மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 32 - நேரம் என்பது மாயையா?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

கடல் மட்டத்தில் வசிக்கும் ஒருவரின் கடிகாரத்தைவிட, மலை உச்சியில் வசிப்பவரின் கடிகாரம் மெதுவாகவே நகரும்.

ஏலியன் பற்றித் தொடர்ச்சியாகப் பேசியதால் சற்று இறுக்கமாகிவிட்டோம். அதனால், இறுக்கத்தைத் தளரவைக்க வித்தியாசமான ஒரு விந்தையை இம்முறை பார்த்துவிடலாம். ‘நேரம் (Time) என்றால் என்ன’ என்பதை எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா... மனிதன் அறிந்தவற்றில் ஆச்சர்யமானதும் மர்மமானதும் நேரமென்றால் உங்களால் நம்ப முடிகிறதா... ‘நேரத்தில் என்ன மர்மம் இருக்க முடியும்’ என்றுதான் நினைப்பீர்கள். ஆனால், நேரம் பற்றிய நிஜம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். நீங்கள் அதைச் சிந்திக்கும் விதமே மாறிவிடும். நேரம் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா? ‘நேரம் ஒரு மாயை’ (Time is an Illusion) என்கிறது. ஆனால், அது மாயை இல்லை என்பதுதான் உங்கள் புரிதல். கடிகாரத்தின் ஒவ்வொரு நொடியின் ‘டிக் டிக்’ ஒலியும் நிஜமானது. காலை, மாலை, நாளை என்பவற்றை நீங்கள் உணர்ந்துதான் இருக்கிறீர்கள். அப்படியென்றால், நேரம் எப்படி மாயையாக முடியும்? அறிவியல் தப்பாகச் சொல்லாது என்பதும் உங்களுக்குத் தெரியும். அதையே நாம் விரிவாகப் பார்க்கப்போகிறோம். அங்கு என்ன ஒளிந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்...

நீங்களே இப்படியான அனுபவங்களைச் சந்தித்திருப்பீர்கள். உங்களுக்கு நடந்திருக்கக்கூடிய சில எளிமையான சம்பவங்களையே உதாரணமாகச் சொல்லப்போகிறேன். ஓர் இளைஞன், 6 மணிக்கு வருவதாகக் கூறிய காதலிக்காகக் கடற்கரையில் காத்திருக்கிறான். கைக்கடிகாரத்தில் மணி 5:50. அவனால் இருக்கவே முடியவில்லை. ஒவ்வொரு நொடியும், வருடங்களாகக் கடக்கின்றன. பதினைந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் கடிகாரத்தைப் பார்க்கிறான். மணி 5:53. ‘வெறும் மூன்றே நிமிடங்கள்தானா?’ என்று சலித்துக்கொள்கிறான். ஒருவழியாகப் பல ஆண்டுகளின் பின்னர் ஆறு மணிக்குக் காதலி வருகிறாள். அப்புறம் நேரம் போவதே தெரியவில்லை. பதினைந்து நிமிடங்கள் கழித்துக் கடிகாரத்தைப் பார்க்க, மணி பத்தாகியிருந்தது. என்ன இது, இப்போதுதானே வந்தாள், அதற்குள் நான்கு மணி நேரம் முடிந்துவிட்டதா? மீண்டும் சலித்துக்கொள்கிறான். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவன் ஒருவனே. காத்திருப்பின் அவதியில் நேரம் மெதுவாகக் கடந்தது. மூன்று நிமிடங்கள், பதினைந்து நிமிடங்களாகத் தெரிந்தன. ஆனால், அவன் மகிழ்வுடன் இருக்கும்போது கடப்பதே தெரியாமல் நகர்ந்துவிடுகிறது. நான்கு மணி நேரம், பதினைந்து நிமிடங்களாகத் தெரிந்தது. இது எப்படி? மகிழ்ச்சியின்போது விரைவாகவும், கவலையின்போது மெதுவாகவும் நேரம் நகருமா? இப்போது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். “நேரம் எப்போதும் ஒரே அளவில்தான் நகர்கிறது. அவனின் உணர்வுகளைப் பொறுத்து, நேரத்தை மாற்றிப் புரிந்துகொள்கிறான்” என்பீர்கள். சரி, இந்த உதாரணத்தையும் பார்த்துவிடுங்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 32 - நேரம் என்பது மாயையா?

