மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 25 - கர்ப்பிணியின் கல் தெரியுமா?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

ஈஸ்டர் தீவின் ஒரு கரையிலிருக்கும் மலையில் வெட்டப்பட்ட சிலைகள், எதிர்க்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டதை, பலவிதமாகச் சொல்கிறார்கள்.

‘எல் ஜிகான்டே’ எனும் 22 மீட்டர் உயரமும், 270 டன் எடையும்கொண்ட மொவாய்ச் சிலையை ‘ரப்ப நூயி’ மக்கள் உருவாக்கியிருந்தார்கள். அதைத் தூக்கி நிறுத்தவும், நகர்த்தவும் அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருந்தது. அதனாலேயே அந்தச் சிலையை அவர்கள் உருவாக்கியிருக் கிறார்கள். அம்மக்கள் இயற்கையுடன் வாழ்ந்தவர்கள். இயற்கையின் எல்லா கூறுகளையும் நன்கறிந்தவர்கள். அதனால், தங்களால் முடியாததைச் செய்வதற்கு முயல மாட்டார்கள். அது, அவர்களுடைய நம்பிக்கை சார்ந்த பணி என்பதால், தவறு செய்வதை விரும்பவும் மாட்டார்கள். ஆனாலும், ரப்ப நூயி மக்கள், எந்த வசதியுமற்ற மிகச்சிறிய தீவில் இருந்துகொண்டு இதை எப்படிச் சாதிக்க முயன்றார்கள் என்பதே அனைவரையும் வியப்புக்குள்ளாக்குவது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 25 - கர்ப்பிணியின் கல் தெரியுமா?

அவர்களின் நம்பிக்கைகளின்படி உருவாக்கிய மொவாய்களை, நிற்கவைத்தே வேறிடத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். கிடைநிலையில் வெட்டப்பட்ட சிலைகளை முதலில் நிமிர்த்த வேண்டும். யாரும் உதவிக்கு வர முடியாத ஒரு தனித்தீவில், எந்த மிருகத்தின் துணையுமில்லாமல், சொற்பமான ஆண்களுடன், 270 டன் எடையைத் தூக்கவும் நகர்த்தவும் எப்படி முடியும்? அந்தச் சிலையின் உயரம் 22 மீட்டர்கள். அதை நிமிர்த்த வேண்டுமென்றால், அதைவிட உயரமான இடத்தில் கயிறுகளைக் கட்டி, பாரம் தூக்கி போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். ஈஸ்டர் தீவில் இருந்தது ‘Paschalococos’ என்னும் ஒருவகைத் தென்னை மரங்களே! எந்த முறையில் அவற்றைப் பயன்படுத்தி, சிலைகளை உயர்த்தி யிருக்க முடியும்... அதற்கான பலமான கயிறுகளை எங்கிருந்து உருவாக்கியிருப்பார்கள்... ஒருவேளை உயர்த்தியிருந்தாலும், அதை எப்படி நகர்த்தியிருக்க முடியும்?

இப்படிப் பாருங்கள். மனிதனொருவனால் அதிகபட்சம் 500 கிலோவை நகர்த்த முடியுமென வைத்துக்கொள்வோம். இது மிகவும் அதிகப்படியான கணிப்பென்றாலும், பேச்சுக்கு வைத்துக்கொள்ளலாம். அப்படியெனில், 270 டன் சிலையை நகர்த்த, 520 நபர்கள் தேவைப்படலாம். அந்தத் தீவில் இருந்தவர்கள் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள். முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் தவிர்த்து எஞ்சியவர்கள் எத்தனை பேர்... அந்தச் சிலையை நகர்த்துவது எப்படிச் சாத்தியமாகும்? ‘இவர் ஏன் இதைப் பெரிதுபடுத்திப் பேசுகிறார்... அது அவ்வளவு பெரிய அதிசயமா?’ என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆதிகால மனிதர்களின் வரலாறுகளில், பிரமாண்டமான கற்களின் அமைப்புகள் முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. ‘அவர்களால் எப்படி முடிந்தது?’ என்று ஆச்சர்யப்படவைக்கிறார்கள். ஆனால், திருப்திகரமான பதில்கள் கிடைப்பதில்லை. இன்றும் நம் முன்னே பல ஒற்றைக் கற்கள் (Monolith) மர்மங்களை விழுங்கியபடி, நம்மைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். இதைத் தெரிந்துகொண்டால், ஏனையவை கால் தூசாகிவிடும்.

