மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 34 - உயிரெழுத்துகள் எங்கே பதியப்படுகின்றன?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?

உலகத்தை அல்லது பிரபஞ்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டும், இரண்டு வகைப் பொருள்களால்தான் கட்டப்பட்டிருக்கின்றன.

கடந்த பகுதியில் சொல்லப்பட்ட ஜேம்ஸ், ஆல்பர்ட், எட்டி ஆகியோரின் கதைகளை நீங்கள் சுலபத்தில் மறந்திருக்க மாட்டீர்கள். அவற்றைப் படிக்கும்போது, ஏற்கெனவே கேள்விப்பட்ட எத்தனையோ கதைகள் உங்கள் ஞாபகத்துக்கு வந்துபோயிருக்கும். படித்த, பார்த்த, அயலில் நடந்ததாக அந்தச் சம்பவங்கள் இருக்கலாம். அவற்றை, ‘மரணத்தின் அருகிலான அனுபவம்’ (Near Death Experience) என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அவை உண்மையா, பொய்யா என்று கேட்டால், பொய்யென்று சொல்வது சுலபமானது. கனவு போன்ற காட்சிகளைக் கண்டிருக்கலாம் அல்லது அவர்கள் பொய் சொல்லியிருக்கலாம் என்று சொல்லி, அதிலிருந்து விலகிவிடலாம். அதற்குமேல் அது பற்றிப் பேச அவசியமே இருக்காது. ஒருவேளை, அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கும்பட்சத்தில், முடிந்தவரை அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது நம் கடமையாகிறது. உண்மையென்று எடுத்துக்கொண்டாலும் ஆன்மா, ஆன்மிகம், கடவுள் என்று சிக்கலில்லாத பதிலைச் சொல்லியும் கணக்கை முடித்துக்கொள்ளலாம். யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருக்காது. இவை அனைத்தையும் தாண்டி, உண்மை வேறெங்கோ ஒளிந்திருக்கலாம் அல்லவா? அதையே நாம் கண்டுபிடிக்க வேண்டும். உண்மைக்கு மிக நெருக்கமான பதிலாக அது இருக்கலாம். அதைப் பார்ப்பதற்கு முன்னர், கடந்த பகுதியில் சொல்லாமல் விட்டுப்போன ஜாக்கின் கதையையும் சொல்லிவிடுகிறேன்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 34 - உயிரெழுத்துகள் எங்கே பதியப்படுகின்றன?

