
ஏலியன்கள் மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அவற்றிலொரு ஏலியன் உயிருடன் இருந்ததாகவும் தெரியவந்தது.
1947, ஜூலை 2-ம் தேதி... நியூ மெக்ஸிகோவிலிருக்கும் ரோஸ்வெல் (Roswell) நகர், மழைக்கால இருளில் மூழ்கியிருந்தது. அப்போது, மிகப்பெரிய வெளிச்சக் கோளமொன்று தொலைவில் விழுந்ததை ‘மெக் பார்ஸெல்’ (Mc Barzel) எனும் இளைஞர் அவதானித்தார். விண்கல் விழுந்திருக்கலாம் என்று நினைத்து, அதிகாலையில்தான் சென்று பார்த்தார், அதிர்ச்சியில் ஆடிப்போனார். விமானம் ஒன்று விழுந்து சிதறியதுபோல, வெட்டவெளி நிலமெங்கும் உலோகத் துண்டுகள் சிதறியிருந்தன. துண்டொன்றைக் கையிலெடுத்துப் பார்த்தபோது, அதுவரை அப்படியான உலோகத்தை அவர் பார்த்ததில்லை எனத் தோன்றியது. உடனடியாக அருகிலிருந்த ராணுவத் தளத்துக்கு அறிவித்தார். இடத்தை ஆராய்ந்த ராணுவத் தளபதியான ‘வில்லியம் பிராண்டி’ (William Brandy), ‘பறக்கும்தட்டு ஒன்று விழுந்து சிதறியிருக்கிறது’ என்று பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்தார். அவ்வளவுதான், முடிந்தது கதை. ரோஸ்வெல் நகரமே ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டது. அந்தச் சம்பவம் நடந்த அதேசமயம் ரோஸ்வெல்லின் வேறோர் இடத்தில், ‘பார்னி பார்னெட்’ (Barney Barnett) என்பவர் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, தூரத்தில் பெரிய பொருளொன்று விழுந்துகிடந்ததைக் கண்டிருக்கிறார். அருகில் சென்று பார்த்தவர் பயத்தில் அலறிவிட்டார். அங்கு பறக்கும்தட்டும், நான்கு ஏலியன்களும் விழுந்து கிடந்தன. அப்போது, அவ்வழியே வந்த நான்கு இளைஞர்களும் அதைப் பார்த்தார்கள். பின்னர், அங்கு வந்த ராணுவத்தினர் விஷயத்தை அறிந்துகொண்ட பிறகு, எதையும் வெளியே சொல்லக் கூடாதென்று அறிவுறுத்தி அவர்களை அனுப்பிவைத்தனர். அடுத்த நாள், சம்பவ இடங்கள் தடயங்கள் இல்லாமல் சுத்தமாக்கப்பட்டன.
ரோஸ்வெல் ராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி, ஏலியன்கள் மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அவற்றிலொரு ஏலியன் உயிருடன் இருந்ததாகவும் தெரியவந்தது. என்ன பிரயோசனம்? எல்லாம் கட்டுக்கதைகள் என்று மாற்றப்பட்டன. எதற்கும் எவரிடமும் சாட்சியம் இல்லாததால், எல்லாமே பொய்களாக்கப்பட்டன. சாட்சிகளும் தடயங்களும் மறைக்கப்பட்டு மாயமாகின. சாட்சிகள் கேலிக்குள்ளாகினர். ராணுவத் தளபதி ‘வில்லியம் பிராண்டி’ கொடுத்த பேட்டியும் தவறென்று சொல்லப்பட்டது. `காலநிலையை அளக்கும் ‘வெதர் பலூன்’ வெடித்ததையே பறக்கும்தட்டு என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள்’ என்று கதை முடிக்கப்பட்டது. ரோஸ்வெல் நகர மக்கள் பறக்கும்தட்டைவைத்து விளம்பரம் தேடுவதாகக் கதை பரவியது.