லெபனான் நாட்டிலிருக்கும் ஒரு நகரம், பால்பெக் (Baalbek). இந்த நகரில், ஜூபிடர் கடவுளுக்கான தேவாலயம் ஒன்று, 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. அந்தக் கோயிலுக்கான தூண்களுக்கு, ஒரு கிலோமீட்டர் தொலைவில் கற்கள் வெட்டப்பட்டன. அவற்றில் மூன்று கற்கள், ஜெர்மன் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தக் கற்களில் என்ன விசேஷம் என்கிறீர்களா? மனிதனால் வெட்டப்பட்ட மிகப்பெரிய கற்கள் அவைதான். அவற்றின் எடை 1,000, 1,240, 1,650 டன்கள். கனமான கிரானைட் கற்கள். கிட்டத்தட்ட 20 மீட்டர்கள் நீளமும், ஆறு மீட்டர் உயர, அகலமும்கொண்டவை. நகர்த்தவே முடியாத அவ்வளவு பெரிய கற்களை, எப்படி வெட்டினார்கள்... ஏன் வெட்டினார்கள்? எதுவும் தெரியாது. அக்கற்கள் பற்றி, அவ்வூர் மக்கள் சொல்லும் கதையொன்று இருக்கிறது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 25 - கர்ப்பிணியின் கல் தெரியுமா?

அவற்றை யாராலும் நகர்த்த முடியாமல் இருந்தபோது, “நகர்த்தும் ரகசியம் எனக்குத் தெரியும். அதைச் சொல்வதென்றால், நான் குழந்தை பெற்றுக்கொள்ளும்வரை, எனக்கு நீங்கள் உணவளிக்க வேண்டும்” என்று ஒரு கர்ப்பிணி சொன்னாளாம். அவள் நிஜத்தில் பெண் கிடையாது. ஒரு பேய். அந்தக் கர்ப்பிணிப் பேய்க்குக் கடைசிவரை அவர்களால் உணவளிக்க முடியவில்லை. அதனால், அக்கற்களும் இன்றுவரை அங்கேயே கிடக்கின்றன என்று கதை போகிறது. அதனால் கற்களில் ஒன்றை, ‘கர்ப்பிணியின் கல்’ (Stone of the Pregnant Woman) என்று அழைக்கிறார்கள். பண்டைய ரோமானியர்கள், நகர்த்த முடியாமல் அங்கேயே விட்டுச் சென்றார்களா தெரியவில்லை. ஜூபிடர் ஆலயம் இது போன்ற கற்களைக்கொண்டே கட்டப்பட்டிருக்கிறது. கைவிடப்பட்ட அந்தப் பிரமாண்டமான கற்களை என்ன காரணத்துக்காக வெட்டியிருக்கிறார்கள்.. 1,640 டன் எடையென்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? 1.64 மில்லியன் கிலோ எடை கொண்டவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அப்படியான கற்களைச் செதுக்கி எடுப்பதும், நகர்த்துவதும் எவ்வளவு சிரமமான காரியம்... அவற்றை நகர்த்துவதற்கான வழிமுறைகள் அவர்களிடம் இருந்திருக்கின்றன. கற்களின் மர்மங்களைச் சொல்ல வேண்டுமெனில் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும், நாம் மீண்டும் ஈஸ்டர் தீவுக்குச் செல்லலாம்.

