மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 23 - என்ன சொல்கிறான் விண்வெளி வீரன்? - ராட்சச ரகசியக் கோடுகள்

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

நாம் தென்னமெரிக்கா நோக்கிச் செல்லப்போகிறோம். உலகிலேயே அதிக அளவு மர்மங்களையும் விந்தைகளையும் உள்ளடக்கியவை, மத்திய/தென் அமெரிக்கப் பிரதேசங்கள்.

மிகப்பெரிய அளவில் பரந்துவிரிந்து காட்சியளிக்கும் மர்மம் ஒன்றை நோக்கி உங்களை அழைத்துச் செல்லப்போகிறேன். இது பற்றி ஏற்கெனவே நீங்கள் அறிந்திருக்கக்கூடும். ஆனால், நவீன கருவிகள்கொண்டு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆச்சர்யமானவை. அதன் தேவையை முன்னிட்டே அவற்றை நாம் பார்க்கப்போகிறோம். அந்த ஆச்சர்யங்கள் ஐந்நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவான நிலப்பகுதியில் பரவியிருக்கின்றன. அங்கு என்ன ஒளிந்திருக்கிறது என்று பார்த்துவிடலாம் வாருங்கள்.

நாம் தென்னமெரிக்கா நோக்கிச் செல்லப்போகிறோம். உலகிலேயே அதிக அளவு மர்மங்களையும் விந்தைகளையும் உள்ளடக்கியவை, மத்திய/தென் அமெரிக்கப் பிரதேசங்கள். அப்பிரதேசங்களில் பழைமைவாய்ந்த மாயா (Maya), இன்கா (Inca), ஆஸ்டெக் (Aztec), ஓல்மெக் (Olmec) மற்றும் ‘பரகாஸ்’ (Paracas) இனத்தவர்கள் வாழ்ந்தார்கள். அங்கிருக்கும் புராதனச் சின்னங்கள், இன்றும் நம்மை வாய்பிளக்கவைப்பவை. 2012-ல் உலகம் அழியுமென அச்சம் தந்த மாயன்களின் காலண்டரை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இந்த ஐந்து இனத்தவர்களின் புராதன அடையாளங்களாக, ‘சிச்சென் இட்ஸா’ (Chichen Itza) பிரமிடும், ‘டியோடிஹூவாகான்’ (Teotihuacan) பிரமிடும், ‘பாம்பு மேடு’ (Serpent Mound) எனும் அமைப்பும், ‘டிகால்’ (Tikal) பிரமிடும், ‘மச்சு பிச்சு’ (Machu Picchu) புராதன மலை நகரமும், ‘நாஸ்கா கோடுகள்’ (Nazca) எனும் வரைவுகளும் இன்றுவரை கண்முன்னே காட்சியளிக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளிலிருந்து, நாலாயிரம் ஆண்டுகள் வரை பழைமையானவை. இவற்றில், நாஸ்கா கோடுகள் நோக்கித்தான் நாம் போகப்போகிறோம். அதற்கு முன்பு, ஓஹியோவில் (Ohio) அமைக்கப்பட்டிருக்கும் பாம்பு மேட்டை ஒரு தடவைப் பார்த்துவிடலாம்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 23 - என்ன சொல்கிறான் விண்வெளி வீரன்? - ராட்சச ரகசியக் கோடுகள்

