மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 26 - தட்டை பூமியிலா வாழ்கிறோம்?

பூமி
பிரீமியம் ஸ்டோரி
News
பூமி

அறிவியல், அசுர வேகத்தில் வளர்ந்த இன்றைய நிலையில், பூமியின் வடிவம் கோளம் என்பதைப் பல வகைகளில் நிறுவியிருக்கிறது

“ஒரு பொய்யைச் சொல்லி, மக்களை நம்பவைப்பது மிகவும் சுலபம். ஆனால், நம்பவைத்ததை இல்லாமல் அழிப்பது மிகவும் கடினம்” இதைச் சொன்னவர் மார்க் ட்வைன். நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்படும் கதைகள், மூடநம்பிக்கையை விதைப்பது உலகமெங்கும் காணக்கூடியதுதான். என்னதான் அறிவியலில் தெளிவுகள் கிடைத்தாலும், மூடநம்பிக்கைகளிலிருந்து மனிதனால் மீள முடிவதில்லை. நம்பிக்கை என்பது நெருப்பு போன்றது. அதைத் தாண்டுவதை யாரும் விரும்புவதில்லை. நாகரிகமடையும் மனிதன், நம்பிக்கைகளுடன் அறிவியல் கற்றுத்தந்த உண்மைகளையும் சேர்த்தெடுத்துக்கொண்டே பயணிக்கிறான். இயற்கையின் இருப்புக்கு மாறாக உருவாக்கப்பட்ட கதைகள், உலகின் அனைத்து இனங்களிலும் காணப்படுகின்றன. ஆதிகாலங்களில் சூரியனும் கோள்களும் பூமியைத்தான் சுற்றுகின்றன எனும் கருத்து பரவலாக நம்பப்பட்டது. அதற்கு எதிராகப் பேசியவர்கள், `கடவுளின் விரோதிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டு, மரணத்தைத் தழுவியதும் நடந்தது. கலீலியோ கலிலி, `சூரியனே மையமானது’ எனும் கருத்தைச் சொன்னபோது, ‘பூமியை ஏனைய கோள்கள் சுற்றுகின்றன’ என்று சொல்லும்படி மதபீடத்தால் வற்புறுத்தப்பட்டார். இதுபோல ‘பூமி தட்டையானது’ என்ற நம்பிக்கையும் இருந்தது. வேதப் புத்தகங்களில் பெரும்பாலானவை அதைக் குறிப்பிடுகின்றன. ஆனால், மெல்ல நாகரிகமடைந்து, அறிவியல் வளர்ச்சியின் பிறகு, பூமி கோளமானதுதானென்று புரிந்துகொண்டோம். ஆனாலும், பூமி தட்டை என்பதை அடிப்படையாக வைத்து உருவான கதைகள் நம்மிடையே இப்போதும் மிச்சமிருக்கின்றன. ஆனால், இவ்வளவு முன்னேறிய நிலையிலும், ‘பூமி தட்டையானது’ என்று ஒரு பெருங்கூட்டமே சொல்லிக் கொண்டிருக்கிறது. அவர்கள், தனிப்பட்ட எந்த மதத்தையோ, இனத்தையோ, நாட்டையோ சார்ந்தவர்களல்ல. அப்படிச் சொல்பவர்கள் அனைத்துக் கண்டங்களிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தங்களை `Flat Earthers’ என்று சொல்லிக்கொள்கிறார்கள்!

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 26 - தட்டை பூமியிலா வாழ்கிறோம்?

