மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 28 - எதைச் சொல்ல மறுத்தார் ஒபாமா?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

அவர்கள் சொல்வது உண்மையா, பொய்யா என்று சொந்தமாக முடிவெடுங்கள். அங்கே ஏதோ ஒளித்திருக்கிறது என்று சொல்வது மட்டுமே என் பொறுப்பு.

1980-களில் என்று நினைக்கிறேன். அப்போது நான் மகா இளைஞன். பத்திரிகைகளில், ‘ஏலியன்கள் ஒரு பெண்ணைப் பறக்கும்தட்டுக்குக் கொண்டு சென்று பரிசோதித்து, பின்னர் விட்டுவிட்டார்கள். அந்தப் பெண்ணின் வயிற்றில் ஊசி குத்திய அடையாளங்கள் காணப்பட்டன’ எனும் செய்தியைப் படித்திருந்தேன். அன்று மாலை, நண்பர்களுடன் சேர்ந்து அது பற்றிப் பேசி விழுந்து விழுந்து சிரித்தோம். “உலகில் எத்தனைவிதமான மனநோயாளிகள் இருக்கிறார்கள்... மனநோயுள்ளவர்களால் ஊசி குத்தியதுபோல அடையாளங்களையும் உருவாக்க முடியுமாம். அப்படியான அடையாளத்தை, ஏலியன் குத்திவிட்டதாக நினைக்கிறார்கள்” என்று மனோவியல் படித்த டாக்டர்கள்போலக் கேலி பேசிச் சிரித்திருக்கிறேன். ஆனால், அன்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை, அதே பெர்க்‌ஷயர் சம்பவத்தை இன்று ஜூ.வி-யில் எழுதுவேன் என்று. அச்சம்பவம் யாருக்கு, எப்படி, எங்கே நடந்தது என்ற எந்த விவரமும் தெரியாமல், அறிவுஜீவிகள் போல அவற்றையெல்லாம் மறுத்தேன். செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளே அதன் அவநம்பிக்கைப் பக்கங்களையும் சொல்லிவிடுகின்றன. எந்த அடிப்படை விவரமும் தெரியாமல், ஆராயப்பட வேண்டிய இன்னுமொரு பக்கமும் அங்கே இருக்கிறது என்று புரியாமல், பொறுப்பற்று நடந்திருக்கிறேன் என்று இப்போது என்னால் அவதானிக்க முடிகிறது. இப்படி எழுதுவதால், அந்தச் சம்பவம் நடந்துதான் இருக்கிறதென்று நான் சொல்வதாக அர்த்தமில்லை. இன்று அதைப் புரிந்துகொள்வதற்கான மறுபக்கம் திறக்கப்பட்டிருக்கிறது. திறந்து வைத்ததில், நெட்ஃபிளிக்ஸ் பெரும் பங்கெடுத்திருக்கிறது. நான் எழுதுவதைப் படித்துவிட்டு, அவர்கள் சார்ந்த அனைத்துக் காணொலிகளையும் நீங்களும் பாருங்கள். அவர்கள் சொல்வது உண்மையா, பொய்யா என்று சொந்தமாக முடிவெடுங்கள். அங்கே ஏதோ ஒளித்திருக்கிறது என்று சொல்வது மட்டுமே என் பொறுப்பு.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 28 - எதைச் சொல்ல மறுத்தார் ஒபாமா?