நீங்கள், 7 அல்லது 8 வயதுச் சிறுவனாக இருக்கும்போது, பாடசாலையிலிருந்து வீடு வந்ததும், புத்தகப் பையைத் தூக்கியெறிந்துவிட்டு நண்பர்களுடன் விளையாடச் சென்றுவிடுவீர்கள். விளையாட்டு... விளையாட்டு... அப்படியொரு விளையாட்டு. இருட்டாவதற்கு வெகு நேரமெடுக்கும். மாலைப்பொழுது நீண்டதாக இருக்கும். அதே மாலைப்பொழுது, உங்கள் நாற்பது வயதில் வெகு சீக்கிரமாக முடிந்துவிடும். சிறுவனொருவனுடைய நாள் நீண்டதாகவும், ஒரு வயோதிகருடைய நாள் குறுகியதாகவும் இருக்கும். இது உண்மை கணிப்பு. கணிதச் சமன்பாட்டாலும் இதை நிறுவியிருக்கிறார்கள். உங்கள் வாழ்விலும் இதை உணர்ந்திருப்பீர்கள். “அட! முந்தாநாள்தானே புது வருசம் பிறந்தது. அதற்குள் பிப்ரவரி வந்தாச்சா?” என்று அங்கலாய்ப்பீர்கள். அப்படியென்றால், சிறுவர்களின் நேரம் மெதுவாகவும், பெரியவர்களின் நேரம் வேகமாகவும் ஓடுகிறதா? இதற்கும் நீங்கள், “சிறுவர், பெரியவர் அனைவருக்கும் நேரம் ஒன்றுதான். அவரவர் பார்க்கும் விதத்தில்தான் வித்தியாசம் தெரிகிறது” என்பீர்கள். ஆனால் பாருங்கள், சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட்டு, மகிழ்ச்சியாக இருப்பார்கள். பெரியவர்களுக்கு அவை குறைவாகவே இருக்கும். மேலே பார்த்த இளைஞனின் உதாரணத்தின்படி, மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்குத்தானே நேரம் விரைவாக நகர வேண்டும்... முதியவர்களுக்கு மெதுவாகத்தானே நகரும். இங்கு தலைகீழாக அல்லவா நேரம் நகர்ந்திருக்கிறது. அது எப்படி? மனிதனுக்கு மனிதன், சூழ்நிலைக்கேற்ப நேரம் மாறுகிறதென்று எடுத்துக்கொள்ளலாமா... இதனால்தான், நேரம் ஒரு மாயையென்று அறிவியல் சொன்னதா? இல்லை!

அறிவியல் சொன்னது இதையல்ல. அது வேறு. ஒரு நொடியில், ஒரு நொடியைக் கடந்து செல்வதே நேரம் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். அதன்படிதான் கடிகாரங்கள் நேர்த்தியான நேரத்தைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. 24 மணியில், ஒரு நாளையும் கடக்கிறோம். அப்படியே மாதம், வருடம் எல்லாம் கடக்கின்றன. ஆனால், இவையெல்லாம் சரியான கணிப்பீடுகள்தானா... நேரம் என்பது கடிகாரம் என்னும் ஓர் இயந்திரம் கணிக்கும் கால அளவீடு மட்டும்தானா?

கடிகாரம் 24 மணி நேரத்தைக் காட்டுகிறது. 24 மணி எப்படி வந்தது? பூமி தன்னைத்தானே ஒரு தடவை சுற்றிவருவதற்கு ஒரு நாள் தேவைப்படுகிறது. அதாவது, அதற்கு 24 மணி நேரம் தேவையாகிறது. பின்னர் அதை வகுத்து, நிமிடங்கள், நொடிகளைப் பெறுகிறோம். கடிகாரம் எனும் இயந்திரமும் அந்த அளவீட்டின்படிதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால் நேரம், பூமி சார்ந்ததாகிவிடும். வெள்ளிக்கோள் தன்னைத் தானே சுற்றுவதற்கு 243 பூமியின் நாள்கள் ஆகின்றன. வெள்ளியின் ஒரு நாள், பூமியின் 243 நாள்களுக்குச் சமம். ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனியே வெவ்வேறு நாள்கள் இருக்க முடியதல்லவா... பிரபஞ்சம் முழுவதற்குமான பொதுவான நேரத்தை எப்படி எடுத்துக்கொள்வது? ஒரு பேச்சுக்கு, பூமியின் நேரத்தைப் பிரபஞ்சத்துக்குப் பொதுவானதாக எடுத்துக்கொண்டாலும், பூமி தன்னைத் தானே சுற்றி, ஒரு நாளை முடிப்பதற்கு 24 மணி நேரம் என்பதே தப்பான கணிப்பு.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 32 - நேரம் என்பது மாயையா?

