மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 22 - கண்டுபிடிப்போமா நிபிருவை?

ஒன்பதாவது கோள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒன்பதாவது கோள்

- ஒளிந்திருக்கும் ஒன்பதாவது கோள்!

நம் மூதாதையர்களான ஆதிகால மனிதர்கள், வானத்தை ஆராய்வதையே பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார்கள். தனியாகவோ, கூடியிருந்தோ ஒளிரும் வானத்தின் பொருள்களையெல்லாம் அவதானிக்க ஆரம்பித்தார்கள். தொலைநோக்கிக் கருவிகள் இல்லாமல், வெற்றுக் கண்ணால் வானை அளந்தார்கள். ஒளிரும் பொருள்களெல்லாம் அவர்களுக்கு நட்சத்திரங்கள்தான். ஆனால், தூரத்தில் இருப்பவை அசையாமல் ஒரே திசையிலும், அண்மையில் இருந்தவற்றில் சில வெவ்வேறு இடங்களுக்கு நகர்ந்ததையும் கண்டுகொண்டார்கள். அப்போதுதான், அவை நட்சத்திரங்கள் அல்ல, பூமி போன்ற கோள்கள் என்பது அவர்களுக்குப் புரிந்தது. சூரிய, சந்திரனுடன் ஏனைய கோள்களை ஒவ்வொன்றாக கணித்துக்கொண்டார்கள். ஒன்பது கிரகங்களுடன் சோதிடம் (Astrology), தன்னை இணைத்துக்கொண்டது. அவற்றுள் ராகு, கேது எனும் காணாக் கோள்களும் காணப்பட்டன. அத்துடன், பூமியை மையமாக்கி ஏனைய எட்டுக் கோள்களும் சுற்றுவதாகவும் எடுத்துக்கொண்டார்கள். இதைப் ‘புவிமையக் கொள்கை’ (Geocentric) என்பார்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 22 - கண்டுபிடிப்போமா நிபிருவை?

அறிவியலோ வேறுவகையில் வளர்ந்தது. புவிமையக் கொள்கையை மறுத்து, சூரியமையக் கொள்கையைப் (Heliocentric) பரிந்துரைத்தது. சரியானதைச் சொல்வது, மதபீடங்களின் கருத்துக்கு எதிரானது இல்லையா? பல ஆராய்ச்சியாளர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால், அறிவியலைப் பின்தள்ளிவிட யாராலும் முடியவில்லை. சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதையும், பூமியைச் சுற்றும் உபகோளே சந்திரன் என்பதையும் கண்டுகொண்டார்கள். புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஆறு கோள்களும், சூரியனையே சுற்றுவது உறுதியானது. மேலதிகமாக எந்தக் கோளும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், ஒரேயொரு புராதன மக்கள் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்தார்கள். சந்திரனுடன் சேர்த்து, பத்துக் கோள்கள் சூரியனைச் சுற்றுவதாக அப்போதே சொன்னார்கள். அவர்களின் சுவர்ச் சித்திரமொன்று அதற்கு ஆதாரமாக இருந்தது. அந்தச் சுவர்ச் சித்திரத்தில், இன்னுமொரு மர்மமும் ஒளிந்திருந்தது. நவீன வானியற்பியலாளர்கள்கூட ஆச்சர்யப்படும் மர்மம் அது. அந்தச் சித்திரத்தில் என்ன மர்மம் ஒளிந்திருக்கிறது என்பதையே இந்தப் பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம்.

4,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள்தான் சுமேரியர்கள். மிகவும் பழைமையானதொரு நாகரிகத்தைக்கொண்ட இனம். மெசபடோமியாவில் (இன்றைய ஈராக்) வாழ்ந்தவர்கள். சுமேரியரின் வரலாறு பல ஆச்சர்யங்களையும் மர்மங்களையும்கொண்டது. வானியலில் சிறந்து விளங்கினார்கள். அவர்கள் எழுதிவைத்த சுவர்ச் சித்திரத்தில், சூரியன் நடுவேயிருக்க, அதைச் சுற்றி பத்துக் கோள்கள் வரையப்பட்டிருக்கின்றன. அதிலுள்ள கோள்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு அளவுகளுடன் இருப்பது கவனிக்கப்பட வேண்டியது. சூரியனும் கோள்களும் பூமியையே சுற்றுகின்றன என்று நம்பிவந்த காலத்தில், சூரியனை மையமாகக்கொண்டு கோள்கள் சுற்றுவதாக, இவர்களின் சித்திரத்தில் இருப்பது வியப்பானதே! அதில், சந்திரன் தவிர்த்து, ஒன்பது கோள்கள் இருப்பதாக வரைந்திருப்பது இன்னொரு ஆச்சர்யம். இவர்கள் நவீன கண்டுபிடிப்புகளை எப்படி முன்னரே தெரிந்துவைத்திருந்தார்கள்... ஆறு கோள்களை மட்டுமே கண்ணால் பார்க்க முடிகிறபோது, ஒன்பது கோள்கள் எப்படிச் சாத்தியம்?

