மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 18 - என்ன சொல்கிறது ‘வொய்னிச்’ பிரதி? - மர்மப் புத்தகம்

‘வொய்னிச்’ பிரதி
பிரீமியம் ஸ்டோரி
News
‘வொய்னிச்’ பிரதி

‘தான் இறந்த பின் திறந்து பார்க்கலாம்’ என்று ஏதெலால் சுட்டிக்காட்டப்பட்டது, பொக்கிஷ அறையோ, பூட்டிவைத்திருக்கும் அலமாரியோ அல்ல.

‘The Gadfly’ நாவலை எழுதியவரான, ‘ஏதெல் வொய்னிச்’ (Ethel Voynich) எனும் எழுத்தாளர், 27 ஜூலை, 1960 அன்று தனது 96-வது வயதில் இறந்துபோனார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே கணவரை இழந்த இவருக்கு, பிள்ளைகளோ உறவினர்களோ யாருமில்லை. அவருடன் கூடவே இருந்து பார்த்துக்கொண்டவர் ‘அன்னா நீல்ஸ்’ என்பவர். நல்ல வசதியான சீமாட்டியாகவே, ‘ஏதெல்’ இருந்தார். தான் இறந்த பிறகு, தனது வங்கியின் லாக்கரில் இருப்பதை, முறைப்படி எடுக்கும்படி நீல்ஸிடம் சொல்லியிருந்தார் ஏதெல். அவர் இறந்ததும் பலரின் முன்னே, லாக்கர் திறக்கப்பட்டது. அங்கே காசோ, நகைகளோ எதுவுமிருக்கவில்லை. இருந்தது ஒரு கடிதம் மட்டும்தான். கணவர் இறந்த பிறகு, ஏதோவொரு முடிவுடன் ஏதெல் எழுதிவைத்து, முப்பது ஆண்டுகளாக லாக்கரில் பாதுகாக்கப்பட்ட கடிதம். பலரின் முன்னால் அந்தக் கடிதம் படிக்கப்பட்டது. அதிலிருந்த வாக்கியங்கள் இவைதான்: “நான் இறந்த பின்னர், அதைத் திறந்து பார்க்கலாம். ஆனால், நீல்ஸோ அல்லது அவரைப் போன்ற பொறுப்புள்ள ஒருவரோதான் அதைத் திறக்க வேண்டும்.’’

‘தான் இறந்த பின் திறந்து பார்க்கலாம்’ என்று ஏதெலால் சுட்டிக்காட்டப்பட்டது, பொக்கிஷ அறையோ, பூட்டிவைத்திருக்கும் அலமாரியோ அல்ல. அவர் குறிப்பிட்டது ஒரு புத்தகத்தை. புத்தகம் ஒன்றைத் திறந்து பார்ப்பதற்கா வங்கி லாக்கரில் கடிதம் வைப்பார்கள்... அதுவும், இத்தனை ஆண்டுகளாக... அதற்காக மட்டும்தான் லாக்கரைப் பயன்படுத்தினாரா... அப்படியென்றால், அந்தப் புத்தகத்தில் நிச்சயம் விலைமதிக்க முடியாத ஏதோவொரு சிறப்பு இருக்க வேண்டுமல்லவா... அப்படி என்ன சிறப்பு வாய்ந்தது அந்தப் புத்தகம்? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் இம்முறை நம் மர்மத் தேடல் ஆரம்பமாகிறது. இன்றுவரை உலகம் முழுவதும் என்னவென்று தெரியாமல் திகைத்து நிற்கும் மாபெரும் மர்மத்தை உள்ளடக்கியது அந்த பதில். வழக்கம்போல, அங்கு என்னதான் ஒளிந்திருக்கிறது என்பதைப் பார்த்து வரலாம், வாருங்கள்!

