை உயர்த்திப் பார்க்கும்போது தெரியும் ஒவ்வொரு பொருளும், மனிதனால் கற்பனை செய்ய முடியாத புதிராகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட புதிர்களில் ஒன்றை நோக்கியே இம்முறை நம் பயணம் தொடங்குகிறது. வானியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுகொண்ட மாபெரும் விந்தை அது. எந்தவகைக் குழப்பம் தோன்றினாலும், அதற்கான விடையைக் கோட்பாடுகளாகவாவது வரையறுத்துவிடுபவர்கள் விஞ்ஞானிகள். ஆனால், இந்த மர்மத்துக்கான பதிலோ, தெளிவோ எந்தவிதத்திலும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அப்படியான அறிவியல் மர்மம் ஒன்றையே நாம் பார்க்கப்போகிறோம். விண்வெளியில் ரொம்ப தூரம் போக வேண்டும். நீங்கள் தயார்தானே?
வானியல் ஆராய்ச்சியாளர்களிடம் நடைமுறை ஒன்று உண்டு. புதிதாகக் கண்டுபிடிக்கும் நட்சத்திரங்கள், காலக்ஸிகள் ஆகியவற்றுக்கு புராதன எகிப்து, கிரேக்கக் கடவுள்கள் மற்றும் பிற கடவுள்களின் பெயர்களை வைப்பது வழக்கம். பல காலக்ஸிகளை ஒன்றிணைத்து, மகா பெரிய காலக்ஸி தொகுப்பு ஒன்றுக்கு (Supercluster), இந்துக் கடவுளான சரஸ்வதியின் பெயரை வைத்திருக் கிறார்கள். 4,000 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைதூரத்தில், வீணையிசைத்துக்கொண்டிருக் கிறாள் சரஸ்வதி. அதுபோலவே, 200 ஒளியாண்டுகள் தூரத்திலிருக்கும் ஒரு நட்சத்திரத்துக்கு, ‘மெதூசலா’ (Methuselah) என்று பெயரிட்டிருக் கிறார்கள். இந்தப் பெயரை ஒரு காரணத் துக்காகவே அந்த நட்சத்திரத்துக்கு வைத்திருக்கிறார்கள். அந்த நட்சத்திரம், நம் சூரியக் குடும்பம் இருக்கும் அதே பால்வெளி மண்டலமான, மில்கிவே காலக்ஸியில்தான் இருக்கிறது. என்ன காரணத்துக்காக ‘மெதூசலா’ என்று பெயர் வைத்தார்கள் தெரியுமா?
பைபிளில் சொல்லப்பட்ட, தீர்க்கதரிசியான ‘நோவா’ என்பவரை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். ‘நீரினால் பூமியை அழிப்பதற்குக் கடவுள் ஆயத்தமானபோது, அவரின் கட்டளைப் படி கப்பலொன்றை அமைத்து, ஜோடி ஜோடியாக உயினங்களைக் கப்பலில் ஏற்றிக் காப்பாற்றியவர் நோவா’ எனும் பைபிள் கதையைப் படித்திருப்பீர்கள். நோவாவின் அப்பாவான லாமெக்கின் அப்பாதான் ‘மெதூசலா.’ மனித வரலாற்றிலேயே அதிக காலம் உயிர் வாழ்ந்தவர் மெதூசலாதான் என்று பைபிள் குறிப்பிடுகிறது. 969 ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனாலேயே, அந்த நட்சத்திரத்துக்கும் ‘மெதூசலா’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். அவ்வளவு பழைமையான நட்சத்திரம் அது. ‘நட்சத்திரமொன்று பழைமையாக இருப்பதில் அப்படியென்ன மர்மம் இருந்துவிடப் போகிறது?’ என்று நீங்கள் நினைக்கலாம். தொடந்து படியுங்கள். அதற்கு முன்னர் இன்னுமொரு முக்கியமான தகவலையும் சொல்லிவிடுகிறேன். ஒரு மரம் 4,500 ஆண்டுகளுக்கும் மேலாக நின்றுகொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆக வேண்டும். கலிஃபோர்னியாவில், 4,852 ஆண்டு வயதுடைய மரமொன்று இருக்கிறது. இதுதான் பூமியிலேயே அதிக வயதுடைய மரம். அதனால் இந்த மரத்தையும் ‘மெதூசலா மரம்’ என்றே அழைக்கிறார்கள். இனி, மெதூசலா நட்சத்திரத்தில் என்ன மர்மம் ஒளிந்திருக்கிறது என்று பார்த்துவிடலாம்...