ஆனால், மக்கள் எதையும் மறக்கவில்லை. ரோஸ்வெல்லில் கைப்பற்றப்பட்ட ஏலியனையும், ஐசனோவர் சந்தித்த ஏலியன்களையும் தொடர்புபடுத்திப் பேச்சுகள் எழுந்தன. பறக்கும்தட்டு எதுவும் வெடித்துச் சிதறவில்லை. இரண்டு வகை ஏலியன்களுக் கிடையே நடந்த சண்டையால், பறக்கும்தட்டு நொறுங்கியது என்றும் சந்தேகம் எழுப்பப் படுகிறது. எதற்கும் சாட்சியில்லை. நம்பவும் முடியவில்லை. அதேசமயம், சமீபத்தில் வெளிவரும் தகவல்களை அறியும்போது நம்பாமலும் இருக்க முடியவில்லை. எதற்கும், இவற்றையெல்லாம் இணையத்தில் தேடிப்பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு இவற்றை நம்புவதா, விடுவதா என நீங்களே முடிவெடுக்கலாம். ஏலியன் சம்பவங்கள் இன்னும் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அனைத்தையும் இங்கே சொல்ல முடியவில்லை.
இப்போது, நாம் கொஞ்சம் சீரியஸாகப் பேசிக்கொள்வோமா? ஏலியன்கள் பூமிக்கு வந்தனவா, இல்லையா என்பதை ஒரு பக்கத்தில் வைத்துவிடுவோம். உண்மை எதுவாகவும் இருக்கட்டும். எந்தப் பக்கத்தையும் நாம் எடுக்கத் தேவையில்லை. ஆனால், சில உண்மையான விவரங்களை முழுமையாகப் பார்க்கலாம். இதன் மூலம், பறக்கும்தட்டுச் சம்பவங்களை எப்படி எடுத்துக்கொள்வது எனும் முடிவுக்கு நீங்கள் வர முடியும்.
‘Project Sign’ எனும் திட்டத்தை 1947-ம் ஆண்டு, அமெரிக்க வான்படை (USAF) ஆரம்பித்தது. அந்தத் திட்டத்தின் நோக்கம், வானில் பறக்கும் அடையாளம் தெரியாத பொருள்களை ரகசியமாக ஆராய்வது. ‘கென்னெத் ஆர்னால்டு’ (Kenneth Arnold) எனும் விமானி 1947, ஜூன் 24 வாஷிங்டனில், ஒன்பது பறக்கும்தட்டுகள் வரிசையாகப் பறந்து சென்றதைக் கண்டதாக அறிக்கை கொடுத்ததுதான் அந்தத் திட்டத்துக்கான ஆரம்பப்புள்ளி. அந்த ஒன்பது பறக்கும் தட்டுகளைப் பொதுமக்களும் பார்த்திருந்தார்கள். வான்படை ஜெனரல் ‘நாதன் ட்வைனிங்’ (Nathan Twining) என்பவரால் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் பறக்கும்தட்டுகள் சம்பந்தமான முழுமையான விவரங்களும் சேகரிக்கப்பட்டன. பறக்கும் தட்டுகளால் அமெரிக்க அரசுக்கு ஆபத்து உண்டா என்று அறிவதே முக்கிய நோக்கமாக இருந்தது. அந்தத் திட்டம் ஆரம்பித்ததிலிருந்து பல பறக்கும்தட்டுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. எல்லாமே உண்மையாக இருப்பதுபோலவே தோன்றின. அதை அரசால் ஜீரணிக்க முடியவில்லை. இப்படியே போனால், ஏலியன்கள் பூமிக்கு வந்ததை ஒப்புக்கொள்வது போலாகிவிடும். அதனால், பொதுமக்கள் மூலம் வரும் சம்பவங்களைத் தவறென்று நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ‘Project Sign’ என்பது ‘Project Grudge’ எனும் பெயருக்கு 1949-ல் மாற்றப்பட்டது. வான்படையின் கேப்டனான ‘எட்வர்டு ருப்பெல்ட்’ (Captain Edward Ruppelt) அந்தப் புதிய திட்டத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். புதுத்திட்டத்தின் குறிக்கோள், அனைத்தையும் முடிந்த அளவுக்கு நிராகரிப்பதே! காரணமே இல்லாமல் நிராகரித்தால், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால், அறிவியல்ரீதியாக நிராகரிக்கப்பட வேண்டுமென முடிவு செய்தார்கள். திட்டத்தை நடத்திச் செல்வதற்கு வானியற்பியல் விஞ்ஞானி ஒருவரையும் இணைத்துக்கொண்டார்கள். அவர் பெயர், ‘ஜோசப் ஆலென் ஹைனெக்’ (Joseph Allen Hynek). அப்போதிருந்த சிறந்த வானியற்பியலாளர் அவர். அந்தத் திட்டத்தின் பெயர்க் காரணமோ அல்லது வேறு காரணமோ தெரியவில்லை. 1951-ம் ஆண்டு அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனாலும், 1952-ம் ஆண்டு மீண்டும், ‘நீலப் புத்தகத் திட்டம்’ (Project Blue Book) எனும் பெயரில் அதே காப்டன் ருப்பெல்ட் மற்றும் விஞ்ஞானி ஹைனெக் ஆகியோரைக்கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. பறக்கும்தட்டு விவகாரங்கள் சமீபத்தில் வெளிவந்து பேசப்படுவதற்கு இந்த நீலப் புத்தகமும் ஒரு காரணம்.


