
இறப்புக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை, இறந்தவர்கள் நமக்குச் சொல்ல முடியாது. ஆனால், இறப்பின் எல்லைக் கதவைத் தட்டிவிட்டு, எட்டிப் பார்த்துத் திரும்பியவர்கள் பலர் இருக்கிறார்கள்.
“மரணத்துக்குப் பின்னர் மனிதனுக்கு என்னவாகும்?” எனும் கேள்வி, மிகவும் அடிப்படையானதும் அர்த்தமுள்ளதுமாகும். ஆனால், இதுவரை யாருமே பதில் சொல்லாத கேள்வியும் அதுதான். உலகில் மிகப்பெரிய மர்மம் உண்டென்றால், அதுவும் இதுவாகத்தான் இருக்கும். மரணத்தின் மர்ம முடிச்சை அவிழ்ப்பதற்குப் பலர் முயன்றிருக்கிறார்கள். இன்றுவரை எவராலும் முடியவில்லை. மதங்களும் தத்துவங்களும் தம்வழியே பலவித விளக்கங்கள் கொடுத்தாலும், மரணத்தின் வாசல் கதவுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. நசிகேதனுக்கு அது பற்றி யமன் கூறியதாகப் புராணக் கதைகள் சொல்கின்றன. மதங்கள் அதன்வழியேதான் மனிதர்களை அணுக முயல்கின்றன. ‘நீ வாழ்வதன் அர்த்தம், மரணத்துக்குப் பின்னரான அடுத்த நிலையை உயர்த்துவதாக இருக்க வேண்டும்’ எனும் அடிப்படைக் கருத்துகளுடன்தான், மனிதன் மதங்களினூடாக அழைத்துச் செல்லப்படுகிறான். அதனால் மரணத்தின் பின் நிலையை, ஒவ்வொரு மதமும் ஆணித்தரமாகப் பதிவுசெய்கின்றன. வெவ்வேறு விதங்களில் விளக்குகின்றன. சொர்க்கம் அல்லது நரகம், மறுபிறப்பு, நித்திய மோட்சம், உயிர்த்தெழுதல், எழுபிறப்பு என்று பல வகைகளில் கற்பிக்கின்றன. ஆனால், மரணத்தின் ரகசியத்துக்கான தெளிவான பதில் எவரிடமும் இல்லை. மத நம்பிக்கை இல்லாதவர்களோ வேறுவிதமான பதிலைச் சொல்கிறார்கள். ‘மரணத்துக்குப் பின்னர் என்ன?’ எனும் கேள்விக்கு, ‘எதுவும் இல்லை’ என்கிறார்கள். ‘சுவிட்சை ஆஃப் செய்ததுபோல உயிரடங்கிவிடும். அப்புறம் வெறும் இருட்டு. அவ்வளவுதான்’ என்கிறார்கள். அப்படிப் பார்த்தாலும், இவர்கள் சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களில் யார் சொல்வது சரி... அல்லது யாருமே சரியாகச் சொல்லவில்லையா?
மத நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள் இருவருமே தங்களுக்குத் தெரியாத ஒன்றைப் பற்றியே கருத்துகளைச் சொல்கிறார்கள். ஆனால், தங்கள் கருத்துகளில் திடமாக இருக்கிறார்கள். அவற்றின் மூலம் அடுத்தவர்களைக் காயப்படுத்தவும் செய்கிறார்கள். இதன் மத்தியில்தான் மரணத்தின் உண்மையை நாம் தேடவேண்டும். மரணத்தின் பின்னரை நிச்சயமாகச் சொல்ல முடியாது. என்றாலும், மரணம் நிச்சயமானது என்று அனைவருக்கும் தெரியும். அந்த மரணத்தில் என்னதான் ஒளிந்திருக்கிறது என்பதைத் தூர நின்று பார்க்கப்போகிறோம்.