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 18 - என்ன சொல்கிறது ‘வொய்னிச்’ பிரதி? - மர்மப் புத்தகம்

நீங்கள் எத்தனையோ மர்மங்களையும் புதிர்களையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், ஒரு புத்தகமே புதிராகவும் மர்மமாகவும் இருப்பதை என்றாவது கேள்விப்பட்டிருக் கிறீர்களா? ஆனால், நிஜத்தில் அப்படியொரு புத்தகம் இருக்கத்தான் செய்கிறது. பல நூற்றாண்டுகளாகத் தன்னுள் மாபெரும் மர்மத்தை உள்ளடக்கியபடி, இன்றுவரை தன்னை வெளிக்காட்டாமல் இருந்துவருகிறது. அந்தப் புத்தகம் பற்றியே இன்று நாம் பார்க்கப்போகிறோம். புத்தகம் என்றா சொன்னேன்? புத்தகம்போல, அச்சு அசலாக, மிக நேர்த்தியான வடிவத்தில் உருவாக்கப்பட்ட, கையெழுத்துப் பிரதி அது. அதன் பெயர், ‘வொய்னிச் மேனுஸ்கிரிப்ட்’ (Voynich Manuscript).

‘வொய்னிச்’ எனும் எழுத்தாளரின் பெயரை முதல் வரியிலேயே வாசித்தீர்கள் அல்லவா... அந்த ‘ஏதெல் வொய்னிச்’ என்பவர்தான் அந்தப் புத்தகத்தை எழுதியவராக இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? இல்லை. அந்தப் புத்தகத்துக்கு ‘வொய்னிச்’ என்று பெயர் வருவதற்குக் காரணம், ஏதெல் வொய்னிச்சின் கணவரான வில்ஃபிரிட் வொய்னிச்தான் (Wilfrid Voynich)!

ஆனால், அவரும் அந்தப் புத்தகத்தை எழுதவில்லை. அது, 600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. அந்தப் புத்தகத்தை யார் எழுதினார்கள்... எது பற்றி எழுதப்பட்டிருக்கிறது... அப்படி என்ன மர்மம் அதில் இருக்கிறது... எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கிறது? இத்தனை கேள்விகளை அந்தப் புத்தகம் நோக்கி வைத்தாலும், வரும் பதில் என்னவோ `தெரியாது’ எனும் ஒற்றைச் சொல்தான். `ஒரு புத்தகத்தைப் படித்தால் அது யாரால் எழுதப்பட்டது, எப்போது எழுதப்பட்டது என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதில் என்ன எழுதியிருக்கிறது, எது பற்றி எழுதப்பட்டிருக்கிறது, எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்றுகூடவா தெரியாமல் போகும்?’ என்றுதான் நீங்கள் நினைப்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல. எவரும் அப்படித்தான் நினைப்பார்கள். ஆனால், தெரியாது என்று சொன்னது சரியானதே! அந்தப் புத்தகம் பற்றி யாருக்குமே எதுவுமே தெரியவில்லை. என்ன புரியவில்லையா? விளக்கமாகச் சொல்கிறேன்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 18 - என்ன சொல்கிறது ‘வொய்னிச்’ பிரதி? - மர்மப் புத்தகம்