சுமேரியர்களை நினைத்து வியந்தபோது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக ஒரு அறிவித்தல் வெளிவந்தது. ‘புளூட்டோ ஒரு கோளே கிடையாது’ என்று முடிவு செய்தார்கள். “அட! புளூட்டோ ஒரு கோளென்று நினைத்து, அதையும் வரைந்து, சுமேரியர்கள் தப்பு செய்துவிட்டார்களே!” என்று நினைக்கத் தோன்றியது. ஆனால், சுவர்ச் சித்திரத்திலிருக்கும் அளவுகளின்படி, ஒன்பதாவது கோள் பூமியைவிடப் பெரிதாகக் காணப்படுகிறது. புளூட்டோபோல் சிறிதாக இல்லை. அப்படியென்றால், அந்த ஒன்பதாவது கோள், புளூட்டோ கிடையாது. வேறு ஏதோ கோள். சுமேரியர்களின் குறிப்புகளை ஆராய்ந்ததில், அந்தக் கோள், ‘நிபிரு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியென்றால் ‘நிபிரு’ எனும் ஒன்பதாவது கோள் இருக்கிறதா... அது எங்கே இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை, நவீன வானியல் ஆராய்ச்சியாளர்கள் கொடுக்கிறார்கள். அவை நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. அந்த ஒன்பதாம் கோள் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு, யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 22 - கண்டுபிடிப்போமா நிபிருவை?

வெற்றுக் கண்களால் கோள்களை கணித்தபடி, அறிவியலின் வளர்ச்சி ஆரம்பமானது. கலீலியோ கலிலியால் முதல் தொலைநோக்கிக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. அது மேலும் துல்லியமாக வளர்ச்சியடைந்து. 1781-ம் ஆண்டு, ஏழாவதாக ஒரு கோள், சூரியனைச் சுற்றிவருவதை, ‘வில்லியம் ஹெர்செல்’ (William Herschel) எனும் ஆங்கிலேயர் கண்டுபிடித்தார். அந்தக் கண்டுபிடிப்புடன் வானியலே தலைகீழாக மாறிப்போனது. ஏழாவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோளுக்கு, ‘யுரேனஸ்’ எனப் பெயரிடப்பட்டது. யுரேனஸுக்கும் அப்பால் வேறு கோள்கள் இருக்கின்றனவா என ஆராய்வதற்கு விஞ்ஞானிகள் ஆயத்தமானார்கள். கணிதவியலாளரும், வானியலாளருமான ‘அர்பைன் லே வெரியெர்’ (Urbain le Verrier) எனும் பிரெஞ்சுக்காரர், “யுரேனஸ் இப்படியாகச் சூரியனைச் சுற்றுமேயானால், அந்த இடத்தில் இன்னுமொரு கோள் கட்டாயம் இருக்கும்” என்று கணிதச் சமன்பாட்டின் மூலம், ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டினார். அவர் எந்த இடத்தைக் காட்டினாரோ, அதை நோக்கித் தொலைநோக்கியைத் திருப்பி, அன்றிரவே நெப்டியூனைக் கண்டுபிடித்தார் ஜெர்மனியரான ‘ஜொஹான் கோட்ஃபிரைட்’ (Johann Gottfried). வெரியெர் கணித்ததற்கு அடுத்த நாளான, 24.09.1846 அன்று கோட்ஃப்ரைட்டால் நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டது. வானியல் வரலாற்றின் ஆச்சர்யம் இது. நெப்டியூன் எனும் எட்டாவது கோளும் நமக்குக் கிடைத்தது. அதன் பின்னர், பல ஆண்டுகளாக எந்தக் கோளும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், நெப்டியூனுக்குப் பின்னால் ஏதோவொன்று இருக்கிறது என்பது மட்டும் தெரிந்தது. அறிவியல், காலத்தை அதிகம் எடுத்துக்கொண்டாலும், தான் நினைத்ததை முடிக்காமல் விட்டதில்லை.

