மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 29 - யூஃபோவா... ஐஃபோவா?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?

இதுவரை நான் சொன்ன சம்பவங்களும், சொல்லப்போகும் சம்பவங்களும் ஒற்றைப்புள்ளியில் சந்திப்பவைதான். எல்லாமே தனித்தனியாக நடந்ததுபோல அமுக்கப்பட்டு, திட்டமிட்டு மறைக்கப் பட்டவைதான்.

நீல் டிகிராஸ் டைசன் (Neil deGrasse Tyson) எனும் இயற்பியலாளரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். வானியற்பியலில், முதன்மையானவர்களில் இவரும் ஒருவர்; அற்புதமான அறிவாளி. எனக்கு ரொம்பப் பிடித்தவர். இவர் தயாரித்து வெளியிட்ட, ‘காஸ்மோஸ்’ தொலைக்காட்சித் தொடர் உலகப் பிரசித்தம். வேற்றுக் கோள்களில் ஏலியன்கள் இருப்பதை இவர் மறுத்ததேயில்லை. ஆனால், ‘பறக்கும்தட்டுகள் பூமிக்கு வந்தன’ என்றால் போதும் கொலைவெறியாகிவிடுவார்; கேலியாகச் சிரிப்பார். பறக்கும்தட்டுகளை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. ‘யூஃபோ’ (UFO) என்றுதான் பறக்கும்தட்டை அழைக்கிறார்கள். அதன் அர்த்தம், ‘Unidentified Flying Object’ என்பது. அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள். ‘பறப்பது என்னவென்றே தெரியாவிட்டால், அதை ஏலியனின் விண்கலமென்று எப்படிச் சொல்லலாம்?’ என்பதே டைசனின் கேள்வி. சரியான கேள்விதான் இல்லையா... ஆனாலும், யூஃபோக்களை கி.மு.1440-லேயே எகிப்தில் கண்டதாகப் பதிவுகள் உள்ளன. அப்போதிருந்து இப்போதுவரை பல லட்சம் பதிவுகள் காணப்படுகின்றன. பறக்கும்தட்டை முதலில் புகைப்படம் எடுத்தவர், ‘வில்லியம் ரோட்ஸ்’ (William Rhods) எனும் பீனிக்ஸ் நகரவாசி. 7 ஜூலை, 1947-ல் எடுத்தார். டிஜிட்டல் கேமராக்களும் கம்ப்யூட்டரும் இல்லாத காலத்தில் புகைப்படங்களை வெட்டுதல், ஒட்டுதல் அறியாத சாதாரண மனிதர். தற்செயலாக வானத்தில் தெரிந்த பறக்கும் பொருளை, அவர் எடுத்த புகைப்படம் அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளில் வெளியானது. இரண்டு நாள்களுக்குப் பின்னர், வில்லியமின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. வாசலில் இரண்டு FBI உளவாளிகள், தங்களின் அடையாள அட்டையைக்காட்டி அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். வில்லியம் எடுத்த புகைப்படத்தையும் நெகட்டிவையும் வாங்கிக்கொண்டார்கள்; போய்விட்டார்கள். அடுத்த தினங்களில், FBI காரியாலயத்துக்குத் தொலைபேசியில் கேட்டபோது, அப்படி யாரையும் அனுப்பவில்லை எனப் பதில் வந்தது. அந்தச் சம்பவம் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் (24.06.1947) ‘கென்னத் ஆர்னால்டு’ (Kenneth Arnold) எனும் விமானி, விமானத்தில் பறந்துகொண்டிருந்தபோது பறக்கும்தட்டைக் காண்கிறார். அதன் வடிவத்தை வரைந்து, குறிப்புகளுடன் அரசுக்கு அனுப்பிவைக்கிறார். ஆனால், கிணற்றில் போட்ட கல்தான். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வில்லியம் எடுத்த புகைப்படத்தைப் பத்திரிகையில் பார்த்தபோது, ‘இதேதான் நான் கண்ட பறக்கும்தட்டு’ என்று பத்திரிகையாலயத்துக்கு அறிவித்தார். அத்துடன், வில்லியம் படமெடுத்த அதே தினத்தில், ரோஸ்வெல் (Roswell) என்னும் இடத்தில் பறக்கும் தட்டொன்று நிலத்தில் விழுந்து நொறுங்கியது. அதுவே, இன்றுவரை உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திவைத்திருக்கும் ரோஸ்வெல் பறக்கும்தட்டு மர்மம். இந்த மூன்று சம்பவங்கள் நடந்த இடங்களுக்கும் மனிதர்களுக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தமேயிருக்கவில்லை!

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 29 - யூஃபோவா... ஐஃபோவா?