ஈஸ்டர் தீவின் ஒரு கரையிலிருக்கும் மலையில் வெட்டப்பட்ட சிலைகள், எதிர்க்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டதை, பலவிதமாகச் சொல்கிறார்கள். உருவாக்கப்பட்ட சிலைகள், முதலில் மலையிலிருந்து கீழே தள்ளி விடப்படுகின்றன. பின்னர் தென்னை மரங்களினாலான உருளைகளில்வைத்து, உருட்டிச் செல்லப்படுகின்றன. அப்படி உருட்டிச் செல்லும்போது, தவறிக் கீழே விழுந்து உடையும் சிலைகளை அங்கேயே விட்டுவிடுகிறார்கள். அதனாலேயே, ஆங்காங்கே உடல்களற்று, தலைகள் தனியாகத் தீவெங்கும் காணப்படுகின்றன என்கிறார்கள். நூற்றுக்கணக்கான மொவாய்த் தலைகள், எல்லா இடங்களிலும் இருப்பது உண்மைதான். மொவாய்ச் சிலைகளை நகர்த்திக்கொண்டு வரும்போது, விழுந்து உடைந்த சம்பவங்கள் நிறையவே நடந்திருக்கலாம். இந்தக் காரணம், ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருந்தது. ஆனால், சமீபத்தில் நடந்த கண்டுபிடிப்பு, எல்லாமே தப்பு என்றது. தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தற்செயலாக அதைக் கண்டுபிடித்தார்கள். அந்தக் கண்டுபிடிப்பு, அனைத்தையும் தொடக்கத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வைத்துவிட்டது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 25 - கர்ப்பிணியின் கல் தெரியுமா?

தீவெங்குமிருந்த தலைகளில் ஒன்றைச் சும்மாதான் தோண்டிப் பார்த்தார்கள். திகைத்துப் போனார்கள். கழுத்துவரை இருக்கும் தலையென்று நினைத்தால், அங்கு முழுச்சிலையே புதைக்கப்பட்டிருந்தது. படிப்படியாக ஒவ்வொரு தலையைத் தோண்டியபோதும், முழுமையாக இருந்தன. அப்படியென்றால், மொவாய்கள் உடைந்ததால் தலைகள் அங்கு தனியாகக் காணப்படவில்லை. தீவின் முழுப்பகுதிக்கும் சிலைகளைக் கொண்டு சென்று, ஆழக்கிடங்கு வெட்டிப் புதைத்திருக்கிறார்கள். இந்தக் கண்டுபிடிப்பு, அதுவரையிருந்த கணிப்புகளையெல்லாம் உடைத்தெறிந்தது. ஆயிரம் சிலைகளுக்கு மேல், நிற்கவைத்தோ, புதைத்துவைத்தோ தீவெங்கும் அலங்கரித்திருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும், இவற்றைச் செய்து முடிக்க ரப்ப நூயி மக்களால் முடிந்திருக்கவே இயலாது. அங்கு என்ன மர்மம் ஒளிந்திருந்தது என்று கடைசிவரை தெரியவில்லை. அதே சமயத்தில், ‘சிலைகளை யாரும் நகர்த்தவில்லை. அவை நடந்தே சென்றன’ என்று ரப்ப நூயி மக்களின் முதியவர்கள் சொல்கிறார்கள்.

“சிலைகளால் எப்படி நடக்க முடியும்?” என்று கேட்டபோது, இரண்டு கால்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பாதங்களை நிலத்திலிருந்து தூக்காமல், இடம் வலமாகத் திரும்பித் திரும்பி முன்னோக்கி நடந்து காட்டுகிறார்கள். மொவாய்களும் அப்படியே நடந்தன என்கிறார்கள். ‘இவர்கள் சொல்வது எப்படி உண்மையாகும்’ என்ற சந்தேகம் இருந்தாலும், ஒரு தடவை செய்து பார்த்தால் என்னவென்று தோன்றியது. தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், மூன்று மீட்டர் உயரமும், ஐந்து டன் எடையுமுள்ள மாதிரி மொவாய்களை கணினி மூலம் உருவாக்கினார்கள். அதைக் கயிற்றால் கட்டி, பலவிதங்களில் நகர்த்துவதற்கு முயன்றார்கள். முடிவுகள் தோல்வியாகவே இருந்தன. பலரின் உதவியுடன் பலமுறை முயன்ற பிறகு, இறுதியில் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள்.

