மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 35 - இறப்பு இன்னுமொரு தொடக்கமா?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?

இதயத்திலா, மூளையிலா, உடலிலா, ஞாபகத்திலா எங்கே இருக்கிறது? இவை எவற்றிலும் இல்லை

மரணத்துக்குப் பின்னர் மனிதனுக்கு என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, ‘உயிர் என்றால் என்ன?’ எனும் கேள்வி முக்கியம். இந்தக் கேள்விக்கு இதுவரை யாரும் பொருத்தமான பதிலைச் சொன்னதில்லை. தர்க்கமாகவும், தத்துவார்த்தமாகவும், ஆன்மிகமாகவும், அறிவியலாகவும் பலவிதமான கருத்துகள் சொல்லப்பட்டிருக்கின்றன. முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படியான தெளிந்த விளக்கம் எதிலும் இல்லை. உயிருடன் வாழ்வதும், உயிரிழந்து மரணிப்பதும் மனிதன் சந்திக்கும் இரு நிலைகள். இந்த இரண்டு நிலைகளுக்கும் ‘உயிர்’ என்பதே அடிப்படையாகிறது. உயிர் இருக்கும்போது வாழ்க்கை; இல்லாதபோது மரணம். `அந்த உயிர், நம் உடலின் எந்தப் பகுதியில் இருக்கிறது?’ என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இதயத்திலா, மூளையிலா, உடலிலா, ஞாபகத்திலா எங்கே இருக்கிறது? இவை எவற்றிலும் இல்லை, ‘உணர்வுதான்’ (Conciousness) மனிதனின் உயிரென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். 21-ம் நூற்றாண்டில், இந்த ஆராய்ச்சிகள் நிறையவே நடக்கின்றன. நரம்பியல் மற்றும் மனோவியல் நிபுணர்கள் இந்த விஷயத்தைக் கொஞ்சம் தீவிரமாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மரணத்தின் விளிம்புக்குச் சென்ற மனிதர்கள், ஏற்கெனவே இறந்துபோனவர்களைக் கண்டதாகச் சொல்லி யிருக்கிறார்கள். அப்படிச் சொன்னவர்கள் ஒருவரோ இருவரோ கிடையாது. பல ஆயிரக்கணக்கானோர். அவர்கள் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்கும்பட்சத்தில், உடலைப் பிரியும் ஒவ்வொரு மனிதனின் உணர்வும் பிரபஞ்ச வெளியின் ஏதோவொரு இடத்தில் பதிந்திருக்க வேண்டும். அந்த உணர்வுகள் உருவங்களாகவோ, உடல் கொண்டதாகவோ இருக்க முடியாது. ஆனால், அவை ஒவ்வொன்றும் தம்மையும், அடுத்தவர்களையும் ஏதோவொரு வகையில் அடையாளப்படுத்திப் புரிந்துகொள்கின்றன என்றுதான் எடுத்துக்கொள்ளலாம். இதற்குமேல் அங்கு விளக்கம் கொடுக்க முடியாது. ஆனால், அந்த உணர்வுகள் தகவல்களாகவே (Informations) இருக்க முடியும். நவீன இயற்பியலின்படி, பிரபஞ்ச வெளி, அடிப்படைத் துகள்களின் அதிர்வுகளால் (Viberation) துடித்துக்கொண்டிருக்கிறது. மின்சார அதிர்வால் இயங்கும் கணினியின் தகவல்கள்போல, அந்தப் பிரபஞ்ச அதிர்வுகளால் உணர்வுகளும் தம்மை உயிர்ப் புடன் வைத்திருக்கலாம். இவையெல்லாம் ஒருவித அனுமானங்கள் மட்டுமே. உண்மை யானவை என்று சொல்ல முடியாதவை. இவற்றுக்கு அறிவியல் சார்ந்து ஏதாவது விளக்கம் இருக்கலாம். அப்படியொரு விளக்கத்தைத் தேடியே நாம் செல்லப்போகிறோம். அங்கு என்ன விளக்கம் இருக்கிறதென்று கண்டுபிடிக்கலாம் வாருங்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 35 - இறப்பு இன்னுமொரு தொடக்கமா?