சூரியன் ஒரு நட்சத்திரம் என்பது உங்களுக்குத் தெரியும். சூரியனுக்கு அடுத்ததாக இருக்கும் நட்சத்திரம், ‘ஆல்பா சென்டாரி’ (Alpha Centauri). இது சூரியனிலிருந்து நான்கு ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. ‘எல்லாம் சரிதான், அது என்ன ஒளியாண்டு” என்கிறீர்களா? பிரபஞ்சத்தில் அதிகமான வேகத்தில் செல்லக்கூடியது ஒளிதான். ஒரு நொடியில் மூன்று லட்சம் கிலோமீட்டர் செல்லும். சரியாக கவனியுங்கள். மணிக்கல்ல, நொடிக்கு. அப்படியெனில், ஓர் ஆண்டில், ஒளி எவ்வளவு கிலோமீட்டர்கள் செல்கிறது என்று கணித்து வருவதே, ‘ஒளியாண்டு’ தூரம். அதாவது, 9,460,000,000,000 கி.மீ அளவைக்கொண்டது. இதுபோல, நான்கு மடங்கு தூரத்தில் ஆல்பா சென்டாரி நட்சத்திரம் இருக்கிறது. சூரியனுக்கும் அதற்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். இது போன்று 100 பில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கியது மில்கிவே காலக்ஸி. மில்கிவே காலக்ஸிபோல 200 பில்லியன் காலக்ஸிகளைக்கொண்டது பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்திலுள்ள நட்சத்திரங்கள், அவை கணக்கிடவே முடியாத பெரிய தொகை. பூமியின் அனைத்துக் கடற்கரைகளிலும் உள்ள மணல்துகள் களின் எண்ணிக்கையைவிட, பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் அதிகம். அந்த நட்சத்திரங்கள், பல ஒளியாண்டுகள் இடைவெளியுடன் ஒன்றையொன்று தள்ளி இருக்கின்றன. அப்படிப் பார்க்கும்போது, ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் எவ்வளவு பிரமாண்டமானது என்பது புரிகிறதல்லவா? பிரபஞ்சம், அவ்வளவு பெரியதாக இருந்தாலும், ஆரம்பத்தில் ஒரு குண்டூசி முனையளவுடைய சிறிய புள்ளியாகவே இருந்திருக்கிறது. அதன் பின்னர்தான் பிரமாண்டமாக விரிவடைந்தது என்கிறார்கள். அதாவது, ‘பிக்பேங்’ (Bigbang) எனும் தவிர்க்க முடியாத பெருவெடிப்பால், அந்தச் சிறியபுள்ளி பேரண்டமாக விரிவடைந்திருக்கிறது. அந்தப் பெருவெடிப்பு, கிட்டத்தட்ட 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகவும் கணித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நீங்கள் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள். ஆனால், அதே சமயத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் இன்னொரு சம்பவத்தை அறிந்திருக்க மாட்டீர்கள். விஞ்ஞானிகளையே தலையைச் சுற்றவிட்டு அலையவைத்திருக்கிறது அந்தச் சம்பவம்.
பிக்பேங் பெருவெடிப்பின்போது, சிறிய புள்ளியாகப் பிரபஞ்சம் ஒடுங்கியிருந்தது என்று சொன்னேன் அல்லவா? அப்படியானால், `பிக்பேங்குக்கு முன்னர் என்ன இருந்தது?’ எனும் கேள்வி, பொதுவாகக் கேட்கப்படுகிறது. `பிக்பேங்குக்கு முன் என்று எதுவுமே இல்லை’ என்பதே விஞ்ஞானிகளின் பதில். எந்த கணத்தில் பிக்பேங் பெருவெடிப்பு நடந்து, பிரபஞ்சம் விரிந்ததோ, அந்த கணத்திலிருந்துதான் காலமும், இடமும் உருவாகின என்கிறார்கள். அதனால், பிக்பேங்குக்கு முன்னர் என்ற கேள்விக்கே அர்த்தம் கிடையாது. அப்போதுதான், காலமோ, இடமோ இருக்கவில்லையே. ‘காலம்’ என்ற ஒன்று இல்லாதபோது, ‘அதற்கு முன்’ என்று காலத்தைக் குறிக்கும் வார்த்தைக்கும் அர்த்தமில்லை. பிக்பேங் கணத்திலிருந்து பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து கொண்டிருக்கிறது. இன்றுவரை, 13.8 பில்லியன் ஆண்டுகளாக விரிவடைதலை அது நிறுத்தவேயில்லை. சொல்லப்போனால், ஒவ்வொரு விநாடிக்கும் அதன் வேகம் அதிகரித்துக்கொண்டே போகிறது. நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும் இந்த கணத்திலும் அது விரிவடைந்தபடியேதான் இருக்கிறது. பிரபஞ்சம் விரிவடையும் வேகமுடுக்கத்தை (Acceleration) ஆராய்ச்சி யாளர்கள் கணித்திருக்கிறார்கள். மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கிக் கருவிகளினூடாக, விண்வெளியின் விளிம்பில் தெரியும் காலக்ஸிகள் நகர்வதையும், அவற்றிலிருந்து வரும் ஒளியையும்கொண்டு வேக முடுக்கத்தை கணிக்கிறார்கள். இதன் அடிப்படையில்தான் பிக்பேங் பெருவெடிப்பு, 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகவும் கணித்தார்கள். எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தன. ஆனால், மெதூசலாவை ஆராய ஆரம்பித்தபோதுதான் தலைகீழானது.