இப்போது நீங்கள், “பெர்க்‌ஷயர் பறக்கும்தட்டுச் சம்பவத்தையும், தாமஸ் ரீடின் தந்தையின் இறப்பையும், ஒபாமாவின் பேட்டியையும் சொல்லிவிட்டு அவற்றைத் தொடராமல், எதற்காக வேறு சம்பவங்களை இவர் சொல்கிறார்” என்று குழம்பியிருப்பீர்கள். ஆனால், இதுவரை நான் சொன்ன சம்பவங்களும், சொல்லப்போகும் சம்பவங்களும் ஒற்றைப்புள்ளியில் சந்திப்பவைதான். எல்லாமே தனித்தனியாக நடந்ததுபோல அமுக்கப்பட்டு, திட்டமிட்டு மறைக்கப் பட்டவைதான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகச் சொல்லப்பட்ட பறக்கும்தட்டுச் சம்பவங்கள், மீண்டும் புதிதாக மேலே கொண்டுவரப் பட்டிருக்கின்றன. கோவிட் பெருந்தொற்றின் இறுக்கமான காலத்திலும், உலக ஊடகங்கள் அவை பற்றியே பேசுகின்றன. நம் நாட்டில் மட்டும் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படவில்லை. பெர்க்‌ஷயர் பறக்கும்தட்டுச் சம்பவத்தை, ஜூலை 2020-ல் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டதும் அதன் தொடர்ச்சியே. அதிலிருந்து உலகம்பூராவும் பறக்கும்தட்டுச் செய்திகள் பற்றியெரிந்து கொண்டிருக்கின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவற்றுக்கு இப்போது எதற்காக இவ்வளவு வெளிச்சம்... அனைத்துப் பறக்கும்தட்டுச் சம்பவங்களும் ஏன் திடீரெனத் தோண்டி யெடுக்கப்படுகின்றன? இவற்றுக்கெல்லாம் மூல காரணமாக இருப்பது, அமெரிக்காவின் பென்டகன் வெளியிட்ட காணொலிகளே!

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 29 - யூஃபோவா... ஐஃபோவா?
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 29 - யூஃபோவா... ஐஃபோவா?

ஏப்ரல் 27, 2020 அன்று, மக்களின் பார்வைக்காக, மூன்று காணொலிகளை பென்டகன் வெளியிட்டது. அவற்றில் இருப்பவை உண்மையானவையென்றும் அறிவித்தது. அமெரிக்கக் கடற்படையினரின் விமானிகளால் பதிவுசெய்யப்பட்ட அந்தக் காணொலிகளில், பறக்கும்தட்டுகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. 2004, 2015 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட காணொலிகள். 2004-ம் ஆண்டு, பசிபிக் கடலின் மேற்பரப்பில், 160 கிலோமீட்டர் தூரத்தில், மிதந்தபடியிருந்த பறக்கும்தட்டை ராடார் காணொலி மூலம் படம்பிடித்திருந்தனர். இரண்டு போர் விமானங்களின் விமானிகள், பறக்கும்தட்டைக் கண்டதும் பேசிக்கொண்ட உரையாடல்களும் தெளிவாகவே பதிவாகியிருக்கின்றன. 2015-ம் ஆண்டு காணொலிகளில், பறக்கும்தட்டுகள் பறக்கும் வேகம், சுழலும் அதிசயம், இரு சம்பவங்களாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. அப்போதும் விமானிகளின் உரையாடல்களும், ஆச்சர்யக் கூச்சல்களும் பதிவாகியிருக்கின்றன. அந்த மூன்று காணொலிகளையுமே பென்டகன் வெளியிட்டு, அவை உண்மையானவையென்று உறுதியும் செய்திருக்கிறது. ஆனால், இதுவரைக்கும், மில்லியன் காணொலிகளையும், புகைப்பட ஆதாரங்களையும் சாதாரண மக்கள் பூமியெங்கும் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ஒன்றைக்கூட உண்மையென்று எந்த அரசும் ஒப்புக் கொள்ளவில்லை. ‘இவையெல்லாம் பொய். சதிக் கோட்பாட்டாளர்களின் (Conspirasy Theorist) வேண்டாத வேலை. சதிக் கோட்பாட்டாளர்கள் என்றாலே இப்படித்தான்’ என்று சொல்லி, அவர்களைக் கேலிக்குரியவர்களாக்கினார்கள். இப்போது, தாங்கள் கொடுக்கும் காணொலி உண்மையானது என்று வழிகிறார்கள். உண்மையைச் சொல்லுமளவுக்கு அவ்வளவு நல்லவர்களாக எப்படி மாறினார்கள்? அந்த அளவுக்கு ஒன்றும் நல்லவர்கள் இல்லையே! காரணமில்லாமல் அவர்கள் வெளியே சொல்லவில்லை. சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதை ஏற்படுத்தியது அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் (The New York Times).

