மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 24 - மொவாய்கள் நடந்தது நிஜமா?

மொவாய்கள் நடந்தது நிஜமா?
பிரீமியம் ஸ்டோரி
News
மொவாய்கள் நடந்தது நிஜமா?

உலக மக்கள் பலரிடம் ஒரு நம்பிக்கையிருக்கிறது. ‘எங்கள் வழிபாட்டுத்தலம் பூமியின் மையப் புள்ளியில் அமைந்திருக்கிறது’ என்பதுதான் அது.

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் ஓர் உண்மையை நான் சொல்ல வேண்டும். நான் எழுதியிருந்த, ‘பிரமிடு கற்கள் நகர்ந்த’ கட்டுரையைப் படித்தீர்கள் அல்லவா... அதை எழுதுவதற்குக் காரணமே, இப்போது சொல்லப்போகும் இந்தக் கட்டுரையின் மர்மத்தைச் சொல்வதுதான்! இதன் தொடக்கப்புள்ளியாகவே பிரமிடைத் தொட்டேன். பிரமிடின் ஆச்சர்யங்களை மேலோட்டமாகச் சொல்லிவிட்டு, இதை இணைத்துச் சொல்ல நினைத்தேன். ஆனால், பிரமிடு கட்டுரையை இடையில் நிறுத்த முடியாமல் நீளமாகிவிட்டது. அதனால், தனித்து எழுதும்படி ஆகிவிட்டது. இன்று சொல்லப்போகும் மர்மம், 24 கிலோமீட்டர் நீளமும், 12 கிலோமீட்டர் குறுக்களவுமுள்ள மிகச்சிறிய தீவொன்றில் நடந்தது. உலக மர்மங்களில், முக்கிய இடத்தில் இதுவும் இருக்கிறது. அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள், மொத்தமாகவே 3,000 பேர்தான். ஆனால், ஆயிரத்துக்கும் அதிகமான சிலைகளை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ‘ஆயிரம் சிலைகளைச் செய்வதில் அப்படியென்ன மர்மம் இருந்துவிடப்போகிறது?’ என்றுதான் நினைப்பீர்கள். ஆனால், அந்தச் சிலைகள் பற்றியோ, அவை உருவான இடம் பற்றியோ தெரிந்தால் மலைத்துப்போவீர்கள். அவை சாதாரணச் சிலைகளல்ல. ஒவ்வொன்றும் 80 டன்களுக்கு அதிகமான எடையும், பத்து மீட்டர் வரை உயரமும் கொண்டவை. இதுகூடச் சரிதான் எனச் சொல்லிவிடலாம். ஆனால், அவை 22 கிலோமீட்டர் தூரத்துக்கு மேடும், குன்றுகளும் நிறைந்த இடத்தில் நகர்த்தப்பட்டிருக்கின்றன. ‘இல்லை, இல்லை... அவை நகர்த்தப்படவில்லை. நடந்தே சென்றன’ என்கிறார்கள் அந்தத் தீவுக்குச் சொந்தமான மக்கள். என்ன பிரமிப்பாக இருக்கிறதா? மர்மத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள, அந்தத் தீவின் கதையைக் கேளுங்கள், சொல்கிறேன்.

