மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 35 - உணர்வுகளின் அதிர்வுதான் உயிரா?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

இதுவரை பலவித மர்மங்களை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். அவற்றில் சில நம்புவதா, கூடாதா எனும் தடுமாற்றத்தை உங்களுக்குத் தந்திருக்கலாம்.

`மரணத்தின் பின்னர் என்ன நடக்கும் என்பதை ஏன் பாதியிலேயே நிறுத்திட்டீங்க... தொடர்ந்து எழுதுங்க ப்ளீஸ்’, `டெஸ்லா என்ன கூறினார் என்பதை விளக்கமாக நீங்கள் சொல்லவே இல்லையே... முதலில் அதைச் சொல்லுங்கள்!’ இப்படிப் பல மடல்கள் எனக்கு வந்தன. எல்லாமே மரணத்தைப் பற்றிச் சொல்லிவிட்டுப் பாதியில் நான் நிறுத்தியதாக அன்பாகக் கோபப்படும் கடிதங்கள். நிஜத்தில் மரணம் பற்றி எழுதுவதைப் பாதியிலேயே நிறுத்தினேனா? ஆம், உண்மைதான். அதன் தொடர்ச்சியாகச் சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தைத் தவிர்த்தது உண்மைதான். அதை எழுதுவதில் எனக்கு நிறைய தயக்கம் இருந்தது. உங்களிடம் சொல்லக் கூடாது என்பதல்ல. அதைத் தொட்டால் தொடர் நீண்டுவிடும் என்ற பயம் இருந்தது. அத்துடன் எனக்குச் சம்பந்தமே இல்லாத வேறொரு பரிமாணத்தில் அது பயணிக்கவும் ஆரம்பித்துவிடும். இந்த இரண்டு காரணங்களாலேயே அதைச் சொல்வதைத் தவிர்த்தேன். ஆனால், வாசகர்களுக்காக அதை மீண்டும் தொடரலாம் எனத் தீர்மானித்திருக்கிறேன். சொல்லாமல் நான் தவிர்த்துக்கொண்ட விஷயம், ‘ஆகாயப் பதிவுகள்’ (Akashic Records). அதன் பரிமாணங்களும், தன்மைகளும் முற்றிலும் வேறுபட்டவை. அதனுள் ஒளிந்திருப்பதையே நாம் பார்க்கப்போகிறோம்.

இதுவரை பலவித மர்மங்களை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். அவற்றில் சில நம்புவதா, கூடாதா எனும் தடுமாற்றத்தை உங்களுக்குத் தந்திருக்கலாம். ஒரு சில மூடநம்பிக்கைக்கு அருகில் உங்களைக் கொண்டு சென்றிருக்கலாம். சாதாரணமாக, அறிவியல் அடிப்படை இல்லாத எதையும் வாசகர்களுக்குக் கொடுக்க நான் விரும்பியதில்லை. அறிவியல் விளக்கங்கள் இருப்பவற்றை மட்டுமே தொட்டுச் செல்வேன். ஆனால் ‘ஆகாயப் பதிவுகள்’ அந்த வகைக்குள் வர முடியாதவை. அதை ஆன்மிகமா இல்லை அறிவியலா என்று வரையறுப்பதில் குழப்பம் இருக்கிறது. அது பற்றிப் பேசுவது, கடும்காற்று வீசுமிடத்தில் மதிலில் நடப்பதற்குச் சமனானது. கவனம் சிதறினால், ஏதோவொரு பக்கத்தில் விழுந்துவிடுவேன். அதை அறிவியலாக ஒதுக்கவும் முடியவில்லை. ஆன்மிகமாக ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதனால், எனக்கென ஒரு தனியான நிலைப்பாட்டிலிருந்து இதை எழுதுகிறேன். நான் எழுதப்போவதைப் படிக்கும் உங்களுக்கு நம்புவதா, வேண்டாமா என்ற குழப்பம் இருக்கும். நம்புங்கள் என்று திடமாகச் சொல்வதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அறிவியல் பரிந்துரைக்கும் சில கோட்பாடுகள் மட்டுமே இருக்கின்றன. மரணத்தின் பின்னர் என்ன என்ற கேள்விக்கான பதிலையும், ஆகாயப் பதிவுகளையும் எவராலும் நிரூபிக்க முடியாது. இறந்த பின்னர்தான் அவற்றை அறிந்துகொள்ள முடியும். அதனால், நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இதை அணுக முடியும். நம்பிக்கை என்ற சொல்லையே நாம் தவறாகத்தான் புரிந்துவைத்திருக்கிறோம். கடவுளையும் நம்பிக்கை என்ற அடிப்படையில்தான் பலர் அணுக முயல்கிறார்கள். மதங்களும் நம்பிக்கை என்றே அடையாளப்படுத்தப்படுகின்றன. ஜெர்மனியில் ‘உங்கள் மதம் என்ன?’ என்ற கேள்வியை யாரும் கேட்பதில்லை. ‘உங்கள் நம்பிக்கை (Glaube) என்ன?’ என்றே கேட்பார்கள். நமது நாடுகளிலும் “நீ கடவுளை நம்புகிறாயா?” என்றுதான் கேட்கிறார்கள். அந்தக் கேள்வியே தப்பென்று கேட்பவருக்கோ, பதில் சொல்பவருக்கோ தெரிவதில்லை. நம்பிக்கை என்பதே சந்தேகம் என்ற அர்த்தம்கொண்டது. ‘நான் கடவுளை நம்புகிறேன்’ என்று ஒருவர் சொன்னாலே, அதுவொரு சந்தேகமான ஸ்டேட்மென்ட்தான். என்ன குழப்புகிறேனா? சரி இப்படிப் பாருங்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 35 - உணர்வுகளின் அதிர்வுதான் உயிரா?