2017-ம் ஆண்டில், நியூயார்க் டைம்ஸுக்கு ரகசியமாக, இந்தக் காணொலிகள் கிடைத்தன. உடனடியாக அவற்றைப் பத்திரிகையில் வெளியிட்டார்கள். அப்போது பிடித்தது சனியன். உலகெங்கும் பெருந்தலைவர்கள் ஏலியன்களின் இருப்பை உறுதிப்படுத்துமாறு பேசிக்கொண்டார்கள். கனடாவின் முன்னாள் அமைச்சர், இஸ்ரேல் அமைச்சர் ஆகியோர் வெளிப்படையாகவே ஏலியன்கள் பூமிக்கு வந்தது உண்மைதான் என்றார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் கேள்வி கேட்கப்பட்டதற்கும் அதுவே காரணம். அமெரிக்க அதிபர்களுக்கு ஏலியன் சார்ந்த உண்மைகள் தெரிந்திருக்கின்றன. சில அதிபர்கள், ஏலியன் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டுமிருக்கிறார்கள். ஏலியனுடன் நேரடியான தொடர்புடன் இருந்தார்களென, அதிபர் ட்ரூமனையும், அதிபர் ஐசனோவரையும் சொல்கிறார்கள். இவை பற்றி விளக்கமாக எழுதுவதென்றால் தொடர் மிகவும் நீண்டுவிடும். அமெரிக்க அதிபர்களுக்கு அந்த உண்மைகள் தெரிந்தாலும், பொதுமக்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். பொதுமக்களில் எவராவது ஏலியன் சம்பவங்களில் தொடர்பு பட்டால், அவர்கள் கண்காணிக்கப்பட்டார்கள். அச்சுறுத்தப்பட்டார்கள். ஏனென்று தெரியாமல் சிலர் உயிரிழக்க வேண்டியுமிருந்தது. தாமஸ் ரீடின் தந்தையும் அப்படித்தான் இறந்துபோனார்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 29 - யூஃபோவா... ஐஃபோவா?

தாமஸ் ரீட், அம்மா நான்சி, தம்பி மாத்யூ, பாட்டி ஆகிய நால்வரும் பறக்கும்தட்டிலிருந்து மீண்டும் காரில் விடப்பட்டார்கள் அல்லவா... பாட்டியே முதலில் சுயநினைவுக்கு வந்தார். பின்னர் எல்லோரும் பழையநிலைக்கு வந்தார்கள். சில நிமிடங்கள்தான் பறக்கும்தட்டில் இருந்ததாக ஒவ்வொருவரும் நினைத்தார்கள். ஆனால், மூன்று மணி நேரம் பறக்கும்தட்டில் இருந்திருக்கிறார்கள். ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தவர்கள், நடந்தவற்றை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டார்கள். விடிந்ததுதான் தெரிந்தது, சுற்றுவட்டாரத்திலிருக்கும் பலருக்கு அந்த அனுபவம் கிடைத்திருந்தது. ‘டாம் வார்னர்’ (Tom Warner), ‘மெலனி கிர்ச்டார்ஃபர்’ (Melanie Kirchdorfer), ‘ஜேன் கிரீன்’ (Jane Green) ஆகிய மூவரும் இதில் முக்கியமானவர்கள். அங்கிருந்த போலீஸ் நிலையம், வானொலி நிலையம் ஆகியவற்றுக்கும் அறிவிக்கப்பட்டது. பலர் தங்களிடம் முறையிட்டதாக வானொலி நிலையத்தினரும் சொல்லியிருந்தார்கள். மாசாசூசெட்ஸ் முழுவதும் செய்திகள் பரவின. வழமைபோல யாரும் நம்பவில்லை. அந்தச் சம்பவத்தைச் சொல்பவர்கள் கேலியாகப் பார்க்கப்பட்டனர். ஊர் மக்கள் மட்டுமே அவர்களை நம்பியும் துணையாகவும் இருந்தவர்கள். போலீஸ் நிலையத்திலும், வானொலி நிலையத்திலும் இருந்த பதிவுகள் நீக்கப்பட்டன. இது பற்றிப் பேசுவதில் பயனேதுமில்லை என்று சமபந்தப்பட்டவர்கள் நிறுத்திக்கொண்டார்கள். ஆனால், அவர்களைச் சுற்றி ஏதோ நடந்துகொண்டிருந்தது. குறிப்பாக தாமஸ் ரீட் குடும்பம் எங்கு சென்றாலும் சிலரால் அவதானிக்கப் பட்டார்கள். சம்பவம் பற்றிப் பேச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டார்கள். அறிவுறுத்தியவர்கள், அமெரிக்க அரசின் உளவுப் பிரிவினர் என்பது தெரிந்தது. பயத்தில் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால், நான்சியைப் பிரிந்திருந்த தாமஸின் அப்பாவுக்கு அந்தச் சம்பவம் முழுவதும் தெரியவந்தது. அவரொரு வக்கீலாக இருந்தார். நடந்த சம்பவத்தைப் புத்தகமாக எழுதி வெளியிட ஆயத்தமானார். சிலரால் அதுவும் தடுக்கப்பட்டது. அவரோ அதை விடுவதாக இல்லை. ஒருநாள் ஆபீஸில் இறந்துகிடந்தார். அவரின் ரத்தத்தில் ஃபங்கஸ்கள் பரவியிருந்ததாக மரண அறிக்கை தெரிவித்தது. ஆபீஸிலிருக்கும் குளிரூட்டியிலிருந்து ஃபங்கஸ் பரவியதாகத் தெரிந்தது. அதன் கீழே உடைந்துபோன பரிசோதனைக் குழாயின் சிறு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அத்தோடு நின்றிருந்தால்கூட இந்த அளவுக்குச் சந்தேகம் வந்திருக்காது. மறுநாள் அரசு அதிகாரிகள் எனச் சொல்லிக்கொண்டு, தாமஸின் தந்தை அதுவரை சேகரித்திருந்த அனைத்து ஆவணங்களையும் துடைத்தெடுத்து, கொண்டுசென்றனர். காரணமேயில்லாமல், நான்சிக்கு 25,000 டாலரை அரசு கொடுத்தது. இவையெல்லாம் தாமஸ் ரீட், ஒரு தொலைக்காட்சிக்குக் கொடுத்த வாக்குமூலம். அதன் பின்னர் யாருடனும் அது பற்றிப் பேசுவதற்கு தாமஸ் குடும்பம் தயாராக இருக்கவில்லை. யாருடன் மோதுகிறோம், யார் எதிரியென்றே தெரியாமல் என்னதான் செய்வது... தற்செயலாகப் பறக்கும்தட்டைச் சந்தித்தது அவ்வளவு தவறான காரியமா? ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், முதன்முறையாக வாய் திறந்திருக்கிறார்கள். அது நடந்துவிட்ட பல சம்பவங்களின் திறவுகோலானது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 29 - யூஃபோவா... ஐஃபோவா?