அறிவியல், அசுர வேகத்தில் வளர்ந்த இன்றைய நிலையில், பூமியின் வடிவம் கோளம் என்பதைப் பல வகைகளில் நிறுவியிருக்கிறது. நிலாவுக்கு விண்கலங்களை அனுப்பி, அங்கிருந்து பூமியைப் படம்கூட எடுத்திருக்கிறார்கள். வானியற்பியலில் எத்தனையோ சாதனைகளைச் செய்து விட்டார்கள். இதற்குப் பின்னரும், ‘பூமி தட்டையானது’ என்று எவராவது சொன்னால், உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்காதா... ‘அட! இவர்கள் என்ன படிக்காதவர்களா இல்லை முட்டாள்களா?’ என்றுதானே நினைப்பீர்கள். அவர்கள் நன்கு படித்தவர்கள். மிகவும் மரியாதைக்குரியவர்கள். சமூகத்தில் நல்ல நிலைகளில் இருப்பவர்கள். இப்படிச் சொல்பவர்கள் ஒரு சிலர் கிடையாது. பல மில்லியன் மக்கள். இவர்கள் ஒன்றிணைந்து, ‘தட்டை பூமி சமூகம்’ (Flat Earth Society) எனும் அமைப்பையும் உருவாக்கியிருக்கிறார்கள். எந்த அறிவியல்கொண்டு பூமி தட்டையில்லை, கோளம்தான் என்று நம்ப வைத்தோமோ, அதே அறிவியலைவைத்து, பூமி தட்டையானது என்று இவர்களும் நிறுவுகிறார்கள். இவர்களின் விந்தையான சிந்தனை பற்றியே இந்த முறை பார்க்கப்போகிறோம். இவ்வளவு பிடிவாதமாக, கோளமான பூமியை இவர்கள் மறுப்பதன் பின்னணியில், என்ன காரணம் ஒளிந்திருக்கும் என்பதைப் பார்க்கலாம் வாருங்கள்.

“ராஜ்சிவா ரொம்ப நல்லவர்டா...”

“யார் சொன்னா?”

“அவரே சொன்னார்டா.”

இது போன்ற மொக்கை ஜோக்குகளை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால், இதுதான் தட்டை பூமியாளர்களுக்கு அடிப்படையானது.

“சந்திரனிலிருந்து பூமிக்கோளை, நாசா படம் பிடித்திருக்கிறது.”

“யார் சொன்னா?”

“அந்த நாசாவே சொல்லிச்சு.” - இப்படிச் சொல்லி அவர்கள் சிரிக்கிறார்கள். சந்திரனுக்குப் போய் வந்ததாக நாசா தரும் படங்களை எப்படி நம்புவது என்று கேட்டு, தட்டை பூமியாளர்கள், நாசாவையே குற்றம்சாட்டுகிறார்கள். ‘பூமி கோளமானது என்று மனிதர்களை நம்பவைப்பதே இந்த நாசாதான்’ எனக் கொதிக்கிறார்கள். ‘போட்டோக்களைக் காட்டி நம்மையெல்லாம் நன்றாக ஏமாற்றிக்கொண்டிருக்கிறது நாசா’ என்றும் சொல்கிறார்கள். ‘நிலாவுக்கு மனிதன் சென்றது உண்மையில்லை’ என்ற சந்தேகப் பேச்சு பரவலாகவே இருக்கிறது. அந்த விஷயத்தை அமெரிக்க மக்களில் கணிசமானவர்களே நம்பவில்லை. நம்பாதவர்களை ‘கான்ஸ்பிரசி தியரிஸ்ட்’ என்று நாசா முத்திரை குத்தும். ஆனால், இந்தத் தட்டை பூமியாளர்களோ, ‘பொய்யான வீடியோக்களையும் போட்டோக்களையும் உருவாக்கி, மக்களிடையே பொய்களைப் பரப்பும் நிஜ கான்ஸ்பிரஸி தியரிஸ்ட்டுகள் நாசாவினர்தான்’ என்கிறார்கள். இவ்வளவு திடமாக இவர்கள் தட்டை பூமியை நம்புவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 26 - தட்டை பூமியிலா வாழ்கிறோம்?