இயற்பியலில் நோபல் பரிசுபெற்ற, ‘ஜெரார்டு எட் ஹோஃப்ட்’ (Gerard ‘t Hooft) எனும் டச்சு இயற்பியலாளர், குவான்டம் (Quantum) இயங்கியலில் மிகவும் பிரபலமானவர். அவர் ஆச்சர்யமானதொரு கோட்பாட்டை வெளியிட்டார். “நாம் வாழ்ந்துகொண்டி ருப்பதாக நம்புகிறோம். ஆனால், அதுவொரு ஹோலோகிராம் காட்சியே. நாம் ஒரு ஹோலோகிராம் பிரபஞ்சத்தில் (Holographic Universe) வாழ்ந்துகொண்டிருக்கிறோம்’ என்றார். அதாவது, பிரபஞ்ச வெளியில் எங்கோ ஓர் இடத்தில் ஒளிபரப்பப்படும் ஹோலோகிராம் காட்சியை, வாழ்வதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். எட் ஹோஃப்டின் கோட்பாடு உண்மையாக இருக்கும் பட்சத்தில், வாழ்க்கையில் நாம் புரிந்துகொண்ட அனைத்தும் தாறுமாறாகிவிடும். ‘அவர் வெளியிட்ட கோட்பாட்டைப் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லாமே மாயை என்ற முகத்தில் அறையக்கூடிய ஒரு விஷயத்தை யாரால் ஏற்றுக்கொள்ள முடியும்? ஆனால், அவர் பரிந்துரைத்த கோட்பாடு சரியானதுதான் என்று, இன்னுமோர் இடத்திலிருந்து ஆதரவுக் குரல் எழுந்தது. குரல் கொடுத்தவர் சாதாரண ஆள் கிடையாது. குவான்டம் இயற்பியலில் இன்னுமொரு மைல்கல்லாகக் கருதப்படுபவர். ‘ஸ்ட்ரிங் தியரி’ (String Theory) எனும் புதுமையான கோட்பாட்டின் தந்தை என வர்ணிக்கப்படும் அமெரிக்கரான, ‘லியோனார்டு சஸ்கைண்ட்’ (Leonard Suskind), ஹோலோகிராம் கோட்பாட்டை ஆதரித்ததோடு, அதை விரிவாக ஆராய்ந்து மேலும் பிரபலப்படுத்தினார்.

இவர்கள் இருவரும் குருட்டாம்போக்கில் அந்தக் கோட்பாட்டைச் சொல்லவில்லை. முறையான கணிதச் சமன்பாடுகளால், இயற்பியல்ரீதியாக கணித்த பின் பெறப்பட்ட முடிவுகளின் பின்னரே ஹோலோகிராம் கொள்கையை வெளியிட்டார்கள். அந்தக் கோட்பாடு எதைச் சொல்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் நீங்கள் மிகவும் ஆச்சர்யப்படுவீர்கள். அதற்குக் கொஞ்சமாகக் கருந்துளை பற்றிப் பார்க்க வேண்டும். பொறுமையாகப் படியுங்கள்.

