
ஏலியன்கள் இருப்பதாகச் சொல்லும்போது, தங்களை அறிவாளிகளாக நினைத்துக் கொள்பவர்கள் தமக்குள் சிரிப்பார்கள்.
நான் ஓர் அறிவியல் எழுத்தாளன். முன்னரும் இதைச் சொல்லியிருக்கிறேன். அறிவியலை, மிகவும் பொறுப்புணர்வுடன் எழுத வேண்டும். நம்பிப் படிக்கும் நம் தமிழ் இளைஞனுக்குச் சரியான அறிவியலைக் கொண்டுசேர்க்க வேண்டும். நான் வானியற்பியலையும், குவான்டம் இயற்பியலையுமே அதிகம் எழுதுவேன். இயற்பியலில் கோட்பாடுகள் உண்டு. கணிதத்தின் மூலம், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டு, கோட்பாடுகள் என வெளியிடப்படுகின்றன. பின்னாள்களில், அவை உண்மையென நிரூபிக்கப்படலாம். படாமலும் போகலாம். உதாரணமாக, ‘ஹிக்ஸ் போசான்’ (Higgs Boson) எனும் துகள்கள் இருக்கலாம் என, ‘பீட்டர் ஹிக்ஸ்’ (Peter Higgs) என்பவர் 1960-ம் ஆண்டில் கணித்திருந்தார். ‘இந்தத் துகள்களே, பேரண்டத்திலிருக்கும் அடிப்படைத் துகள்கள் அனைத்தின் எடைக்கும் காரணம்’ என்றார். ஆனால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு அப்படியான துகள் கண்டுபிடிக்கப்பட வில்லை. கணித மேதையான, ‘ஸ்டீபன் ஹாக்கிங்’, அப்படியான துகள் இருப்பதாக நம்பவில்லை. ‘ஹிக்ஸ் போசானைக் கண்டுபிடிக்கவே முடியாது’ என்று, சக இயற்பியலாளரான ‘கோர்டன் கேன்’ (Gordon Kane) என்பவருடன், நூறு டாலருக்குப் பந்தயமும் கட்டியிருந்தார். ஆனால் 2012-ம் ஆண்டு, ஹிக்ஸ் போசான் கண்டுபிடிக்கப்பட்டது. கோட்பாடாகச் சொல்லப்பட்டது, நிஜமென நிரூபிக்கப்பட்டது. ‘நூறு டாலரை நான் தோற்றுவிட்டேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் ஹாக்கிங். ஐன்ஸ்டைனின் பல கோட்பாடுகளும் இது போலவே பின்னாள்களில் நிரூபிக்கப்பட்டன. விண்வெளியில் (Space) ‘ஈர்ப்பலைகள்’ (Gravitational Waves) உருவாகும் என்று அவர் கோட்பாடாகச் சொன்னது, நூறு ஆண்டுகளின் பின்னர் உண்மையென்று நிரூபிக்கப்பட்டது. நவீன இயற்பியலின் பல கோட்பாடுகள் இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. அறிவியல் கோட்பாடுகளுக்கும் மர்மங்களுக்கும் (Mysteries) வித்தியாசம் இருக்கிறது. மர்மங்களை உண்மையென்று சேர்க்கவோ, பொய்யென்று ஒதுக்கவோ முடியாது. இரண்டுக்கும் இடையே, தனக்கானதொரு நிஜத்தை மறைத்துவைத்திருக்கும். அது வெளிவரும்வரை, மர்மமாகவே தொடரும். மர்மங்களை, மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே அறிவியல் அணுகும். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுபவைதான். அப்படியென்றால், அறிவியலுடன் ஒத்துப்போகாத மர்மங்களை நான் எந்த வகையில் எழுத ஆரம்பித்தேன்? அதற்கொரு காரணமிருந்தது. அதுவே மர்மங்களை எழுதுவதற்கான ஆரம்பப்புள்ளியுமானது. அந்தக் காரணத்தை மையமாக்கியே, இந்தக் கட்டுரையும் இருக்கப்போகிறது. அந்தக் காரணம், ஏலியன்கள்!

