
2000 மக்கள் வாழ்ந்த அந்த நகரின் ‘கல்லே ரியல்’ (Galle Real) எனும் தெருவில், மரியா கொமெஸின் வீடு இருந்தது.
எனது நண்பர் ஒருவர் என்னிடம், “பேய்க்கு இதயம் இருக்கிறதா?” என்று அடிக்கடிக் கேட்பார். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைப்பேன். ஏதாவது மொக்கை ஜோக் ஒன்றைச் சொல்லிச் சமாளிப்பேன். அவரும் கேட்டதை மறந்துவிடுவார். மீண்டும் வேறொரு சமயத்தில் கேட்பார்.
அந்தக் கேள்வியை எதையோ அறியும் காரணத்தை முன்னிட்டே கேட்கிறார் என்பது தெரிகிறது. அந்தக் காரணத்தை நானும் கேட்டதில்லை; அவரும் சொன்னதில்லை. பேய்கள் போன்ற அமானுஷ்யங்கள் எப்போதும் ஆர்வத்தைத் தருபவை. உள்ளூர பயமிருந்தாலும், அறியும் ஆவலை உந்தியபடியே இருப்பவை. பேய்கள் இல்லை எனப் புரிந்து கொண்டாலும், இருப்பதாகவே மனம் நம்ப விரும்பும். பயம் என்பதும் ஒருவித போதைதான். அறிவியல், அமானுஷ்யங்களை (Paranormal Activity) அடியோடு மறுக்கிறது. ஆதாரமில்லாத எதையும் அது ஏற்பதில்லை. ஆனாலும், அமானுஷ்யங்கள் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்பா, அம்மா, பாட்டன் போன்ற மிகவும் நம்பிக்கையான வர்கள், பார்த்ததாகச் சொல்லும் சம்பவங்களை நம்ப மறுக்க வேண்டியதில்லை. அவர்கள் நம்மிடம் எதற்காகப் பொய் சொல்ல வேண்டும்? அவர்கள் கண்ட தாகச் சொல்லும் சம்பவங்களுக்கு, அறிவியல் சார்ந்த ஏதோவொரு விளக்கம் இருக்கக்கூடும். அது எதுவெனத் தெரியும் வரை நிராகரிப்பிலிருந்து விலகியிருக் கலாம். இப்போது, நானும் அப்படியானதொரு அமானுஷ்யச் சம்பவத்தையே சொல்லப் போகிறேன். ஏற்கெனவே, வேறொரு தளத்தில் சொல்லியிருந்தாலும், ஜூ.வி வாசகர்களுக்குப் புதியது. இதை, இங்கு சொல்ல நான் விரும்புவதற்குக் காரண மிருக்கிறது. நானறிந்துகொண்ட மர்மச் சம்பவங்களில், எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். காரணம், இதன் உண்மைத் தன்மை. பலர் ஆராய்ந்து, படம் பிடித்த சாட்சிகளுடன் கூடிய சம்பவம். ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தபோது, அவர்கள் முன் நடைபெற்ற சம்பவங்கள். இவை நடந்தவை என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. நடந்தவற்றுக்கான காரணங்களே மாறுபடுகின்றன. இந்த மர்மத்தில் என்ன ஒளிந்திருக்கிறது என்பதைத்தான் பார்க்கப்போகிறோம்.
இப்படித்தான் ஆரம்பமானது அந்தச் சம்பவம். ‘மரியா கொமெஸ்’ (Maria Gomez) என்பவர், இரவுப் பொழுதொன்றில் சமையலறைப் பணிகளை முடித்துவிட்டு அகலும்போது, தற்செயலாகத் தரையில் காணப்பட்ட கோடுகளை கவனித்தார். அது சாதாரணக் கோடுகள்போல இல்லாமல், படங்கள் வரைவதற்கு முன்னரான கோடுகள்போலக் காணப்பட்டன. சுவர்கள், மரங்கள், முகில்களில் உருவங்கள் தெரிவதுபோல, மாயத் தோற்றங்களைக் கண்டிருக்கிறார். அதுபோலத் தரையில் ஏற்பட்ட வெடிப்புக் கீறல்களை, உருவமென்று நினைத்து விட்டதாகச் சிரித்தபடியே, படுக்கையறைக்குச் சென்று படுத்துக்கொண்டார், மறுநாள் விநோதமாக விடியப்போவது தெரியாமல்!