முதல் பார்வையில், அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க முடியாத புத்தகமாகத் தெரியும், மிகப் பழைமையான புத்தகம்தான் ‘வொய்னிச் பிரதி.’ ஒரு புத்தகம் எப்படி எழுதப்பட வேண்டுமோ அப்படி, அழகிய எழுத்துகளுடனும், அருமையான படங்களுடனும், பல வர்ணங்களுடனும் காணப்படுகிறது ‘வொய்னிச் கையெழுத்துப் பிரதி.’ நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய நான்கு வர்ணங்களையும் கொண்டு அழகாக வரையப்பட்ட சித்திரங்கள், அந்தப் புத்தகமெங்கும் நிறைந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு வசனம் ஆரம்பிக்கும்போது, கேப்பிட்டல் எழுத்துடன் ஆரம்பிக்குமல்லவா... அதுபோல, ஒவ்வொரு வரியும் கேப்பிட்டல் எழுத்துகளுடன் ஆரம்பிக்கிறது. அச்சடித்தது போன்ற கையெழுத்தில், இடமிருந்து வலமாக எழுதப்பட்டிருக்கிறது. எல்லாம் சரிதான். ஆனால், அதில் எழுதப்பட்டிருக்கும் எதையும், யாராலும் படிக்க முடியவில்லை. காரணம், அது எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. இத்தனை ஆயிரம் ஆண்டுக்கால மனித வரலாற்றில், அப்படியானதொரு எழுத்தை யாரும் எழுதியிருக்கவில்லை. அவை எந்த மொழியினூடாக எழுதப்பட்டிருக்கின்றன என்றும் தெரியவில்லை. உலகிலுள்ள மிகத்திறமை வாய்ந்த மொழியியலாளர்கள், குறியீட்டுக் கண்டுபிடிப்பாளர்கள் அனைவரும் முயன்றும், அது என்ன மொழியென்றோ, அதில் என்ன எழுதியிருக்கிறதென்றோ கண்டுபிடிக்க முடியவில்லை. உலகப்போர்களிலும், வேறு சமயங்களிலும், எதிரிகள் பயன்படுத்தும் குறியீட்டு மொழிகளை விடுவிக்கும் ஆராய்ச்சியாளர்கள் பலர் முயன்றும் முடியவில்லை. பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான எகிப்தின் பிரமிடுகளிலுள்ள சித்திர எழுத்துகளையும், மாயன், சுமேரியத் தொன்மை நாகரிகங்களின் சித்திர எழுத்துகளையும், ஆசியாவின் தொன்மையான எழுத்து வடிவங்களையும் கண்டுபிடித்த மொழியியல் வல்லுநர்களால், இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகம் ஏன், செயற்கை புத்திஜீவியான, ‘Artificial Intelligence’ மூலமாகவும் முயற்சி செய்தாயிற்று. முடியவேயில்லை. 2019-ல்கூட, இரண்டு அகாடமிகள் ‘நாங்கள் இதைக் கண்டுபிடிக்கிறோம்’ என்று முயன்று, தத்துபித்தென்று கண்டுபிடித்துவிட்டோம் என்று அறிக்கையும் கொடுத்தார்கள். ஆனால், எல்லாமே ஏமாற்று. எவராலும் இந்த நிமிடம்வரை முடியவில்லை. உலகத்தில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன; இருந்திருக்கின்றன. அவற்றில் எந்த மொழியின் எழுத்துகளின் சாயலாவது இருக்குமாவென்று பார்த்தார்கள். கொஞ்சம்கூட ஒத்துப் போகவில்லை. ஆனால், அந்த எழுத்துகள் அனைத்தும், பழக்கப்பட்ட எழுத்துகள்போலவே தோன்றுகின்றன. புத்தகத்தில், மொத்தமாக 240 பக்கங்கள் கிடைத்திருக்கின்றன. கிட்டத்தட்ட 30 பக்கங்களை யாரோ நீக்கியிருக்கிறார்கள். 18 அத்தியாயங்களாக அவை பிரிக்கப் பட்டிருக்கின்றன. 58 அட்சரங்களைக்கொண்டு 1,70,000 எழுத்துகள் எழுதப்பட்டிருக்கின்றன. யார் எழுதினார்கள்... ஏன் எழுதினார்கள்? எதுவுமே புரியவில்லை. இப்படியான புத்தகத்தையே, வில்ஃபிரிட் வொய்னிச்சும், ஏதெல் வொய்னிச்சும் பாதுகாத்து, மறைத்துவைத்திருந்தார்கள். அதைத் திறந்து பார்ப்பதற்கான அனுமதிக் கடிதமே அந்த லாக்கரில் இருந்தது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 18 - என்ன சொல்கிறது ‘வொய்னிச்’ பிரதி? - மர்மப் புத்தகம்