கருந்துளைகளை (Blackhole) நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். நம்ப முடியாத அளவுக்கு அதிக ஈர்ப்புவிசையைக்கொண்டது கருந்துளை. தன்னருகே வரும் அனைத்தையும் உள்ளே இழுத்து, மைய ஒருமைப் புள்ளிக்குள் சங்கமிக்க வைத்துவிடும். பிரபஞ்சத்தில் அதிக வேகத்துடன் பயணம் செய்யும் ஒளியையே வெளியே செல்லவிடாமல் உள்ளே இழுக்கக்கூடியது. அதனாலேயே, அதற்குக் கருந்துளை என்று பெயரும் கிடைத்தது. நட்சத்திரங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் அதற்குக் கவலையில்லை. அதன் ஈர்ப்பினால் யாரும் தப்ப முடியாமல் விழுங்கப்படுவார்கள். கருந்துளையில் ஒரு பொருள் அகப்பட்டால், நூடுல்ஸ்போல இழுக்கப்பட்டு அதன் அணுக்களெல்லாம் சிதறடிக்கப்படும். பின்னர் அந்த அணுக்கள், அடிப்படைத் துகள்களாகச் சிதைக்கப்படும். எந்தப் பொருளானாலும், அது அடிப்படைத் துகள்களாலும் (Fundemental Particles), தகவல்களாலும் (Information) உருவாக்கப்பட்டது என்று கடந்த பகுதியில் சொல்லியிருந்தேன். அவை இரண்டும் எப்போதும் அழிக்க முடியாதவை என்றும் சொல்லியிருந்தேன். கருந்துளையின் மையத்தை நோக்கி பொருள்களின் அடிப்படைத் துகள்கள் ஈர்க்கப்பட, அந்தப் பொருளின் தகவல்கள், கருந்துளையின் சுவர்களில் பதிவாகின்றன. கருந்துளையில் அகப்படும் ஒவ்வொரு பொருளின் தகவல்களும் கருந்துளைச் சுவரில் படிகின்றன. உதாரணமாக, நமது சூரியன், கருந்துளை ஒன்றுக்குள் அகப்பட்டால், கூடவே பூமியும் பிற கோள்களும் அதற்குள் செல்லும். அப்போது, பூமியிலுள்ள அனைத்துப் பொருள்களின் தகவல்களும் கருந்துளைச் சுவரில் பதிவாகும். அங்கே நானும், நீங்களும், பக்கத்து வீட்டு நாயும் தகவல்களாகப் பதிந்திருப்போம். கணினியின் வன்தகட்டில் தகவல்கள் எப்படிப் பதிவாகின்றனவோ, அப்படிக் கருந்துளைச் சுவரில் தகவல்கள் பதிவாகின்றன. மில்கி வே காலக்ஸியின் மையத்தில், மிகப்பெரிய ராட்சதக் கருந்துளை ஒன்று இருக்கிறது. அத்துடன் பல லட்சம் கருந்துளைகளும் மில்கி வேயில் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும், தம்முள் இழுத்த பொருள்களின் தகவல்களைப் பதிந்துவைத்திருப்பதாக ‘ஹோலோகிராபிக் கொள்கை’ (Holographic Principle) சொல்கிறது. பதிந்து வைத்திருப்பதோடு முடிந்திருந்தால், இந்தக் கட்டுரைக்கே அவசியம் இருந்திருக்காது. அந்தக் கோட்பாடு சொல்லும் இன்னுமொரு கருத்துதான் அதிர்ச்சியானது. தன் சுவரில் பதிந்திருக்கும் தகவல்களை, பிரபஞ்ச வெளியில் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது அந்தக் கருந்துளை. ஒரு திரைப்படம், எப்படித் திரையில் காட்சியாக ஒளிபரப்பாகிறதோ, அப்படிப் பிரபஞ்சவெளியில் தகவல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அந்தக் காட்சிகளைக் கிரகித்துக்கொள்ளும் உணர்வுகள் (Conciousness), அதை நிஜமாக நடக்கும் வாழ்க்கை என்று புரிந்துகொள்கின்றன என்கிறது ஹோலோகிராம் கோட்பாடு. அதாவது, என்றோ நடந்து முடிந்துவிட்ட சம்பவங்கள் கருந்துளையில் பதியப்படுகின்றன என்றும், பின்னர் அவை ஒரு திரைப்படம்போலப் பிரபஞ்சவெளியில் ஒளிபரப்பாகின்றன என்றும், அதையே வாழ்க்கையாகவும், வாழ்க்கையின் சம்பவங்க ளாகவும் நம் உணர்வு எடுத்துக்கொள்கிறது. என்ன தலை சுற்றுகிறதா... யாருக்குத்தான் சுற்றாது... அறிவியலைச் சொல்வதாக நினைத்து கற்பனையாக ஏதோ உளறுகிறேன் என்று நினைக்கத் தோன்றுகிறதா? நவீன அறிவியல், மர்மக் கதைகளைவிட ஆச்சர்யமானவற்றையெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 35 - இறப்பு இன்னுமொரு தொடக்கமா?