23 மணி, 56 நிமிடங்கள், 4 நொடிகளில் பூமி ஒரு தரம் சுற்றுகிறது. 3 நிமிடம் 56 நொடிகள் குறைவான நேரம். நமது நாள் மணி நேரக் கணக்கீடே மொத்தமாகத் தவறாகிறது அல்லவா? ஒரு நாள் 24 மணி என்பதே தப்பாகும்போது, ஏனைய காலக் கணக்குகள் எப்படிச் சரியாக அமைய முடியும்? நேரம், பூமிக்கு மட்டும் சொந்தமானதல்ல, மொத்தப் பிரபஞ்சத்துக்கும் பொதுவானது. பிக்பாங் பெருவெடிப்பு, 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானது எனும் கால கணிப்புகள், மொத்தப் பிரபஞ்சத்துக்கும் சொந்தமானவை. அதனால், சரியான அளவீட்டைத் தரக்கூடிய ‘சீசியம் அணுக்கடிகாரம்’ (Cesium

Atomic Clock) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலமே தற்சமயம் சரியான நேரத்தை கணிக்கிறோம். சீசியம் அணுவுக்குள் ஏற்படும் அதிர்வுத் துடிப்புகளைக் கணக்கிட்டு, அந்தக் கடிகாரம் இயங்குகிறது. ஒரு நொடிக்கு, மிகச்சரியாக 9,19,26,31,770 துடிப்புகளை சீசிய அணு கொண்டிருக்கிறது. இதுவே இன்றிருக்கும் மிகத்துல்லியமாக நேரத்தை அளவிடும் கடிகாரம். நேரத்தைத் துல்லியமாக அளக்க முடியும்போது, எதற்காக அதை மாயை என்று சொல்ல வேண்டும்? இந்த இடத்தில்தான் ஐன்ஸ்டைன் வந்து எட்டிப்பார்க்கிறார். என்னால், முடிந்த அளவுக்குக் கடுமையான அறிவியலை எழுதி உங்களைப் பயமுறுத்துவதைத் தவிர்க்க விரும்புகிறேன். அதனால், மேலோட்டமாக அறிவியலைத் தொட்டுச்செல்வோம்.

‘ஒவ்வொரு நொடிக்கும் ஒரு நொடியாக, ஒரே இடைவெளியில் கடப்பதுதான் நேரமென்று நாம் நம்புகிறோம். நிஜத்தில் அது அப்படியல்ல. நேரம் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவமானது’ என்று ஐன்ஸ்டைன் கூறினார். `நீங்கள் அசையாமல் நிற்கும்போது, உங்கள் நண்பர் வேகமாகக் கடந்து சென்றால், உங்கள் கடிகாரத்தின் நேரத்துக்கும், அவரது கடிகாரத்தின் நேரத்துக்கும் வித்தியாசம் இருக்கும்’ என்றார். மேலே நான் கூறியிருக்கும் உதாரணங்கள்போல, நேரத்தை உணர்ந்துகொள்ளும் கணிப்பல்ல ஐன்ஸ்டனுடையது. அணுக் கடிகாரங்களைக் கொண்டு பெறப்படும் நிஜமான கணிப்புகளால் பெற்றுக்கொண்ட முடிவுகள். இயங்கும் மனிதனின் வேகத்தைப் பொறுத்து, அவனது நேரமும் மாறிக்கொண்டிருக்கும். விரைவாகச் செல்பவனின் கடிகாரம் மெதுவாக ஓடும். வேகம் அதிகரித்துச் செல்லச் செல்ல, நேரமும் குறைந்துகொண்டே வரும். பிரபஞ்சத்தில் அதிக வேகமாகச் செல்வது ஒளியென்பது உங்களுக்குத் தெரியும். ஒளியின் வேகத்தை ஒருவன் அடைந்துவிட்டால், அவனுக்கான நேரமும், பூஜ்ஜியத்தை அண்மித்துவிடும். இதிலிருந்து, கடிகாரம் எனும் இயந்திரத்தில் நேரம் தங்கியிருக்கவில்லை என்பது புரிகிறதல்லவா? ஒவ்வொருவனின் இருத்தலையும் அசைவையும் பொறுத்து இயங்குவதே நேரம். உதாரணமாக, ஒரே வயதுடைய இரட்டைச் சகோதரர்களை எடுத்துக் கொள்வோம். ஒருவர் போர் விமானத்தின் விமானி யாகவும், மற்றவர் கன்ட்ரோல் டவரில் பணிபுரிப வராகவும் இருக்கிறார்கள். விமானி எப்போதும் பறந்துகொண்டே இருப்பார். இறுதிக் காலத்தில் அந்த இருவருக்குமான வயதை கணித்தால் விமானிக்கு, மற்றவரைவிட வயது குறைவாக இருக்கும். வித்தியாசம் ரொம்பக் குறைவாக இருந்தாலும், வித்தியாசம் இருப்பது உண்மை. காரணம், விமானியின் கடிகாரம் வேகத்தின் காரணமாக மெதுவாக நகர்ந்ததே! ஐன்ஸ்டைன் இன்னும் ஒன்றையும் சொன்னார். `ஈர்ப்பு விசையாலும் நேரம் மாற்றமடைகிறது’ என்றார்.