ஏலியன்கள் இருப்பதாகச் சொல்லும்போது, தங்களை அறிவாளிகளாக நினைத்துக் கொள்பவர்கள் தமக்குள் சிரிப்பார்கள். பேய்கள், பிசாசுகள் இருக்கின்றன போன்ற மூடநம்பிக்கைகளாக, ஏலியன்களையும் நினைத்துச் சிரிப்பார்கள். ஆனால், அறிவியலின் முக்கிய இடத்தில் ஏலியன் ஆராய்ச்சிகள் இருக்கின்றன. உலகின் அதிசிறந்த விஞ்ஞானிகள், ஏலியன்களின் இருப்பை மறுத்ததில்லை. ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட்ட அனைத்து இயற்பியலாளர்களும் ஏலியன்கள் இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். கோடிக்கணக்கான டாலரைக் கொட்டி, பிற கோள்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை ஆராய்ந்துவருகிறார்கள். இதற்கென்றே சாட்டிலைட் தொலைநோக்கிகளும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அதனால், ஏலியன்கள் இருக்கின்றன என்பதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது. ஆனால், பிரச்னை அங்கில்லை. ‘ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கின்றனவா?’ என்ற கேள்விதான் பிரச்னையே. சரியாக கவனியுங்கள்... பூமியைத் தாண்டி வேற்றுக் கோள்களில் ஏலியன்கள் இருக்கின்றன என்பது வேறு; அவை பூமிக்கு வந்திருக்கின்றன என்று சொல்வது வேறு. இரண்டும் வெவ்வேறான மாறுபட்ட விஷயங்கள். பிரபல இயற்பியலாளரான, ‘நீல் டெகிராஸ் டைசன்’ (Neil deGrasse Tyson) பறக்கும்தட்டுகளை பலமாக மறுப்பவர். ஆனால், ஏலியன்களின் இருப்பை மறுப்பதில்லை. ஏலியன்கள் இருக்கின்றனவா என்பதையும், ஏலியன்கள் பூமிக்கு வந்தனவா என்பதையும் தனித்தனியாக நாம் பார்க்க வேண்டும். இந்த இடத்தில் இன்னுமொன்றையும் பாருங்கள். பூமிக்கு, ஏலியன்கள் வருகை தருவதைப் பறக்கும்தட்டுகளை வைத்தே புரிந்துகொள்ள முடியும். அதனால், ஏலியன்கள் பூமிக்கு வருவதைப் பறக்கும்தட்டுச் சம்பவமாகவே எடுத்துக்கொள்கிறார்கள். இப்போது, பறக்கும்தட்டுகள் பூமிக்கு வந்தனவா என்பதை முதலில் பார்க்கலாம். இதில் என்னதான் ஒளிந்திருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். ஏலியன் இருப்பதாகச் சொல்வது அறிவியல். மறுக்க முடியாத அறிவியல் உண்மை. அது பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம். ஆனால், பறக்கும்தட்டு அறிவியல் கிடையாது. அது மர்மம். உண்மையா, பொய்யாவென்று சொல்ல முடியாத மிஸ்டரி. ஒரு சாராரால் உண்மையில்லை யென மறுக்கப்பட, இன்னொரு சாராரால், உண்மையான நிகழ்வுகளேதானென்று அடித்துச் சொல்லப்படுவது. இந்த இருவருக்குமிடையில், மர்மத்தின் உண்மை தூங்கிக்கொண்டிருக்கும். அப்படியான மர்மங்களைத்தான் நாம் பார்க்கப்போகிறோம். தமிழில் இதுவரை வெளிவராத சம்பவங்கள் அவை. அவற்றைச் சொல்வதோடு, அவற்றுக்கான விளக்கங்களையும் தருகிறேன். அவை உண்மையா, இல்லையாவென முடிவெடுக்க வேண்டியது நீங்கள்தான். இந்தத் தொடரில் நான் சொன்னவை எல்லாமே அப்படியானவையே! என்னுடைய அபிப்பிராயத்தையோ, முடிவையோ உங்களிடம் நான் செலுத்தவில்லை. இப்படியாகச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன எனச் சுட்டிக்காட்டுவது மட்டுமே என் வேலை. முடிவு உங்களுடையதே! இனிச் சம்பவத்துக்குள் போகலாம் வாருங்கள்.