ஓஹியோ மாகாணத்தின் ஆடம்ஸ் கவுன்ட்டியில் விசித்திரமான அமைப்பொன்று இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பாம்பு அது. 411 மீட்டர் நீளத்துடனும், ஒரு மீட்டர் உயரத்துடனும் செயற்கையாக உருவாக்கப்பட்ட மேடொன்று, பாம்பின் உருவத்துடனேயே அமைக்கப் பட்டிருக்கிறது. அருகிலிருந்து பார்த்தால், என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் பெரிய உருவத்துடன் இருக்கிறது. அந்தப் பாம்பு உருவம் இன்றுவரை அழியாத வகையில் அமைந்திருக்கிறது. சுருண்ட வாலும், வித்தியாசமான தலையுமாக அந்தப் பாம்பு காணப்படுகிறது. அன்றைய மக்கள் இதை ஏன் உருவாக்கி யிருப்பார்கள் எனும் கேள்வி முக்கியமானதுதான் என்றாலும், புராதன மக்கள் பாம்புக்கு முன்னுரிமை அளித்தது உலகெங்கும் நடந்திருக்கிறது. அதுவொரு பாம்பு என்பதை நிலத்திலிருந்து பார்ப்பவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. உயரத்திலிருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். அவ்வளவு பெரியது. அக்காலங்களில் உயரமென்றால் மலைகளாகவோ மரங்களாகவோதான் இருக்க முடியும். மனிதர்கள் மரங்களில் ஏறி, அதைப் பார்க்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது எனும் காரணம் நம்பும்படியாக இல்லை. மலையிலிருந்து பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று எடுத்துக்கொண்டால், அந்த உருவமே மலையுச்சியின் மேட்டில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி மேலே செல்ல வேறு மலைகள் அங்கில்லை. அப்படியென்றால், யார் பார்ப்பதற்காக அந்தப் பாம்பு உருவாக்கப்பட்டது? மனிதர் களுக்காகவோ, கடவுளுக்காகவோ அல்லது வானத்தில் பறக்கக்கூடிய வேறு யாருக்காகவோதான் அது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். வானத்திலிருந்து கடவுள் பார்ப்பதற்காக உருவாக்கியிருக்கலாம். இல்லை, பாம்பே அவர்களுக்கான கடவுளாகவும் இருந்திருக்கலாம். ஆனால், அப்படி இருக்க முடியாது என நாஸ்கா கோடுகள் சொல்கின்றன. அங்கு சென்று பார்த்தால், வேறோர் ஆச்சர்யம் நம்மைத் திகைக்கச் செய்கிறது. பாம்பு மட்டுமல்ல, பல வகையான உயிரினங்களே அங்கு காணப்படுகின்றன. அவற்றைக் காண, பெருநாடு நோக்கிச் செல்ல வேண்டும்.

தென்னமெரிக்காவின் மேற்குக் கரையோரத்தில், ஈக்வடாருக்கும் பொலிவியாவுக்கும் இடையேயுள்ள நீளமான நாடுதான் பெரு. தன்னுள் நம்ப முடியாத புராதன மர்மங்களை உள்ளடக்கியது. இங்குள்ள ‘நாஸ்கா’ (Nazca) நகரின் புறப்பகுதியெங்கும், மலைகள் சூழ்ந்த வெளி காணப்படுகிறது. சிஞ்சா (Chincha) மற்றும் ‘யாவ்கா’ (Yauca) பள்ளத்தாக்குகளின் இடையே அமைந்திருக்கும் மிகப்பெரிய சமவெளி. கிட்டத்தட்டப் பாலைவனம் என்று சொல்லிவிடலாம். வெப்பம் அதிகமான, கற்தரைகொண்ட பகுதி. அந்தத் தரையெங்கும், 15 செ.மீ ஆழம்கொண்ட கோடுகளால், பலவகைச் சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன. சித்திரம் வரைந்ததில் என்ன விசேஷம் இருந்துவிட முடியும்... புராதன மக்கள் எழுத்துகளைக்கூடச் சித்திரமாகத்தான் வரைந்திருக்கிறார்கள். ஆனால், இங்குள்ள சித்திரங்களோ வேறு வகையானவை. பிரமாண்டமான உருவம்கொண்டவை. பாம்பைக்கூட, அதன் வளைவுகளிலிருந்து கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அருகே நின்று இவற்றைப் பார்க்கும்போது, அவை என்ன உருவங்கள் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது. அதிகபட்சமாக 370 மீட்டர் வரை சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன என்றால் சிந்தித்துப் பாருங்கள். ஒரு சாதாரண மனிதனால், அருகிலிருந்து இனம்காண முடியாத பிரமாண்டம். மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் ஆகிய உயிரினங்களும் ஜியோமெட்ரி வடிவங்களும், நேர்கோடுகளுமாக மூன்று வகைகளாக அந்தச் சித்திரங்களைப் பிரிக்கலாம். 800 நேர்கோடுகளும், 300 ஜியோமெட்ரி வடிவங்களும், 70 உயிரினங்களும் காணப்படுகின்றன. ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அவை போன்ற பிரமாண்டமான வடிவங்களை, நிலத்தில் அவ்வளவு நேர்த்தியாக யாராலும் வரைந்துவிட முடியாது. வரைவுகள் எங்கு தொடங்குகின்றனவோ, அங்கேயே முடிகின்றன. சிறிய மாடலொன்றைக் கைகளில் வைத்தபடி மட்டுமே அப்படியான பெரிய உருவங்களை வரைய முடியும். அதுவெல்லாம் நவீன மனிதனின் வரையும் யுக்தி. சிறிய படமொன்றை உருவாக்கி, அதன் அளவீடுகளை மடங்குகளாக்கி, பெரிய படங்களை உருவாக்குவது. அதையே, இவர்களும் பயன்படுத்தியிருக்க முடியுமா? இதை நான் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. அங்கே வரையப்பட்டிருக்கும் பறவையொன்று, கிட்டத்தட்ட இரண்டு கிரிக்கெட் மைதானங்களின் அளவுகொண்டது. அவ்வளவு பெரிய, சிக்கலான உருவத்தைக் கணித அளவீடுகள் இல்லாமல் ஒருவரால் எப்படி வரைய முடியும்?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 23 - என்ன சொல்கிறான் விண்வெளி வீரன்? - ராட்சச ரகசியக் கோடுகள்