தொடங்குவதற்கு முன்பு, ஒரு சிறிய தகவலையும் சொல்ல வேண்டும். சிலரின் மனதை இது புண்படுத்தலாம். ஆனால், யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் என்பதால் சொல்கிறேன். உலக மக்கள் பலரிடம் ஒரு நம்பிக்கையிருக்கிறது. ‘எங்கள் வழிபாட்டுத்தலம் பூமியின் மையப் புள்ளியில் அமைந்திருக்கிறது’ என்பதுதான் அது. ஒரு பேச்சுக்காக அப்படிச் சொல்வதில் தப்பேதுமில்லை. ஆனால், அதை அறிவியல்கொண்டு நிறுவுவதாக நினைத்து காந்தப்புலம், ஈர்ப்புவிசை என அனைத்தையும் இழுப்பார்கள். இன்றுள்ள சமூக வலைதளங்களில், இப்படியானவை பெருமளவில் பகிரப்படுகின்றன. எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், கடவுளை வழிபடும் மக்களுக்கு இவையெதுவும் தேவையில்லை. பூமி, தட்டையான வட்டமாக இருக்கும் பட்சத்தில், அதற்கு மையம் நிச்சயமாக இருக்கும். ஆனால் பூமி கோள வடிவமானது. கோளத்தின் மையம் அதனுள்ளே ஆழத்திலிருக்கும். கோளத்தின் மேற்பரப்பிலிருக்கும் அனைத்துப் புள்ளிகளும், ஆழ் மையத்தை நோக்கியே இருக்கும். அதனால், கோள மேற்பரப்பின் ஒவ்வொரு புள்ளியும் அதன் மையம் நோக்கியதே! பூமியை எடுத்துக் கொண்டாலும், அதன் ஒவ்வோர் இடமும் மையப்புள்ளியை நோக்கியதுதான். அதனால், விசேஷமாக எந்த இடத்தையும் மையமென்று சொல்வதில் அர்த்தமில்லை. இப்போது, இதை எதற்காக இங்கு நான் சொல்கிறேன்... காரணமேயில்லாமல் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையல்லவா? உண்மைதான். இதைச் சொல்வதற்குக் காரணம், வேறெதுவுமில்லை. நான் மேலே சொன்ன அந்தத் தீவையும், ‘பூமியின் மையம்’ என்றுதான் அழைத்தார்கள். இன்றைய மர்மம் நோக்கி நம்மை அழைப்பதும் அதுவே. அங்கு என்ன ஒளிந்திருக்கிறது எனப் பார்த்து வரலாம், வாருங்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 24 - மொவாய்கள் நடந்தது நிஜமா?

‘ரப்ப நூயி’ (Rapa Nui) மொழியில் ‘Tepito ote Henua’ என்றால், ‘பூமியின் மைய இடம்’ என்று அர்த்தம். பசிபிக் சமுத்திரத்திலிருக்கும் ஒரு தீவையே இந்தப் பெயர்கொண்டு அழைத்தார்கள். 165 மில்லியன் சதுர கிலோமீட்டர் நீர்ப்பரப்பைக்கொண்ட உலகின் ஆழமானதும், மிகப்பெரியதுமான சமுத்திரம் பசிபிக். பூமியைக் குறித்த கோணத்தில் பார்த்தால், கிட்டத்தட்ட பசிபிக் கடல்நீர் முழுவதும் அதை மறைத்திருக்கும். அவ்வளவு பெரியது பசிபிக். ஆஸ்திரேலியாவின் கிழக்குப் புறத்துக்கும், தென்னமெரிக்காவின் மேற்குப் புறத்துக்கும் இடையேயுள்ள கடல் பிரதேசம். 25,000 தீவுகளை உள்ளடக்கியது. அவற்றில் பெரும்பாலானவை, சமுத்திரத்தின் அடியேயிருந்த எரிமலைகள் வெடித்ததால் மேலெழுந்த லாவா குழம்புகள், கடல் மட்டத்துக்கு மேலே இறுக்கமடைந்து தீவுகளானவை. அப்படி உருவான தீவுதான், ஈஸ்டர் தீவும் (Easter Island). ‘பெரு’ நாட்டிலிருந்து மேற்காக 3,200 கிலோமீட்டர் தொலைவில் அந்தத் தீவு இருக்கிறது. அண்மையில், எந்த நிலப்பரப்பையும் கொண்டிராத தனித் தீவு.

1722-ம் ஆண்டு, பசிபிக் சமுத்திரத்தினூடாக ஆஸ்திரேலியாவைத் தேடிக்கொண்டிருந்த, `ஜேக்கப் ரோகவேன்’ (Jacob Roggeveen) எனும் ஹாலந்துக் கடலோடி, தற்செயலாகச் சென்றடைந்த தீவுக்கு, ‘ஈஸ்டர் தீவு’ என்று பெயரிட்டார். அந்தத் தீவை அவர் அடைந்தது ஈஸ்டர் தினத்தில். நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், ‘டெரவாக்கா’ (Terevaka) எனும் மிகப்பெரிய எரிமலை வெடித்ததால் உருவான முக்கோணத் தீவு. மூன்று கப்பல்களில், 134 சக மாலுமிகளுடன், ரோகவேன் சென்றடைந்த அந்தத் தீவையே ஆஸ்திரேலியாவென்று முதலில் நினைத்துக் கொண்டார். தீவுக்கு மிகவும் சமீபமாகச் சென்றதும், கரையின் மேட்டில் நின்றுகொண்டிருந்த ராட்சச மனிதர்களைக் கண்டு ஒரு கணம் தடுமாறிப்போனார். அவ்வளவு உயரமான மனிதர்கள் அங்கிருப்பார்களென்று அவர் எதிர்பார்க்கவேயில்லை.