மிகப்பெரிய நகரான நியூயார்க் சிட்டியிலிருந்து, மாசாசூசெட்ஸ் கவுன்ட்டியின் ‘செஃபீல்டு’ (Sheffield) எனும் சிறிய ஊருக்குத் ‘தாமஸ் ரீட்’ (Thomas Reed) குடும்பத்தினர் குடியேறினர். அப்போது, தாமஸுக்கு வயது ஆறு. அவருடன், அவர் தம்பி மாத்யூ ரீட், அம்மா நான்சி ரீட், பாட்டி என மொத்தம் நான்கு பேர் குடும்பத்தில் இருந்தார்கள். ஒரு சிறிய உணவகத்தை உருவாக்கி, குடும்பத்துக்கான வரவுசெலவுகளை நான்சி கவனித்துவந்தார். பிரபலமான பெர்க்‌ஷயர் பறக்கும்தட்டுச் சம்பவம் நடந்தபோது, தாமஸின் வயது ஒன்பது. 1969-ம் ஆண்டு, செப்டெம்பர் 1-ம் தேதி இரவு, உணவகத்தை மூடிவிட்டு, நால்வரும் வீடு நோக்கிப் புறப்பட ஆயத்தமானார்கள். பின்னிருக்கையில் தாமஸ், மாத்யூ, முன்னிருக்கையில் பாட்டி, சாரதியாக நான்சி. வீட்டுக்குச் செல்லும் வழியில், ஆறு ஒன்றைக் கடக்கும் பாலம் இருந்தது. அந்தப் பாலத்தில் கார் செல்லும்போதுதான், ஆற்றுப் பக்கமிருந்து நகர்ந்துவரும் ஒளியை அவர்கள் கண்டார்கள். அங்குமிங்கும் அசைந்த ஒளி, மெல்ல மெல்லப் பிரகாசமாக மாறத் தொடங்கியது. கோளம்போல் தோன்றிய வெளிச்சம், ஒரு கட்டத்தில் அருகில் என்ன நடக்கிறதென்று அவதானிக்கவே முடியாத அளவுக்குப் பிரகாசமானது. மேலும், காரைச் செலுத்த முடியாத நான்சி, பாலம் தாண்டி காரை நிறுத்தினார். ஆனாலும், இன்ஜினை நிறுத்தவில்லை. வெளியே எந்தச் சத்தமும் கேட்கவில்லை. அப்படியோர் அமைதி. சிறிய பூச்சிகளின் சத்தம்கூடக் கேட்கவில்லை. அது காடு போன்ற பகுதியாதலால், எப்போதும் இரவுப் பூச்சிகளின் ரீங்காரம் கேட்டுக்கொண்டேயிருக்கும். வெப்பமான காலம் வேறு, எதுவும் கேட்கவில்லை. அந்த ஒளி அவர்களை நோக்கி மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது.

இந்தச் சம்பவத்தில் பங்குகொண்ட நால்வரில், பாட்டியைத் தவிர்த்து, ஏனைய மூவர் இப்போதும் உயிரோடுதான் இருக்கிறார்கள். ஒளி வந்த திசையில், கண்களைச் சுருக்கியபடி பார்த்தான் தாமஸ். ஆமையோடொன்றின் வடிவத்தில், மிகப்பிரமாண்டமான பறக்கும்தட்டு அங்கே மிதந்து கொண்டிருந்தது. அதிலிருந்தே வெளிச்சக் கோளமும் வந்தது. வெளிச்சத்தின் கூர்மை தாங்க முடியாமல், கண்களை இறுக மூடிக்கொண்டான். என்ன நடக்கிறதென்றே தெரியாமல், அவன் உடல் அசைய ஆரம்பித்தது. எதுவும் புரியவில்லை. கண்களைத் திறந்து பார்த்தால், ஏதோவோர் அறையில் நின்றோ, உட்கார்ந்தோ இருந்தான். கிட்டத்தட்ட அரை மயக்க நிலையில், அங்கிருப்ப வற்றைப் பார்வையிட்டான். தம்பி மாத்யூவும், வேறு சில சிறுவர்களும் அங்கே காணப்பட்டார்கள். எங்கோ பார்த்தது போன்ற சிறுமியும் இருந்தாள். உடம்பெல்லாம் வலியெடுத்தது. கைகளை நோக்கி இயந்திரமொன்று நகர்ந்துவந்தது. அவனது வலது கையின் தோலில் பட்டது. வலியால் அலறினான், அவ்வளவுதான். விழித்துப் பார்க்கையில் காரில் அமர்ந்திருந்தான். நால்வருக்கும் ஒரே மாதியான சம்பவம் நடந்தது. நால்வரும் மீண்டும் காரில் இருந்தார்கள். ‘எதுவும் நடக்கவில்லையோ, ஏதோ நடந்ததுபோலக் கனவு கண்டோமோ?’ என்றுதான் நினைத்தார்கள். ஆனால், காரில் இருந்த ஆச்சர்யம், அது நிஜம்தான் எனப் புரியவைத்தது. பின்னிருக்கையில், தாமஸும், மாத்யூவும் மீண்டும் தங்கள் இருக்கையிலேயேதான் இருந்தார்கள். ஆனால், சாரதியின் இடத்தில் பாட்டியும், பக்கத்து இருக்கையில் நான்சியுமாக மாற்றப்பட்டிருந்தார்கள். பாட்டிக்கு காரோட்டத் தெரியாது. அவர் எப்படி சாரதியின் இருக்கையில் இருந்திருக்க முடியும். இயங்கிக்கொண்டிருந்த காரின் இன்ஜினும் நின்றுபோயிருந்தது. நடந்தது நிஜம்தான் எனப் புரிந்துகொண்டார்கள். திடீரென ஒளி விலகி, பறக்கும்தட்டு மேலே உயர்ந்து, காணாமல்போனது. அதுவரை அமைதியாக இருந்த காட்டுப்பூச்சிகள் அனைத்தும் சத்தமிட ஆரம்பித்தன.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 28 - எதைச் சொல்ல மறுத்தார் ஒபாமா?