மின்னியல் பொறியாளரான ஜாக்கின் வயது 25. நிமோனியாவால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டான். மருத்துவமனையில் பணிபுரியும் ‘ஆன்னி’ எனும் இளம் தாதி, அவனது படுக்கையின் தலையணையைச் சரிசெய்தபடி அவனுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த வாரக் கடைசியில், தனக்குப் பிறந்ததினம் வருகிறது என்று பேச்சின் மத்தியில் சொன்னார். அதன் பின்னர் தன் பணியை முடித்துக்கொண்டு ஆன்னி வீட்டுக்குப் புறப்பட்டார். மறுநாள் காலை ஜாக்கின் நிலைமை மிகவும் மோசமானது. காய்ச்சல் அதிகமாகி சுயநினைவை இழந்தான். இறப்பின் விளிம்புவரை சென்றான் என்றுதான் சொல்ல வேண்டும். மருத்துவர்களின் போராட்டத்துக்குப் பின்னர் மீட்டெடுக்கப்பட்ட ஜாக், மெல்ல மெல்ல சுயநிலைக்கு வந்தான். தான் ஏதோவோர் இடத்துக்குச் சென்றதாகவும், அங்கு ஆன்னியைக் கண்டதாகவும் சொன்னான். அதோடு, “என் பெற்றோரிடம் சிவப்பு நிறக் காரைப் பரிசாகப் பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றியதற்கு மன்னிப்புக் கேட்டதாகச் சொல் என்றும் ஆன்னி சொன்னாள்” என்றான். அதைக் கேட்ட அங்கிருந்த இன்னொரு தாதி வாய்விட்டு அழ ஆரம்பித்தார். முதல்நாள் இரவுதான் கார் விபத்தில் ஆன்னி இறந்திருந்தாள். அவளுடைய பெற்றோர் அவளுக்கே தெரியாமல் பிறந்தநாள் பரிசாகச் சிவப்பு நிறக் கார் ஒன்றை வாங்கிவைத்திருந்தார்கள் என்பதும் பின்னர் தெரியவந்தது. அந்த விவரங்கள் ஜாக்குக்கு எப்படித் தெரிந்தன... இதை எப்படி நாம் புரிந்துகொள்வது... ஆன்னியை ஜாக் பார்த்திருக்க முடியுமா... அவளுக்கான சிவப்பு நிறக் காரை எவ்வாறு அவன் அறிந்துகொண்டான்? எதுவுமே தெரியவில்லை. அமானுஷ்யமாகத்தான் தோன்றுகிறது. உண்மையிலேயே இது அமானுஷ்யம்தானா? அதைத் தெரிந்துகொள்ள நாம் வேறொரு வழியாகச் செல்ல வேண்டும். சரி, சற்று நிமிர்ந்து உட்கார்ந்துகொள்ளுங்கள். இதிலிருந்து நம்முடைய பாதை மாறப்போகிறது. இனி வருவதைப் படிக்க ஆரம்பிக்கும்போது, சற்றுத் தலை சுற்றுவதுபோல இருக்கும். அதெல்லாம் ஒரு நிமிடம் மட்டுமே இருக்கும். தொடர்ந்து படிக்கும்போது தெளிவாகிவிடும். எல்லாம் புரிய ஆரம்பிக்கும். அதனால், எந்த பயமும் இல்லாமல் படிக்க ஆரம்பியுங்கள்.

உலகத்தை அல்லது பிரபஞ்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டும், இரண்டு வகைப் பொருள்களால்தான் கட்டப்பட்டிருக்கின்றன. `பொருள்கள்’ என்று சொல்ல முடியாது. அவற்றை விளக்குவதற்கு வேறு வழியில்லாததால், பொருள்கள் என்கிறேன். அடிப்படைத் துகள்கள் (Fundamental Particles), தகவல்கள் (Information) ஆகிய இரண்டுமே அந்தப் பொருள்கள். பிரபஞ்சத்திலுள்ள எல்லாம் உருவாகக் காரணமான, பிரிக்கவே முடியாத மிக மிகச் சிறிய துகள்களையே, `அடிப்படைத் துகள்கள்’ என்கிறார்கள். அணுதான் மிகச்சிறிய துகள் என்று ஆரம்பத்தில் நம்பினார்கள். பின்னர், அணுவைப் பிரித்து, அதற்குள் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். பின்னர், புரோட்டான், நியூட்ரான் ஆகியவையும் பிரிக்கப்பட்டன. அவற்றினுள் குவார்க்குகளும் (Quarks), குளுவான்களும் (Gluons) இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். குவார்க்குகளும், குளுவான்களும், மேலும் சில துகள்களும் `அடிப்படைத் துகள்கள்’ எனப்படுகின்றன. ஒரு வீட்டைக் கட்டுவதற்குச் செங்கல்லே அடிப்படையாக இருப்பதுபோல, பிரபஞ்சக் கட்டடத்தின் செங்கற்கள் (Building Blocks), இந்த அடிப்படைத் துகள்தான். இப்போது அடிப்படைத் துகள்கள் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். பிரபஞ்சம் முழுவதும் இப்படியான அடிப்படைத் துகள்களைக்கொண்டே கட்டப்பட்டிருக்கிறது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 34 - உயிரெழுத்துகள் எங்கே பதியப்படுகின்றன?