இறப்புக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை, இறந்தவர்கள் நமக்குச் சொல்ல முடியாது. ஆனால், இறப்பின் எல்லைக் கதவைத் தட்டிவிட்டு, எட்டிப் பார்த்துத் திரும்பியவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி இறப்பின் விளிம்புவரை சென்றவர்களின் அனுபவங்களை (Near Death Experience), அந்தத் துறையின் வல்லுநர்கள் சிலர் ஆராய்ந்திருக்கிறார்கள். நரம்பியல்துறையில் வல்லுநர்களான ஜிம் டக்கர் (Jim Tucker - Prof of Psychiatry and Neurobehavior), புரூஸ் கிரேசன் (Bruce Greyson - Prof Emeritus of Psychiatry), எட்வர்டு கெல்லி (Edward Kelly - Prof of Psychiatry and Nuerobehavior) ஆகிய மூவரும் அவர்களில் முக்கியமானவர்கள். அவர்களின் கூற்றையே உங்களுடன் பகிரப்போகிறேன். அவர்களின் அனுபவங்கள் அமானுஷ்யம் நிறைந்தவை. ஆனாலும், ஆச்சர்யமானவை. அவற்றில் சில சம்பவங்களைப் பார்க்கலாம்...
ஜேம்ஸ், 25 வயதுள்ள ஆண் தாதி. ஏதோவொரு காரணத்தால், மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார். பணிபுரியும் மருத்துவ மனையிலிருந்து மருந்துகளைக் கொண்டுவந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஆனால், மரணம் சீக்கிரம் அவரை நெருங்கவில்லை. எடுக்கப்பட்ட மருந்துகளின் விளைவால் வலியில் துடித்து, படிப்படியாக வலுவிழந்து கொண்டிருந்தார். ஒருநிலையில் மரணத்தின் விளிம்பைத் தொட்டார். அவருக்கு மாயக் காட்சிகள் (Hallucinations) தோன்றுவதாக அவரே உணர்ந்தார். உடலிலிருந்து மெல்லக் கிளம்பி மேலே மிதக்க ஆரம்பித்தார். அவரது உடல் கீழே படுத்திருப்பதை அவரே உயரத்தில் இருந்தபடி அவதானிக்கத் தொடங்கினார். ‘நான் இப்போது காண்பது நிஜமல்ல, மாயக் காட்சிகள்’ என்று தானே எண்ணிக்கொண்டார். அப்போது அவருக்கு எந்த வலியும் இருக்கவில்லை. சில கணங்கள் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவர், மருத்துவமனையில் விழித்திருக்கிறார். தனது உடல் கட்டிலில் இறந்துபோய் இருப்பதை அவரே கண்டதை மருத்துவர்களிடம் சொன்னார். இந்தச் சம்பவம்போலத் தங்கள் உடலைத் தாங்களே கண்டதாகப் பலர் சொல்லியிருக்கிறார்கள்.
இது எப்படிச் சாத்தியம்? ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். இங்கு ‘ஆன்மா’, ‘ஆன்மிகம்’ எதையும் நான் முன்வைத்துப் பேசவோ, கலக்கவோ விரும்பவில்லை. இதை ஆராய்பவர்களுக்கும் அந்த எண்ணம் கிடையாது. அவர்கள் ஆன்மிகவாதிகளும் இல்லை. ஜேம்ஸின் உடலைவிட்டு, அவரின் உணர்வு (Conscious) பிரிந்து நின்றதாகவே அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இது சாத்தியம்தானா என்பதே நம் முன்னே இருக்கும் கேள்வி. ‘நீங்கள் உணர்வு என்று சொல்வதைத்தான் நாங்கள் ஆன்மா என்கிறோம்’ என்று உங்களில் எவராவது சொல்ல வரலாம். ஆனால், சற்றுப் பொறுத்திருங்கள். அனைத்தையும் முழுமையாகப் படியுங்கள். உணர்வுக்கான அர்த்தத்தை என்னவென்று பார்த்துவிட்டு, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். இந்த ஒன்றையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். பார்ப்பதற்குக் கண்கள் தேவை. உணர்வுக்குக் கண்கள் கிடையாது. அது எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது, அவர்களின் ஆராய்ச்சியில் சம்பந்தப்பட்ட இன்னுமொரு நபரின் கதையைக் கேளுங்கள்...