‘மெதூசலா’ நட்சத்திரத்தின் பெயர், ‘HD140283’ என்பது. ‘லிப்ரா’ (Lybra) நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்றாக இருக்கும் நட்சத்திரம் அது. ஜோதிடத்தில், ‘துலாம்’ ராசியென்று சொல்வார்களல்லவா... அவற்றில் ஒன்று. வெளிச்சமே இல்லாத, மங்கிப்போன நீலநிற நட்சத்திரம். அதை ஆராயும்போது, அதன் வயதையும் கணித்தார்கள். வந்த விடையைப் பார்த்து தலையே சுற்றிப்போனது. 16 பில்லியன் ஆண்டுக்கு முன்னரே அந்த நட்சத்திரம் உருவாகி யிருக்கிறது என்று காட்டியது. சகலரும் குழம்பிப்போனார்கள். பிக்பேங் நடைபெற்றே 13.8 பில்லியன் ஆண்டுகள்தான் ஆகின்றன. இது எப்படி 16 பில்லியன் வயதுடையதாக இருக்க முடியும்? ஒட்டுமொத்த வானியல் ஆராய்ச்சிகளும் சிதைந்துபோய்விடும். பல விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதைப் பற்றி விரிவாக ஆராய முனைந்தார்கள். அந்த நட்சத்திரத்தை கணிப்பதில் ஏதோவொரு தவற்றைச் செய்கிறோம் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தது. மிகவும் துல்லியமான கணிப்பாக, ஒரு முடிவு வந்தது. அது, 14.5 பில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று காட்டியது. அப்போதும் பிரபஞ்ச ஆரம்பத்துக்கு முன்னர் தோன்றியதாகத்தான் கணிப்பு இருந்தது. சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். பிக்பேங் கணத்துக்கு முன்னால் எதுவும் இருந்திருக்க முடியாது. விஞ்ஞானிகள் அந்த விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். பிக்பேங் வெடிப்பின் பின்னர், பல மில்லியன் ஆண்டுகளுக்கு அப்புறம்தான் நட்சத்திரங்களே தோன்றியிருக்கின்றன. எப்படிப் பார்த்தாலும், அந்த நட்சத்திரம் 14.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கவே முடியாது. இது எப்படிச் சாத்தியம்... எங்கு தவறு செய்கிறோம்? இறுதியாக, ஜெர்மனியிலுள்ள ‘மாக்ஸ் பிளாங்க்’ விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இதில் இறங்கி, அந்த நட்சத்திரத்தின் வயதை கணித்தது. எவ்வளவோ முடிந்தவரை கழித்துப் பார்த்தாலும், இறுதி முடிவாக, 14.27 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரானது என்ற முடிவே வந்தது. எப்படியானாலும், பிரபஞ்சத் தோற்றத்துக்கு, 200 மில்லியன் ஆண்டுகளுக்கும் அதிகமான வயதை அந்த நட்சத்திரம் கொண்டது என்றுதான் முடிவுசெய்ய வேண்டியிருக்கிறது. மொத்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து நட்சத்திரங் களுக்கும் மூத்த நட்சத்திரமாக, முதல்வனாக, `HD140283’ இருக்கிறது. அதனாலேயே, ‘மெதூசலா’ என்ற பெயரும் கிடைத்தது. ஒருவேளை பிரபஞ்சத்தின் ஆரம்ப கணத்தை, 13.8 பில்லியன் ஆண்டுகளென்று தவறாக கணித்துக்கொள்கிறோமோ என்றும் நினைத்தார்கள். ஆனால், அந்த ஆராய்ச்சியில் இறங்கும்போது, பிரபஞ்சம் விரிவடையும் வேகம், முன்னர் கணித்ததைவிட மேலும் அதிகம் என்று தெரியவந்தது. அப்படிப் பார்க்கும்போது, பிரபஞ்சத்தின் ஆரம்பம், 13.8 பில்லியன் ஆண்டுகள் என்பதைவிட, 12 பில்லியன் ஆண்டுகள் எனும் கணக்கைத் தொடுகிறது. அது மேலும் குழப்பத்தையே தோற்றுவித்தது. எந்த கணிப்பும், ‘மெதூசலா’, பிரபஞ்சத்துக்குப் பின்னரான நட்சத்திரம் என்பதை இன்றுவரை நிரூபிக்கவில்லை.
மெதூசலாவின் பிறப்பு, பெரும் மர்மமாகவும், மாபெரும் சவாலாகவும் வானியற்பியலாளர்களுக்கு அமைந்துவிட்டது. இதுவரை, இப்படியானதொரு சவாலை விஞ்ஞானிகள் சந்திக்கவில்லை. இன்றுவரை அதற்கான எந்த பதிலும் கிடைக்கவில்லை. பொதுவாக ஒன்றை மட்டும் சொல்கிறார்கள். `நிச்சயமாக, மெதூசலா பிரபஞ்சத் தோற்றத்தின் பின்னர் தோன்றிய நட்சத்திரம்தான்’ என்கிறார்கள். ஆனால், அது எப்படி என்ற மர்மத்தை மட்டும் சொல்லவேயில்லை!
(தேடுவோம்)