நெப்டியூனுக்கு அப்பால் இருப்பதைத் தேடித் தேடிக் களைத்துவிட்டார்கள். பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தை 1 AU (Astronomical Unit) என்பார்கள். நெப்டியூன் இருந்ததோ 30 AU தூரத்தில். மிக அதிகமான தூரம். அதனால், நெப்டியூனுக்கு அப்பாலிருக்கும் கோள்கள், எவ்வளவு பெரிதாக இருந்தாலும் மிக மிகச் சிறியதாகவே காணப்படும். அதைக் கண்டுகொள்வது சிரமத்திலும் சிரமம். கடல் மணலில் போட்ட குன்றிமணியை வெகு தொலைவிலிருந்து தேடுவது போன்றது அது. ஆனாலும், 1930-ம் ஆண்டு, புளூட்டோ கோளும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்பதாம் கோள் அது என்றே நினைத்தார்கள். புளூட்டோவின் கண்டுபிடிப்பை வானியலில் மைல்கல் என்றே சொல்லலாம். சூரியனுக்கு ஒன்பது கோள்களும் கிடைத்தன. மகிழ்ச்சி என்று முற்றும்போட நினைத்தபோதுதான், புளூட்டோவின் கதை சோகமாக மாறியது.

சூரியனை புளூட்டோ சுற்றும்விதம் மிகவும் மாறுபட்டதாகக் காணப்பட்டது. அதன் சுற்றுப்பாதை, அகலம் குன்றிய நீள்வட்டமாகவும், நெப்டியூனின் சுற்றுப்பாதையை வெட்டிச் செல்வதாகவும் இருந்தது. நெப்டியூன், சூரியனை மூன்று தடவை சுற்றிவரும் சமயத்தில், புளூட்டோ இரண்டு தடவை சுற்றுகிறது. அப்போது அது நெப்டியூனின் சுற்றுப்பாதையில் குறுக்கிடுகிறது. ஆனாலும், நெப்டியூனுடன் அது எப்போதும் மோதிக் கொண்டதில்லை. அதன் காரணம் ஆச்சர்யமாக இருந்தது. அதுவே இன்னுமொரு கண்டுபிடிப்புக்கு ஆதாரமானது. அனைத்துக் கோள்களும் கிட்டத்தட்ட ஒரே தளத்தில் சுற்றிவருகையில், புளூட்டோ மட்டும் அந்தத் தளத்துக்கு மேல்நோக்கி உயர்ந்தபடி சுற்றியது. இதைவைத்து கணித்ததில், புளூட்டோ ஏனைய கோள்கள்போல இல்லை என்றுஅறியக்கூடியதாக இருந்தது. கோள்களுக்கான வரைமுறைகளும் அதற்கு இருக்கவில்லை. எனவே, 2006-ம் ஆண்டு புளூட்டோ ஒரு கோள் இல்லையென்று அறிவிக்கப்பட்டது. எதனால் புளூட்டோ சரிவான சுற்றுப்பாதையைக் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கான விடையும் பின்னர் கிடைத்தது.