வீடொன்று கட்டுவதற்குச் செங்கல்தான் அடிப்படைப் பொருள் என்று சொன்னேன் அல்லவா... செங்கல் இருந்தால் வீட்டைக் கட்டிவிட முடியுமா... வீடு கட்டப்பட வேண்டிய வடிவ அமைப்பும் தேவையல்லவா? வீடு கட்டுவதற்காக ஒரு வரைபடத்தை உருவாக்குவார்கள். அந்த வரைபடத்தை அடிப்படையாக வைத்துத்தான் செங்கற்களால் வீட்டைக் கட்டுவார்கள். வரைபடம் இல்லாவிட்டால், அழகியதொரு வீடோ, கட்டடமோ கட்ட முடியாது. அந்த வரைபடம், வீட்டைக் கட்டுவதற்கான தகவல்களைக்

(Information) கொண்டிருக்கும். வரைபடத்தின் தகவல்களும், அடிப்படை மூலப்பொருளும் இருப்பதால், கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இதுபோலவே, பிரபஞ்சத்திலுள்ள பொருள்களும், அவை எப்படி அமைக்கப்பட வேண்டுமென்ற தகவல்களைக்கொண்டு அமைக்கப்பட்டிருக் கின்றன. நவீன இயற்பியலின்படி அடிப்படைத் துகள்களும், தகவல்களும் அழிக்கவே முடியாதவை. பேரண்டப் பெருவெளியில் நிரந்தரமாக எப்போதும் அவை இருந்துகொண்டே இருக்கும்.

உங்களுக்கு முன்னால் இருக்கும் ஒரு பொருளை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பொருள் மனிதனால் செய்யப்பட்டது என்றால், அதை யாரோ ஒருவன் டிசைன் செய்திருக்க வேண்டும். பொருளைத் தயாரிக்கும் மூலப்பொருளுடன், அதன் வடிவமைப்புக்கான டிசைனும் அதன் தயாரிப்புக்கு வேண்டும். இல்லையெனில், அப்படியொரு பொருளை உருவாக்கவே முடியாது. தகவல் எவ்வளவு முக்கியமானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். செயற்கையாக உருவாக்கும் பொருள்களுக்கு ஒரு டிசைனர் இருக்க முடியும். இயற்கையான பொருள்களுக்கு யார் டிசைனர்? ஓர் ஆப்பிளை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஆப்பிள், உயிர்க்கலங்களால் (Cells) உருவானது. அந்தக் கலங்கள் எதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, ஆப்பிளின் உருண்டை வடிவத்தில் அடுக்கப்படுகின்றன... யார் அவற்றுக்கு அப்படி அடுக்கப்பட வேண்டும் என சொல்லிக் கொடுத்தது... அழகான நிறத்துடன் இருக்க வேண்டும் என்று ஆப்பிள் எங்கே கற்றுக்கொண்டது? பதில், ரொம்ப சிம்பிள். ஆப்பிளின் கலங்களினுள் மரபணுக்கள் என்று சொல்லப்படும் ‘ஜீன்கள்’ (Genes) இருக்கின்றன. அந்த ஜீன்களுக்குள் ‘டிஎன்ஏ’ (DNA) ஏணிச்சுருள்கள் காணப்படுகின்றன. அவற்றில்தான் ஆப்பிளுக்கான குறியீடுகள் எல்லாமே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

A, G, C, T எனும் நான்கு ஆங்கில எழுத்துகளைக் கொண்டு ஆப்பிளுக்கான குறியீடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை மூலமாகவே ஓர் ஆப்பிள், தன்னை ஆப்பிளாக உருவாக்கிக் கொள்கிறது. இப்போது உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இவ்வளவு அழகாக இருப்பதற்கும், காதின் நுனியில் சிறிய மடிப்பு இருப்பதற்கும், உங்கள் கலங்களுக்குள் பொதிந்திருக்கும் மரபணுக்களின் ஜெனடிக் குறியீடுகள்தான் (Genetic Codes) காரணம். கட்டடமோ, மனிதனோ, மரங்களோ, மானோ, மீனோ, உலகில் இருக்கும் எந்தப் பொருளானாலும், அவற்றைக் கட்டமைக்கத் தேவையானவை அடிப்படைத் துகள்களும், அதற்கான இன்ஃபர்மேஷனும்தான். இவை இரண்டையும் யாராலும் அழிக்க முடியாது என்கிறது அறிவியல்.