நீலப் புத்தகத் திட்டம் 1947-லிருந்து 1969 வரை அமலில் இருந்தது. அந்தக் காலங்களில் நடைபெற்ற 12,618 பறக்கும்தட்டுச் சம்பவங்கள் திட்டத்தில் பதிவாகியிருக்கின்றன. சாட்டிலைட்டுகள், விண்கற்கள், நவீனரகப் போர் விமானங்கள், வானிலை பலூன்கள் ஆகியவற்றைப் பார்த்து, பறக்கும்தட்டுகள் என நினைக்கிறார்கள் எனக் கூறி, பல ஆயிரம் சம்பவங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனாலும், 1,700 சம்பவங்களை எந்தவிதத்திலும் நிராகரிக்க முடியவில்லை. அவற்றிலும் 701 சம்பவங்கள் உண்மை என்றே நம்பும்படி, மறுக்க முடியாத சாட்சியங்களுடன் இருக்கின்றன. உண்மைக்கு 701 சம்பவங்கள் வேண்டியதில்லை. ஒரேயொரு சம்பவமே போதுமானது. அதுவே, ஏலியன்கள் பூமிக்கு வந்தன என உறுதிப்படுத்திவிடும். வரும் சம்பவங்களையெல்லாம் ஏதோவொரு அறிவியல் காரணம் சொல்லி நிராகரிக்கவே விஞ்ஞானி ஹைனெக் பாடுபட்டார். நிராகரிக்கவும் செய்தார். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் நிராகரிக்க முடியவில்லை. தர்க்கரீதியாகவும், சாட்சி பலத்தாலும் அவற்றை ஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானார். பின்னாள்களில் அவரது ஏலியன் எதிர்ப்புக் குரல் மிகவும் பலஹீனமானது. எஞ்சிய 701 சம்பவங்களையும் எப்படி நிராகரிப்பது என்று அவருக்கே தெரியவில்லை. அவை அமெரிக்காவில் மட்டுமே நடந்த சம்பவங்கள்.