“உங்களுக்கு அம்மா இருக்கிறார் என்று நம்புகிறீர்களா?” என்று உங்களிடம் யாராவது கேட்க முடியுமா? சிலருக்கு அம்மா இறந்துபோயிருந்தாலும், “உங்கள் அம்மா உங்களுடன் இருந்தார் என்பதை நம்புகிறீர்களா?” என்று அவர்களிடம் கேட்கலாமா... கேட்டால், சப்பென்று கன்னத்தில் அறைவீர்கள் இல்லையா? “என் கண்முன்னால் இருக்கும் அம்மாவை, இருக்கிறார் என்று நான் ஏன் நம்ப வேண்டும்” என்று சட்டையைப் பிடித்து உலுக்க மாட்டீர்களா? உங்களுக்குக் கண்கள் இருப்பதை எப்போதாவது நம்பியிருக்கிறீர்களா... காதுகள் இருப்பதை நம்புவீர்களா... நம்மோடு இருப்பவற்றை ஏன் நம்ப வேண்டும்? அவைதான் இருக்கின்றனவே. இப்போது புரிகிறதா... இருக்கிறதா இல்லையா என்று சந்தேகிக்கும் ஒன்றைத்தான், நாம் இருப்பதாக நம்ப முடியும். நூறு சதவிகிதம் இருப்பதை நம்புவது எப்படிச் சரியாகும்? அதனால், கடவுள் இருப்பதாக நம்புவது, அவரின் இருப்பைச் சந்தேகிப்பதாகும். அவர் இருக்கிறார் என திடமாகத் தெரிந்தால், நம்ப வேண்டிய அவசியமேயில்லை. அம்மாபோல அவரும் இருக்கிறார். அவ்வளவுதான். சாரி, எங்கோ சென்றுவிட்டோம். நாம் ஆகாயப் பதிவுகளுக்கு வருவோம்.

‘ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ்’ எனும் வார்த்தைகளை அவதானிக்கும்போது, அதில் இந்தியச் சொல் இருப்பதும், ஒருவித ஆன்மிக அடையாளம் பதிந்திருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம். ‘ஆகாஷா’ அல்லது ‘ஆகாயம்’ என்பவை வடமொழிச் சொற்கள். ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் எனும் சொல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மானுடவியலாளரான, ‘ருடோல்ஃப் ஸ்டெய்னர்’ (Rudolf Steiner) என்பவரே முதன்முதலில் பயன்படுத்தியவர். 1904-ம் ஆண்டில் தனது லெமூரியா மற்றும் அட்லாண்டிஸ் சம்பந்தமான ஆராய்ச்சிகளின்போது, ‘ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ்’ எனும் சொல்லைப் பயன்படுத்தினார். அதிலிருந்து இந்தச் சொல் எடுக்கப்பட்டது. இங்கு குறிப்பிடப்படும் ‘ஆகாஷா’, வானத்தைக் குறிக்கும் சொல் கிடையாது. விண்வெளியைக் (Space) குறிப்பது. ‘ஒரு மனிதனின் மரணத்துக்குப் பிறகு, அவனது உணர்வுகள் விண்வெளியில் எங்கோவோர் இடத்தில் பதிவாகின்றன’ என்று நான் கடந்த பகுதிகளில் சொல்லியிருந்தேன். அந்த உணர்வுகளையே (Consciousness), உயிர் என்றும் புரிந்துகொள்கிறோம் என்றும் சொன்னேன். அதையே, ஆகாஷிக் ரெக்கார்ட்ஸும் வலியுறுத்துகிறது. பதியப்பட்டிருக்கும் உணர்வுகளின் அதிர்வுகளே (Vibration) பூமியிலுள்ள மனிதர்களை இயக்குவதாகவும் சொல்கிறது. அத்துடன் மேலும் சில கருத்துகளையும் சொல்கிறது. அங்குதான், நிக்கோலா டெஸ்லாவின் கூற்றும் வந்து இணைந்துகொள்கிறது.