இந்தச் சம்பவம் 1971-ம் ஆண்டு ஆகஸ்ட், ஸ்பெயின் நாட்டிலிருக்கும் ‘பெல்மெஸ்’ (Belmez) எனும் சிறிய நகரில் நடந்தது. 2000 மக்கள் வாழ்ந்த அந்த நகரின் ‘கல்லே ரியல்’ (Galle Real) எனும் தெருவில், மரியா கொமெஸின் வீடு இருந்தது. அடுத்த நாள் காலை, சமையலறைக்கு வந்த மரியா பயத்தால் வீறிட்டு அலறினார். அவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த கணவனும் மூத்த மகனும்கூடப் பதறிவிட்டார்கள். அங்கே தரையில், மிகத் தெளிவாக ஆணின் முகமொன்று வரையப்பட்டிருந்தது. இல்லையில்லை, உருவாகியிருந்தது. பயத்தால் உறைந்துபோனார் மரியா. கண், மூக்கு, வாய் முகமெல்லாம் கனகச்சிதமாகத் தெரிந்த உருவம். தரையின் நிறத்திலேயே வரையப்பட்டிருந்தது. இதை யார் வரைந்திருக்கலாமென்று அவர்களால் கற்பனை செய்ய முடியவில்லை. அன்றைய பொழுது முழுவதும் பதற்றத்திலேயே கழிந்துபோனது. கணவரும் மகனும் அதை அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. “அது தற்செயலாக உருவானது. இப்படியான விநோதச் சம்பவங்கள் உலகெங்கும் நடைபெற்றிருக்கின்றன” என்று சமாதானம் செய்தனர். ஆனாலும், மரியாவால் சமாதானமடைய முடியவில்லை. அப்படியே தூங்கிவிட்டார்.
அடுத்த நாள் காலை எழுந்து வந்த மரியாவுக்கு, ஆச்சர்யம் ஒன்று காத்திருந்தது. அங்கு படம் இருந்ததற்கான தடயமே இல்லாமல் மறைந்து போயிருந்தது. ‘அப்பாடா!’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டார். “அப்படியென்றால், கணவரும் மகனும் சொன்னவை உண்மைதானோ... நான்தான் தேவையில்லாமல் பயந்துவிட்டேன் போல” என்று சொல்லிக்கொண்டார். பாவம் மரியா! அடுத்த நாளிலிருந்து அவரது மொத்த நிம்மதியும் வாழ்நாள் முழுவதும் தொலையப் போகிறதென்று தெரியாமல், அந்த நாளைக் கழித்தார். மறுநாள் விடிந்தது. ஒரு குறுகுறுப்புடன் மெல்ல மெல்லச் சமையலறைக்குள் சென்று தரையை எட்டிப் பார்த்தார். அவ்வளவுதான். மரியாவின் அலறல் வீட்டையே இரண்டாக்கியது. அங்கே அதே இடத்தில், வேறொருவரின் முகம் தோன்றியிருந்தது. இப்போது முகம் கொஞ்சம் பயங்கரமானதாகக் காணப்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த கணவரும் மகனும் முதன்முறையாக பயந்துபோனார்கள். இதை அவர்களும் எதிர்பார்க்கவில்லை. தகப்பனும் மகனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். இருவருக்கும் அடுத்து என்ன செய்வதென்று தெரிந்திருந்தது. எதுவும் பேசாமல், வெளியே போனார்கள். மீண்டும் வந்தவர்களின் கைகளில், நிலத்தைக் கொத்தியெறியும் கோடரி இருந்தது. இருவரும், சமையலறையின் முழுத்தரையையும் கொத்தியெறிந்தார்கள். பழைய நிலம் முழுவதும் உடைக்கப்பட்டு, புதிதாக சிமென்ட்டுடன் தரையை அமைத்துக்கொண்டார்கள். அந்தப் பணி அவர்களுக்குப் பழக்கமானதால், சுலபமாகச் செய்து முடித்தார்கள். வெட்டியெறியப்பட்ட பெரிய துண்டொன்றில், அந்த முகம் அப்படியே காணப்பட்டது. அதை எடுத்து வாசலில் சாத்திவைத்தார்கள். முடிந்தது எல்லாம். இனி எந்தவிதத்திலும், அங்கு உருவங்கள் தோன்ற முடியாது. புத்தம் புதிதான பளிச்சென்ற தரை சிரித்துக்கொண்டிருந்தது. அதன் பிறகு வந்த நாள்களில் எதுவும் நடக்கவுமில்லை.