‘இரண்டு பரிமாணத் திரையில் ஒளிபரப்பும் காட்சியை, முப்பரிமாணங்களில் காட்டுவதுதான் ஹோலோகிராம். அதில் இருப்பவை நிஜத்தில் இரு பரிமாணங்களே. அவற்றை முப்பரிமாண உருவங்களாக மூளைதான் (உணர்வு) புரிந்துகொள்கிறது. பிரபஞ்சவெளியும் இரண்டு பரிமாணமுடையதே. அதில் ஒளிபரப்பாவதை முப்பரிமாணமாக உணர்வுகள் எடுத்துக்கொள்கின்றன’ என்கிறார் லியோனார்டு சஸ்கைண்ட். இவர் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். அங்கு கோட்பாட்டு இயற்பியலை ஆரம்பித்துவைத்த நிர்வாகியுமாவார் (Founding Director of the Stanford Institute for Theoretical Physic). இவர் சொல்வதைச் சுலபத்தில் கட்டுக்கதை என்று தூக்கியெறிய முடியாது. ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்லலாம். மரணத்தையோ, மரணத்தின் பின்னரான நிலையையோ ஹோலோகிராம் கொள்கை கூறவில்லை. இதில் சொல்லப்பட்ட சில அம்சங்களை, இறப்பின் முடிவுகளுக்கு எடுத்துக்கொள்ளப்போகிறோம். ஒருவர் இறந்த பின், அவரின் உடலை எரிப்பதால் அவர் உருவாக்கப்பட்ட அடிப்படைத் துகள்களும், அவரது தகவல்களும் பிரபஞ்சவெளிக்குச் செல்கின்றன. எங்கு, எப்படி என்ற எந்த விவரமும் யாருக்கும் தெரியாது. ஆனால், மேலே சொல்லப்பட்ட கோட்பாடு அதற்கான ஒரு பாதையை நமக்குச் சொல்லித் தருகிறது. அதன் மூலம் எதையாவது நாம் புரிந்துகொள்ளலாம்.