நாஸ்கா வரைவுகளில் நம்மைத் தலைசுற்ற வைப்பவை நேர்கோட்டு வரைவுகளே. அங்கு காணப்படும் நேர்கோடுகள் அனைத்தையும், துல்லியமான கருவிகள் பயன்படுத்தாமல் வரைந்திருக்கவே முடியாது. எந்த இடத்திலும் சிறிது வளைவோ, முறிவோ இல்லாமல் அச்சில் வார்த்த நேர்கோடுகளாக இருக்கின்றன. அவற்றின் நீளங்களைச் சொன்னால், நிச்சயம் உங்களால் நம்பவே முடியாது. 800 நேர்கோடுகளில், 370 மீட்டரிலிருந்து 20 கிலோமீட்டர் வரை நீளம் கொண்டவையாகக் காணப்படுகின்றன. சரியாக கவனியுங்கள், 20 மீட்டர்கள் கிடையாது.

20 கிலோமீட்டர்கள். அவ்வளவு நீளமான நேர்கோடுகளை மலையடிவாரத்தினூடாக அவர்களால் எப்படி வரைய முடிந்தது... ஒருவேளை, அப்படி வரைந்திருந்தாலும், அவ்வளவு நீளக் கோடுகளை வரைவதற்கான காரணம் என்ன... எந்தக் கடவுளுக்காக நேர்கோடுகளை வரைய வேண்டும்? அதிக உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்துகூட அந்தக் கோடுகளைப் பார்க்க முடிகிறதென்றால், அவற்றின் பிரமாண்டத்தை யோசனை செய்து பாருங்கள். இன்னும் ஒன்றைச் சொன்னால், ‘ராஜ்சிவா பொய் சொல்கிறார்’ என்றுகூட நினைப்பீர்கள். ஒரு மலையின் உச்சியில், நீளமான விமான ஓடுபாதை (Runway) போன்ற அமைப்பொன்றும் காணப்படுகிறது. அந்த மலைப்பகுதி சீரான சமதளப் பாதையாக எப்படி மாற்றப்பட்டிருக்கும்... அது நிஜமாகவே விமானங்களின் ஓடுபாதைதானா... இல்லை, வேறு ஏதாவது காரணங்களுக்காக அமைக்கப்பட்டதா... இல்லை, இயற்கையாகவே தோன்றியதா? நிச்சயம் இயற்கையாகத் தோன்றவில்லை. அவர்களே அமைத்திருக்கிறார்கள். ஆனால், ஏன் எனும் காரணம் மட்டும் யாருக்கும் தெரியாது. எதற்காக மலையுச்சியில் அப்படியானதொரு பாதையை அமைக்க வேண்டும்? இந்த இடத்தில் இன்னும் ஒன்றையும் சொல்லிவிடுகிறேன். அருகேயிருக்கும் மலையில் மேல்நோக்கிக் கையை உயர்த்திக் காட்டிக்கொண்டிருக்கும் மனிதனின் சித்திரம் ஒன்றும் அங்கு காணப்படுகிறது. ஆனால், அவர் மனிதனா எனும் சந்தேகமும் வருகிறது. அவர் மேலே யாரைக் காட்டுகிறார்... கடவுளையா அல்லது வானிலிருந்து வந்திறங்கிய வேறு யாரோவையா? இந்தக் கேள்விகளால், ஏலியன்கள் எனும் கருத்தை நான் விதைப்பதாக நீங்கள் நினைக்கலாம். அப்படியில்லை. அந்த மனிதனுக்கு, ஆராய்ச்சியாளர்கள் வைத்த பெயரே, ‘விண்வெளி வீரன்’ (The Astronaut) என்பதுதான்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 23 - என்ன சொல்கிறான் விண்வெளி வீரன்? - ராட்சச ரகசியக் கோடுகள்