புளூட்டோவைத் தொடர்ச்சியாக அவதானித்ததில், ‘சரோன்’ (Charon) எனும் சந்திரனும் வேறு சில சந்திரன்களும் அதற்கு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அப்போதுதான் வானியலாளர்கள் உஷாரானார்கள். இவை சந்திரன்களாகக் காணப்படவில்லை. வித்தியாசமான குள்ளக் கோள்களாகக் (Dwarf planet) காணப்பட்டன. மேலும் ஆராய்ந்ததில், அவை போன்று பல குள்ளக் கோள்கள் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டன. அப்போதுதான், நெப்டியூனுக்குப் பின்னால் 2,000-க்கும் மேற்பட்ட குள்ளக் கோள்களை உள்ளடக்கிய மிகப்பெரிய வட்ட வடிவப் பட்டியொன்று (Belt) சூரியனைச் சுற்றிலும் இருப்பது தெரிந்தது. 1951-ம் ஆண்டிலேயே, ‘ஜெரார்டு குய்பெர்’ (Gerard Kuiper- ஆங்கிலத்தில் கய்பெர்) என்னும் ஹாலந்துக்காரர், அப்படியொரு பட்டி இருப்பதாக கணித்திருந்தார். அது, 1992-ம் ஆண்டு நிஜமாகவே கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு, ‘கய்பெர் பட்டி’ (Kuiper Belt) என்று பெயரும் இடப்பட்டது. செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில், சிறிய அஸ்ட்ராய்டு பட்டியொன்று இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பல்லாயிரக்கணக்கான விண்கற்களைக்கொண்டு உருவான வட்டப்பட்டி அது. அதுபோலவே, ஐஸாக உறைந்திருக்கும் கற்கள் சூழ்ந்த நிலையில் ‘கய்பெர் பெல்ட்’ காணப்படுகிறது. அந்தப் பட்டியில், 2,000-க்கும் மேலான குள்ளக் கோள்களுடன், 100 கிலோமீட்டருக்கும் அதிகமான பருமன்கொண்ட, ஒரு லட்சத்துக்கும் கூடுதலான விண்கற்களும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, பில்லியன் கணக்கில் ஒவ்வொன்றும் இரண்டு கிலோமீட்டர் அளவுடைய, ஐஸ் கற்களும் அங்கு காணப்படுகின்றன. ஆனால், அந்தப் பட்டியில் அவை அமைந்திருக்கும்விதம் சாதாரணமானதாக இருக்கவில்லை. அந்தப் பட்டிக்குப் பின்னால் மிகப்பெரிய கோளொன்று சுற்றிக்கொண்டிருப்பதற்கான சாத்தியத்தை அதுவே உறுதிப்படுத்துகிறது. கணிதமும் அதையே சொல்கிறது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 22 - கண்டுபிடிப்போமா நிபிருவை?

விண்வெளி தட்டையானது என்பதால், கய்பெர் பட்டியிலிருக்கும் பொருள்கள் அனைத்தும் சாதாரணமாகத் தட்டை வடிவ டிஸ்க் போலவே அமைந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட சனிக்கோளின் வட்டத்தட்டுப்போல. ஆனால், கய்பெர் பட்டியோ, ஒரு பிரமாண்டமான ‘டோனட்’ (Donut) வடிவத்தில், உருளை வட்டமாகக் காணப்படுகிறது. அதிலிருக்கும் பொருள்களெல்லாம், முகில்போல ஒன்றையொன்று மேலும் கீழுமாகச் சூழ்ந்தபடி காணப்படுகின்றன. இயற்பியலின் அடிப்படையில் அப்படி இருக்க முடியாது. அப்படி இருப்பதானால், அதன் பின்னால் மிகப்பெரிய பருமனும், ஈர்ப்புவிசையும் கொண்ட கோளொன்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அந்த வடிவம் கிடைக்கும். கணிதச் சமன்பாடுகள் மூலம் உருவாக்கிய கணினி மாதிரிச் செயலியில், அப்படியானதொரு கோள் நிச்சயம் இருப்பதாகவே காட்டுகிறது. அந்தக் கோள்தான் நாம் அனைவரும் தேடிக்கொண்டிருக்கும் ‘ஒன்பதாம் கோள்’ (Planet Nine). 170 ஆண்டுக்காலமாக ஒன்பதாம் கோள் இருப்பதாக நம்பப்பட்டுவந்தாலும், அதுவொரு கட்டுக்கதை என்றே எப்போதும் சொல்லப்பட்டது. ஆனால், அது கட்டுக்கதையல்ல நிஜமானது என்று California institute of technology (Caltech)-ன் வானியல் பேராசிரியரான, ‘கான்ஸ்டான்டின் படிஜின்’ (Prof.Konstantin Batygin) அடித்துச் சொல்கிறார். அதைக் கண்டுபிடிக்கும் பணியிலும் அவர் இறங்கிவிட்டார். ஒன்பதாம் கோள், பூமியைப்போல, பத்து மடங்கு எடைகொண்டது எனவும், சூரியனைச் சுற்றி வருவதற்கு 17,000 ஆண்டுகள் எடுக்கும் எனவும் கணித்திருக்கிறார்கள். ஆனால், 300 AU-லிருந்து 900 AU தூரத்தில் அது இருக்கும் என்றும் சொல்கிறார்கள். இது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதுபோல் அல்லாமல், இந்து சமுத்திரத்தில் போட்ட மொபைல்போனைத் தேடுவது போன்றது. ஆனாலும், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அதை நிச்சயம் கண்டுபி டிப்போமென்று சொல்கிறார் பேராசிரியர் படிஜின்.

சுமேரியர்களின் ஒன்பதாவது கோளான நிபிருவும் இதுதானா எனும் மர்மம் தெளிவாக இன்னும் காலமிருக்கிறது!

(தேடுவோம்)