பென்டகன் வெளியிட்ட காணொலிகளின் தொடர்ச்சியால், மூடிமறைக்கப்பட்ட பல பறக்கும்தட்டுச் சம்பவங்கள், உண்மையானவை என்றே இப்போது உறுதியாவதாகப் பலர் கருதுகிறார்கள். பொய்யென்று அரசுகளால் தட்டிக்கழித்து, மறைக்கப்பட்டவை எல்லாமே நிஜமானவை என்கிறார்கள். குறிப்பாக, 1947-க்கும் 1970-க்குமிடையே நடந்த சம்பவங்களைச் சொல்லலாம். அவற்றில் பெரும்பான்மையானவை திடமான சாட்சிகளைக்கொண்டவை. அவை அனைத்தையும் சொல்ல முடியாவிட்டாலும், உண்மைக்கு அருகிலிருக்கும் இரண்டொரு சம்பவங்களை அடுத்த பகுதிகளில் சொல்கிறேன். பெர்க்‌ஷயர் சம்பவத்தைவிட, பல மடங்குகள் மர்மமானவை. இன்றைய நிலையில் அவற்றை நிச்சயம் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். நான் எப்போதும், ஆங்கில வார்த்தைகளுடன்தான் சம்பவங்களைத் தருகிறேன். அதனால், படித்த பின்னர் நீங்களும் இணையத்தில் தேடிப்பாருங்கள். நான் சொல்வது ஒரு சதவிகிதம்கூட இல்லை என்பதை அறிவீர்கள். அங்கு என்ன ஒளிந்திருக்கின்றன என்பதைச் சுலபமாகத் தெரிந்துகொள்வீர்கள்.

இப்போது சிலரால் கேட்கப்படும் கேள்வி முக்கியமானது. ‘பறப்பது என்னவென்று தெரியாததால், அதை ‘யூஃபோ’ என்று குறிப்பிட்டோம். இப்போதுதான் அவற்றை இனம் கண்டுவிட்டோமே... அதனால், அவற்றை ‘யூஃபோ’ என்று சொல்லாமல் ‘ஐஃபோ’ (IFO- Identified Flying Object) என்று சொல்லலாமே?’ என்கிறார்கள். நீல் டிகிராஸ் டைசன் போன்ற விஞ்ஞானிகளும் அப்படிச் சொல்லும்போது மறுத்துப் பேச முடியாதல்லவா?

(தேடுவோம்)