‘எனது பல கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படை ஆதாரங்களை, விண்வெளியிலிருந்து கிரகித்த சமிக்ஜைகள் மூலமாகவே நான் பெற்றுக்கொண்டேன்’ என்று டெஸ்லா கூறியிருக்கிறார். அதிர்வுகளே, அவற்றின் மூலகாரணம் என்றும் சொல்லியிருக்கிறார். உணர்வுகளைப் பதிவுசெய்வதற்கான மையப்புள்ளி, விண்வெளியில் இருப்பதாக அவர் நம்பினார். நினைக்கவே முடியாத எத்தனையோ கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான டெஸ்லாவை, இதனாலேயே விஞ்ஞானியாக ஏற்றுக்கொள்ளச் சில இயற்பியலாளர்கள் தயங்குகிறார்கள். இயற்பியலில் இருக்கும் முக்கியமான தன்மையே இதுதான். ஆதாரமில்லாத எதைச் சொன்னாலும் அப்படியே அதனால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் எந்த முடிவையும் அது எடுப்பதுமில்லை. ஆகாஷிக் ரெக்கார்ட்ஸையும் இயற்பியல் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும் நான் அதை நம்புகிறேனா என்று கேட்டால், ‘இல்லை’ என்ற பதிலைத்தான் என்னால் தர முடியும். ஆனாலும், இதற்குள் ஏதோ ஒளிந்திருக்கிறது. அதை முறையான அறிவியலுக்கு உட்படுத்திக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் விருப்பமுள்ளவன். இதை நான் எழுதுவதற்கும் அறிவியல் சார்ந்து சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்த இடத்திலிருந்துதான் நமது பயணம் முறையாக ஆரம்பிக்கப்போகிறது. அந்த ஆரம்பத்தை மிக முக்கியமானதொரு மனிதரின் வரலாற்றிலிருந்து தொடங்குகிறேன்.

ராமானுஜன்
ராமானுஜன்

‘காட்ஃப்ரே ஹெரால்டு ஹார்டி’ (Godfrey Harold Hardy) எனும் லண்டனைச் சேர்ந்த பிரபலமான கணிதவியலாளரிடம் ஒரு கடிதம் வந்துசேர்கிறது. அது நடந்த காலம் ஜனவரி 1913-ம் ஆண்டு. `நான் மதராஸில் ஆண்டு வருமானமாக இருபது பவுண்டுகளை மட்டுமே பெற்றுக்கொள்ளும் சாதாரண குமாஸ்தா...’ எனும் வரிகளுடன் அந்தக் கடிதம் ஆரம்பமாகிறது. கூடவே சில காகிதங்களும் காணப்படுகின்றன. அந்தக் கடித உறையினுள் வைத்து அனுப்பப்பட்டிருக்கும் ஏனைய காகிதங்களைப் பார்த்த ஹார்டி, மிரண்டே போய்விட்டார். கணிதத்தில் ‘பிரதான எண்கள்’ (Prime Numbers) என்பவை உண்டு. அவற்றை வைத்து, ஹார்டி சில ஆராய்ச்சிகளைச் செய்துவந்தார். அதனால், கணிதச் சமன்பாடுகளைக்கொண்ட கடிதங்கள் நாடெங்கிலிருந்தும் அவருக்கு வருவது வழமையானதுதான். அப்படியொரு கடிதமாகவே முதலில் அதையும் நினைத்தார். ஆனால், அவற்றை உற்று கவனித்தபோதுதான் ஆடிப்போனார். பத்துப் பக்கங்களில், ‘மேம்பட்ட கணித’ (Advanced Mathematics) சமன்பாடுகள், 120-க்கும் அதிகமாக அதில் எழுதப்பட்டிருந்தன. அந்தச் சமன்பாடுகள் எதற்கானவை என்றே முதலில் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. தன்னுடன் பணிபுரியும் சக கணிதவியலாளருக்கு அதைக் காட்டியபோது, “அந்தச் சமன்பாடுகள் நிச்சயம் உண்மையானவையாகவே இருக்க வேண்டும். காரணம், உண்மையில்லாத கணிதச் சமன்பாட்டை ஒருவரால் இப்படிக் கற்பனையாக உருவாக்க முடியாது” என்று சொன்னார். இருவருமே வியப்பின் விளிம்புக்குச் சென்றார்கள். ‘மிகப்பெரியதொரு கணித மேதை ஒருவரால் மட்டுமே இந்தக் கணிதச் சமன்பாடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன எனத் தீர்மானித்துக்கொண்டார்கள். யார் அந்த மர்ம மனிதன் என்று கேட்டும்கொண்டார்கள். மதராஸில், வெறும் இருபது பவுண்டுகளை மாதச் சம்பளமாகப் பெற்றுக்கொள்ளும் ஏழை குமாஸ்தாவால் அப்படியான கணிதச் சமன்பாடுகளை எப்படி உருவாக்க முடிந்தது?