1800-களில் சாமுவேல் ரோபொதாம் (Samuel Rowbotham) என்பவரின் கருத்தின் அடிப்படையில், சாமுவேல் ஷென்டன் (Samuel Shenton) என்பவரால் உருவாக்கப்பட்டதுதான் Flat Earth Society. பூமி, கோளமாக இருப்பதால், 5 கிலோமீட்டர்களுக்கு அப்பால், அதன் மேற்பரப்பு வளைந்து காணாமல்போய்விடும். கடற்கரையில் நின்று பார்க்கும்போது, கடல் எல்லை, ஒரு குறிப்பிட்ட தூரத்தில் முடிவடைந்து, வானத்தைத் தொடுவதுபோலக் காட்சிதரும். அந்த தூரம், கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர்களாக இருக்கும். அதுதான் பூமியின் வளைவு எல்லை. ஆனால், இது எதையும் தட்டை பூமியாளர்கள் ஏற்பதில்லை. இந்த அமைப்பை உருவாக்கியவர் ஒரு பரிசோதனையைச் செய்து பார்த்தார். நீளமான ஆறு ஒன்றில், படகில் அமர்ந்துகொண்டு, தனது நண்பனை இன்னொரு படகில், ஆற்றின் நெடுந்தூரம் செல்லவிட்டுத் தொலைநோக்கி ஒன்றினால் பார்த்தார். நண்பன் இருந்ததோ 5 கிலோமீட்டருக்கும் அப்பால். ஆனால், அந்த நண்பரின் படகு அவரின் கண்களுக்குத் தெரிந்தது. சாதாரணமாக, பூமி 5 கிலோமீட்டர்களுக்கு அப்பால் வளைந்து, நண்பரின் படகு மறைந்திருக்க வேண்டும். ஆனால் மறையவில்லை. அப்படியென்றால், பூமி வளைகிறது என்று இவர்கள் சொல்வது பச்சைப் பொய் எனும் முடிவுக்கு வந்தார். இதை அவர் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டதிலிருந்து ஆரம்பித்ததுதான் இந்தக் கொடுமைகள் எல்லாமே. இந்தக் கேள்வியையும் அவர்கள் கேட்கிறார்கள், ‘கடற்கரையிலிருந்து பார்க்கும்போது கடல் எல்லை முடிவடைவது உண்மைதான். ஆனால் இடம், வலமாக இரண்டு பக்கமும் பல கிலோமீட்டர்கள் பரந்திருக்கும் கடல்வெளி ஏன் வளையவில்லை... அதன் தட்டை மேற்பரப்பைக் கண்களால் நெடுந்தூரம் பார்க்க முடிகிறதே?’ என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு பதிலாக, யார் எந்த பதிலைச் சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. `கீழிருந்து பார்க்கும்போது அல்லது விமானத்தில் முகில்களுக்கு மேல் பறக்கும்போது பார்த்தாலோ, முகில்கள் தட்டையான வெளியில்தானே அடுக்கப்பட்டிருக்கின்றன... அவை ஏன் வளைவாகக் காணப்படுவதில்லை?’ என்று அடுத்த கேள்வியையும் கேட்கிறார்கள். விமானங்கள் பறக்கும்போது, பூமி வளைவதால், சில கிலோமீட்டர் தூரத்துக்குப் பின் அவை பூமி நோக்கி வளைய வேண்டும்தானே. விமானத்தின் வேகத்துக்கு, அது பூமியின் வளைவைச் சீக்கிரம் தொட்டுவிடும். அதனால், எப்போதும் பூமியை நோக்கிப் பார்த்தபடிதானே விமானம் பறந்துகொண்டிருக்க வேண்டும்... ஆனால், விமானங்கள் எப்போதும் நேராகவே பயணம் செய்கின்றனவே... அது எப்படி என்கிறார்கள். அதோடு விட்டுவைக்கவில்லை. விமானம் கீழ்நோக்கித் திரும்புவதில்லை என்பதை, நீர்மட்டம்கொண்ட அளவுகோலை, விமானத்தின் பயணம் முழுவதும் ஜன்னல் ஓரத்தில்வைத்துப் பரிசோதனை செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த நீர்மட்டம் எப்போதும் சாயாமல் கிடையாகவே இருந்ததால், விமானம் வளைந்தபடி பிரயாணம் செய்யவில்லை என்கிறார்கள்.