ஸ்கை, அம்மார் இருவரும் நண்பர்கள். யூடியூப் சானல் ஒன்றை, சக நண்பர்களுடன் சேர்ந்து நடத்திவருபவர்கள். அம்மாரை அழைத்து, நெட்ஃபிளிக்ஸில் இருக்கும் மிஸ்டரித் தொடரைப் பார்க்கும்படி அம்மாருக்குச் சொன்னாள் ஸ்கை. கோவிட் காலமாதலால் வெளியே போகாத நிலையில், நெட்ஃபிளிக்ஸில் அந்தத் தொடரைப் பார்த்தான். மாசாசூசெட்ஸில், 1969-ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்வாக இருந்தது. அதைப் பார்த்ததும், ‘இதையேன் மீண்டும் ஆராயக் கூடாது?’ என்று அம்மாருக்குத் தோன்றியது. தங்கள் சானல் சார்பாக இதைவைத்து டாக்கு மென்டரி எடுக்கலாமென முடிவெடுத்தார்கள். அதன்படி, தாமஸ், அம்மார், ஸ்கை, எரிக் (Thomas Dajer, Ammar Kandil, Sky Cowans, Eric Tabach) ஆகிய நால்வரும், மாசாசூசெட்ஸில் இருக்கும் பெர்க்ஷயருக்குப் (Berkshire) புறப்பட்டுச் சென்றார்கள். புறப்பட்டுச் சென்றது 2020-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில். கொரோனாவின் உச்ச காலம். அவர்கள் பதிவுசெய்த சம்பவங் களின் கோர்வையையே நீங்கள் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்.
அந்தச் சம்பவம் நடந்ததோ, 1969-ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி, பெர்க்ஷயர் கவுன்ட்டியில் இருக்கும் சிறிய ஊரான பாரிங்டனில் (Barington). அந்த ஊரில், ஒருவருக்கொருவர் சம்பந்தமே இல்லாத பலருக்கு நடந்த சம்பவங்களின் உயிருள்ள சாட்சிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் சாட்சியத்தைக் கேளுங்கள். நடந்த உண்மைகளைச் சொன்னபோது, அன்றே அவர்கள் அனைவரையும் பார்த்து உலகம் முழுவதும் சிரித்தது. உண்மையைச் சொல்லப்போனால், நான்கூட இந்தச் சம்பவங்களை இளைஞனாக இருக்கும்போது கேள்விப்பட்டிருக்கிறேன். நக்கலாகவும் சிரித்திருக்கிறேன். அப்போது, இந்த அளவுக்கு யாருக்குமே உண்மை சொல்லப்பட வில்லை. உண்மைகளை எந்த மீடியாக்களும் சரிவர வெளியே கொண்டுவரவுமில்லை. அரசுகளும் அப்படியான செய்திகள் பரவுவதை விரும்புவதில்லை. ஆனால், அவ்வூர் மக்கள் மட்டும் அவர்களை முழுமையாக நம்பினார்கள். ஒருவகையில் அந்தச் சம்பவங்களுடன் தொடர்புள்ளவர்களாகவும் இருந்தார்கள். சம்பவங்களில் சம்பந்தப்பட்ட பத்து பேரை, அம்மார் குழுவினர் பேட்டி எடுத்தனர். அவர்கள் கூறிய உண்மைகள் அதிர்ச்சியின் உச்ச ரகம். சம்பவத்தில் சிக்கியவர்களில் பலர் இறந்துபோனார்கள். எஞ்சிய சிலர், இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 63 வயதுக்கு மேலான முதியவர் களாக மாறியிருக்கிறார்கள். இன்றும், அந்தச் சம்பவத்தைச் சொல்லும்போது, அவர்களின் உடல் நடுங்குவதை அவதானிக்க முடிகிறது. செப்டம்பர் முதல் தேதி இரவு, அந்த ஊரில் பறக்கும் தட்டொன்று காட்சியளித் திருக்கிறது. அவ்வூரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அதைக் கண்டிருந்திருக்கிறார்கள். கண்டதுடன் இல்லாமல், வேறு சில விபரீதங்களும் நடந்திரு க்கின்றன. நடந்தவற்றை ஒவ்வொருவரும் நடுக்கத்து டனேயே சொல்கிறார்கள்.