இதைப் படிக்கும்போது, ஒரு குடும்பமே ஒன்று சேர்ந்து கதைவிடுகிறது என்றுதான் தோன்றும். ‘ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் பாழடைந்த பங்களாவில், யாரோ எப்போதோ தற்கொலை செய்துகொண்டார்கள். அதனால், அந்த வீட்டில் பேய் இருக்கிறது’ என்று சொல்வதையெல்லாம், கேள்வியே கேட்காமல் சுலபமாக நம்புவோம். ஆனால், இது போன்ற சம்பவங்களை எளிதில் நம்பிவிட மாட்டோம். ஒருவிதத்தில் அது சரியானதுதான். அந்தக் குடும்பத்தின் சிறியவர்களும் பெரியவர்களும் ஒன்றாகச் சேர்ந்து கதைவிடுவது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால், இதனால் அந்தக் குடும்பம் இழந்தது பெரிது. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப் பட்டவர்கள், அந்த நிகழ்வால் இழக்கக் கூடாத ஒன்றையும் இழந்து நின்றார்கள். அதைக் கேள்விப்பட்ட பின்னரும் பரிதாபம் ஏற்படாமல் இருப்பதில் எந்தவித நியாயமுமில்லை. அப்படி எதை அவர்கள் இழந்தார்கள்? அதை இறுதியாகச் சொல்கிறேன்.

நால்வருடைய உடலின் தோல் பகுதியிலிருந்தும் ஏதோ அகற்றப் பட்டதுபோல உணர்ந்தார்கள். ஆனால், என்னவென்று தெரியவில்லை. தாமஸின் வலக்கையின் தோல், வெட்டியெடுக்கப் பட்டதற்கான அடையாளம் காணப்பட்டது. மிகுந்த வலியும் இருந்தது. ஆனால், அந்த இடத்தில் தோல் கட்டிப்பட்டு, காயங்களும் காணப்படவில்லை. வெட்டியெடுத்த அடையாளம் மட்டுமே இருந்தது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் தாமஸின் வலக்கையில் அந்த அடையாளம் காணப்படுகிறது. “அட! அப்படியென்றால், இப்போதுள்ள மருத்துவ, அறிவியல் வசதிக்கு, கையில் என்ன நடந்திருக்கும் என்று சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாமே!” என்று புத்திசாலிகளாக நாம் சிந்திப்போமல்லவா? “அதன் மூலம் நடந்த உண்மைகளும் வெளிவரும். அனைத்தையும் நிரூபித்து விடலாம்” என்றும் நினைப்போம். உண்மைதான். நம்மால் இதைச் சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது. ஆனால், தாமஸ் குடும்பம், அந்தச் சம்பவம் பற்றி யாரோடும் பேசத் தயாராக இல்லை. பேச வருபவர்கள், பேட்டியெடுக்க வருபவர்கள் பக்கமே திரும்பாமல் ஒளிந்து கொள்கிறது குடும்பம். காரணம், அதைப் பேசியதால், மாபெரும் இழப்பை அவர்கள் சந்தித்தார்கள். தொடரை உருவாக்கிய நெட்ஃபிளிக்ஸும், அந்த இழப்புச் சம்பவங்களை நீக்கித்தான் வெளியிட்டது. அந்த அளவுக்கு அவர்கள் இழந்தது என்ன தெரியுமா? தாமஸின் அப்பாவை. ஆம்! தாமஸின் அப்பா மர்மமான முறையில் கொல்லப்பட்டார். ‘அப்பாவின் கொலைக்குக் காரண மானவர்கள் இவர்கள்தான்’ என்று தாமஸ் நேரடியாகவே குற்றம் சாட்டுவது யாரைத் தெரியுமா? அமெரிக்க அரசை. இது என்ன புதுக்கதை? புதிதாக எங்கிருந்து வந்தார் அப்பா? ஆம்! எல்லாமே நம்பமுடியாத கதைகள்தான். அந்தக் கதைகளுக்குள் இறங்கினால் ‘ஆலிஸின் வொண்டர்லாண்ட்’ மாதிரி நம்மைச் சுற்றவைக்கும். இந்தச் சம்பவத்துடன் தொடர்பான ஏனைய கதைகளையும் இன்னும் நான் சொல்லவில்லை. தாமஸின் கதையே, ரொம்ப ஆழத்துக்குள் இழுத்துச் செல்கிறது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 28 - எதைச் சொல்ல மறுத்தார் ஒபாமா?