கடல் மட்டத்தில் வசிக்கும் ஒருவரின் கடிகாரத்தைவிட, மலை உச்சியில் வசிப்பவரின் கடிகாரம் மெதுவாகவே நகரும். ஈர்ப்புவிசை குறையக் குறைய நேரமும் மெதுவாகும். உயரம் மேலே போகப் போக ஈர்ப்புவிசை குறைய ஆரம்பிக்கிறது. 20,000 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கும் ஜிபிஎஸ் சாட்டிலைட்டுகளின் கடிகாரங்கள், இந்த நேர வித்தியாசங்களைக் கணக்கில்கொண்டே அமைக்கப்பட்டிருக்கின்றன. எங்கெல்லாம் ஈர்ப்புவிசை அதிகமோ, அங்கெல்லாம் நேரம் அதிகமாக மாறிவிடும். இதன்படி, பூமியின் கடிகாரத்துக்கும் வியாழன் கோளின் கடிகாரத்துக்கும் அதிக வித்தியாசம் காணப்படும். பிரபஞ்சத்தின் ஒவ்வோர் இடமும் வெவ்வேறு ஈர்ப்புவிசையைக்கொண்டவை. பிரபஞ்ச வெளியின் ஈர்ப்புவிசைக்கு ஏற்ப அதன் வெளியும் வளைகிறது. அதனால், நேரமும் மாறுகிறது. சர்ரியலிச ஓவியரான சல்வடார் டாலியின் (Salvador Dali) கடிகார ஓவியம்போல நேரமும் வளைகிறது எனலாம்.

நேரம் என்பது நிலையானது அல்ல என்பது புரிகிறதா? அது ஒரு மாயை என்று சொல்வதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம் என்ற எதுவுமே இல்லை என்கிறது நவீன இயற்பியல். இறந்தகாலத்திலிருந்து இந்தக் கணம்வரை, இந்தக் கணத்திலிருந்து எதிர்காலம்வரை. ஒவ்வொரு பிளாங்க் நொடியும், தனித் தனிப் படமாகப் பிரபஞ்சவெளியில் பதிவுசெய்து வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். புரிந்துகொள்ளச் சற்றுக் கடினமானது. சினிமாப் படச்சுருளின் தனித் தனி ஃபிலிம்போல ஒவ்வொரு கணமும் உறைந்திருக்கிறது. அந்தக் காட்சிகளை வரிசையாகக் கிரகிப்பதால், வாழ்ந்து கொண்டிருப்பதாக மூளை புரிந்துகொள்கிறது. ஆற்றுநீர் ஒரு திசைநோக்கிப் பாய்வதுபோல, இறந்தகாலத்திலிருந்து எதிர்காலத்துக்கு வாழ்க்கையும் நகர்வதாக நினைத்துக்கொள்கிறோம். சினிமாப் படச்சுருளின் ஒவ்வொரு ஃபிலிமையும் குறித்த வேகத்தில் நகரவைப்பதால், நகரும் காட்சியுடைய திரைப்படமாக நினைக்கிறோம் அல்லவா? அதுபோல. என்றாவது ஒருநாள் ஆற்றின் திசைக்கு எதிராகப் பயணம் செய்யும் படகொன்றை மனிதன் உருவாக்குவான். அப்போது அவன், நிகழ்காலத்திலிருந்து இறந்தகாலம் நோக்கிப் பயணத்தைத் தொடங்குவான்.

இந்த அடிப்படைகளைவைத்தே ‘நேரம் ஒரு மாயை’ என்று அறிவியல் கூறுகிறது. ஆனாலும், இது இன்னும் ஆழமானது. அவற்றைச் சொல்வதால், நம்மை ஆழமான அறிவியலுக்குள் இறக்கிவிடும். அதனால், அதை முடிந்தவரை தவிர்த்துவிட்டுச் சற்று மேலோட்டமாகச் சொல்லியிருக்கிறேன். இப்போது, உங்கள் கைக்கடிகாரத்திலோ செல்போனிலோ நேரம் என்னவென்று பாருங்கள்... ஓர் எளிய புன்னகையோடு அதைச் சந்தேகப்படுவீர்கள்!

(தேடுவோம்)