இரண்டு நாள்கள்தான் பேய்கள்(?) ஓய்வெடுத்துக்கொண்டன. மூன்றாம் நாள் மீண்டும் புதிய தரையில் பளிச்சென்று முகங்கள் தோன்ற ஆரம்பித்தன, குடும்பமே ஆடிப்போய்விட்டது. கணவர், ‘யுவான் பெரைரா’ (Juan Pereira) நகர மேயரிடம் சென்று, நடந்தவற்றையெல்லாம் சொல்லி, தங்களுக்கு உதவிசெய்யும்படி வேண்டிக்கொண்டார். விஷயம் ஊரெங்கும் பரவியது. மரியா வீட்டை நோக்கி ஊர்மக்கள் படையெடுத்தனர். விதவிதமான முகங்கள். ஆண்கள், பெண்கள், வயோதிகர், இளைஞர் என்று அத்தனை விதங்களிலும் மாறி மாறி உருவங்கள். தோன்றுவதும், பின்னர் தாமாகவே மறைவதுமாக இருந்தன. சில உருவங்கள் மிகத் தெளிவாகவும், சில மங்கலாகவும் காணப் பட்டன. பலர் இருக்கும் குரூப் போட்டோக்களும் வந்தன. நான் நகைச்சுவையாகச் சொன்னாலும், அதை நேரில் பார்க்கும் மரியாவின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் பார்வையிட வந்தார்கள். பார்த்தவர்களெல்லாம் பயந்தார்களே ஒழிய, பேய்கள் பயப்படவில்லை. தொடர்ந்து தோன்றிக்கொண்டேயிருந்தன. இப்படியான சம்பவங்கள் நடைபெறும்போது, வழக்கம்போல என்ன சந்தேகங்கள் எழுமோ, அவையும் எழுந்தன. விளம்பரத்துக்காக மரியா குடும்பம், தாங்களே வரைந்துவிட்டு, உருவங்கள் தோன்றுவதாகப் பொய் சொல்கிறார்கள் என்ற பேச்சுகள் எழ ஆரம்பித்தன. பேய் இருக்கிறது என்று சொன்னால், யார்தான் நம்புவார்கள்... பத்திரிகைகள், ரேடியோக்கள், தொலைக்காட்சிகள் அனைத்தும் வந்தன. சிலர் அங்கேயே தங்கியிருந்து படம் பிடிப்பதற்கான அனுமதியைக் கேட்டுக் கொண்டனர். எந்த வழியிலாவது பேய்கள் தொலைந்தால் சரியென்று அனைத்துக்கும் அனுமதியளித்தது மரியா குடும்பம்.
மரியாவின் வீட்டில் தங்கியிருந்து, போட்டோக்களையும் பதிவுகளையும் செய்து கொண்டிருந்த மீடியாவினரின் கண்களின் முன்னாலேயே உருவங்கள் தோன்றின. மறுக்க முடியாத உண்மையானது. ‘மரியாவின் கணவர், வித்தியாசமான ரசாயனங்களைக்கொண்டு தரையில் வரைந்துவிட, அது இரண்டொரு நாள்களுக்குப் பிறகு வெளியே தெரிய ஆரம்பிக்கிறது’ என்றும் சந்தேகப்பட்டனர். படங்கள் தோன்றிய தரையை அப்படியே சுரண்டியெடுத்து, பரிசோதனைச் சாலையில் பரிசோதித்தபோது, சாதாரண சிமென்ட் தரைதான் என்று தெரியவந்தது. ஸ்பெயின் முழுவதும் அதுவே பேச்சானது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரிசையாக வீட்டுக்கு வந்தார்கள். அவரவர் பங்குக்குப் பல கேள்விகள் கேட்டார்கள்; ஆராய்ச்சிகள் செய்தார்கள்; மீண்டும் போனார்கள். யாருக்கும் சரியான விடை கிடைக்கவில்லை. படித்தவர்களில்லையா... அதனால், லகுவில் பேய், பிசாசு என்று ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை. லை டிடெக்டர்கள் மூலம் மரியா குடும்பத்தினர் பரிசோதனை செய்யப்பட்டார்கள். யாருமே பொய் கூறவில்லை. தொலைக்காட்சிகளில் பலவித விவாதங்கள் நடைபெற்றன. பலரும் அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம் என்று சொன்னார்களே ஒழிய, உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. கடைசியாக ‘மரியாவுக்கு, தன் மனதால் நினைப்பதைச் சித்திரமாக உருவாக்கக்கூடிய சக்தி (Thoughtography) இருக்கிறது. அதன் மூலம் இவற்றையெல்லாம் அவரே டெலிபதியால் உருவாக்கிக்கொள்கிறார் என்றார்கள்.