இங்கு நான் சொல்லும், சொல்லப்போகும் அத்தனை கதைகளுக்குமான ஆதாரங் களையும் இணையத் தொடர்புகளையும் இந்தக் கட்டுரைகளின் முடிவில் தருவேன். ஆதாரமில்லாமல் எதுவும் சொல்லப் படவில்லை. அமெரிக்க அரசால் தன் தகப்பன் கொல்லப்பட்டார் என்று தாமஸ் சொன்னதற்கான காணொலி ஆதாரத் தையும் தருவேன். இத்தொடரில் இதுவரை எழுதிய கட்டுரைகள்போல இல்லாமல், ஏலியன்கள் சற்று அதிகப் பகுதிகளைக் கொண்டிருக்கும். முடிந்தவரை, அவை சார்ந்த நியாயமான, புதிய தகவல்களை உங்களுக்குத் தரப்போகிறேன். பொறுமை யாகப் படியுங்கள். நீங்களோ, ஜூனியர் விகடனோ வேண்டாம் என்று சொல்லும் பட்சத்தில், வேறு விஷயத்துக்குள் நுழையலாம். சரி, அமெரிக்க அரசு தன் தகப்பனைக் கொன்றுவிட்டதாக தாமஸ் ஏன் சொல்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அதைப் பார்ப்பதற்கு முன்னர், சில விவரங்களைத் தருகிறேன். முடிந்தவரை, கூகுளில் தேடிச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். ‘ஸ்டீபன் கோல்பெர்ட்’ (Stephen Colbert) என்பவர் நடத்தும் பின்னிரவு நிகழ்ச்சி (Late show), அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. அந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவின் பிரதமராக இருந்த ‘பராக் ஒபாமா’, கடந்த 2020-ம் ஆண்டு, நவம்பர் 30-ம் தேதி பங்குகொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியில் பல விஷயங்கள் நகைச்சுவையாகவும் ஆழமாகவும் பேசப்பட்டன. திடீரென, ஸ்டீபன் கோல்பெர்ட், பறக்கும்தட்டுகள் பற்றி ஒபாமாவிடம் கேட்கிறார். அப்போது ஒபாமாவின் முகம் இறுக்கமாகிறது. “என்னால் சொல்ல முடியாது. மன்னித்துக்கொள்ளுங்கள்” (I can’t tell you. Sorry) என்கிறார். அந்தக் கணத்தில், ஒபாமாவின் சிரிப்பெல்லாம் உறைந்துபோய், கண்களும் முகவும் உணர்ச்சியற்றுக் காணப்படுகின்றன. சிறிது நேரம்தான். “இதை ஆமோதிப்பாக எடுத்துக்கொள்கிறேன்” என்று கோல்பெர்ட் சொல்ல, இறுக்கம் தளர்ந்து பழைய சிரிப்புக்கு வருகிறார்; நகைச்சுவையாகவும் பேச ஆரம்பிக்கிறார். கேட்ட கேள்விக்கு, ஆம் அல்லது இல்லை என்று நேரடியாகவே ஏன் பதில் சொல்லவில்லை அவர்... இல்லாத ஒன்றை இல்லை என்று சொல்வதில் என்ன தயக்கம்... எதற்கு முகத்தில் அடித்தாற்போலச் ‘சொல்ல முடியாது’ என்று சொன்னார்? இந்தக் காணொலி இணையத்தில் இருக்கிறது பாருங்கள். நீங்கள் பார்க்க வேண்டுமென்பதற்காகவே, தேதி முதற்கொண்டு தந்திருக்கிறேன். இதை எதற்குச் சொன்னேன்... அமெரிக்க அரசு தாமஸின் அப்பாவைக் கொன்றதா எனும் கேள்விகளுக்கான பதில்களுடன் அடுத்த இதழில் சந்திக்கிறேன். இது சார்ந்த உங்கள் அபிப்பிராயங்களைச் சொல்வதற்கும் மறக்க வேண்டாம்.

இனி வரப்போகும் ஏலியன் மர்மங்கள் உங்களை நிச்சயம் பதறவைக்கும்!

(தேடுவோம்)