இவர்கள் குறிப்பிடும் தட்டையான பூமி எப்படியிருக்கும்... அதில் சூரியனும் சந்திரனும் எப்படி நகர்கின்றன என்று நான் இங்கு சொன்னால், என்னை அடிக்க வந்தாலும் வந்துவிடுவீர்கள். என் கட்டுரைகளை இனி படிக்கப்போவதில்லை எனும் அளவுக்கு என் மேல் கோபப்படுவீர்கள். தட்டை பூமியாளர்களைப் பொறுத்தவரை, வட்ட வடிவமான டிஸ்க் போன்ற தட்டின் அமைப்பில் பூமி இருக்கிறது. அதன் மையத்தில் வட துருவமும், அதற்குக் கீழே வட்டமாக அனைத்து நாடுகளும் பரவி இருக்கின்றன. வட்டத் தட்டின் விளிம்பு எல்லையெங்கும் தென்துருவத்தின் ஐஸ் மலைகள் உயர்ந்து பாதுகாப்பாகக் காணப்படுகின்றன. அதனாலேயே, கடல்நீர் வெளியே வழியாமல், தட்டினுள்ளேயே இருக்கிறது. சூரியனும் சந்திரனும் லட்சக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இல்லை. சில ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கின்றன. அவை பூமிக்கு மேலே நின்று, டார்ச் வெளிச்சம் அடிப்பதுபோல வட்டமாகச் சுற்றிக்கொண்டு ஒளியைத் தருகின்றன. நட்சத்திரங்கள், சூரியனுக்கு மேலே இன்னும் 1,000 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கின்றன என்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், சூரியக் கதிர்கள் அவ்வப்போது முகில்களினூடாக வரும்போது, பல கோணங்களில் பிரிந்து பூமியை வந்தடைவதை நாம் அவதானிக்கலாம். சூரியன் பல லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்தால், அதன் ஒளிக்கதிர் சமாந்தரமாகத்தான் வரும், இப்படிக் கோணங்களாகப் பிரியாது. அதனால், சூரியன் 1,000 கிலோமீட்டர்கள் மேலேதான் இருக்கிறது என்கிறார்கள். அவர்கள் சொல்லும் இன்னுமொரு விஷயம் ரொம்பவே விபரீதமானது. புவியீர்ப்பு என்பதே இல்லை. பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரு வளைவான கூண்டு போன்ற அமைப்பில் அடங்கியிருக்கின்றன. அவை ஒன்றாக 9.8 மீ/செ/செ எனும் வேக முடுக்கத்தில் மேல்நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனவாம். அதனால்தான், மேலேயுள்ள பொருள்கள் நிலத்தை நோக்கி விழுகின்றன என்றும் சொல்கிறார்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 26 - தட்டை பூமியிலா வாழ்கிறோம்?

“உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...” என்றுதானே மனதுக்குள் நினைக்கிறீர்கள். ஒவ்வொரு விஞ்ஞானியும் அப்படித்தான் நினைக்கிறார். அவர்களுக்குப் பலவிதங்களில் எடுத்தும் சொல்லியாயிற்று. யாரும் ஏற்கத் தயாராகயில்லை. அவர்கள் எண்ணிக்கையில் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தின் அங்கத்தவர்கள் இரண்டு லட்சத்துக்கும் அதிகம். யூடியூப், இன்ஸ்டாகிராம் என்று கலங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அப்படியொன்றும் தீமையானவர்களோ, நாட்டுக்குப் பாதகமானவர்களோ கிடையாது. சொல்லப்போனால், நட்புடன் பழகும் நபர்களே. அதனால், யாரும் இவர்களை வெறுப்பதில்லை. சரியோ, தப்போ அறிவியலையே தங்கள் வாதத்துக்கான ஆதாரமாக இவர்களும் எடுத்துவைப்பதால், அதை ரசிக்கவும் செய்கிறார்கள்.

இவர்களின் நம்பிக்கையால் ஒரு சோகமும் நடந்தது. அதுதான் இதை நான் எழுதுவதற்கும் முக்கியக் காரணம். பூமி தட்டையானதுதான் என்பதை நிரூபிக்க 2018-ம் ஆண்டு, சொந்தமாகச் சிறிய ரக ராக்கெட் ஒன்றைத் தயாரித்த, ‘மைக் ஹியூக்ஸ்’ (Mike Hughes) என்பவர், அதில் அமர்ந்தபடி மேலே பறந்தார். கிட்டத்தட்ட 570 மீட்டர்கள் மேலே போய் பாரசூட் மூலம் கீழே குதித்தார். ஆனால், உயரம் கம்மியாக இருந்ததால், நிலத்துடன் மோதியபடியே தரையைத் தொட்டார். நல்லவேளையாக உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை. அவர் மறுபடியும் 2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் மீண்டும் ராக்கெட்டில் பறந்து சென்றார். எல்லாமே அவரது சொந்த முயற்சிதான். ஆனால், ராக்கெட் தரையில் மோதி வெடித்ததால், மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 64. பூமி தட்டையானதா, கோளமானதா என்பதை அவர் அறிந்தாரா இல்லையா? தெரியாது!

தட்டை பூமியாளர்களின் அமைப்பின் அங்கத்தவர்கள் தவிர்த்து, மதத்தின் அடிப்படையில், பூமியின் ஜனத்தொகையில் 33 சதவிகிதமானவர்கள் பூமி தட்டையானதென்றே நம்புகிறார்கள்... நீங்கள்?

(தேடுவோம்)