மரியாவின் எண்ணங்களால் அந்த உருவங்கள் உருவாகினவா என்பது தெரியாது. ஆனால், மரியா அந்த வீட்டில் இருக்கும்போதுதான், உருவங்கள் தோன்றுகின்றன என்பது மட்டும் உண்மை. அதுவே தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்க, மரியாவுக்கும் பேய்களுடன் வாழப் பழகிப்போனது. படங்கள் தோன்றுவதைத் தவிர, எந்தவிதப் பிரச்னையும் இருக்கவில்லை. பேசிப் பேசியே ஓய்ந்துபோனது உலகம். ஒரே விஷயத்தை எத்தனை நாள்களுக்குத்தான் பேசுவது... அப்படி எத்தனை காலம் உருவங்கள் மரியாவின் வீட்டில் தோன்றின தெரியுமா? முப்பது ஆண்டுகள். சமையலறையிலிருந்து, வீட்டின் வெவ்வேறு இடங்களையும் படங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. தரையிலிருந்து சுவர்களுக்குப் புரொமோஷன் எடுத்துக்கொண்டன. அதன் காரணமாகச் சுற்றுலாப் பயணிகளின் படையெடுப்பும் அதிகமாகின. அரசுக்கும் அதுவே தலையிடியானது. சாதாரணமாகச் சுற்றுலாப் பயணிகள் வருவது நல்லதே! ஆனால், அமானுஷ்யத்தை முன்னிட்டு வருவது அரசுகளின் தோல்வியாகவே பார்க்கப்பட்டது. அரசுகளால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்களைவிட வேறொரு பெரிய சக்தி இருக்கிறது என்பதை, எந்த அரசும் விரும்பாது. அதனால், கட்டுப்பாடற்ற மக்கள் இயக்கம் உருவாகலாம். அதனால், அதை உடைத்தெறியச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன் உச்சக்கட்டமாக ஸ்பெயினின் முக்கிய பத்திரிகையான ‘EL Mundo’, “பெல்மெஸ் நகராட்சியும், மரியாவின் மகனும் சேர்ந்து வருமானத்துக்காக இதைச் செய்கிறார்கள்” என்று செய்தி வெளியிட்டது. நம் ஊர்கள்போலவே பத்திரிகையை நம்பி, அந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மக்கள் மெல்லக் குறைத்துக்கொண்டார்கள்.
2004-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் மரியா கொமெஸும் இறந்துபோனார். அத்துடன் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்தன. நண்பர் சொன்னதுபோல, பேய்களுக்கும் இதயம் இருந்திருக்க வேண்டும். அந்த இதயங்கள், மரியாவுக்காக மட்டுமே துடித்திருக்கின்றன. மரியாவின் இறப்புக்குப் பின்னர், அப்படியான சம்பவங்கள் நடைபெறாமலே போயின. எது எப்படியிருந்தாலும், பெல்மெஸ் முகங்களுக்குச் சரியான காரணத்தை எந்த ஆராய்ச்சி யாளர்களாலும் கண்டுபிடித்துச் சொல்ல முடியவில்லை. அப்படி ஒன்று நடக்கவில்லை என்றும் அவர்களால் மறுக்கவும் முடியவில்லை. இன்றும் விளக்க முடியாத வரலாற்று மர்மமாக அது தொடர்கிறது!
(தேடுவோம்)