1887-ம் ஆண்டு, டிசம்பர் 22-ம் தேதி, ஈரோட்டில் பிறந்த குழந்தைக்கு ராமானுஜன் என்று பெயர் வைக்கப்பட்டது. 13-ம் வயதிலேயே எந்த ஆசிரியரின் உதவியும் இல்லாமல், திரிகோண கணிதத்தில் சிறந்து விளங்கினார் ராமானுஜன். அதன் பின்னர் அந்த வாலிபன் கணிதத்தில் செய்த சாதனைகளை ஒவ்வொன்றாக நான் எழுத முடியாது. உலகின் முதல்தரமான கணித மேதையொருவரை உங்களால் கற்பனை செய்ய முடியுமெனில், அவர்தான் அந்த ராமானுஜன். மதராஸிலிருந்து அந்தக் கடிதத்தை அனுப்பிவைத்தவரும் அதே சீனிவாச ராமானுஜன்தான். அவர் ஒரு தமிழர் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. கணிதத்தில் மட்டும் தனித்து கவனம் செலுத்திய ராமானுஜனால், ஏனைய பாடங்களைப் படிக்க முடியவில்லை. முடிவு, சாதாரண குமாஸ்தாவாகப் பணி கிடைத்தது. ஏழை வாழ்வு. ஆனால், அவர் அனுப்பிய கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஹார்டி, அவரைக் கைவிடவில்லை. உடனடியாக அவரால், ராமனுஜன் இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அதன் பின்னர் நடந்ததெல்லாம் உலக அதிசயம். ராமானுஜன் உருவாக்கிய பல கணிதச் சமன்பாடுகளை நூறு ஆண்டுகளின் பின்னர்கூட விடுவிக்க முடியாமல் திணறினார்கள். அவர் மொத்தமாக 3,900 கணிதச் சமன்பாடுகளை உருவாக்கியிருக்கிறார். அனைத்தும் சரியானவை என்று நிறுவப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதுமுள்ள பல துறைகளில் அவரின் சமன்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர் நிகழ்த்திய மிகப்பெரிய ஆச்சர்யம் இன்றுவரை அனைவரையும் திகைக்கவைத்திருக்கிறது. அதுவே ராமானுஜனை இந்தக் கட்டுரைக்குள் நான் கொண்டுவரக் காரணமும் ஆகியது.

ராமானுஜன் வெகு இளைஞனாக 32 வயதிலேயே இறந்துபோனார். அவர் இறக்கும்போது அறிமுகமே இல்லாத கணினிகளுக்கும், மின்சார உபகரணங்களுக்கும் தேவையான சமன்பாடுகளை அன்றே உருவாக்கியிருந்தார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அதுமட்டுமல்ல, கருந்துளை (Black hole) என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில், அதற்கான கணிதச் சமன்பாட்டையும் அவர் உருவாக்கியிருந்தார். அத்தனை சமன்பாடுகளையும் அவர் எப்படி உருவாக்கினார் என்று அவரிடம் கேட்டபோது, அவர் கூறிய பதிலின் அடிப்படை என்ன தெரியுமா? ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ்!

(தேடுவோம்)