ஆல்பர்ட் ஒரு லாரி ஓட்டுநர். திடீரென இதயக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிலைமை மோசமாக இருந்ததால், ஆபரேஷன் தியேட்டருக்கு பைபாஸ் செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்டார். ஆபரேஷனும் ஆரம்பமானது. ஆபரேஷன் நடந்துகொண்டிருக்கும் வேளையில், ஆல்பர்ட் தனது உடலைவிட்டுப் பிரிந்து மேலே மிதக்க ஆரம்பித்தார். கீழே பார்த்தபோது, அவரின் உடல் பச்சைத் துணியால் மூடியிருக்க, டாக்டர்கள் அவரைச் சூழ்ந்திருந்தார்கள். அவருக்கு ஆபரேஷன் செய்யும் சர்ஜனையும் பார்த்தார். அப்போது சர்ஜன் செய்த நூதனமானதொரு செயலையும் அவதானித்தார். சர்ஜன் அடிக்கடி இரண்டு கைகளையும் மடித்தபடி பறப்பதுபோலச் செய்துகொண்டிருந்தார். அவரும் தன்னைப்போல மிதக்க விரும்புகிறாரோ என்றுதான் ஆல்பர்ட் நினைத்தார். ஆபரேஷன் வெற்றியாக முடிந்தது. ஆல்பர்ட்டும் மரணத்தின் விளிம்பிலிருந்து உயிர் பிழைத்து, மயக்கத்திலிருந்து மெல்ல விழித்துக்கொண்டார். தனக்கு நடந்தவற்றை மருத்துவர்களிடம் அவர் கூறினார். அவர் சொன்னவை சாதாரணமாகத் தோன்றினாலும், சர்ஜன் பறக்க முயன்றதாகச் சொன்னது தவறாக இருந்தது. ஆனால், இதை ஆராய்ச்சி செய்தவர்கள் சர்ஜனிடம், “நீங்கள் பறப்பதுபோலக் கைகளை அசைத்தீர்களா?” என்று கேட்டபோது, அவர் ‘ஆமாம்’ என்று பதிலளித்திருக்கிறார். ‘கைகளில் கையுறைகள் அணிந்த நிலையில், ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட கையுறைகள் எங்கும் பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கைகளை மடித்து, முழங்கைகளால் அங்கும் இங்கும் அசைத்து சக வைத்தியர்களுக்கு ஆணையிடுவேன்’ என்று சர்ஜன் விளக்கியிருக்கிறார். ஆல்பர்ட் ஒருவித மயக்கநிலையில்தான் ஆபரேஷன் தியேட்டருக்கே கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்தவர்களை ஆல்பர்ட்டால் காணவே முடியாது. ஆபரேஷன் நடந்தபோதும், முடிந்து வெளியே வரும்வரையிலும் மயக்கத்திலேயே இருந்தார். அவரால் எப்படி அந்த சர்ஜனைப் பார்த்திருக்க முடியும்... மேலேயிருந்து பார்த்த ஒருவரால் மட்டுமே அவரின் செய்கைகளைச் சொல்ல முடியுமல்லவா?
இந்தச் சம்பவமும் முதலில் நடந்த சம்பவம்போல இருந்தாலும், சற்று நம்ப முடியாத கட்டுக்கதைபோல இருக்கிறது. நம்புங்கள் ஆல்பர்ட் சொன்னவை உண்மையானவையே! ஆல்பர்ட் குருட்டாம்போக்கில் அடித்து விட்டதாக வேண்டுமானால் விளக்கம் கொடுக்க முடியும். ஆனால், அந்த அளவுக்குத் துல்லியமாகக் குருட்டாம்போக்கில் அடித்துவிட முடியாதல்லவா? இங்கும் உடல் கீழேயிருக்க, உணர்வு மட்டும் மேலெழுந்து பார்த்திருக்கிறது. அப்படியென்றால், உணர்வால் பார்க்க முடிகிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? நம்பும்படி எதுவுமே இல்லையே. அடுத்த சம்பவத்தைச் சொன்னால், என்னை அடிக்கவே வருவீர்கள். ‘அறிவியலை எழுதுவதாகச் சொல்லிவிட்டு, மூடநம்பிக்கைகளை விதைக்கப் பார்க்கிறார்’ என்று கோபிப்பீர்கள். ஆனால், இந்தச் சம்பவங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மிகவும் நம்பிக்கையான தரவுகளிலிருந்து தேர்ந்தெடுத்து உங்களுக்குச் சொல்கிறேன். இந்தத் தரவுகள் எதுவும் சாதாரண மக்களின் வழியே கேட்டுத் தெரிந்தவையல்ல. இவற்றைவிடவும் மிகவும் ஆச்சர்யமான கதைகள் நம்மவர்களிடையே உண்டு. அவற்றுக்கான ஆதாரங்கள் என்னிடம் இல்லாததால், இவர்கள் கூறுவதைச் சொல்கிறேன். அடுத்த சம்பவத்தையும் பார்த்துவிடுவோம் வாருங்கள்...