ஏலியன் சம்பவங்களைப் படிக்கும் வாசகர்கள் கேட்கும் பொதுவான கேள்விகள் இவை... ‘ஏன் பறக்கும்தட்டுகள் அமெரிக்காவில் மட்டும் தோன்றுகின்றன?’, ‘பேய்கள்போல, மனித நடமாட்டமில்லாத இடங்களுக்கு மட்டுமே அவை ஏன் வருகின்றன?’ அருமையான கேள்விகள். பறக்கும்தட்டுகள் அமெரிக்காவில் மட்டுமல்ல. ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரேசில், சீனா, ஈரான், தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி என உலகம் பூராவும், ஏன் இந்தியாவில்கூட வந்ததாகப் பதிவுகள் இருக்கின்றன. ஆனால், அவற்றைப் பெரிதாக யாரும் கணக்கிலெடுப்பதில்லை. அவை சார்ந்து அந்த நாடுகளும் பெரிதாக ஆராய்ந்ததில்லை. ஸ்பெயினிலும் பிரேசிலிலும் மக்கள் அதிகமாகக் கூடியிருந்த இடங்களில் பறக்கும்தட்டுகள் தோன்றிய சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. இணையத்தில் தேடிப்பாருங்கள். உண்மைக்கும் பொய்க்கும் இடையில் பல சம்பவங்களைக் கண்டடைவீர்கள். ரஷ்யாவில் நீலப் புத்தகம் போன்ற ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு, 3,000 பறக்கும்தட்டுச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றில் 300-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் மறுக்க முடியாதவையாக இருக்கின்றன. அதனால், அமெரிக்காவில் மட்டும் பறக்கும்தட்டுச் சம்பவங்கள் நடப்பதாகச் சொல்வதில் எந்த உண்மையுமில்லை. அமெரிக்காவில் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் இப்படியான செய்திகளுக்கு முதலிடம் கொடுத்து விவாதிக்கின்றன. அதனால், அரசுக்கும் அழுத்தம் கிடைக்கிறது. அந்த அழுத்தங்களால் உருவானதே நீலப் புத்தகத் திட்டம்.

விஞ்ஞானியானஆலென் ஹைனெக்கால் பறக்கும்தட்டுச் சம்பவங்களைத் தட்டிக்கழிக்க முடியாததால், நீலப் புத்தகத் திட்டம் 1969-ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ‘பறக்கும்தட்டுச் சம்பவங்களில் எந்த உண்மையும் கிடையாது. எல்லாமே வேறு பொருள்களைப் பார்த்து ஏமாந்த தவறான முடிவுகள்’ என்று சொல்லப்பட்டு மூடப்பட்டது. ஆனால், 1977-ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-கால் `Close Encounters of the Third Kind’ எனும் திரைப்படம் உருவாகி, சக்கைபோடு போட்டது. படம் பறக்கும்தட்டை மையமாகவைத்து எடுக்கப் பட்டிருந்தது. அந்தப் படத்தை எடுப்பதற்கு உடனிருந்து, கதைக்கான ஆலோசனைகளை வழங்கியவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை... அதே இயற்பியல் விஞ்ஞானியான ஆலென் ஹைனெக்கேதான். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எந்த விஞ்ஞானி பறக்கும்தட்டுச் சம்பவங்களை நிராகரிப்பதற்காக நீலப் புத்தகத் திட்டத்தில் சேர்க்கப்பட்டாரோ, அவரே அப்படியானதொரு படத்தை உருவாக்க உதவியிருக்கிறார். வேடிக்கையாக இல்லையா...அமெரிக்காவின் தகவல் அறியும் சட்டங்களால், பொதுமக்கள் படிக்கக்கூடியவாறு இப்போது நீலப் புத்தகத் திட்டம் இணையத்தில் வெளியிடப் பட்டிருக்கிறது. `The Black Vault’ எனும் பெயரில், 1,30,000 பக்கங்களைக்கொண்ட மிகப்பெரிய ஆவணக் கிடங்காக அது காட்சியளிக்கிறது. அதை அடிப்படையாகவைத்து, 08.01.2019-ல் The Project Blue Book எனும் தொலைக்காட்சி டாக்குமென்டரி தொடரும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்தும் கடந்த இரண்டாண்டுகளில் நடந்திருக்கின்றன. இவையெல்லாம் உண்மையா, பொய்யா என அறிய விரும்புபவர்களுக்கு என ஆங்கில வார்த்தைகளையும் சேர்த்தே கொடுத்திருக்கிறேன். தேடிக் கண்டெடுத்துக்கொள்ளுங்கள்.
ஏலியன்கள் சம்பந்தமாக எழுத ஆரம்பிக்கும் போது, பறக்கும்தட்டு பூமிக்கு வந்தது என்பது ஒரு மர்மம்தான். அது உண்மையா, இல்லையா தெரியாது. ஆனால், ஏலியன் பூமி தாண்டி இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அது அறிவியல் உண்மை எனச் சொல்லியிருந்தேன். அந்த ஏலியன்கள் பற்றி இந்தத் தொடரில் வேறொரு பகுதியில் உங்களுக்கு நிச்சயம் சொல்வேன்!
(தேடுவோம்)