கரையை அடைந்த ரோகவேனுக்கு, வரிசையாக நின்றவர்கள் மனிதர்களல்ல, சிலைகளென்ற உண்மை புரிந்தது. பத்து மீட்டர் வரை உயரமான பதினைந்து சிலைகள் அங்கே வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு வாழ்ந்த மக்கள் ரோகவேனையும், அவரின் சகாக்களையும் நன்கு வரவேற்று அழைத்துச் சென்றதாக, அவரே குறிப்புகளில் எழுதியிருக்கிறார். அவரின் குறிப்புகளிலிருந்துதான் அந்த மக்கள் பற்றி உலகமே தெரிந்துகொண்டது. அது தவிர்த்து, அங்கு நுழைந்த ரோகவேனின் சகாக்கள் சுட்டதால், பன்னிரண்டு தீவினர் இறந்துபோன கதையையெல்லாம் இங்கு நான் விளக்கப்போவதில்லை. சொல்ல விரும்புவது மீண்டும் நீளமாகிவிடலாம். அதனால், முக்கியமான சிலைகளின் மர்மத்துடனேயே நகர்ந்து செல்வோம்.

அந்தத் தீவுக்கு, ஈஸ்டர் தீவென்று பெயரிடப் பட்டாலும், அதன் நிஜப் பெயர் ‘ரப்ப நூயி’ (Rapa Nui). கி.பி.800 ஆண்டுகளில் ஏதோவொரு தீவிலிருந்து, சில மக்களுடன் புறப்பட்டு வந்த ‘ஹொட்டு மட்டுவா’ (Hotu Matua) எனும் தலைவன், இந்தத் தீவில் குடியேறினான். எரிமலைக் குழம்புகளால் உருவான தீவென்பதால், பெரும்பாலும் குன்றுகளையும், மேடுகளையுமே கொண்டிருந்தது. மரங்களுடனான சில பசுமையான இடங்களும் காணப்பட்டன. ஹொட்டு மட்டுவா, அந்தத் தீவுக்கு வரும்போது கோழிகள், எலிகள், உருளைக்கிழங்கு, கரும்பு, வாழை போன்றவற்றைக் கொண்டுவந்திருக்கிறான். அவற்றை அந்தத் தீவில் பயிரிட்டுப் பெருக்கியுமிருக்கிறான். அவை தவிர்ந்து வேறெந்த உயிரினமும் அந்தத் தீவில் இருக்கவில்லை. பாம்புகள்கூட இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தீவெங்கும் தென்னை மரம்போல, ஆனால் உயரமான ஒருவித மரம் இருந்திருக்கிறது. பின்னாள்களில் ரோகவேன் சென்ற சமயத்தில், 3,000 மக்கள்வரை பெருகியிருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய ஒருவகைச் சிலைகளே இன்று ஆச்சர்யமாகப் பேசப்பட்டுவருகின்றன. அந்தச் சிலைகளை ‘மொவாய்’ (Moai) என்று அழைக்கிறார்கள். அவை எப்படி உருவாக்கப்பட்டன... அவற்றை எவ்வாறு மலைப்பிரதேசத்தில் நெடுந்தூரத்துக்கு நகர்த்தினார்கள் என்பதுதான் மர்மமாக இருக்கிறது. ரோகவேன் வந்து சென்ற சில ஆண்டுகளில், தீவிலிருந்த மொத்த மக்களும் காணாமல்போனார்கள். அதுவும் மர்மமாகவே இருக்கிறது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 24 - மொவாய்கள் நடந்தது நிஜமா?