மரணத்தின் பின்னரான நிலை, மூன்று விதங்களில் பார்க்கப்படுகிறது. இயற்பியலாளர்களின் பார்வையில், இது போன்ற சிக்கலான விஷயங்களுக்கு அவர்கள், ‘தெரியாது’ என்று எந்தத் தயக்கமுமின்றிச் சொல்லிவிடுகிறார்கள். அவர்களுக்குச் சவாலாக இன்றுவரை இருக்கும், கறுப்பாற்றல் (Dark Energy), கறுப்புப் பொருள் (Dark Matter) ஆகியவற்றைச் சொல்லும்போது, ‘அவை இருப்பது தெரியும். ஆனால், என்னவென்று தெரியாது’ என்பார்கள். மரணத்தின் பின்னர் என்னவென்று கேட்டாலும், அவர்கள் பதில், ‘தெரியாது’ என்பதுதான். இயற்பியலைப் பொறுத்தவரை, ஒன்றை ஒப்புக்கொள்வதற்கு அதற்கான அடிப்படை ஆதாரம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கணிதரீதியாக கணித்துச் சொல்லும் கோட்பாடாவது வேண்டும். அதைத் தாண்டினால், அந்த விஷயம் இல்லை என்பதே அவர்களின் முடிவாகிவிடும். மிகச் சுலபமாகத் தெரியாது அல்லது இல்லை என்று ஒத்துக்கொள்வார்கள். ஆன்மிகவாதிகளின் பார்வை இதற்கு எதிர்மாறானது. அனைத்தையும் இறைவன், ஆன்மா என்று சொல்லிவிடுவார்கள். அவர்களின் பாதையும் சுலபமானதுதான். நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்தையும் ஏற்றுக்கொள்வார்கள். இந்த இருவருக்கும் இடையிலான இன்னுமொரு பார்வையும் இருக்கிறது. நரம்பியல் மற்றும் மனவியல் ஆராய்ச்சியாளர்களின் பார்வை. ஆன்மிகத்தின் கடவுள், ஆன்மா என்பதையும் எடுக்க மாட்டார்கள். இயற்பியலாளர்கள்போல இல்லை என்றும் மறுக்க மாட்டார்கள். இறப்பின் விளிம்புநிலைக்குப் (Near Death Experience) போனவர்களை நிதானமாக ஆராய்ச்சி செய்கிறார்கள். இவர்களும் ஒருவகையில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்தான். ஆனால், மனம் சார்ந்து ஆராய்வதால், அங்கு ‘அமானுஷ்யம்’ (Paranormal) எனும் அடையாளம் வந்துவிடுகிறது. அதனால் நம்புவதில் சிலர் நாட்டம் காட்டுவதில்லை. அதையெல்லாம் தாண்டியே இவற்றை விளக்க வேண்டியதாகிறது.

மனவியல் மற்றும் நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள், இறப்பின் விளிம்புநிலைக்குச் சென்றுவருவதை ஒத்துக்கொள்கிறார்கள். பல ஆயிரக்கணக் கானவர்களிடம் எடுத்த விவரங்களிலிருந்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதை மேலும் ஆராய்ந்தும்வருகிறார்கள். அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், மரணத்தின் பின்னரும் மனிதனின் உணர்வுகள் முழுமையாக இருக்கின்றன என்று எடுத்துக்கொள்ளலாம். அந்த உணர்வுகள் விண்வெளியில் ஏதோவோர் இடத்தில், தனக்கான ஞாபகங்களுடன் பதிவாகியிருக்கலாம்.

மரணத்தின் பின்னரான ரகசியத்தை, ‘நிக்கோலா டெஸ்லா’ (Nikola Tesla) கூறியதைவைத்தே நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். அது சரியோ தவறோ எனக்குத் தெரியாது. நாம் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் பாக்கியிருக்கிறது. அதற்குள் ஏதாவது விடைகள் கிடைக்கலாம்; கிடைக்காமலும் போகலாம். ஆனால், டெஸ்லா கூறியது இங்கு முக்கியமாகிறது. அறிவியலில் என்னை மிகவும் ஈர்த்தவராக டெஸ்லாவையே சொல்வேன். என்னை மட்டுமல்ல, உலகிலுள்ள பலரின் உள்ளங்களைக் கவர்ந்தவர் அவர். அவரின் வார்த்தைகளையே உங்களிடம் தருகிறேன். அதிலிருந்து, நீங்களும் ஒரு முடிவுக்கு வரலாம். டெஸ்லா சொன்னது இதுதான். “அறிவு, வலிமை, உத்வேகம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளும் மையமொன்று பிரபஞ்சவெளியில் அமைந்திருக்கிறது. அதிலிருந்து அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் ரிசீவராகவே என் மூளை இருக்கிறது. அந்த மையத்தின் ரகசியத்தை ஊடுருவி அறிய நான் முயலவில்லை. ஆனால், அப்படியொன்று இருப்பதை நிச்சயமாக நான் அறிவேன்!”

(தேடுவோம்)