மொவாயின் தலையில் கயிறுகளால் கட்டி வலது, இடது, பின்புறங்களில் கயிறுகளைப் பிடித்தபடி, தலா பத்து பேர் வரை நின்று, அந்த மொவாயை மெல்ல மெல்ல இடம் வலமாகத் திருப்பினார் கள். என்ன ஆச்சர்யம், மொவாய் முன்னோக்கி நடந்தது. இது ஆராய்ச்சி யாளர்களின் பிரமிப்பான கண்டுபிடிப்பு. எப்படி ரப்ப நூயிகள் நடக்க வைத்தார்களென்று கண்டுபிடிப்பதற்கு, கணினி வடிவமைப்புகளை உருவாக்கி, இறுதியில் வெற்றியும் கண்டார்கள். ஆனால், கணினியோ, கணிதமோ எதுவுமில்லாத ரப்ப நூயி மக்களுக்கு, சிலைகளை இப்படித்தான் நகர்த்த வேண்டுமென்று யார் சொல்லிக் கொடுத்தார்கள்... இவர்கள் செய்து பார்த்தது, வெறும் மூன்று மீட்டர் உயரமும். ஐந்து டன் எடையும்கொண்ட மொவாய். அதற்கே நவீன விற்பன்னர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டால், பத்து மீட்டர் உயரமும், 80 டன் எடையும்கொண்ட மொவாய்களை, அவர்கள் எப்படி நடக்க வைத்திருப்பார்கள்... அவற்றுக்கான கயிறுகளையும், ஏற்பாடுகளையும் எந்தவிதத்தில் தயார் செய்திருப்பார்கள்... ஐந்து டன்னுக்கு 30 பேர் தேவையெனில், 80 டன்னுக்கு எத்தனை பேர் தேவைப்பட்டிருப்பார்கள்? எதுவுமே தெளிவாகவில்லை.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 25 - கர்ப்பிணியின் கல் தெரியுமா?

ஆனால், சிலைகளை நகர்த்துவதற்கு மரங்களை அழித்ததால், அந்தத் தீவின் பசுமைச் சமநிலை குலைந்துபோய், அங்குள்ள மனிதர்கள் ஒருவர் மிச்சமில்லாமல் அழிந்து போனார்களென்று ஐரோப்பியக் கடலோடிகளின் குறிப்புகள் சொல்கின்றன. தங்கள் தவற்றால், தாங்களே அழிந்துபோனார்களென்று குறிப்பிட்டார்கள். ஆனால், இந்த மர்மம் மட்டும் பின்னர் உலகுக்கு வெட்ட வெளிச்சமானது. ரப்ப நூயி மக்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தவர்களென்று சொன்னேனல்லவா? அவர்களால் இயற்கையை அழிக்க முடியாது. அதனால், அந்த இனம் அழிந்துபோகவுமில்லை. ரோகவேன் வந்த பிறகு, அங்கு வந்த ஸ்பெயின், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த ஐரோப்பியர்கள் அங்கு வந்து, அந்த மக்களில் ஆயிரக்கணக்கானவர்களை அடிமைகளாகக் கடத்திச் சென்றதாலும், அவர்கள் வந்ததால், தீவு மக்களுக்குப் பரிச்சயமில்லாத அம்மை நோய் பரவியதாலும் அந்த இனமே அத்தீவிலிருந்து மொத்தமாக அழிந்துபோனது. கடந்த தசாப்தங்களில் இந்த உண்மைகளெல்லாம் வெளி வந்து, அடிமைகளாகச் சென்ற அந்த மக்களின் பரம்பரையினர் மீட்கப்பட்டு, மீண்டும் ஈஸ்டர் தீவில் குடியமர்த்தப் பட்டிருக்கிறார்கள்.

இப்போது ஈஸ்டர் தீவு, சிலி நாட்டுக்குச் சொந்தமாகவும், சுற்றுலாப் பயணிகளின் இருப்பிடமாகவும் மாறிப்போயிருக்கிறது. அங்கு சின்னதாக ஒரு விமான நிலையமும் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

(தேடுவோம்)