மலையடிவாரத்தில் அமைக்கப்பட்ட நாஸ்கா வரைவுகள், மனிதன் பார்ப்பதற்காக வரையப்படவேயில்லை. அந்த வெப்பம் தகிக்கும் மலையுச்சியில் மனிதனுக்கு வேலையே கிடையாது. அதைப் பார்ப்பதற்கான உயரம்கூட அருகில் இல்லை. மலைகள் தொலைவில் காணப்படுகின்றன. மரங்களும் அங்கில்லை. கடவுள் அல்லது வானில் பறந்து வரக்கூடிய யாரோ ஒருவரால் மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும். ஓஹியோவில் உருவாக்கப்பட்டது, பாம்புக் கடவுளுக்காக என்று வைத்துக்கொண்டால், நாஸ்காவில் காணப்படும் மிருகங்களும் பறவைகளும் எந்தக் கடவுளுக்காக இருக்க முடியும்? ஒருவேளை, தாங்கள் கண்ட மிருகங்களைக் கடவுளாக வணங்குபவர்கள் என்று நீங்கள் நினைத்தால், இன்னுமோர் ஆச்சர்யமும் உங்களைத் தாக்கும். அங்கு வரையப்பட்டிருக்கும் பெரும்பாலான உயிரினங்கள், அந்தப் பிரதேசத்திலேயே இல்லாதவை. மழைப் பிரதேசங்களில் மட்டுமே வாழக்கூடியவை. அந்த உயிரினங்களை எங்கு கண்டிருப்பார்கள்? சில உயிரினங்களை விநோதமான முறையிலும் வரைந்திருக்கிறார்கள். அவற்றில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, ஒருசில விலங்குகளுக்கு ஒரு கையில் நான்கு விரல்களும், மறு கையில் ஐந்து விரல்களுமாக வரையப்பட்டிருக்கின்றன. அவை தற்செயலாக நடந்தவையா அல்லது ஏதேனுமொரு காரணத்தை முன்னிட்டு வரையப்பட்டவையா... தெரியவில்லை.

இதுவரை நான் சொன்ன நாஸ்கா வரைவுகள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால், நவீன ஆராய்ச்சியாளர்களின் தேடல்கள் அத்துடன் நின்றுவிடவில்லை. ட்ரோன்களை, நாஸ்கா வரைவுகளைச் சுற்றியிருக்கும், யாருமே ஏறியிருக்க முடியாத மலைத் தொடர்கள் நோக்கி அனுப்பிப் படமெடுத்தார்கள். அதைப் பார்த்தவர்கள் அதிர்ந்தே போய்விட்டார்கள். மலைகளெங்கும், சிறியவை, பெரியவையென்று மேலும் பல உருவங்கள் வரையப்பட்டிருக்கின்றன. ஓரடி நீளம்கொண்ட சிறிய வரைவுகள்கூட அங்கே காணப்படுகின்றன. மேலும் வரைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. நாஸ்கா மக்கள் மலைகளெங்கும் சித்திரங்கள் வரைவதிலேயே தங்கள் காலத்தை நகர்த்தியிருக்கிறார்கள் என்றே சிந்திக்க வைக்கிறது. ஆனாலும் யாருக்காக, எதற்காக அப்பிரமாண்ட வரைவுகளை உருவாக்கினார்கள் என்பது தெரியவில்லை. அப்படி இருக்கலாம் அல்லது இப்படி இருக்கலாம் என்னும் சந்தேகங்களை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், உண்மை மட்டும் எங்கேயோ ரகசியமாக ஒளிந்திருக்கிறது!

(தேடுவோம்)