தீவின் கரைகளின் பல இடங்களில், மொவாய்ச் சிலைகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. அவை தவிர்த்து மொவாய்களின் தலைகள் மட்டும் தீவெங்கும் பல இடங்களில் காணப்படுகின்றன. தீவின் ஓர் எல்லையிலிருக்கும் எரிமலை லாவாச் சிறுமலையிலேயே அந்தச் சிலைகள் வெட்டியெடுக்கப் பட்டிருந்தன. 700 மீட்டர் அகலமும், 160 மீட்டர் உயரமும்கொண்டதாகச் அச்சிறுமலை காணப்பட்டது. சிலைகள் வெட்டப்பட்டு, அவ்விடத்திலிருந்து நகர்த்தும்போதே சேதமடைந்ததால், 397 சிலைகள் கைவிடப்பட்டு, மலையடிவாரத்திலேயே கிடக்கின்றன. அங்கிருந்த சிலையொன்றின் பிரமாண்டம் நம்பவே முடியாதது. 22 மீட்டர் உயரமும், 270 டன் எடையும்கொண்ட சிலையையும் அவர்கள் வெட்டியிருக்கிறார்கள். அதை, ‘எல் ஜிகான்டே’ (El Gigante) என்றழைக்கிறார்கள். சரியாக கவனியுங்கள். அந்தச் சிலை கிட்டத்தட்ட ஆறடுக்கு மாடியின் உயரம் கொண்டது. அதன் எடையோ மிகவும் அதிகம். அதை உருவாக்கிய சமயத்தில், ஆயிரம் பேர் அளவில்தான் அங்கு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பின்னாள்களில் ரோகவேன் வந்தபோதுதான், மூவாயிரமாகப் பெருகியிருந்தார்கள். ஆயிரம் பேரில், குழந்தைகள், பெண்கள் தவிர்த்து, எத்தனை ஆண்கள் இருந்திருக்க முடியும்... அவர்களில் முதியவர்கள் எத்தனை பேர்? ஆண்களில், தொடர்ச்சியாகச் சிலைகளை மலையிலிருந்து வெட்டிக் கொண்டிருந்தவர்களே அதிகம். அவற்றை அங்கிருந்து நகர்த்துவதற்கு எஞ்சியவர்களாக எத்தனை பேர் இருக்க முடியும்? அந்தத் தீவில் கோழிகளையும் எலிகளையும் தவிர்த்து வேறு எந்தப் பிராணியும்் இல்லை. குதிரைகளோ, மாடுகளோ, ஆடுகளோகூடக் கிடையாது. எதன் உதவிகொண்டு நகர்த்தியிருப்பார்கள்? அங்கிருந்த தென்னை மரத்தால் உருவாக்கிய கயிற்றைக்கொண்டே, அந்தச் சிலைகளை நிமிர்த்தியிருக்க வேண்டும். அதற்கு நெம்பாக முட்டுக் கொடுப்பதற்கு அதிகபட்ச உயரமான மரங்களும் அங்கிருக்கவில்லை. இருந்தவையெல்லாம், கரும்பு, உருளைக்கிழங்கு, வாழை உட்பட இருபத்தொரு விதமான தாவரங்கள் மட்டுமே! மரங்களை உருளைகளாக வெட்டி, அவற்றின்மேல் மொவாய்களைவைத்து நகர்த்தியிருக்கலாம். ஆனால், அந்த இடமே ஏற்றமும் இறக்கமும்கொண்ட மலைப் பிரதேசம். எகிப்தில் கற்கள் நகர்ந்ததற்கான காரணமாக எதையாவது சொல்லி, நம்மைச் சமாதானம் செய்துகொள்ளலாம். ஆனால், இங்கு எந்த வசதியும் அடியோடு இல்லை. “மொவாய்களை எப்படி நகர்த்தினார்கள்?” என்று ரப்ப நூயி முதியவர்களிடம் கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில் அதிர்ச்சியின் உச்சம். ``மொவாய்கள் நடந்து சென்றன” என்று சொன்னதுமல்லாமல், அவை எப்படி நடந்தன என்று நடந்தும் காட்டுகிறார்கள்.

‘என்ன, சிலைகளாவது, நடப்பதாவது?’ என்று வியக்கிறோம். ஆனால், சிலைகள் நடந்துசென்றது உண்மைதான் என்று ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடித்திருக்கி றார்கள். மொத்தத்தில் எதையும் நம்ப முடியவில்லை. ஆனாலும், காரியம் ஒன்று நடந்திருந்தால், அதற்குக் காரணம் நிச்சயம் இருந்தேயாகுமல்லவா? மொவாய்கள் எப்படி நடந்தன என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

(தேடுவோம்)