அடிப்படைத் துகள்களாலும், தகவல்களாலும் ஒரு மனிதன் உருவாக்கப்படுகிறான் என்று நான் கூறியது, உங்களுக்குப் புரிந்திருக்கும். மனிதன் இரண்டு வகையான தகவல்களைக்கொண்டவன். ஒன்று, அவனது உருவத்தின் கட்டமைப்புக்கான தகவல்கள், ஜீன்களில் பதிவுசெய்யப்பட்டிருப்பது. இன்னுமொன்று, வாழ்க்கையில் அவன் கற்றுக்கொண்ட அனுபவங்கள் ஞாபகத் தகவல்களாக மூளையில் பதிவு செய்யப்பட்டிருப்பது. பார்த்தது, கேட்டது, நுகர்ந்தது, உணர்ந்தது, அனுபவித்தது என்று பல தகவல்களை மூளை பதிந்துவைத்திருக்கிறது. இவையும் ஒருவிதத் தகவல்களே! அவனது உடலெங்கும் காணப்படும் கலங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் அவன் மூளையில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் தகவல்கள் ஆகிய இரண்டு வகைத் தகவல்களாலும், அடிப்படைத் துகள்களாலும் மனிதன் உருவாகியிருக்கிறான். அந்த மனிதன் ஒருநாள் மரணமடைகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் என்ன நடைபெறும்? இதற்கான பதில்தான், நம்மை ஆரம்பகட்டத்துக்குக் கொண்டுசெல்லப் போகிறது.

ஒருவன் இறந்த பின்னர், அவன் எரிக்கப்படுகிறான் அல்லது புதைக்கப்படுகிறான். புதைத்த சில நாள்களுக்குப் பிறகு, உடலானது அணுக்களாகி, பின்னர் அடிப்படைத் துகள் களாகச் சிதைவுறுகின்றன. எரிக்கப்படும்போதும் அவனது ஒவ்வொரு பாகமும் துகள்களாக மாறிக் காற்றில் கலக்கிறது. மனிதனை உருவாக்கிய அந்தத் துகள்கள் பிரபஞ்ச வெளியில் அழிக்கப்படாமல் சங்கமமாகின்றன. தகவல்களும் அழிக்கப்பட முடியாதவை என்று சொன்னேன் அல்லவா? அந்த மனிதனை உருவாக்கிய தகவல்களும், அவனுள் உருவான தகவல்களும் பிரபஞ்ச வெளியின் ஏதோவோர் இடத்தில் பதிவாகின்றன. இப்போது நான் சொல்வது கதையோ, கற்பனையோ கிடையாது. அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையைக்கொண்டது. நாம் ஆரம்பித்த இடத்துக்கு மீண்டும் வருகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். இதைச் சுருக்கமாக என்னால் புரியவைக்க முடியவில்லை. மரணத்தை விளக்குவது, கத்தியில் நடப்பது போன்றது. சரியாக எடுத்துச் செல்ல வேண்டும். நான் தொட்டிருக்கும் அறிவியல் மிகவும் கடினமானது. அதை உங்களுக்கு லகுவில் புரியவைப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. கொஞ்சம் விரிவாக மரணத்தில் ஒளிந்திருக்கும் மர்மத்தை அடுத்த இதழில் பார்க்கலாம்.

(தேடுவோம்)