ஒன்பது வயது பையனான எட்டி, மூளைக் காய்ச்சலால் கோமா மயக்கத்துக்குச் சென்றான். கிட்டத்தட்ட 36 மணி நேரம் மயக்கத்திலிருந்தான். இறந்துவிடுவான் என்று நம்பப்பட்ட எட்டி, கடைசி நிமிடங்களில் காய்ச்சல் குறைந்து, சகஜ நிலைக்கு வர ஆரம்பித்தான். அப்போது மணி, அதிகாலை 3:00. அவனது குடும்பத்தினர் அனைவரும் கட்டிலைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். எட்டி, மெல்லக் கண் திறந்தான். தான் சொர்க்கத்துக்குப் போய் வந்ததாகச் சுற்றியிருந்த பெற்றோர்களிடம் சொன்னான். சொர்க்கத்தில் இறந்துபோன தனது தாத்தாவைக் கண்டதாகச் சொன்னான். அதையெல்லாம் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவனுக்கு இப்படியான குழப்பக் காட்சிகள் தோன்றுவது சகஜமானது என்றுதான் நினைத்தார்கள். ஆனால், சற்று தாமதித்து அவன் சொன்னதுதான் அவர்களை நடுங்கவைத்தது. நான் என் அக்கா தெரசாவையும் அங்கு கண்டேன் என்றான். அனைவருக்கும் தூக்கிவாரிப்போட்டது. ‘அவர்கள் என்னைத் திரும்பிப் போய்விடும்படி சொன்னார்கள்’ என்றான். பெற்றோர்களுக்குப் பதற்றம் அதிகரித்தது. தெரசா காலேஜில் தங்கிப் படிப்பதற்கு அடுத்த ஊருக்குச் சென்றிருந்தாள். அவள் திடமான தேகாரோக்கியத்துடனும் இருந்தாள். பதற்றத்துடன் அதிகாலை வீடு வந்த பெற்றோர், காலேஜுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டார்கள். அப்போதுதான், ‘அதிகாலை 12:30 மணியளவில் ஒரு கார் விபத்தில் தெரசா இறந்துபோனதாக’ அவர்களுக்குச் சொல்லப்பட்டது. எட்டிக்கு தெரசா இறந்தது எப்படித் தெரியும்... ஒரு சினிமாக் கதையைக் கேட்பதுபோல இருக்கிறதல்லவா... இதை எந்த வகையில் சேர்ப்பது? சொர்க்கம் என்பதை அந்தச் சிறுவன் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறான் என்பது தெரியாது. ஆனால், இறந்தவர்களை அவன் பார்த்ததை மட்டும் தெளிவான கருத்தாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இறந்த பின்னர் ஆன்மாக்கள் இருக்கலாம் என்று எடுத்துக் கொண்டாலும், அவை அதே உருவத்துடன் இருக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒருவர் இறந்துவிட்டால், அவரின் உருவத்துக்குச் சொந்தமான உடல் அழிந்துவிடுகிறதே! எப்படி அதே உருவத்துடன் அந்த ஆன்மா வேறெங்கோ இருக்க முடியும்... இந்தக் குழப்பங்களுக்கு எப்படித் தீர்வைக் கொடுப்பது... இவற்றுக்கான விளக்கங்கள் ஏதும் இருக்க முடியுமா... இல்லையென்றால், இவர்கள் அனைவரும் மனப்பிராந்தியில் உளறிய கதைகள் என்று சுலபமாக ஒதுக்கிவிடலாமா?
மொத்தச் சிக்கலையும் ஒருவேளை அறிவியல் தீர்த்துவைக்கலாம். இல்லை, திருப்தியான கருத்துகளையாவது சொல்லலாம். மேலும் ஆச்சர்யமான சம்பவங்களுடன் அடுத்த பகுதியில் சந்திக்கிறேன்.
(தேடுவோம்)