கண்கள் குருடாகும் அளவுக்கு ஒளி வெள்ளத்தில் நிறைந்திருந்திருக்கிறது பறக்கும்தட்டு. அதன் ஒளிபட்டவர்களுக்கு என்ன நடைபெறுகிறதென்றே தெரியவில்லை. மேல்நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, சிறுவர்கள் பறக்கும்தட்டைச் சென்றடைந் திருக்கிறார்கள். பின்னர் அனைவரும் நிலத்தில் விடப்பட்டிருக்கிறார்கள். மேலே சென்றதோ, திரும்பி வந்ததோ எதுவும் தெளிவான ஞாபகத்தில் இல்லாததுபோல நினைவுகள் குழம்பியிருந்தன. நடப்பது நிஜமா, கனவா என்று இன்றுவரை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், பறக்கும்தட்டில் அவர்கள் பார்த்தவை சில ஞாபகத்தில் இருக்கின்றன. உடலில் தாங்க முடியாத வலியிருந்தது. குறிப்பாக வயிற்றில் பெரும்வலி. இதைப் படிக்கும்போது, நிச்சயம் சிரிப்பீர்கள். ‘இதையெல்லாம் யாராவது நம்புவார்களா?’ என்றும் நினைப்பீர்கள். சரியாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களைப் போலத்தான் இதைத் தெரிந்தவர்கள் அனைவருமே. யாருக்கும் இப்படியான நாடகக் கதைகளை நம்பி ஏமாந்துபோக விருப்பமில்லைதான். ஆனால், தெளிவாகத் தெரிந்த பின்னர்தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அந்தச் சம்பவத்தில் அகப்பட்டச் சாட்சி சொல்பவர்கள், ஒருவருக்கொருவர் சொந்தமோ, தெரிந்தவரோ கிடையாது. அவர்களுக்கிடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை. என்றோ நடந்த சம்பவத்தை, இன்றுவரை ஞாபகத்தில் வைத்து, அப்படியே சொல்வது சாத்தியம்தானா? எழுபது வயதுடையவர், “இந்த வயதில் நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்... பிள்ளைகள், மனைவி, பேரப்பிள்ளைகளிடமுமா பொய் சொல்வேன்? சரி, இது பொய்யாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நாளைக்கே சாகப்போகும் எனக்கு அப்படியொரு பொய் சொல்ல மனசாட்சி இடம் கொடுக்குமா என்ன?” என்று கேட்கிறார். எப்படி அனைவரும் ஒரே பொய்யைச் சொல்ல முடியும்... 51 ஆண்டுகள் கழிந்த பின்னருமா ஒரே மாதிரிப் பொய்யைச் சொல்கிறார்கள்? இல்லை, அவர்களின் கண்களில் பொய் இல்லை. அவர்கள் சொல்வதை யாராலும் மறுதலிக்கவும் முடியாது. ஏதோவொன்று நடந்திருக்கிறது. அது என்னவென்றுதான் தெரிய வேண்டும். அங்கு நடந்தவற்றை முழுமையாகச் சொல்கிறேன். ஒவ்வொருவரின் சாட்சியத்தையும் தனித்தனியாகப் பார்க்கலாம். அதன் பின்னர், நீங்களும் தேடிப் பாருங்கள். உண்மை எது, பொய் எதுவெனத் தீர்மானியுங்கள்.
பெர்க்ஷயரில் நடந்த அந்த பயங்கரச் சம்பவத்தை அடுத்த இதழில் சொல்கிறேன். இனி உங்களால் நிம்மதியாகத் தூங்க முடியாது. நம்புங்கள்!
(தேடுவோம்)