1912-ம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘வில்ஃபிரிட் வொய்னிச்’ (Wilfrid Voynich) எனும் தொல்பொருள்களை வாங்கி விற்பவர், ரோம் நகரில் இந்த வொய்னிச் பிரதியைக் கண்டெடுத்தார். அவர் மூலம் இந்தப் புத்தகம் உலகெங்கும் அறிமுகமானதால், அதற்கு, ‘வொய்னிச் மேனுஸ்கிரிப்ட்’ என்று பெயர் கிடைத்தது. பலவித ஆராய்ச்சிகளின் பின்னர் ‘கி.பி 1404-ம் ஆண்டிலிருந்து கி.பி 1432-ம் ஆண்டுக்குள் இந்தப் பிரதி எழுதப்பட்டிருக்க வேண்டும்’ எனக் கணித்திருக்கிறார்கள். மாட்டுக் கன்றின் தோல்களால் இதன் பக்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு, பெரிய பக்கமாக விரியக்கூடியவாறும் சில பக்கங்கள் ஒன்று சேர்த்து மடிக்கப்பட்டிருக்கின்றன. அதிகம் பழக்கமில்லாத அபூர்வமான பூக்களும், இலைகளும், நிர்வாணமான பெண்கள் வரிசையாகப் பச்சைத் திரவத்தில் மூழ்கி இருப்பதுமான படங்கள் காணப்படுகின்றன. ஒரு பக்கத்தில், டிராகன் ஒன்று மரத்தின் இலையைப் புசிப்பதுபோலவும் இருக்கிறது. கட்டடங்களும் மதிற்சுவர்களும் வரையப்பட்டிருக்கின்றன. வானத்திலுள்ள நட்சத்திரங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் போன்றவையும் வரையப் பட்டிருக்கின்றன. கணித வடிவங்களும் காணப்படுகின்றன. அத்துடன், பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளும் இருக்கின்றன. மொத்தத்தில், இது என்ன வகையான புத்தகம் என்றே கண்டுபிடிக்க முடியாமல் குழம்பிப்போகிறோம். ஒன்றேயொன்று மட்டும் காணக்கூடியதாக இருக்கிறது. அதுகூட ஒரு சந்தேகம்தான்... அதில் காணப்படும் கட்டடங்களின் அமைப்பு, சரியாக அதே காலகட்டத்து ஐரோப்பியக் கட்டடக்கலை வடிவத்துடன் ஒத்துப்போகிறது. அதனால், கணித்த காலம் சரியாக இருக்கிறது என்பது முடிவாகிறது. ஆனால், ஏனைய அனைத்தும் தலைசுற்றும் கதைதான்.

இறுதியாக, தொடர்ச்சியான ஆராய்ச்சிகளின் பின் 1665-ம் ஆண்டு, ‘ஜான் மாரெக் மார்சி’ (Jan Marek Marci) எனும் இத்தாலியர், கிறிஸ்தவத் தலைமைக்கு எழுதிய கடிதமொன்றில், “எனது நண்பன் மூலம் கிடைத்த புத்தகத்தை எவராலும் படிக்க முடியவில்லை. அதை உங்களால் படிக்க முடிந்தாலன்றி வேறொருவராலும் படிக்க முடியாது” என்ற சில குறிப்புகளை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம், ‘வொய்னிச் பிரதி’யையே குறிக்கிறது என்ற முடிவுக்கு இப்போது வந்திருக்கிறார்கள். அவரின் நண்பருக்கு, 1,600-ம் ஆண்டளவில் ‘ரூடோல்ஃப் II’ மன்னன் மூலம் அந்தப் பிரதி கிடைத்திருக்கலாம் என்பது வரை வந்திருக்கிறார்கள். ஆனால் அதன் முன்னரோ பின்னரோ யாரிடம் இருந்தது, யார் எழுதினார்கள் என்ற எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இப்படியொரு பிரதியை உருவாக்க வேண்டுமென்றால், ஆயுட்காலம் முழுவதையும் ஒருவர் செலவழித்தே ஆக வேண்டும். எந்த அர்த்தமும் இல்லாமல் யாராவது இப்படியொரு பிரதியை உருவாக்க மாட்டார்கள். அதனால், இந்தப் புத்தகம் எதையோ நமக்குச் சொல்லவருகிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை!

தன்னுள் இத்தனை மர்மங்களையும் உட்டளடக்கியபடி, ‘யேல்’ பல்கலைக்கழகத்தில் நிம்மதியாக அமர்ந்திருக்கிறது, ‘வொய்னிச் கையெழுத்துப் பிரதி.’

(தேடுவோம்)